நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

அம்மே.. நாராயணி

அம்மே நாராயணா!.. தேவி நாராயணா!..
லக்ஷ்மி நாராயணா!.. பத்ரி நாராயணா!..

மலையாள தேசத்தில் எதிரொலிக்கும் மகத்தான மந்த்ரம்!..

அல்லலுற்று அவதியுற்று ஆறாத சோகத்தில் மனம் ஆழ்கின்றபோது ஆறுதலும் தேறுதலும் தந்து - அருகிருந்து காத்தருளும் அற்புத மந்திரம்!..

இந்த மந்த்ரத்திற்கு உரியவள் - சோட்டாணிக்கரை பகவதி!..


மேலோர் கீழோர் என்ற பேதங்கள் ஏதும் இன்றி இந்த மந்த்ரத்தை அனுஷ்டித்து  மகத்தான வரங்களைப் பெற்றுய்ந்தவர் கோடானுகோடி!..

இந்த மகாமந்த்ரத்தினை உபதேசித்தவர் - 

மகா ஞானியரோ மகா பண்டிதரோ அல்லர்!..

பின் வேறு யார்!?.. 

வேட்டுவப் பெண்!..

அடர்ந்த வனத்தின் ஏதோ ஒரு மூலையில் -  எளிமையிலும் எளிமையாய்  வாழ்ந்த வேட்டுவக் குடும்பத்தில் பிறந்தவள்..

அவள் பெயர் - யாருக்கும் தெரியாது!..

அடர்ந்து விளங்கிய அந்த கானகத்தில் - நிலா எட்டிப் பார்த்து முகங்காட்டும் வேளைகளில் அவள் மனம் அம்பிகையின் கதைகளில் லயித்திருக்கும். அந்தக் கதைகளும் அவளுக்கு அவளுடைய அம்மையும் அப்பனும் சொல்லியவை.

அவளுக்கும் அம்மையை ஆராதிக்கும் ஆவல் மேலிட்டது. என்ன சொல்லிப் போற்றுவது!.. 

அதென்ன பெரிய விஷயம்!..  அம்மையும் அப்பனும் தானே சொல்லிக் கொடுத்தார்கள்.. அப்படியே சொல்லி விடுவோம்!.. அம்மே நாராயணீ.. 
ஆகா..  அற்புதம்... அமுதம் போலிருக்கின்றது. 

சரி .. அவள் எப்படி இருப்பாள்.. யாருக்குத் தெரியும்?.. நீ பார்த்தாயா.. நீ பார்த்தாயா.. யாரும் பார்த்ததில்லையா!.. 

சரி.. அவள் எப்படி இருந்தால் நமக்கென்ன.. நம்மைப் போலவே பாவித்துக் கொள்வோம்... 

அதற்குப் பிறகு -  அந்த வனத்தில் பூத்துக் கிடந்த மலர்களாலும் தழைத்துப் படர்ந்த இலைகளாலும் அலங்கரிக்கப்பட்டாள் அன்னை . 

சேதி கேட்டு ஆங்காங்கேயிருந்த வனவாசிகள் அனைவரும் திரண்டு வந்தனர். ஒளி வீசும் திருவிளக்குகளுக்கு மத்தியில் - மலர்களாலும் தளிர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்தப் பீடம். 


யாரது!.. - கேள்வி கேட்டார்கள் வந்திருந்தவர்கள்.. 

இவள் தான் அம்மா!.. இவளே தேவி.. இவளே பகவதி!.. - பதில் சொன்னாள்  - அறிந்தும் அறியாமலும் அம்பிகையை ஆவாஹனம் செய்தவள். 

இருந்தாலும் முகந்தெரியவில்லையே?.. 

நன்றாக உற்றுப் பாருங்கள்.. அவள் தெரிவாள்!.. 

ஒன்றும் தெரியவில்லையே!.. 

ஒன்றும் தெரியவில்லையா.. உங்கள் அம்மா தெரியவில்லையா!.. உங்கள் மகள் தெரியவில்லையா!.. 

ஆமாம்.. ஆமாம்!.. இப்போது தெரிகின்றாள். நன்றாகவே தெரிகின்றாள்.. அவளைக் கூப்பிட்டால் வருவாளா!.. கூடவே இருப்பாளா?.. 

ஏன் வரமாட்டாள்!.. அம்மே.. நாராயணீ.. தேவீ.. நாராயணீ.. 

அடர்ந்த வனத்தினுள் எழுந்த ஆனந்த முழக்கம் - அந்தக் கையிலாய மலையினை எட்டியது. 

அந்த வினாடியில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி - அந்த வனவாசிகளின் அன்பினை ஏற்று வனத்தினுள் வந்தாள். வணங்கி நின்ற மக்களின் மத்தியில் அவர்களின் அன்பினை ஏற்று திருக்காட்சி நல்கினாள்.. 

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த தாயே!.. என் கூடவே இருப்பாயா!.. 

இன்றும் என்றும் இங்கேயே இருப்பேன். கலங்காதே மகளே!..  

அவளை வா.. என்றழைத்த வேடர் குலக் கன்னிக்கு பரம சந்தோஷம். 

தன்னைப் போலவே - தன் குலத்துதித்த மங்கையைப் போலவே அன்னை திருக்காட்சி கொடுத்ததில்!..

ஆம்!.. திகம்பரையாக வந்திருந்தாள் தேவி!.. 

ஆதியில்  ஒடுக்கப்பட்ட ஏழை எளியோர்க்கு மறுக்கப்பட்ட மேலாடையின்றி - இடையில் பூக்களையும் தழைகளையும் அணிந்தவளாக வந்திருந்தாள்.

காலங்கள் ஓடின. அன்னை அன்பு கொண்டு எழுந்த தலமும் காட்டுக்குள் காடாகிப் போனது. 


ஆயினும் அந்த வனத்தினுள் - அடுத்தடுத்த தலைமுறைக் குடும்பங்கள் தழைத்து எழுந்தன. அப்படிப்பட்ட ஒன்றினுள் - 

அந்த வேடன் அன்பைப் பொழிந்து தன் மகளை வளர்த்தான். ஆயினும் - அவன் பசுவை வதைத்து உண்பதில் விருப்பமுடையவனாக இருந்தான். ஒருநாள் ஒரு பசுங்கன்றை வதைக்க முற்படுகையில் அது அவனிடமிருந்து திமிறிக் கொண்டு காட்டினுள் ஓடி மறைந்தது. 

அவனும் விடாக்கண்டனாகி அதனைத் தொடர்ந்து ஓடி - தேடிக் களைத்து திரும்பிய போது - அவனிடமிருந்து தப்பித்து ஓடிய பசுங்கன்று - அவனுடைய மகளிடம் அடைக்கலமாகி இருந்தது. 

அதைக்கண்டு கோபமுற்ற அவன் பசுங்கன்றைப் பற்றி வதைக்க முனைந்த போது  மகள் கதறி அழுதாள்.. இதனை ஒன்றும் செய்து விடாதீர்கள்.. அப்பா!.. இது எனது அடைக்கலம் என்று!.. 

மகள் மீது கொண்டிருந்த அன்பினால் - வேடன் பசுங்கன்றை விட்டு விட்டான். பசுங்கன்றை அன்புடன் பராமரித்து அதனுடன் விளையாடிக் களித்த மகளைக் கண்டு சந்தோஷமாக இருந்தது வேடனுக்கு!..  

நாட்கள் சில கடந்தன. எதிர்பாராத விதமாக ஒருநாள் வேடனின் மகள் இறைவனுடன் ஒன்றினாள். மனம் பேதலித்தது வேடனுக்கு. 

ஊனுறக்கமின்றித் தவித்த வேடன் - மனம் கலங்கி - தன் மகளுக்குச் செய்யும் உபகாரமாக - கொலை பாதகத் தொழிலை விட்டொழித்தவனாக - தன் மகள் வளர்த்த பசுங்கன்றினிடம் பிரியம் காட்டினான்.  

ஒரு நாள் பொழுது விடிந்த நேரம். கன்று கட்டியிருந்த இடத்தில் புதிதாகக் கற்பாறை ஒன்று இருந்தது. அதிர்ச்சியடைந்த வேடன்  - அங்குமிங்கும் தேடியலைந்தான். கன்றைக் காணவில்லை என முட்டி மோதிக் கொண்டு கதறி அழுதான். 

அவனைத் தேற்றும் வகையில் வானில் அசரீரி எழுந்தது. 

வருந்த வேண்டாம். பகவதி யானே - பசுங்கன்றென வந்தேன். உனது பாவங்கள் அகன்றன. அறவழி தவறாமல் - சுயம்புத் திருமேனியைத் தொழுது தொல்லுலகம் சேர்வாயாக.. 

மனம் தெளிந்த வேடன் அம்பிகை உரைத்த வண்ணம் வாழ்ந்து அவள் திருவடி நிழலை அடைந்தான். காலச்சக்கரம் சுழன்றது.

அந்த வனத்தினுள் கோரைப்புல் நிறைந்திருந்தது. 

புல்லை அறுத்துப் பதப்படுத்தி - பல்தொழில் செய்து பிழைக்கும் மக்கள் அந்த வனத்தினுள் நுழைந்து புல் அறுத்தனர். 

நேரமான பொழுதில் - அவர்களுள் ஒருத்தி கொணர்ந்திருந்த கை அரிவாளின் கூர் மழுங்கி விட்டது. என்ன செய்யலாம் - என்று அங்குமிங்கும் நோக்கினாள்.  அதோ - அங்கே ஒரு பாறை!. 

மகிழ்ச்சியுடன் அந்தப் பாறையினை நெருங்கி,  அதன் மீது கை அரிவாளைத் தீட்டி கூர் ஏற்றிய வேளையில் - அந்தப் பாறையினின்றும் பீறிட்டெழுந்தது குருதி.. 

அலறியவாறு மயங்கி வீழ்ந்தாள் அந்தப் பெண்.. விஷயம் அறிந்து பலரும் ஓடி வந்தனர். விசேஷ பூஜைகளுடன் - தேவபிரஸ்னம் கேட்கப்பட்டது. 

நூறு நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை எல்லாம் அவர்களின் கண் முன்னே காட்சியாக விரிந்தன.. 

சின்னஞ்சிறு பெண் மீது அம்பிகை வந்தருளினாள். 

அஞ்ச வேண்டாம். நான் பகவதி!.. ஆதியில் வனவாசிப் பெண்ணொருத்திக்காக நான் எழுந்தருளிய இடம். பின்னும் வேடன் மகளும் வேடனும் வணங்கிய இடம். இந்தக் கல் வேடன் மகள் வளர்த்த பசுங்கன்றாகும். மனக்கவலையில் வேதனைப்பட்டு கண்ணீர் விடுவோர்க்கு கரைகாட்டும் விளக்காக இருப்பேன். தீய வினைகளிடமிருந்து மக்களைக் காத்தருள்வேன்!.. - என்று மொழிந்தாள்.


அதன் பின் அங்கே அம்பிகைக்கு  - ஆலயம் எழுந்தது. ஆதியில் வேடர் குல மங்கைக்குத் தரிசனம் அளித்தபடியே திருமூலஸ்தானத்தினுள் திருக்கோலங் கொண்டாள்.

இன்றும்  மேலாடை இல்லாமல் தான் -  சோட்டாணிக்கரை அம்மா இலங்குகின்றாள்..

அத்துடன் மேலும் ஒரு அற்புதத்தை அம்பிகை நிகழ்த்தினாள்.

ஒரு முறை ஆதிசங்கரர்,  கேரளத்தில்  எழுந்தருள வேண்டுமெனப் பிரார்த்தித்து  தேவியை நோக்கிக் கடும் தவம் இருந்தார். 

அம்பிகையும் - சங்கரா.. நீ திரும்பிப் பார்க்காமல் முன்னே செல்வாயக!.. நான் உன்னைப் பின் தொடர்ந்து வருகிறேன்.  நீ பின்னால் திரும்பிப்  பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன்!. என்ற நிபந்தனை விதித்தாள். 

அவ்வண்ணமே சங்கரர் செல்ல அம்பிகை சிலம்பொலிக்க பின் தொடர்ந்தாள். ஓரிடத்தில் அம்பிகையின் சிலம்பொலி கேட்காமையினால் சங்கரர் திரும்பிப் பார்க்க - அம்பிகை தங்கிய இடம் கொல்லூர்!.. 

மனம் தளர்ந்த சங்கரர் மீண்டும் வருந்தியழைத்தார். அவருக்காக மனம் இரங்கிய அம்பிகை - உன் பொருட்டு - பிரம்ம முகூர்த்ததில் நான் சோட்டாணிக்கரையில் இருப்பேன்!..- என்றாருளினாள்.

அதன்படி சோட்டாணிக்கரை ஆலயத்திற்கு விரைந்து வந்த ஆதிசங்கரர் அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கொல்லூர் மூகாம்பிகை  பகவதியின் ரூபத்தினுள் ஜோதியாகக் ஐக்கியமானதைக் கண்டார்.  

அன்றொருநாள் அடித்தள மக்கள் தம் அன்பினில்  ஜோதியாக இலங்கிய தலம்  இன்று சோட்டாணிக்கரை என்ற பெயரில் விளங்குகிறது. 

காலை 7.00 மணி வரை -  சோட்டாணிக்கரை ஆலயத்தில் வெண்பட்டு சாற்றி சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மூகாம்பிகை  - சீவேலி முடிந்ததும் கொல்லூர் சென்று விடுவதாக ஐதீகம்.

உச்சிப்பொழுதில் செம்பட்டு அணிந்து மஹாலக்ஷ்மியாக விளங்கும் அன்னை
மாலையில் நீலப்பட்டு உடுத்தி மஹா துர்க்கையாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனள். 

கீழக்காவு ஸ்ரீ பத்ரகாளி அம்மன்
இவளே ஸ்ரீபத்ர காளியாக வீற்றிருந்து அருளும் தலம்  - கீழக்காவு!..

மேற்கு முகமான - ஸ்ரீபகவதி ஆலயத்தின் பின்புறம் புராதனமான திருக் குளத்துடன் சேர்ந்ததாக அமைந்துள்ளது கீழக்காவு. 

குருதி பூஜை
ஸ்ரீபகவதியின் சந்நிதியில் நாளாந்தர பூஜைகள் முடிந்த பின் - இரவு 8.30 மணி அளவில் கீழக்காவு பத்ரகாளி அம்மன் சந்நிதியில் தொடங்கும் குருதி பூஜை மிகச்சிறப்பானது.

அந்த வேளையில் நம்மைப் பிடித்திருக்கும் தீவினைகள் நம்மை விட்டு விலகுவதைக் கண்கூடாக உணரலாம்.

சபரிமலைக்குச் சென்று திரும்பும் போதெல்லாம் தரிசிக்கும் அற்புதத் திருத்தலம் - சோட்டாணிக்கரை.

அவள் அருளால் - ஆடிமாதத்தின்  -

முதல் ஞாயிறன்று - திருவேற்காடு ஸ்ரீகருமாரியம்மன் தரிசனம்.
இரண்டாம் ஞாயிறன்று - திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன்.

இன்று - மூன்றாவது ஞாயிறு . ஸ்ரீ சோட்டாணிக்கரை பகவதி தரிசனம்.

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்;
சுடர்தரு அமுதே.. சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்!..
 
ஓம் சக்தி ஓம்!..
அம்மே நாராயணி.. தேவி நாராயணி..
சோட்டாணிக்கரை பகவதி சரணம்!..
* * *

9 கருத்துகள்:

 1. சோட்டாணிக்கரை பகவதி அறிந்தேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 2. ஏன் கேரளக் கோவில்களில் இறைவியின் திரு உருவம் அவ்வாறிருக்கிறதுஎன்னும் என் கேள்விக்கு பதில் தந்தது இப்பதிவு.சோட்டானிக்கரை பகவதி கோவிலுக்கு நான் முதன் முதல் சென்றது ஒரு சபரிமலைப் பயணத்தின்போதுதான் 1971-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு நான்கைந்து முறைகள் சென்று வந்த அனுபவம் உண்டு. கோவில்களில் பக்திக்குப் பதில் பயம் உண்டாக்குகிறார்கள். பேய் ஓட்டுதலும் மரங்களில் ஆணிகளும் குருதி பூசையும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   பகவதி கோயிலின் மரத்தில் - தலையால் மோதி ஆணிகளை அடித்து இறக்குவது அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது. இது பேய் பிடித்தோரின் செய்கை என்கின்றார்கள்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. /தலையால் மோதி ஆணிகளை அடித்து இறக்குவது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது/ ஐயா மரத்தில் சுமார் பத்தடி உயரத்துக்கும் மேல் ஆணிகள் அடிக்கப் பட்டிருக்கின்றன. அதுவும் பேய் பிடித்தோரின் செய்கையா.?நம்பமுடியவில்லை. மக்களை பயமுறுத்தும் நோக்கம் என்றே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   சோட்டாணிக்கரையில் ஆணி அடிக்கும் மரத்தில் முட்டிக் கொள்வதை நேரில் கண்டிருக்கின்றேன். மனம் நடுங்க வைக்கும் நிகழ்ச்சி அது. ஆயினும் நீங்கள் சொல்வது போல அந்த மரத்தில் இயல்பான உயரத்திற்கும் மேலாக ஆணிகள்..
   தாங்கள் கூறுவது போலவும் இருக்கலாம்.

   என்றாவது ஒருநாள் உண்மையை உணர முடியும் ஐயா!..

   நீக்கு
 4. பெயரில்லா29 டிசம்பர், 2017 16:24

  குருதி பூஜை என்றால் என்ன?? யாருடய குருதியை வைத்து பூசிப்பார்கள்

  பதிலளிநீக்கு
 5. குருதி பூஜை என்பது பகவதிக்கு செய்யப்படும் பூஜை சரி ஆனால் அந்த குருவி பூஜை எப்படி செய்யப்படும் எதை வைத்து செய்யப்படும் என்ற பதிவிட்டால் நன்றாக இருக்கும்இருந்தாலும் பகவதியின் கதையை தெரிந்து கொண்டேன் பதிவிட்டதற்கு மிக்க மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லா15 நவம்பர், 2020 22:38

  *Related articles ...*
  That we are forwarding for a clear learning and understanding and reassessment to reveal the truth ����

  https://youtu.be/hQ68qt6Wk54  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..