நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

ஆடல் காணீரோ - 1

ஆவணி மூலத் திருவிழா

மாமதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் - நிகழும் ஆவணித் திங்கள்  (ஆகஸ்ட்/21) வியாழனன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


மதுரையம்பதியில் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மையமாக வைத்து நடத்தப்பெறுவது - ஆவணி மூலத் திருவிழா -

ஆவணி மூலத் திருவிழா தான் - திருக்கோயிலின் பிரதான விழா.

திருமலை நாயக்கர் செய்த மாற்றத்தினால் - சித்திரைத் திருவிழா பிரசித்தி ஆகி விட்டது.

எனினும் திருக்கோயிலின் திருவிழாக்களில் சித்திரைப் பெருவிழாவிற்கு அடுத்து - மிக சிறப்பாக நடத்தப்படுவது ஆவணி மூலத் திருவிழா.  

இன்றைய பதிவில் அமுதத் தமிழில்  ஒரு இனிய காணொளி!..

திரைப்படம் - மதுரை வீரன். 
பாடலை இயற்றியவர் - உடுமலை நாராயண கவி.
இசையமைப்பு - G. ராமநாதன்.


நிகழும் வருடத்தின் ஆவணி மூலத் திருவிழாவினை முன்னிட்டு, ஸ்வாமி சந்நிதி - கம்பத்தடி மண்டபத்தின் அருகே புனிதநீர் நிறைந்த பதினோரு கலசங்களுக்கு சிறப்பு  பூஜைகள் நடத்தப்பட்டன.

கம்பத்தடி மண்டபத்தில் ஸ்வாமியும் பிரியாவிடையும்  அன்னை மீனாட்சியும்  பல்லக்குகளில் எழுந்தருளிய வேளையில் - அவர்தம் முன்னிலையில் - தங்கக் கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு இதே சமயத்தில் நிலை நிறுத்தப்பட்ட புதிய தங்கக் கொடி மரத்தில் காலை 10.35 மணிக்கு மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க ஆவணி மூலத் திருவிழாவின் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது பக்தர்கள் பூக்களைத் தூவி வழிபட்டனர். வைபவங்களை காப்புக் கட்டியிருந்த ஸ்தானிக  சிவாச்சாரியார்  நடத்தினார்.

பின் ஸ்வாமியும் அம்மனும் சந்நிதி வளாகத்தில் எழுந்தருள தீபாராதனை நிகழ்ந்தது.


அன்று முதற்கொண்டு ஆகஸ்ட்/26 வரை தினமும் திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் சந்திரசேகர் புறப்பாடு நடைபெற்றது.

ஆவணி மூலத் திருவிழாவின் ஊடாக - ஸ்ரீ விநாயக சதுர்த்தி!..


திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுக்குறுணிப் பிள்ளையாருக்கு மகா அபிஷேகங்களுடன் வெள்ளிக் கவச அலங்காரம்.

18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜைகள் நிகழ்ந்தன.

திருவிழாவில் தொடர்ந்து திருவிளையாடல்களைக் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அதன்படி,
ஆகஸ்ட்/27 அன்று எம்பெருமான் கருங்குருவிக்கு உபதேசம் செய்தருளினார்.
இரவு - கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்வாமியும் - வெள்ளி சிம்ம வாகனத்தில் மீனாட்சியும் எழுந்தருளினர்.

கருங்குருவிக்கு உபதேசம்
நாரைக்கு முக்தி
ஆகஸ்ட்/28 அன்று நாரைக்கு முக்தி கொடுத்தருளினார்.
இரவு - பூத வாகனத்தில் பெருமானும் - அன்ன வாகனத்தில் கயற்கண்ணியும் எழுந்தருளினர். 

ஆகஸ்ட்/29 அன்று வணிகனாக வந்து மாணிக்கம் விற்று விளையாடினார்.
இரவு - கயிலாய பர்வத வாகனத்தில் ஸ்வாமியும் - காமதேனு வாகனத்தில் அங்கயற்கண்ணியும் எழுந்தருளினர்.

ஆகஸ்ட்/30 அன்று புலவனாக வந்து தருமிக்குப் பொற்கிழி தந்தருளினார்.
இரவு - தங்க சப்பரத்தில் ஸ்வாமியும் - யானை வாகனத்தில் மரகதவல்லியும் எழுந்தருளினர்.


படங்கள் - சிவனடியான்
இன்று (31/8) - செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்த அன்பனுக்கு என்றும் குறையாத உலவாக்கோட்டை அருளினார்.


இரவு - நந்தி வாகனத்தில் ஸ்வாமியும் - யாளி வாகனத்தில் மீனலோசனியும் எழுந்தருள்கின்றனர்.

நாளை (செப்டம்பர்/1) அகங்கெட்ட பாணனின் அங்கங்களை வெட்டித் தள்ளி தண்டிக்கின்றார்!..

எல்லாமே அருளியதாக இருக்கையில் நாளை மட்டும் ஏன் தண்டித்தல்?..

திருவிளையாடல் புராணத்தில் இருபத்தேழாவதாகக் குறிக்கப்படும் நிகழ்வு.

அந்த காலத்தில் மதுரையில் - மதர்த்துத் திரிந்திருந்தான் இளைஞன் ஒருவன். அவன் பெயர் பாணன். கொடூர எண்ணங்களுக்கு இருப்பிடமானவன்.

பெண் ஒருத்தியைக் கண்டு அவள் மீது தகாத எண்ணங்கொண்டான் அவன்.

ஆனால் -  அவள் திருமணமானவள். பெயர் மாணிக்க மாலை.

அவளுடைய கணவரோ - சற்று வயதானவர். விரும்பி வருவோர்க்கு வாள் பயிற்சி அளிப்பவர்.

அவனுக்கு அது வசதியாக ஆனது. அவரை நாடி மாணவனாக நின்றான்.

மூர்க்கனின் மனம் அறியாத அவர் அவனுக்கு கலைகளைப் பயிற்றுவித்தார். ஒருநாள் மாலை - குருநாதர் மீனாட்சி சுந்தரேசரைத் தரிசிக்கச் சென்றிருந்தார்.

குருபத்தினியோ தனித்திருந்தாள்.

அந்த வேளையில், பாணன் - விடங்கொண்ட நாகம் போல அவளை நெருங்கினான். 

வீடு தேடி வந்தவன் தீவினையாளன் எனத் தெரிந்து கொண்ட - அவள், அந்த வஞ்சகனிடமிருந்த சாதுர்யமாகத் தப்பித்து - வீட்டிற்குள் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள். கண்ணீர் விட்டு கதறி நின்றாள்.

தஞ்சமென்று உன்சரண் புகுந்தேனையும்
அஞ்சலென்று அருள் ஆலவாய் அண்ணலே!..

- என  ஈசனை சரணடைந்து நின்றாள்.

திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை எனத் தொழுத அபலையின் குரல் கேட்டு ஆங்காரத்துடன் எழுந்த பெருமான்  - குருவின் வடிவம் தாங்கி வந்தார்.

வஞ்சகன் பாணனை வலிய வம்புக்கு இழுத்து அவனுடன் சண்டையிட்டு - தகாதன பேசிய நாவை அறுத்தெறிந்தார்.

பிறன் மனையாளைத் தீண்டத் துடித்த கைகளையும் பிறன்மனையைத் தேடி வந்த கால்களையும் ஊரார் முன்னிலையில் வெட்டித் தள்ளினார். 

வந்த வேலை முடிந்ததும் வழக்கம் போல தன்னுரு கரந்தார்.

குருவுக்கும் மாணவனுக்கும் சண்டை என வேடிக்கை பார்த்த மக்கள் திகைத்து நின்றனர். அவ்வேளையில் கோயிலுக்குச் சென்றிருந்த குருநாதரும் திரும்பி வந்தார்.

உண்மையை உணர்ந்த அனைவரும் ஆலவாய் அண்ணலின் அருளை வியந்து போற்றி நின்றனர்.

இது - பெண்களின் மீது கொடுஞ்செயல் புரிவோர்க்கான பாடம்!..
அனுதினம் நாட்டில் எத்தனையோ கொடுமைகள் நடக்கின்றன.
ஆனால் - அன்றைக்கு வந்தவன் ஏன் இன்றைக்கு வரவில்லை!..

ஆள்வோர் தவறினாலும் ஆண்டவன் தவறுவதே இல்லை!..
தகாதன செய்வோர் தண்டிக்கப்படுகின்றார்கள்!.. 
நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்!..

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
சேயானைத் தென்கூடல்திருஆ லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!..(6/19)
திருநாவுக்கரசர்.

சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

16 கருத்துகள்:

 1. காணொளி கண்டு ரசித்தேன் ,உங்கள் பதிவுக்கு மிகவும் பொருத்தம் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. தகாதவனுக்குத் தண்டனை தந்த இறைவன் வருவார், தண்டிப்பார் என்று நம்பிக்கையுடன் இருத்தல்தான் மன அமைதிக்கு நல்லது.காணொளி ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 4. பதிவு மிகவும் அருமை ஐயா...
  காணொளி நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி.

   நீக்கு
 6. காணொளி மிகவும் ரசிக்கவைத்தது..

  ஆவணி மூலத்திருவிழாவை அருமையாகக் காட்சிப்படுத்திய
  சிறப்பான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

   நீக்கு
 7. மதுரை வீரன் பாடல் காணொளி அருமை.
  பாணன் கதை தப்பு செய்பவர்களை இறைவன் தண்டிப்பான் என்பதை கூறும் வரலாறு.
  பகிர்வு நன்று.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   சட்டத்தின் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் தர்மத்தின் தண்டனையிலிருந்து தப்பிக்க வழியே கிடையாது.
   தங்களுடைய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கு நல்வரவு.
   தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. மகிழ்ச்சி.

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..