நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 22, 2014

மஹாளய அமாவாசை

நாளை  - புரட்டாசி மாதம் ஏழாம் நாள் செவ்வாய்க் கிழமை (செப்டம்பர்/23) மஹாளய அமாவாசை. 

காலம் காலமாக நமது கலாச்சாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் நாள். 


புரட்டாசி மாதம் தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களே  மஹாளய பட்சமாகும்.  

இந்த பதினைந்து நாட்களில் - ஒரு சந்ததியில்  காலகதி அடைந்து மறுபிறவி வாய்க்காத முன்னோர்களும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் என சகலரும் பித்ரு உலகத்தில் இருந்து அனுமதி பெற்று அவரவர் சந்ததியினரைத் தேடி  வருவதாக நம்பிக்கை.

ஒவ்வொரு இல்லமும் நிம்மதியாக சந்தோஷமாக எவ்வித குறைகளும் இன்றி நலமோடு வாழ வேண்டும். இல்லறம் செவ்வனே தழைக்க வேண்டும். அதற்கு நமது முன்னோர்களின் நல்வாழ்த்துகள் மிக மிக அவசியமாகும்.

அவர்களின் நல்லாசிகள்  நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் நாள் மஹாளய அமாவாசை ஆகும்.

இந்த நாளில் பித்ருக்களின் நினைவில் தான தர்மங்களைச் செய்வதும் அவர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து வழிபடுவதும்  மிகப்பெரிய புண்ணியம் ஆகும்.

ஒவ்வொரு இல்லத்திலும் அவரவர் சக்திக்கு ஏற்றபடி பித்ரு பூஜைகளை செய்தாலே போதும். அன்னதானமும் வழிபாடும் பித்ருக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன.

அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து சந்ததியினரை வாழ்த்தி மகிழ்கிறார்கள்.

இந்த தினத்தில் தர்ப்பணம் செய்யக் கடைமைப்பட்டோர் விரதமிருந்து பிதுர் தர்ப்பணம் செய்தால் கர்ம வினைகள் விலகும். ஏழு தலைமுறைகளுக்கு புண்ணியம் சேரும் என்பது ஆன்றோர் வாக்கு.

புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.  

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை தினங்களை விட உயர்ந்த நாள் மகாளய அமாவாசை. 

மஹாளய அமாவாசை மிகவும் தனித்துவம் வாய்ந்த நாள். 

தலைமுறைக்கே நற்பயன் அளிப்பது மகாளய பட்ச அமாவாசை!

குடும்பத்தில் முன்னோர்களை நினைவு கூர்ந்து  - தமிழ் மாதத்தின் நாட்களைக் கணக்கிட்டு ( திதி)  செய்வது சிரார்த்தம் எனப்படும். வருடத்தின் அமாவாசை நாட்களில் செய்வது தர்ப்பணம் எனப்படும்.  

சிரார்த்தம்  என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு வகைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல்.

ஆனால், தர்ப்பணம் என்பது நதிக்கரைகளில் முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி எள்ளும், நீரும்  வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.


மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி மஹாளய அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்து ஒட்டு மொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். 

தீர்த்தக் கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். 

அற்றோர்க்கும் அலந்தோர்க்கும் ஆடைகள், உணவு என வழங்கி அறம் செய்ய வேண்டும். படிக்க சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு இயன்றவரை அவர்களது கல்விக்கு உதவுதல் நன்று.  

மகாளய பட்சத்தின் பதிநான்கு நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை நாள் - என  ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்களைக் கூட சிலர் குறிப்பிடுகின்றார்கள்.  

அவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மனிதாபிமானத்தின் வழி நின்று ஏழை எளியோர்க்கு இயன்ற உதவிகளை பிரதிபலன் எதிர்பாராது செய்வது மிகச்சிறந்த அறச்செயலாகும்.

முன்னோர்தம் நல்லாசிகளினால் அறவழியில் நிற்போர் தம் சந்ததியில்
-

சிறந்த வாழ்க்கைத் துணையும், குடும்பத்திற்கு ஏற்ற மருமகனும்  மருமகளும் அமைவர். சந்ததி சிறக்க கல்வி கேள்விகளில் சிறந்த அறிவாற்றல் நிறைந்த ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பர்.
 
அவர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வன்பகைவர்களிடமிருந்து தப்பிக்க இயலும்
 
வீடு, விளைநிலம், பசுக்கள், முதலான ஐஸ்வர்யங்கள் நிறையும்.

சிறந்த பதவிகளை அடைவதுடன்
மேன்மை, புகழ் சேரும்.
 
விவசாயம் மற்றும் தொழில் அபிவிருத்தியும் ஆரோக்கியம் தீர்க்காயுள் என நன்மைகளும் நலங்களும் பெருகும் - என்றெல்லாம்  கூறப்படுகின்றது.

எனவே, மகாளய அமாவாசை நாளில் நல்லறங்களைச் செய்வதன் பயன்  நமக்கு மட்டுமல்ல!.. நமது தலைமுறைக்கும் சேர்த்துத் தான்!.

வைதீகம் என்றில்லாமல் அவரவர் குல வழக்கப்படி - முறையாக  பித்ருக்களுக்கு  பூஜைகளை நிறைவேற்றுவது அவசியம் என்றாகின்றது. 

பித்ரு பூஜைகளை வைதீக முறைப்படித் தான் செய்யவேண்டும் என்றில்லை.


எனக்கும் என் முன்னோர்களுக்கும் இடையில்  வேறொருவர் எதற்கு?.. - என, நாமே - விடியற்காலைப் பொழுதில் நதிகளில் நீராடி முடித்து,  

பிதுர்காரகன் ஆகிய சூரியனை நோக்கியவாறு தண்ணீரில் இருந்தபடியே இரண்டு கைகளாலும் நீரினை அள்ளி முன்னோர்களை தியானித்து - மூன்று முறை நீரில் விடலாம். 

எள்ளும் நீரும் வார்த்து பூக்களைத் தூவி வழிபடலாம். 

நமது அன்றாட வாழ்க்கையில் - எத்தனை எத்தனையோ உயிரினங்களின் அழிவிற்குக் காரணமாகி விடுகின்றோம்.

நாம் செய்யும் அறச்செயல்களினால் அனைத்து உயிர்களுக்கும் நிவாரணம் கிடைக்கின்றது.  அந்த உயிர்களும் நல்ல கதியினை அடைகின்றன.

இன்னும் மறு பிறப்பு அடையாத பித்ருக்களால் தாம் நினைத்த போதெல்லாம் பூமிக்கு வர இயலாது.

இந்த மகாளய பட்ச நாட்களில் தான் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சூட்சும தேகத்துடன்  பூமிக்கு வரும் அவர்கள் நாம் செய்யும் பித்ரு பூஜைகளை நேரடியாக ஏற்று மகிழ்கின்றனர். 

அதனால் அவர்களுக்கு சாந்தி உண்டாகின்றது.

பித்ருக்கள் மறுபிறவியினை அடைந்திருந்தால் கூட, 
நாம் செய்யும் பூஜையின் பலன்  - அவரவர்க்குத் தேவையான வகையில் அவர்களைச் சென்றடைகின்றன என்பது முன்னோர் வாக்கு.

கடவுளை மறக்கலாம். மறுக்கலாம்!.. 
அது அவரவர் தனிப்பட்ட விஷயம்.
முன்னோர்களை மறக்க முடியுமா!.. மறுக்க முடியமா?..

அதெல்லாம் சரி.. முன்னோர்கள் இருந்தார்கள்.. மடிந்தார்கள்!.. 
முடிந்தது நாடகம் என்று விடாமல் இந்த கூத்தெல்லாம் எதற்கு!?..

சிந்தித்துப் பாருங்கள்..


யாரோ ஒருவர் விதைத்த விதை தான் -
நமக்கு உண்ண உணவாகின்றது. 
உடுக்க நூலாகின்றது. நிற்க நிழலாகின்றது.

நம்முடன் பிறந்தாரும் உற்றாரும் - பெற்றோரும் கூட ஏதோ ஒரு கஷ்டமான சூழ்நிலையில்  நம்மை விட்டு விலகிச் சென்றிருக்கலாம். 

அந்த அசாதாரணமான வேளைகளில் எங்கிருந்தோ கரங்கள் தாமாக வந்து நம் கண்ணீரைத் துடைத்திருக்கும். ஆறுதல் வார்த்தைகள் கிடைத்திருக்கும்.

அவர்களுக்கும் நமக்கும் இந்தப் பிறவியில் எந்தவித இரத்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் -

சொந்தங்கள் சொல்லாத ஆறுதலையும் செய்யாத தேறுதலையும் அவர்கள் செய்திருப்பர்!..

ஏன்!.. எதனால்?..  -  யோசித்தால் நல்லதொரு விடை கிடைக்கும்!..

அவர்களும் நாமும் ஏதோ ஒரு பிறவியில் உறவெனும் அன்பில் கட்டுண்டு கிடந்தவர்களே!..

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான். முடிவே இல்லாதது!.. 

மனிதர்கள் மட்டுமல்ல!.. 
செடி கொடி பறவைகள் விலங்குகள் கூட இந்த கட்டுக்குள் வருபவை!..

மகாளய அமாவாசை  - அரிய மானிடப் பிறவியைத் தந்து, நம்மைக் காத்து வளர்த்து நமக்கு வேண்டிய நன்மைகளையும் நலங்களையும் செய்து அமரத்துவம் அடைந்தவர்க்கு நன்றி தெரிவிக்க நடத்தும் ஒரு வழிபாடு எனக் கொள்க!..

அங்கே இருக்கும் மல்லிகையின் மணம் இங்கே கமழ்வது போல,
எங்கோ சூல் கொண்ட மேகம் இங்கே நின்று பொழிவது போல
எங்கிருந்தும் செய்த நல்லறம் எப்போதும் காத்து நிற்கும்!..

அறிவார்ந்த காரியங்களின் பலன் இப்பிறவிக்கு மட்டுமே!..
ஆனால் - ஆத்மார்த்தமான காரியங்களின் பலன் ஏழேழ் பிறவிகளுக்கும்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *

6 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா!

  வாழ்வில் தவறவிடாது நாம் கடைப்பிடித்து உய்ந்திட
  நீங்கள் தரும் பதிவுகள் உன்னதமானவை!

  பிதுர்களுக்குச் செய்யும் கடன்களில் இதுவுமொன்று என அறிந்துள்ளேன். இன்றோ இத்தனை விடயங்கள் அதிலுள்ளனவென
  அறிந்து மகிழ்கின்றேன்!. மிகச் சிறப்பு ஐயா!

  முத்தாய்ப்பாக ...
  // அறிவார்ந்த காரியங்களின் பலன் இப்பிறவிக்கு மட்டுமே!..
  ஆனால் - ஆத்மார்த்தமான காரியங்களின் பலன் ஏழேழ் பிறவிகளுக்கும்!..//

  மிக அருமை! மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 2. மாகாளய அமாசாசை அறிந்தேன்
  உணர்ந்தேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

   நீக்கு
 3. அருமையான தகவல்கள்.

  சில வருடங்கள் முன்பு வரை இந்த நாளில் பலரை ஒன்று சேர்த்து ஹரித்வார்-ரிஷிகேஷ் அழைத்துச் சென்று வந்ததுண்டு..... அங்கே வேண்டியவர்கள் பித்ரு கடன்களைச் செய்ய, நானும் சில நண்பர்களும் கங்கையில் மூழ்கித் திளைப்போம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தாங்கள் வருகை தந்து கங்கையில் மூழ்கிக் களித்த நாட்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி..

   நீக்கு