நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 03, 2014

ஆடல் காணீரோ - 2

திருவிளையாடல் காணீரோ!..

ஆடல் காணீரோ.. விளையாடல் காணீரோ..
திருவிளையாடல் காணீரோ!..

ஆடல் காணீரோ!..
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ!..


ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
ஏற்று வினை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் - பிள்ளைப்
பிட்டுக்கு மண் சுமக்கவே  - வந்து
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
வடுவுற்ற ஈசன் விளையாடல் காணீரோ!..

நரி தன்னைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து - உயர்
நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
நக்கீரர்க்கு உபதேசித்து
வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
வைரவளை முத்துவளை ரத்னவளை
விற்ற விளையாடல் காணீரோ!..

பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ!.. 


மாமதுரையில் மங்கலகரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது  ஆவணி மூலத் திருவிழா.

ஆடல் நாயகனாகிய அம்பலத்தரசன் நேற்று (செப்/2) வளையல் வணிகன் என மங்கல ரூபமாக வந்து சகல சௌபாக்யங்களையும் அருளினார்.

முன்பு ஒரு சமயம் - தாருகா வனத்தில் மமதை கொண்டிருந்த ரிஷிகளின் மனம் கெடும்படி ஜகன்மோகினியுடன் பிக்ஷாடனராக உலவினார் ஈசன்.  

அப்போது - ரிஷி பத்னிகள் பிக்ஷாடனரின் அழகில் மனதைப் பறி கொடுத்து நின்றனர். அவ்வேளையில் ரிஷி பத்னிகளின் மேனி பசலையுற்று  வாடி வதங்கியதில் கைவளையல்கள் கழன்று விழுந்தன. 

பிக்ஷாடனரைப் பின் தொடர்ந்து சென்று கருத்தழிந்தனர். முனிவர்களும் ஜகன் மோகினியின் அழகில் மயங்கி  - நிலை தடுமாறி நின்றனர்.

அவர்களின் தவநிலை கெட்டது. விபரீதத்தினை அறிந்து சிந்தை மயக்குற்றது.

ஆனாலும் செருக்கு அடங்காமல் பிக்ஷாடனரை அழிக்க வேண்டி அபிசார வேள்வி நடத்தினர். 


அபிசார வேள்வியில் தோன்றிய - அக்னி, மான், நாகங்கள் ஆகியவற்றை ஸ்வீகரித்தும் புலி, வேழம் இவற்றை சம்ஹரித்தும் ஈசன் விளையாடினான். 

ஒரு நிலையில் உண்மையினை உணர்ந்து கொண்ட முனிவர்கள் ஐயனைச் சரணடைந்து நின்றனர்.

ஈசன் - பிக்ஷாடனராக  தோன்றிய வேளையில்தான் - பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.

மனம் தடுமாறிய ரிஷி பத்னிகள் - பிராயச்சித்தம் வேண்டி நின்றபோது - மதுரையிலே அது நிகழும் என அருளப்பட்டது. அதன்படி மதுரையில் மீண்டும் பிறந்து வளர்ந்திருந்தனர். 

அவர்களுடைய ஆவல் அறுபட வேண்டிய வேளையில் ஈசன் வளையல் வணிகனாக மதுரையம்பதியில் திருப் பாதங்கள் பதிய நடந்தார். 

அன்றைக்குத் தாருகா வனத்தில் கழன்று விழுந்த வளையல்கள் - அவருடைய தோள்களில் சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. 

வளையல் வணிகன் - வளையலோ வளையல்!.. எனக் கூவினான்.

அந்த ஒலி வேதத்தின் ஒலியாக மாமதுரை எங்கும் எதிரொலித்தது. 

வளையல் வாங்கும் ஆவலுடன் ஓடி வந்த பெண்கள் - வணிகனைக் கண்டு நாணங்கொண்டு நின்றனர்.

காரணம் அப்படி ஒரு அழகிய சுந்தரனை அதுவரை கண்டதே இல்லை!.. 

தள்ளாடும் தாத்தாக்களிடம் தயங்காமல் வளையலுக்காகக் கைகளை நீட்டிய வஞ்சியர்கள் - கைகளில் வளையல்களுடன் நிற்கும் காளையைக் கண்டு திகைத்தார்கள்!..

நாணி நின்ற அவர்களைக் கண்டு புன்னகைத்த வளையல்காரனோ - 

பாருங்கள்!.. தங்க வளை, வெள்ளி வளை, வைர வளை, ரத்ன வளை, முத்து வளை, சங்கு வளை, நேர் வளை, நெளி வளை, சுருள் வளை - என்று எத்தனை எத்தனை வளையல்கள்!.. 

இதெல்லாம் உங்களுடையது தான்!.. உங்களுக்காகவே கொண்டு வந்திருக்கின்றேன்.. யாதொன்றும் வேறாக எண்ணாமல் - உங்களுக்கு உரிய வளையல்களை ஏற்றுக் கொள்ளவேண்டும்!..  

- என்று சாதுர்யமாகப் பேசியவாறு அவர்களுடைய வளையல்களை அவர்களுக்கே அணிவித்தான்.

ஆணவ மலம் அற்றுப் போகும்படி - அவர்தம் இளங்கரங்களைப் பற்றி  வளையல்களை அணிவித்தான் வளையல் காரன்!..

வளையல்காரனின் கரம் பட்டதும் தொன்மைத் தொடர்பினால் - திகைத்துப் போயினர் அந்தப் பூவையர்.

சில விநாடிகள் தான்!.. அந்தப் பெண்களுக்கு நினைவு மீண்டது.

அந்தத் திண்ணையில் அமர்ந்திருந்த வளையல்காரனைக்  காணவில்லை.

அங்குமிங்கும் தேடினர். சற்று தொலைவில் சென்று கொண்டிருந்தான். 

வளையலுக்கு உரிய தொகையைக் கொடுக்காதது மனதில் உரைத்தது.  கூவி அழைத்தவாறே பின் தொடர்ந்தனர்.


திரும்பிப் பார்க்காமல் நடந்த வணிகன் - ஆலவாய் அம்பலத்தினுள் நுழைந்து  கருவறைக்குள் கலந்தான். 

தொடர்ந்து வந்த பூவையர் பூர்வ ஜன்ம நினைவினால் உந்தப்பட்டு உண்மை தனை உணர்ந்து போற்றித் தொழுது புலனடங்கி நின்றனர். அவர்களுடன் தொடர்ந்து வந்த உற்றார் உறவினர் அனைவரும் சிவதரிசனம் பெற்றனர். 

அதன்பின் அவர்கள் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ்ந்து  நிறைவினை எய்தினர்.

யாதொரு வினையினையும் நாம் விடாத வரை - அவைகளும் நம்மை விடுவதே இல்லை!..  
- என்பதை உணர்த்துவதே வளையல் விற்ற விளையாடல்!..

இந்த ஆவணித் திருவிழாவில் தான் - மீனலோசனி சித்திரையில் தன் கரத்தில் ஏந்திய செங்கோலை - சுந்தரேசப் பெருமானிடம் ஒப்படைக்கின்றாள். 

சுந்தரேசப் பெருமான் - பட்டாபிஷேகம் கொண்டு  ஆவணி முதல் பங்குனி வரை மதுரையை ஆள்வதாக ஐதீகம்.

மதுரையில் சுந்தரேசப் பெருமான் ஆடிய  விளையாடல்களுள்  பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் மகத்தானது. 

இன்று ஆவணி மூலம். நரியைப் பரியாக்கிய நாள்.

நம்பிக் கொடுத்த பொன்னைக் கொண்டு குதிரை வாங்காமல் கோயிலைக் கட்டினார் திருவாதவூரர் - என்று பாண்டியன் அவரைத் தண்டித்தான்.

குருவே சரணம் என்று - திருப்பெருந்துறையானைக் கைதொழ -  ஆவணி மூலத்தன்று பரிகள் வரும் - என அருளினான் ஈசன். 

அதனை நம்பிய திருவாதவூரர் மன்னனிடமும் சொல்லிவிட்டார். சொன்ன வண்ணமாக - பரிகள் வந்தன. ஆனால் அவை பரிகள் அல்ல!.. 

பனங்காட்டில் ஓடித்திரிந்த பழம்பெரும் நரிகள் என்பது - கிழமாகிப் போன பழங்குதிரைகளைக் கடித்துக் குதறி விட்டு ஓடிய பின்னரே தெரியவந்தது!.. 

பிறகு என்ன!.. மீண்டும் திருவாதவூரர் சித்ரவதைக்கு ஆளானார். 

ஈசன் சினம் கொண்டதால் வைகை ஆர்ப்பரித்துப் பெருகி மதுரைக்குள் புகுந்தது.  மன்னன் ஆணையிட்டான் - வீட்டுக்கு ஒருவர் வந்து வைகையின் கரையை அடைக்க வேண்டும் என்று!.. அவ்வண்ணம் செய்ய இயலாதாரின் நிலையை - மன்னன் மனதில் கொள்ளவில்லை.


ஆனால், ஈசன் எம்பெருமான்  -
ஏழையர் தம் கவலையைத் தன் கருத்திலும்
அழுக்கடைந்த வேட்டியை இடையிலும்
மண்வெட்டும் படையை தோளிலும் தாங்கியவராக
- தனியளாய்த் தவித்து நின்ற வந்தியம்மையின் துயர் துடைக்க வந்தார்.

வந்திக்கு மகிழ்ச்சி. கூலி கொடுக்க காசில்லை. உதிர்ந்த பிட்டு தருகின்றேன்!.. - என்றாள். அவளுக்கு நம்பிக்கை ஊட்டிய பெருமான்  - கூலியை முதலிலேயே பெற்றுக் கொண்டார்.

உலகிலேயே முதன் முறையாக - வேலைக்கு முன்பாக கூலியைப் பெற்றுக் கொண்ட பெருமை மாமதுரை சொக்கேசனையே சாரும்!.. 


இவன் வேலை செய்வான்!.. - என்று நம்பிய வந்தியும் அவன் கேட்டவாறு - கூலியாக உதிர்ந்த பிட்டினை உள்ளன்புடன் ஊட்டினாள் - யார் பெற்ற பிள்ளையோ.. இத்தனை பசியுடன் இருக்கின்றது என்று!..

அன்று வந்தி அவித்தெடுத்த பிட்டு எல்லாமே உதிர்ந்தன. 
அத்துடன் - வந்தியின்  வல்வினைகளும் சேர்ந்தே உதிர்ந்தன.

ஊட்டுவார் ஊட்டினால் - உண்ணாதார் யார்!..

உவப்புடன் உண்டார் பெருமான்!.

ஆனால், வந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக வேலை செய்யவில்லை. ஒரு கூடை மண்ணைக் கூட உடைப்பில் கொட்டவில்லை!..

ஆடினார். அங்குமிங்கும் ஓடினார். ஆற்றங்கரையில் படுத்துறங்கினார்.

வந்தியின் பங்கு அடைபடவில்லை. அடைக்கப்பட்ட பங்கினையும் சேர்த்து அழித்தது வைகை. 

விஷயம் அறிந்த மன்னன் சினங்கொண்டு வந்து சிறு பிரம்பால் ஓச்சினான். 

ஓங்கார ஸ்வரூபன் - ஒற்றைக் கூடை மண் கொண்டு வைகையை அடைத்து விட்டு விண்ணில் பேரொளியாக நின்றான்.

வைகை நல்ல பிள்ளையைப் போல அடங்கி ஒடுங்கியது.

வானில் நின்றருளிய வள்ளலைக் கண்டான். கண்ணீர் சிந்தி அரற்றினான். கரங்குவித்தான் பாண்டியன்!..

எல்லாம் எமது திருவிளையாடல்!..  - எனப் புன்னகைத்தார் பெருமான்.

வந்தியம்மை திருக்கயிலாயம் அடைந்தாள்.
திருவாதவூரர்  - மாணிக்க வாசகர் எனப் புகழப்பட்டார்.


ஆவணிப் பெருந்திருவிழாவில் -  பிட்டுக்கு மண் சுமந்த லீலையின் போது -

திருப்பரங்குன்றத்திலிருந்து - திருமுருகனும்  தேவகுஞ்சரியும்  மாமதுரைக்கு எழுந்தருள்கின்றனர். 

செப்டம்பர்/4 வியாழன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல். பின்னும் மறுநாள் விறகு விற்ற லீலை.

மாமன்னனாக மகுடம் பூண்டவன் மக்களுக்காக - மாணிக்கம் விற்கின்றான். வளையல் கொண்டு திரிகின்றான். கூலியாளாய் வந்து பிரம்படி பட்ட பின்னும் விறகு சுமந்து வருகின்றான்.

செப்டம்பர்/6 அன்று சட்டத்தேரில் எழுந்தருளும் பெருமானுக்கு மறுநாள் ஞாயிறன்று தீர்த்தவாரி. அத்துடன் மங்கலகரமாக திருவிழா நிறைவடையும்.

கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடற்
துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே!..(3/52)
திருஞானசம்பந்தர்.

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்து ஈசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்!..

மாணிக்கவாசகர். 

மீனாட்சி சுந்தரேசன் திருவடிகள் போற்றி!..
* * *

8 கருத்துகள்:

 1. பிட்டுக்கு மண் சுமந்த லீலை, வளையல் விற்ற லீலை, நரியை பரியாக்கிய லீலை என்று திருவிளையாடல் புராணம் காட்சிகளை அழகாய் காட்சி படுத்தி விட்டீர்கள்.
  பாடல் பகிர்வு அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 2. மாமதுரையில் மங்கலகரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது
  ஆவணி மூலத் திருவிழா.
  அதனை அருமையாகக்காட்சியபகிர்வுகளும் படங்களும்
  இனிமை கூட்டின.பாரட்டுக்க்ள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் பாராட்டுரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 3. பதிவுக்கு தகுந்த சித்திரங்கள் அருமை நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 4. நமது கலாச்சாரம் அறிய கதைகள் தேவைப்படுகின்றன. ஆனால் அண்மைக் காலத்தில் கதை சொல்வோரும் இல்லை. கதை கேட்போருமில்லை. உங்களது பதிவு அக்குறையைப் போக்குகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் மேலான வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

   நீக்கு