இன்று வைகாசி விசாகம்!..
அருவமும் உருவமுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
(கந்த புராணம்)
முருகப்பெருமானின் திருஅவதாரத்தினைக் காட்டும் திருப்பாடல் இது.
திருக்குமரன் - உலகம் உய்வடைவதற்கு உதித்தருளிய திருநாள் இன்று!..
எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளின் திருவடிவமே - திருமுருகன் என்பர் ஆன்றோர்.
சிவபெருமான் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் எனும் ஐந்து திருமுகங்களுடன் - அதோ முகம் கொள்ள -
அத்திருமுகங்களில் பொலியும் நெற்றிக்கண்களில் தோன்றிய தீச்சுடர்களில் இருந்து - சரவணப் பொய்கையில் திருமுருகன் திருஅவதாரம் செய்தனன் - என்பது திருக்குறிப்பு.
ஆணவ கன்ம மாயா மலங்களை வேரறுக்கவே - திருமுருகன் தோன்றினன்.
ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டு யுகங்களுக்கு ஆளும் வரத்தினை சிவபெருமானிடமிருந்து பெற்றான் - மாயையின் மகனான - சூரபத்மன்.
அதன்பின் - தனது தம்பியர்களான - தாரகன், சிங்கமுகன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு விண்ணிற்கும் மண்ணிற்கும் கொடுமைகள் பல புரிந்தான்.
இவர்களுடன் சூரபத்மனின் தங்கையான அஜமுகியும் சேர்ந்து கொண்டாள்.
அசுரர்களின் முடிவே - சூர சம்ஹாரம்!..
படைக்கலங்களை இழந்து - நிராயுதன் ஆகிய அசுரன்,
வேத வேதாந்தங்களும் காண இயலாத வேலாயுதனை எதிர்த்து நின்றான்.
மாமரமாகி நின்று வீழ்ந்த பின்னும் - விழிப்புறாமல்
வேலவனை வெற்றி கொள்ளத் துடித்தான்..
ஆயிரத்தெட்டு அண்டங்களில் ஆட்சி செய்த சூரபத்மன் -
வேறெதுவும் செய்ய இயலாத வெறுங்கையனாகி -
பன்னிருகையனை வெல்லவேண்டும் என்ற வெறியுடன்,
எளிய சிற்றுயிர்களின் வடிவந்தாங்கி எதிர்த்து நின்றான்..
மயிலாகவும் சேவலாகவும் வடிவங்கொண்டு வந்தான் சூரபத்மன்.
ஆங்காரமான அகவலுடன் எதிர்த்து வந்தது மயில்!..
கொடூரமான கொக்கரிப்புடன் பகைத்து வந்தது சேவல்!..
அசுரர் தலைவனின் நிலை கண்டு - அறுமுகச் செவ்வேள் இரங்கினான்..
ஓங்காரத் திருவடிவினனாகிய திருக்குமரன் புன்னகைத்தான்!..
ஓடி வந்த மயிலைத் திருவடியினால் தீண்டியருளிய திருமுருகன் -
கொக்கரித்த கோழியைத் திருக்கரத்தினால் பற்றிக் கொண்டான்.
அதுவே - அசுரனுக்குத் தீட்க்ஷையானது.
அந்த அளவில் - அடியவன் ஆகி நின்றான் - கொடியவன்..
திருவடியின் கீழ்ப்பட்ட மயிலைத் தனது வாகனமாக்கிக் கொண்ட வடிவேலன் -
சேவற்கோழியைத் தன் திருக்கொடியாகக் கொண்டான்!..
வெற்றி வேற்குமரனை சர்வலோகமும் போற்றித் துதித்து மகிழ்ந்தது.
தேவேந்திரனின் திருமகளான தெய்வானையும்
நம்பிராஜனின் திருமகளான வள்ளியம்மையும் -
மனை மங்கலமாகி - திருக்குமரனின் வலமும் இடமும் பொலிந்து நின்றனர்..
சித்திரத் திருவேலும் செஞ்சேவற்கொடியும் வண்ண மயிற்தோகையும்
வழிபடும் பொருளாகவும் வரந்தரும் திருவாகவும் ஆகின.
முருகனே தமிழ்!.. தமிழே முருகன்!..
செந்தமிழ்க் குடியிற் பிறந்த ஒவ்வொருவருக்கும்!..
ஆதிகாலந்தொட்டே முருகவழிபாடு தமிழ்கூறும் நல்லுலகில் தழைத்தோங்கி நிலைத்திருக்கின்றது.
தாம் வாழும் நிலந்தோறும் - நன்றி மறவாமல் - திருமுருகன் தோன்றிய விசாகத் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் - தமிழர்கள்...
தமிழகத்தின் திருக்கோயில்கள் தோறும் திருவிழாக்கள் நிகழ்கின்றன.
 |
வயலூர் |
அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் வல்லமை பெற்ற திருத்தலம் வயலூர்!..
வயலூர் முருகன் திருக்கோயிலில், நேற்று (31/5 - ஞாயிறு) வைகாசி விசாகத் திருத்தேரோட்டம் சிறப்பாக நிகழ்ந்தது.
வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் -வைகாசி விசாகத் திருவிழாவிற்கான திருக்கொடியேற்றம் 23/5 அன்று நிகழ்ந்தது.
திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மேஷ வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் - என வள்ளி தேவயானையுடன் திருக்குமரன் - திருவீதி எழுந்தருளினன்.
30/5 அன்று அதவத்தூர் தைப்பூச மண்டபத்தில் வீற்றிருந்து திருக்காட்சி நல்கிய பின் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த திருக்குமரன் வைகாசி விசாகத் திருத்தேரோட்டம் கண்டருளினன்.
 |
நன்றி - செந்தில்குமார் |
நேற்று (31/5) மாலை 3.30 மணிக்கு - வள்ளி தேவயானையுடன் கல்யாணத் திருக்கோலங்கொண்டு திருத்தேரில் எழுந்தளுளினன்.
ஆயிரக்கணக்கான அன்பர்கள் வடம் பிடித்துத் தேரிழுத்து மகிழ்ந்தனர்.
இன்று (1/6) நடராஜர் தரிசனம். தீர்த்தவாரி, பால் காவடி, அபிஷேகம் நடக்கிறது.
இரவு எட்டு மணிக்கு - வெள்ளிக் கவசம் பூண்டு வள்ளி, தேவயானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
பின் - திருக்கொடி இறக்கம்.
நாளை (2/6) மாலை 4.30 மணிக்கு சங்காபிஷேகம்.
இரவு எட்டு மணிக்கு தெப்ப உற்வசம்.
நாளை மறுநாள் (3/6) இரவு ஒன்பது மணிக்கு ஆடும் பல்லக்கு உற்சவம்.
சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்தான் - செல்வக்குமரன்!..
அலைவாயில் எனும் திருச்செந்தூரிலும் வைகாசித் திருவிழா சிறப்புடன் நிகழ்கின்றது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் திருநடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நிகழ்ந்தன.
மாலையில் சிறப்பு அபிஷேகம். மகா தீபாராதனைக்குப் பின் - வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ ஜயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள கிரிவீதிகளில் திருவீதியுலா நிகழ்கின்றது.
கௌதம புத்தர் பிறந்ததும் ஞானம் எய்தியதும் ஜோதி நிலை அடைந்ததும் வைகாசி விசாகம்.
ஆழ்வார் திருநகரியில் - நம்மாழ்வார் பெருமான் அவதரித்ததும் வைகாசி விசாகம்.

பரமனுக்கு குருவாகி முருகன் ஓங்காரப் பொருள் உரைத்த தலம் சுவாமிமலை.
பரமன் குருவாகி முருகனுக்கு ஓங்காரப் பொருள் உரைத்த தலம் தென்சேரிகிரி.
தகப்பனுக்கு உபதேசித்த தனயன் - தகப்பனிடம் இருந்து மந்திர உபதேசம் பெற்றதால் மந்திரகிரி எனவும் திருப்பெயர்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற திருத்தலம்..
 |
வேலாயுத ஸ்வாமி - செஞ்சேரிமலை |
இத்திருத்தலத்தில் தான் - திருமுருகன் பன்னிரு திருக்கரங்களுடன் சேவலைப் பற்றியிருக்கும் திருக்கோலத்தில் திகழ்கின்றனன்.
இன்று செஞ்சேரி மலை என்றழைக்கப்படுகின்றது.
திருப்பூர் - பொள்ளாச்சி வழித்தடத்தில் அமைந்துள்ளது.
காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் - எனும் அறுபகைகளை வெல்லுவதே முருக வழிபாடு!..
நமது உடலில் ஆறு ஆதாரங்கள் விளங்குகின்றன.
அவற்றை அறுமுகச்செவ்வேளின் அறுபடை வீடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுவர் ஆன்றோர்.
மூலாதாரம் - திருப்பரங்குன்றம்.
சுவாதிஷ்டானம் - திருச்செந்தூர்.
மணிபூரகம் - தென்பழனி.
அநாகதம் - திருவேரகம் எனும் சுவாமிமலை.
விசுக்தி - திருத்தணிகை.
ஆக்ஞா - குன்று தோறாடல் எனும் பழமுதிர்சோலை.
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத் தருள் சண்முகன்..
என்பார் - கந்தரனுபூதியில் - அருணகிரியார்.
அருணகிரியாரின் மனம் - கன கல் என்ற நிலையில் இளகி நிற்கின்றது எனில்,
நம்முடைய மனமோ பெருங்குன்று என இறுகி நிற்கின்றது..
அறுமுகப் பெருமான் - ஆடும்பரி வேல் அணி சேவலுடன் -
நம்முள் நிலையாகக் கிடக்கும் ஆறு குன்றுகளில் எழுந்தருள வேண்டும்!..
அதுவே குன்று தோறாடல் எனும் உயரிய நிலை!..
அந்நிலையை ஆறுமுகப்பெருமான் அனைவருக்கும் அருளிடல் வேண்டும்!..
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..
கந்தரனுபூதி..
கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கதிர் வேலவனே சரணம்.. சரணம்..
முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!..
* * *