நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014

ஸ்ரீகணேச தரிசனம்

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!..

தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி!..
தனக்கு மேல் தலைவன் இல்லாத குணநிதி!..

ஆயினும், முழுமுதற் பொருளான விநாயகர் தாய் தந்தையரைப் பணிவதிலும் தகவுடையார்க்கு தோள் கொடுத்துத் துணையிருப்பதிலும் தனித்துவமாக விளங்குகின்றார்.

ஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும் தெருக்கோடியிலும் முச்சந்தியிலும் எளிமைக்கு எளிமையாய் விருப்புடன் கோயில் கொண்டு வீற்றிருப்பவர்.   


வீட்டில் விளக்கு மாடத்தில் பிள்ளையார் வைத்து வழிபடுவது நமது மரபு.

பசுஞ்சாணத்தையோ, மஞ்சளையோ - கையால் பிடித்து அருகம் புல் சாற்றினால் அங்கே பிள்ளையார் வந்து அமர்ந்து விடுகின்றார். 

நமது வாழ்வில் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமை உடையவர் விநாயகர். அவருக்காக மேற்கொள்ளும் விசேஷ விரதம் தான் சதுர்த்தி விரதம்.

இந்த விரதத்தையும் வழிபாட்டையும் செய்வதற்கு பல வழிமுறைகளைக் கூறுகின்றார்கள். இருப்பினும், நமது சிந்தனையில் -

அவரவர் உடல் நிலைக்கு ஏற்றபடி சதுர்த்தி விரதம் இருப்பதே நல்லது!.. 

சதுர்த்தியன்று அதிகாலையில் எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட்டு  நீராடிய பின் பூஜை அறையில் மனைப் பலகையை பீடமாகக் கொண்டு அதன்மேல் தலை வாழையிலையை நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் பச்சரிசி அல்லது புது நெல் பரப்ப வேண்டும்.

அரிசியின் மேல் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, ஐங்கோண சக்கரம் வரைந்து அதில் ஓம் எனும் பிரணவம் எழுத வேண்டும். மனைப் பலகையின் இருபுறமும் நெய் நிறைத்த குத்து விளக்கு வைக்க வேண்டும்.


களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகருக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு வஸ்திரம் அணிவித்து பூச்சரங்களுடன் அறுகம்புல் மாலை சாற்றி மனைப் பலகையில் இருத்த வேண்டும்.

பிள்ளையாருக்கு குடை வைத்து விளக்குகளை ஏற்றி வாழைப்பழம் தாம்பூலத்துடன் தூப தீபம் காட்டி விரதத்தினைத் தொடங்க வேண்டும்.

பகல் பொழுதில் விநாயகரைப் போற்றும் எளிய தமிழ்ப் பாடல்களுடன் விநாயகர் அகவல் பாராயணம் அவசியம்.

மாலையில் வீட்டில் விளக்கேற்றியபின் - அவல் பொரி, கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்களுடன் இளநீர், கருப்பஞ்சாறு, வாழைப்பழம், நாவல் பழம், விளாங்கனி, மாம்பழம், மாதுளம் பழம் முதலிய பழங்களைச்  சமர்ப்பித்து -

நறுமண மலர்களுடன் வில்வம், அருகு, வன்னி, மா, திருநீற்றுப் பச்சிலை முதலான பத்ரங்கள் கொண்டு வழிபட்டு தூப தீபஆராதனை செய்ய வேண்டும்.

கொழுக்கட்டை, மோதகம், அதிரசம், அப்பம், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள்  - 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு என்கின்றார்கள்.

இருபத்தோரு வகை மலர்களும் இலைகளும் கொண்டு வழிபடவேண்டும் என்கின்றார்கள். அப்படிச் செய்ய  இயலாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக் கொண்டு முழுமனதுடன் பூஜை செய்வதே சிறப்பு!..

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் கம் கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமானய ஸ்வாஹா
 
எனும் மூல மந்திரத்தை ஜபம் செய்வதுடன்  விநாயகர் அகவல் பாராயணம் செய்வது அவசியம்.

பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதன பட்சணங்களை வழங்கி திருநீறு இட்டு வாழ்த்த வேண்டும். வீட்டில் பூஜை முடிந்ததும் ஆலயம் சென்று விநாயகரை வணங்கலாம்.

அருகிலுள்ள  ஏழைப் பிள்ளைகளுக்கு நிவேத்ய பிரசாதங்களை வழங்குவது மிக மிக சிறப்பு!..

சதுர்த்தி பூஜைக்குப் பின், விநாயகர் சிலையை விசர்ஜனம் செய்யும் வரை காலை - மாலை இருவேளையும் பூஜை செய்வது அவசியம்.

விநாயகர் சிலையை ஒற்றைப் படை நாளில் ஆற்றிலோ குளத்திலோ விசர்ஜனம் செய்யவேண்டும்.

வாழையிலையில் பரப்பிய அரிசியினை - அரிசி பாத்திரத்தில் இட குன்றாத தான்ய விருத்தியும் தொப்பையில் வைத்த காசினை பணம் வைக்கும் இடத்தில் வைக்க - குறையாத தன விருத்தியும் ஏற்படும்.


பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.  (1/123)
திருஞானசம்பந்தர்

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலும் (6/53)
திருநாவுக்கரசர்

கயாசுரன் என அப்பர் பெருமானால் குறிக்கப்படுபவன் - கஜமுகாசுரன்.

கஜமுகாசுரனைத் தொலைப்பதற்காகவே - வேழமுகத்துடன் விநாயகப் பெருமானை - ஈசன் படைத்தார் என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு.

கால நேரம் கூடி வந்த வேளையில் விநாயகர்  - கஜமுகாசுரனை வெற்றி கொண்டார். ஆணவம் மிகுத்துத் திரிந்த அவன் விநாயகரின் திருவடி தீட்சையால் மூஷிகமாகி நின்றான். அவனையே தன் வாகனமாகக் கொண்டார்.  

கஜமுகாசுரனுடன் போர் புரிந்தபோது அவனுடைய குருதி பூமியில் படிந்து செங்காடாக ஆனது. அதனால் ஊர்  - திருச்செங்காட்டங்குடி.

கஜமுகாசுர வெற்றிக்கு பின் -  திருச்செங்காட்டங்குடியில் -  சிவலிங்கத்தினை ஸ்தாபித்து கணபதி வழிபட்ட திருக்கோயிலின் பெயர் - கணபதீச்சரம்.

கணபதி அக்ரஹாரம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
கபிலதேவர்.

மகா முனிவராகிய அகஸ்தியரின் வடிவினைக் கண்டு - கர்வத்துடன் துடுக்காக நடந்து கொண்டாள் காவிரி. விளைவு!..

அவரது கமண்டலத்தினுள் சிறைப்பட்டாள். நீரின்றி வறண்டது பூமி!..

பிரச்னை நீங்க வேண்டி காக ரூபமாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து சிறைப்பட்ட காவிரியை விடுவித்தவர் - கணபதி!..

காக்கையைக் கண்டு வெகுண்ட அகத்தியருக்கு சிறுவனாகக் காட்சியளித்தார். சினங்கொண்ட அகத்தியர் சிறுவனின் தலையில் குட்டினார்.

விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்து தன்னுரு கரந்தார்.

அகத்தியருக்குக் காட்சி தந்த திருத்தலம் - கணபதி அக்ரஹாரம். இந்த ஊரில் சதுர்த்தியன்று  வீட்டில் பூஜை செய்யாமல் கோயிலில் கூடி கும்பிடுகின்றனர்.


கடுந்தவம் புரிந்த இராவணனுக்கு இலங்கை சென்று சேரும் வரை கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆத்ம லிங்கத்தை வழங்கினார் சிவபெருமான். அதன்படி இலங்கை திரும்பிக் கொண்டிருந்தான் இராவணன்.

அவன் தனது  தலைநகரில் ஆத்மலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து விட்டால் அவனை வெல்வது கடினம் என தேவர்கள் அஞ்சினர். அவர்களுக்கு அபயம் அளித்தவர் கணபதி.

சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என - இராவணன் யோசித்த வேளையில் சிறுவனாக அவன் முன் தோன்றினார்.

அவனும் சிறுவனாக வந்த விநாயகரிடம், சற்று நேரம் வைத்துக் கொள்!..  எனக் கூறி ஆத்மலிங்கத்தைத் தந்தான். விநாயகரும் மூன்று வரை எண்ணி விட்டு  ஆத்ம லிங்கத்தைத் தரையில் வைத்து விட்டார்.  லிங்கம் அங்கேயே பிரதிஷ்டை ஆனது.

விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் இராவணன். ஆனால் இயலவில்லை. பசுவின் காது போலக் குழைந்தது. சினமுற்ற அசுர வேந்தன் ஐங்கரனின் தலையில் குட்டினான். விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்து தன்னுரு கரந்தார்.

அத்தலமே கர்நாடக மாநிலத்திலுள்ள திருக்கோகர்ணம்.

அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவினைக் காணலாம்.

உச்சிப்பிள்ளையார்
இதேபோன்ற ஒரு நிகழ்வை விபீஷணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளையார்.

அயோத்தியில் பட்டாபிஷேகம் இனிதே நிறைவேறிய பின் -  இலங்கைக்குப் புறப்பட்ட விபீஷணன் ஸ்ரீராமரிடம் ரங்கநாதர் விக்ரகத்தை வேண்டி நின்றான். கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்,  தான் வழிபட்ட ஸ்ரீரங்கநாத விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார் - ஸ்ரீராமர்.

அதைப் பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் சந்தியா வந்தனம்  செய்ய எண்ணிய வேளையில் அன்றைக்கு நிகழ்த்திய அதே திருவிளையாடலை நிகழ்த்தினார்.

ஸ்ரீரங்கநாதர் விக்ரகம் காவிரிக் கரையிலேயே நிலை கொண்டு விட்டது. விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றும் இயலவில்லை.

அண்ணனைப் போலவே அவனும் ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்து தன்னுரு கரந்தார். 

உண்மையறிந்த விபிஷணன் வணங்கிச் சென்றான்.

சிரசில் குட்டுப்பட்ட தழும்புடன் இருப்பவர் - திருச்சி  உச்சிப் பிள்ளையார்.


மேருமலையில் - வியாசருக்காக மகாபாரதத்தைத் தன் கொம்பினை ஒடித்து வரைந்தளித்தவர் கணபதி!..

முருகனுக்கு வள்ளியை மணம் முடித்து வைத்தவர் கணபதி!..

ஔவைக்கு கலைஞானத்தை வழங்கியவர்  - கணபதி!..

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் நந்தனார் ஸ்வாமிகள்.

அவருக்காக திருப்புன்கூரில் திருக்குளம் வெட்டிக்கொடுத்தவர் பிள்ளையார்.

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் போட்ட பொற்காசுகளை உரசிப் பார்த்து - தரம் கூறியவர் திருஆரூர் மாற்றுரைத்த பிள்ளையார்.

காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய போது - சுந்தரரின் ஓலத்துடன் தாமும் ஓலமிட்டு காவிரி விலகி ஓடுமாறு செய்தவர் - திருஐயாறு ஓலமிட்ட பிள்ளையார்.

நம்பிக்கு நல்லருள் புரிந்து - ராஜராஜ சோழனின் வேண்டுகோளுக்கு இணங்க திருமுறைச்சுவடிகள் இருக்கும் இடத்தைக் காட்டியவர் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.

திருவலஞ்சுழி விநாயகர்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
ஔவையார். 

கடலைக் கடைந்து அமுதத்தினை எடுக்கப் போகின்றோம் என்ற ஆணவத்தில் ஐங்கரனைத் துதிக்க மறந்தான் - தேவேந்திரன். முடிவில் - ஆலகாலம் விளைந்து தேவர்களை அல்லல்படுத்தி அலைக்கழித்தது.

தனது அவலம் தீர வேண்டி - கடல் நுரை கொண்டு இந்திரன் ஸ்தாபித்து வணங்கிய மூர்த்தி தான் - திருவலஞ்சுழியில் விளங்கும் ஸ்வேத விநாயகர்.

கடல் நுரையால் ஆன கணபதி என்பதால், இவருக்கு எந்த அபிஷேகமும் கிடையாது. வஸ்திரம் கூட சாத்துவதில்லை. அலங்காரமும், பூஜைகளும் மட்டுமே செய்யப்படும்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்திருக்கோயிலில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வியாழன்று காலையில் கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும்  விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

நேற்று (ஆகஸ்ட்/27)  வியாழன் மாலை திருக்கல்யாண வைபவம்.

சதுர்த்தி தினமான இன்று காலை ஏழு மணிக்கு தேவேந்திர பூஜையும், காலை ஒன்பது மணிக்கு மேல் பத்து மணிக்குள் திருத்தேரோட்டமும் மறுநாள் தீர்த்தவாரியும் நிகழ்கின்றது.

பிரளயம் காத்த விநாயகர்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
கபில தேவர்.

வருணன் செருக்குடன் கிருதயுகத்தில் மஹா பிரளயத்தை ஏற்படுத்தினான்.  அச்சமயம் ஓங்காரப் பிரயோகத்துடன்   வருணனின் செருக்கையும் ஏழு கடல் பெருக்கையும் ஒரு கிணற்றுக்குள் அடக்கியருளினார்.

செருக்கு அடங்கிய  வருணன் சப்த சாகரங்களிலிருந்து - சங்கு,  கிளிஞ்சல், கடல்நுரை இவற்றால் விநாயகரை உருவாக்கி பிரளயம் காத்த விநாயகர் என போற்றி நின்றான்.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள  திருப்புறம்பியம்  ஸ்ரீசாட்சி நாதர் திருக் கோயிலில் விளங்கும் பிரளயம் காத்த விநாயகரின் திருமேனியில் நிறைய கிளிஞ்சல்கள் உள்ளதை இன்றும் காணலாம்.

இந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயக சதுர்த்தியன்று இரவு மட்டும் தேனாபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது.

அபிஷேகத்தின்போது தேன் முழுதும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப் படுவது விசேஷம்.

மஹாகணபதி - தஞ்சை
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!..

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே!..
திருப்புகழ்.

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிற் பொருளெல்லாம் எளிதில் முற்றுற
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
கந்த புராணம். 

ஓம் கம் கணபதயே நம:
* * *

16 கருத்துகள்:

 1. சிறப்பான விநாயகர் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.

  இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
   தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. வணக்கம் ஐயா!

  ஓங்கார நாதனின் உள்ளொளி தான்கிட்ட
  ஆங்காரம் ஓடிடுமே ஆங்கு!

  அருமையான பதிவு! அழகான படங்கள்!

  அனைவருக்கும் விநாயகன் அருள் பாலிக்கட்டும்!

  வாழ்த்துக்கள் ஐயா!

  என் வலைப்பூவிலும் தங்கள் கரம் பதிக்க வேண்டுகிறேன்!
  மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
   தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 3. பாவம் பிள்ளையார் அண்ணன் தம்பி இருவரிடமும்குட்டு பட்டவர்..!இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   அண்ணன் தம்பி இருவரிடமும் குட்டுப்பட்டது நம் பொருட்டு அல்லவோ!..
   விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
   தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! பிள்ளையார்! பிள்ளையார்! பெருமை வாய்ந்த பிள்ளையார்! என்று பிள்ளையாரை பற்றி சிறுசிறு குறிப்புகளாக அவர்தம் பெருமைகள் பேசிய பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 5. விநாயகரைப் பற்றி அதிகமான செய்திகளைத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி..நன்றி.

   நீக்கு
 6. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   நலம் தரும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 7. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 8. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் சகோ !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   நலம் தரும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..