நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 09, 2014

கிரி வலம்

கோங்கு எனப்படும் நல்மரத்தின் பொன்னிற பூங்கொத்துக்களைப் போன்ற  குடைகளை உடைய பல்வேறு தேசத்து அரசர்களும் நெருக்கியடித்துக் கொண்டு - ராஜராஜ சோழனைக் காண்பதற்குக் காத்துக் கிடக்கின்றனர். 

அந்த அரசர்கள் நெருக்கியடித்துக் கொண்டு நிற்பதன் காரணமாக அவர்களுடைய கிரீடங்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்கின்றன.  

கிரீடங்கள் ஒன்றோடொன்று உராய்வதனால் - அவர்களின் கிரீடங்களில் இருந்தும்  - இதர ஆபரணங்களில் இருந்தும் -  ஒளி நிறைந்த செம்மையான ரத்னக் கற்கள் தெறித்து விழுகின்றன. 

அப்படித் தெறித்து விழுந்த ரத்னக் கற்கள்  - நிலவு தவழும் நெடிய மாடங்களுடன் கூடிய மாளிகைகள் நிறைந்திருக்கும்  வீதிகள் எங்கும் குவிந்து கிடக்கின்றன. 


இப்படி, ரத்னக் கற்கள் குவிந்து கிடக்கும் வீதிகளுடன் - பெரிய மதில்களால் சூழப்பட்டு பெருஞ்சிறப்புடன் விளங்கும் தஞ்சை - 

இராசராசேச்சரத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்றார். 

அவரது ஜடாமகுடம் தண்ணிலவின் பேரொளி எனவும்,  அவருக்காக விரிக்கப் பட்ட முத்துக் குடை வெண்ணிலவின் பேரொளி எனவும் - விளங்குகின்றது.

அந்த முத்துக் குடையின் நிழலில் ரிஷப வாகனராக பெருவுடையார் திருவுலா எழுந்தருளும் திருக்குறிப்பு தான் என்ன!..

இப்படிப் புகழ்ந்துரைப்பவர் - சித்தர் பெருமானாகிய கருவூரார்.


விஜயாலய சோழன் மீட்டெழுப்பிய நகர் - தஞ்சை!.. 
மாமன்னன் இராஜராஜ சோழன் கட்டிக் காத்த நகர் - தஞ்சை!.. 

நர்மதைக்குத் தெற்கே புகழ் விரிந்திருந்த மும்முடிச் சோழ மண்டலத்தின் தனிப் பெருந்திருநகர் - தஞ்சை!.. 

ராஜராஜ சோழனுக்குப் பிறகு - ராஜேந்திர சோழன் முடி சூட்டிக் கொண்ட பின் - பத்தாண்டுகள் வரை,

கடல் கடந்த மகா மண்டலத்திற்கு ஒரே கொடியாய்ப் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்த பெருநகர் - தஞ்சை!..

இத்தகைய பெருஞ்சிறப்புகளைக் கொண்ட தஞ்சை மாநகர் கடந்த இரண்டு ஆண்டுகளாக  - வெகுவாக சிறப்பிக்கப்படுகின்றது. 

மாநகரின் மக்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நல்ல விஷயங்கள்  அனைத்தும் ஒவ்வொன்றாக தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளினால் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

தஞ்சாவூர் தேர் (150 ஆண்டுகளுக்கு முன்)
அவை - சென்ற ஆண்டின் தொடக்கத்தில் தஞ்சை பெரிய கோயிலுக்கு புதிய தேர் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடங்குகின்றன. 

இவற்றுள் பல - தமிழக அரசு  - தாமே முன் வந்து அறிவிப்பவையாகும்!..

மக்களின் விருப்பம் அவர்களிடமே இருந்தது. 

இவற்றுக்காக யாரும் வீதியில் இறங்கவில்லை.  கடையடைப்பு கவன ஈர்ப்பு என்றெல்லாம் எந்த அமைப்பும் களம் இறங்கிப்  போராடவில்லை.

நகர் வாழும் மக்கள் கேட்காமலே, தஞ்சை - மாநகர் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்பின் அடுத்தடுத்த முன்னேற்றங்கள்!.. 

அவற்றுள் - 

புறவழிச் சாலையின் இரண்டாம் நிலை, 
நெரிசலைத் தவிர்க்க - இரண்டு புதிய மேம்பாலங்கள், 
புதிய ஆட்சியர் அலுவலகம், 
செங்கிப்பட்டியில் புதிய பொறியியற் கல்லூரி, 
ஈச்சங்கோட்டையில் கால்நடை அறிவியற் கல்லூரி,
புது ஆற்றங்கரையில் நடைபாதைகள், 
மருத்துவக் கல்லூரியை மேம்படுத்துதல்,
அகழியின் ஆக்ரமிப்புகளை அகற்றித் தூர் எடுத்தல்.

என்பன குறிப்பிடத்தக்கவை.

கோட்டை பெரிய அகழியில் ஆக்ரமிப்புகளை அகற்றித் தூர் எடுத்தலும் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள சிறிய அகழியில் பல ஆண்டுகளாக மண்டி கிடந்த புதர்களை அப்புறப்படுத்துதலும் மக்களின் கனவாகவே இருந்தது.

சீரமைக்கப்பட்ட அகழி
அவை நிறைவேற்றப்பட்டு விட்டதில் மக்கள் சந்தோஷம் அடைகின்றனர்.

குறிப்பாக - பெரிய கோயில் கோட்டையைச் சுற்றி மண்டிக் கிடந்த புதர்கள் முற்றாக அகற்றப்பட்டு விட்டன. 

நேற்றைய தினம் பௌர்ணமி வழிபாட்டுக் குழுவினர் மகிழ்வுடன் வலம் வந்து வணங்கினர்.


பல ஆண்டுகளாகவே - வியாழக் கிழமைகளிலும் பௌர்ணமி தினத்திலும் - பிரதோஷ தினங்களிலும் வழிபாட்டுக் குழுவினர் - திருக்கோயிலின் உள்  சுற்றில் பஞ்சாட்சரம் முழங்கியவாறு குங்கிலிய தூபத்துடன் வலம் செய்து வணங்குகின்றனர்.

அப்போதே - சிலர் கேட்டார்கள்!.. 

மலையைத் தானே - பௌர்ணமி தினத்தில் சுற்றுவார்கள். பெரிய கோயில் என்ன மலையா?.. - என்று!..

தஞ்சை ராஜராஜேஸ்வரம் - மலைதான்!.. 
இதன் மறு பெயர் - தட்சிண மேரு என்பதாகும்!..

கிழக்கு முகமான திருக்கயிலாயப் பெருங்காட்சியே - இதற்குச் சாட்சி!..

சித்திரை முதல் நாளன்றும், மாட்டுப் பொங்கலன்றும் பிரதோஷ நாட்களிலும் இத்திருக்கோயிலில் மகா நந்தியம்பெருமானுக்கு நிகழும் அபிஷேகங்கள் அனைவரையும் கவர்ந்தன.

பிரதோஷ அபிஷேகங்களைத் தரிசிக்க பிறமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரள்கின்றனர்.

திருக்கோயிலின் வெளியில் மூன்று மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. 

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வந்து ஸ்ரீ பிரஹந்நாயகியையும்  பெருவுடையாரையும் தரிசித்து மகிழ்கின்றனர்.

சீரமைக்கப்பட்ட கோட்டை வெளிச்சுற்று
கோட்டை வெளி முழுதாக சுத்தம் செய்யப்பட்ட பிறகு, நேற்று - கோட்டை வெளிச்சுற்றில் வார வழிபாட்டு மன்றத்தின் தலைவர் திரு. சோம. ஆறுமுகம் அவர்கள் தலைமையில் கிரிவலம் நடந்துள்ளது.

நேற்று - கோட்டை வெளிச்சுற்றில் நடந்த கிரிவலம் பற்றி அறியவில்லை என  பலரும் வருந்தியிருக்கின்றனர். 

எனினும் அடுத்தடுத்த பௌர்ணமி நாட்களில் பெருமளவில் பக்தர்கள் திரள்வார்கள். 

வழிச்சுற்றில் - தற்காலிக விளக்குகளை அமைத்துக் கொடுத்தது மாநகராட்சி. 

விரைவில் சூரியஒளி விளக்குகள் நிரந்தரமாக அமைக்கப்படும் என இண்டாக் அமைப்பின் கௌரவச் செயலார் திரு.S.முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

கோயிலை ஒட்டியபடி - புது ஆறு
இரண்டு கி.மீ. சுற்றளவுடைய இந்த வெளிச்சுற்று சிறப்பாக அமைவதில் பெரும் பங்காற்றியவர் -

மாவட்ட ஆட்சியர் திரு.N. சுப்பையன் அவர்கள்.

ஆட்சியர் அவர்களுக்கும் இணைந்து பணியாற்றிய அலுவலர்களுக்கும் தஞ்சை மாநகராட்சி மன்றத்தினர்க்கும் -  பல தரப்பினரும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

நற்பணி செய்த நல்லோர் அனைவருக்கும் நன்றி!..

Images : Thanks - Natives of Thanjavur

கோட்டை வெளிச்சுற்று மேலும் 
சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட வேண்டும். - 

கோட்டை வெளிச்சுற்றில்
ஸ்ரீபிரஹந்நாயகியுடன் பெருவுடையார் எழுந்தருள வேண்டும் 
என்பது நமது விருப்பம்!..

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ கோங்கிண ரனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்
துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்கு
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்து  இவர்க்கே!..
 
சித்தர் கருவூரார்.

சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *   

12 கருத்துகள்:

 1. நான்கைந்து முறை பெரிய கோவிலுக்குச் சென்று வந்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் கோவிலுக்குப் போகும்போதும் (மன்னிக்கவும்) கோவிலின் சாந்நியத்தை உணர முடியவில்லல்,.ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல் மட்டுமே உணர முடிந்தது. இது என் ஒருவனின் அனுபவம் மட்டுமல்ல. முதலில் அரசாங்கத்தின் சாதனைகளைப் படிப்பது போல் தோன்றியது. கிரிவலம் தொடர்ந்து நடக்க வேண்டுகிறேன். தேர் ஓடுகிறதா. . தஞ்சையம்பதியாருக்கு அயல் நாட்டிலும் சொந்த ஊரின் நினைப்பே. அது பதிவில் தெரிகிறது./ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   இன்னும் யாருக்கும் முழுமையாகப் புரியாத புதையல் தான் - தஞ்சை பெரியகோயில்.

   பழைமையான தேர் சிதிலமாகி விட்டது. எனவே புதியதாகச் செய்யப்படும் தேர் - தற்போது அச்சு பொருத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளது. சிம்மாசனம் பொருத்தும் வேலை நிறைவடைந்ததும் வெள்ளோட்டம் காணலாம்.

   தங்கள் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 2. தஞ்சைக்கு அடிக்கடி பஸ்ஸில் பயணம் செல்பவன் நான். பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் போதெல்லாம் வழியிலுள்ள பெரிய கோயில் அகழிகள் நிலை கண்டு மனம் வருந்தும். இப்போது அவை சீரமைக்கப்பட்டு சுத்தமாக உள்ளன என்பதை தங்கள் பதிவின் மூலம் தெரிந்து ஆறுதல் அடைந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களைப் போல எத்தனை பேர் இப்படி வருந்தியிருப்பார்கள்.

   அகழிகள் மீண்டும் பொலிவு பெறுகின்றன.

   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 3. கிரிவலம் என்கிற தலைப்பில் ராஜராஜ்சொசன் என்று சொல்கிரீர்க்றலே என்கிற ஆர்வத்துடன் படிக்க உட்கார்ந்தேன். படிக்க படிக்க தஞ்சைப் பெருவுடையார் கோவில் மகிமைகள் அறிந்து கொண்டேன். மாயவரத்திற்குப் பலமுறை சென்றிருந்தாலுமே தஞ்சைக்கு சென்றதில்லை. அடுத்த முறை மாயவரம் செல்லும் போது ராஜ ராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலிற்கு சென்று பிரகதீஸ்வரர் அருள் பெற ஆண்டவனின் அருள் வேண்டுகிறேன்.
  நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   அன்புடன் வரவேற்கின்றேன். வாருங்கள் ஒரு முறை தஞ்சைக்கு..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. உண்மைதான் ஐயா
  தஞ்சை நகரே சீரமைக்கப் பட்டு
  புத்தொளி பெற்றுத்தான் வருகிறது
  தொடரட்டும் இந்நிலை
  அரசினரை வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   வாழ வைக்கும் தஞ்சை வளம் பெற வேண்டும்..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 5. நகர் சீரமைக்கப்படுவது அறிந்து மகிழ்ச்சி.....

  பல ஊர்களில் புராதனச் சின்னங்கள் அழிந்து வருகின்றன என்பது வேதனையான விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   புராதன சின்னங்களைக் காக்க வேண்டும் என்ற ஆவல் பலருக்கும் எழுந்துள்ளது. நிச்சயம் மாற்றம் வரும்.
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 6. சந்தோஷம் பொங்கும் பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு