நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2014

முருகனுக்குத் திருநாள்

ஆண்டுதோறும் திருவிழாக்கள் நிறைந்து காணப்படும் திருக்கோயில்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

ஐப்பசி மாத சஷ்டிப் பெருவிழாவுடன், ஆவணியிலும் மாசியிலும் சிறப்புடன் திருவிழாக்கள் நிகழ்கின்றன.

ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களின் போது ஷண்முக நாதன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சியருள்கின்றான். 

விழாவின் ஏழாம் நாளன்று மாலையில்  சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாகவும்  மறுநாள்  அதிகாலையில் வெண் பட்டு அணிந்து நான்முகனாகவும் திருக்காட்சி அருள்கின்றனன்.

மதிய வேளையில் பச்சைப் பட்டு  சாத்தி பெருமாள் அம்சத்தில் திருக்காட்சி அளிக்கின்றான். 


முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான். 
நக்கீரர் - திருமுருகாற்றுப்படை.

அம்மையப்பனின் ஆசிகளுடன் - சூரபத்மனுடன் போர் புரிய வந்த முருகன் சிவ பூஜை செய்த திருத்தலம். 

பின்னும் முருகப்பெருமான் சூரனை வென்று ஆட்கொண்டபின்பு - மீண்டும் சிவபூஜை செய்தான். 

இந்த கோலத்திலேயே முருகன் திருமூலஸ்தானத்தில் திகழ்கின்றான். 


சிவயோகி போல ஜடாமகுடம் தரித்திருக்கும் முருகன் வலது கையில் தாமரை மலரும் சக்தி ஆயுதமும் ஜபமாலையும் கொண்டு விளங்குகின்றான்.

முருகன் வழிபட்ட  சிவலிங்கம் கருவறையின் இடது புறம் பின்புற சுவரில் திகழ்கின்றது.

மூலவரான ஸ்ரீசுப்பிரமணியன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் திகழ்கின்றார்.

தெற்கு நோக்கி தனி சந்நிதியில்உற்சவர் ஸ்ரீசண்முக நாதன். மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இங்கு செய்யப்படுகின்றது.

திருக்குமரனின் படை வீடுகளுள் திருச்செந்தூர் மட்டுமே  கடற்கரையில் விளங்குகின்றது. 

ஆனாலும் - திருச்செந்தூரும்   மலைக்கோயிலே ஆகும். 


திருக்கோயில் கடற்கரையில் இருக்கும் சந்தன மலையில் தான் இருக்கிறது.

காலவெள்ளத்தில் சந்தன மலை மறைந்து விட்டது. ஆயினும் திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் பெருமாள் பள்ளி கொண்டிருப்பது சந்தன மலையில் தான்!.. 

திருக்கோயிலுக்கு வடபுறம் விளங்கும் சந்தன மலையில் தான் வள்ளி குகை அமைந்துள்ளது. ஒருவர் மட்டுமே நுழைந்து செல்லும் சிறு வழியினைக் கொண்ட சிறு குகைக்குள் வள்ளியம்மை விளங்குகின்றாள். நாளும் இவளுக்கு வழிபாடுகள் நடக்கின்றன. 

எங்கள் குடும்பம் கடந்த பத்து வருடங்களாக  - வருடந்தோறும் சென்று வழிபடும் திருத்தலங்களுள் திருச்செந்தூரும் ஒன்று. 

குலதெய்வம் வீற்றிருக்கும் உவரி திருத்தலத்திற்குச் செல்வதற்கு முன் - அதிகாலையில் திருச்செந்தூர் கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடி ஷண்முகனின் சந்நிதியில் வழிபட்டு வள்ளி தெய்வயானை சந்நிதிகளில் சாம்பிராணி தூபமிட்டு வணங்குவதே பெரும் பேறு!.  


சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்தது இங்குஎன் தலைமேல் அயன் கையெழுத்தே!..
அருணகிரிநாதர் - கந்தரலங்காரம்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா - இம்மாதம் பதினாறாம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக நடைதிறக்கப்பட்டு - மூலவருக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும்,  உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடைபெற்றன.

அதிகாலையில் கொடிப்பட்டமானது வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஒன்பது சந்நிதிகளின் வழியாக கொண்டு வரப்பட்டு பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்களுடன் திருக்கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

அன்று மாலை - அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்து - இரவில் ஸ்ரீபலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்தப் பல்லக்கில் எழுந்தருளி ஒன்பது சந்நிதிகளில் முறை செய்து  திருவீதி உலா  நிகழ்ந்தது.


ஆகஸ்ட்/20 ஐந்தாம் திருநாள். மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா  எழுந்தருளினர்.

ஆகஸ்ட்/21 ஆறாம் திருநாள். காலையில் கோரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா நடைபெற்றது.

இன்று ஆகஸ்ட்/22.  ஏழாம் திருநாள். அதிகாலை ஐந்து மணிக்கு மேல்  சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து -  ஆறுமுகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை அடைகிறார்.

அங்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை. மாலை நாலரை மணிக்குமேல் ஸ்ரீஷண்முகப் பெருமானுக்கு - சிவப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில்  எழுந்தருளி வீதி உலா வருகின்றார்.

சூர சம்ஹாரப் பெருவிழா
ஆகஸ்ட்/23 எட்டாம் திருநாளன்று காலை ஐந்து மணிக்கு சண்முகர் வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி எழுந்தருள்வார்.  திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து மேலக்கோயில் வந்தடைகிறார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்புத் தீபாராதனை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குமேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் வந்து சேர்கிறார்.

ஆகஸ்ட்/24 ஒன்பதாம் திருநாள். சுவாமி தங்கக் கைலாய பர்வதத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதி உலா எழுந்தருள்வர். 

ஆகஸ்ட்/25 பத்தாம் திருநாள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம்.  காலை ஆறு மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது.

திருவிழாவில் மாப்பிள்ளை ஸ்வாமியாகிய ஸ்ரீகுமரவிடங்கப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளுவார்.  பிள்ளையார் ரதம் முன்னே செல்ல - ஸ்வாமி, அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடையும்.

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!..

திருச்செந்தூர் - நம்முடைய தீவினைகளைத் தீர்க்கும் திருத்தலம். 

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்திநகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே வினை!.. 
* * *

16 கருத்துகள்:

 1. தீவினைகள் தீர்க்கும் திருச்செந்தூர் திருத்தலம் அறிந்தேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 2. திருக்குமரனுக்கு ஆவணியில் நடைபெறும் சிறப்பு திருக்கோலக் காட்சிகளை நாமும் திருவிழாவில் கலந்துகொண்டு தரிசித்த உணர்வு ஏற்பட்டது. பகிர்விற்கு நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 3. வணக்கம் ஐயா!

  தங்கள் பதிவுகளுக்கு வந்தாலே
  வந்தவினையும் வருகின்ற வெவ்வினையும்
  தொலைந்திடும் என நினைக்கின்றேன்!

  அற்புதம் ஐயா!.. கண்கள் மல்கக் ’கந்தா’ ’கந்தா’
  எனக் கதறிடத் தோன்றுகிறது!
  கண்களில் ஒற்றிக்கொண்டேன்!
  மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   வேலிருக்க வினையில்லை..
   மயிலிருக்க பயமில்லை..
   தங்கள் கருத்துரை மனதை நெகிழ்விக்கின்றது.
   தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..
  தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!..


  திருச்செந்தூர் திருத்தலப்பெருமைகளை
  சிறப்பாக பதிவிட்டமைக்குப் பாராட்டுக்கள்.@

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 5. ஆவணி மாதத்திலும் திருச்செந்தூரில் விழா நடக்கும் என்பதை அறிந்து கொண்டேன். விளக்கங்கள் மிக அருமை.
  வாழ்த்துக்கள்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 6. மூன்று நான்கு முறைகள் சென்று வந்த தலம். எல்லாக் கோவில்களிலும் மூர்த்தியை தரிசிக்க மிகவும் அல்லல் பட வேண்டி உள்ளது. திருச் செந்தூர் கடலோரத்தில் ஒரு நட்சத்திர மீனைப் பிடித்து பாலிதீன் பையில் நீரூற்றி அதில் இம்மீனை வைத்து வீட்டில் தொட்டியில் இடலாமென்று எண்ணிய என் சகலை வீடு போய்ச் சேரும்போது மீன் இறந்து கிடந்தது என்று கூறி வருத்தப் பட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   உயிருள்ள சங்குகள் கடற்கரையோரத்தில் கிடைக்கின்றன. ஆனால் மீன் விஷயம் சற்றே மன வருத்தம் தான்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா..

   நீக்கு
 7. திருச்செந்தூர் கோவிலுக்கு சிறு வயதில் சென்றதுண்டு. இப்போதெல்லாம் அங்கே செல்லும் பக்தர்கள் அதிகம் திண்டாடுகிறார்கள் - எல்லாவற்றிலும் பணம் அதிகம் பிடுங்கப் பார்க்கிறார்கள் என்ற குறை அடிக்கடி கேள்விப்படும் விஷயம்.....

  தகவல்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தாங்கள் கூறும் சங்கடங்கள் எங்களுக்கும் நேர்ந்ததுண்டு. ஆறுபடை வீடுகளில் பழனியிலும் திருச்செந்தூரிலும் தான் இத்தகைய நெருடலான பிரச்னை. அவர்கள் கேட்கும் போதே - நாம் மறுத்து ஒதுக்கி விடலாம்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 8. திருச்செந்தூரைப்பற்றிய நல்லொரு பதிவு காணவைத்தமைக்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
   அன்பின் வருகைக்கு நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..