நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 17, 2017

அழகே.. தமிழே!..
வானளந்த நிலவு முகம்
தானளந்த நறுந் திலகம்
நல்லழகே தமிழ்கூறும் மங்கலமோ!..

கண்ணளந்த புன்னகையும்
காதளந்த பொன்னகையும்
காலமகள் செய்தளித்த நன்கலமோ!..

பூவளந்த நறுங்குழலும்
நாவளந்த இன்தமிழும்  
வானளந்த பேரழகைக் கூட்டாதோ!..

நானளந்த நற்கவியும்
தேனளந்த தென்தமிழும்
தேவியவள் திருவடிவைக் காட்டாதோ!..

பேரளந்த பெருந்தகவாய்
ஊரளந்த ஒலிமுழவாய்
பொன்மாலை பூந்தோளில் ஆடாதோ!..

தினையளந்த வயற்காட்டில்
எனையளந்த என்னுயிரே
என்கவியை நின்செவிதான் ஏற்காதோ!..

மலையளந்த பெருந்தனத்தாள்
நிறையளந்த நிலைகுணத்தாள்
குளிர்நிலவாய் கூடவந்தால் ஆகாதோ!..

பாலளந்த பசுங்குணத்தாள்
பாவளந்த தமிழ் வணத்தாள்
பூவிழியால் புன்னகைத்தால் ஆகாதோ!..


நீரளந்த நெடுங்கரையில்
நிழலளந்த குழல்உலர்த்தி
நீநடக்க என்கலியும் தீராதோ!..

தேனளந்த பூஞ்சரத்தாள்
வானளந்த புகழ்நலத்தாள்
தேவகன்னி என்றுரைத்தால் ஆகாதோ!..

பொன்னளந்த பூங்கரத்தாள்
மின்னளந்த விழிநலத்தாள்
நின்றெனக்கு ஒன்றுரைத்தால் ஆகாதோ!..

நெல்லளந்த நெடுவயலில்
நின்றளக்கும் தென்காற்றில்
உன்றனுக்கு என்றுரைத்தால் வாராதோ!..

சேலளந்த செவ்விழியும்
நூலளந்த மெல்லிடையும்
நூறுகவி நான்பாடச் சொல்லாதோ!..


சீரளந்த பெருங்குலத்தாள்
நீரளந்த முகில்குணத்தாள்
நானளந்த மொழிகேட்டால் ஆகாதோ?..

நானளந்த நற்கவியும்
தேனளந்த தென்தமிழும்
தேவியவள் திருவடிவை வாழ்த்தாதோ!..

நாலளந்த நறுங்குணத்தாள்
காலளந்த தூரமெல்லாம்
நான்நடக்க வாழ்நாளும் வாராதோ!..
***

மதிப்புக்குரிய ஓவியர் மாருதி அவர்களுக்கு நன்றி

அக்கா.. அக்கா!.. 

சொல்லம்மா!..

இதென்னக்கா!..

கவிதை.. கவிதை..ம்மா!..

கவிதையா.. அதான்.. எனக்குத் தெரியுதே!..

வேறென்ன உனக்குத் தெரியலை?..

அத்தான் உங்களைச் சுத்திச் சுத்தி வந்தப்போ எழுதுனது..ன்னு புரியுது!..

அப்புறம் என்னவாம்!..

எல்லா வரியிலயும் - அளந்த.. அளந்த.. - ன்னு அளந்திருக்காங்களே!.. உண்மையில அளந்த கவிதையா.. இல்லே.. அளந்த கவிதையா!..

என்னம்மா!.. சிலேடையெல்லாம் பொங்குது?..

அத்தானும்... தான் கவிதையில ஒருவரி சிலேடை வெச்சிருக்காரே!..
எந்த வரி..ன்னு தெரியுதா!?..

குறுஞ்சிரிப்பு தாமரையின் இதழ்களில்..

அக்காவின் முகத்திலும் - மெல்லிய பூஞ்சிரிப்பு!...

சொல்லுங்க அக்கா!.. எப்படி.. இதெல்லாம்!?..

உங்க அத்தான் வந்ததும் அவரையே கேளேன்!..

அத்தானைக் கேக்கறது இருக்கட்டும்...
நம்மைப் பார்த்து இப்படியெல்லாம் அளக்குறாங்களே!.. அது எப்படி..க்கா?..

அத்தானைக் கேட்டா - உள்ளதைச் சொல்றேன்!.. அப்படி..ன்னு சொல்லுவாங்க...

உள்ளதைச் சொன்னாங்களோ!.. உள்ளத்தைச் சொன்னாங்களோ!... பொதுவா இவங்களால நம்மை அளந்துட முடியுமா?..

ஓ.. முடியுமே!..

எப்படிக்கா?..

அன்பு!.. அன்பு தான் அளவு கோல்!.. 
அன்பை அளப்பதும் அன்பு தான்!.. 
அன்பை அளிப்பதும் அன்பு தான்!..

ஓ!.. அத்தானுக்கு ஏத்த அக்கா தான்!..

தாமரை சிரித்தாள்.. 
தாமரையுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வியும் சிரித்தாள்..


அழகு வாழ்க..
அழகுடன் சேர்ந்து அன்பும் வாழ்க!.. 
***

24 கருத்துகள்:

 1. கருத்தாலம் மிக்க கவிதை ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. என்னே அழகு...! ஒவ்வொரு வரியும் என்னே அழகு...!! ரசித்தேன் ஐயா...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. Kavithiel kaaviyam padithu uarinadiel ualathaium, ulathium sonavidam arumai aya. thinai alantha vailiel enai alantha enuira . . . . . . tamila alagu thaan. vaalthukal aya.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தமிழ் எப்பவுமே அழகு ..மாருதியின் ஓவியங்கள் அழகை இன்னுமதிகமாய் கூட்டிவிட்டது ..
  அன்புதான் எல்லாமே அழகிய தமிழும் அன்பும் வாழ்க வாழ்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. ரசித்து, அனுபவித்து எழுதி எங்களையும் ரசனையாளர்களாக்கிவிட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. சாண்டில்யனை நினைவுபடுத்துகிறீர்கள் நண்பரே!

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   எளியவன் நான்.. ஏதோ என்னளவில் தெரிந்ததை எழுதுகின்றேன்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. எல்லாவற்றையும் அளப்பது அன்பு தான் என்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள் துரை சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களது வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. என் மின்னூல் வெளியீட்டுக்கு உங்கள் வாழ்த்துக் கண்டு மகிழ்ந்தேன். நீங்கள் ஏன் எழுதியவற்றைத் தொகுத்து மின்னூல்கள் வெளியிடக்கூடாது? மார்கழித்தென்றல், மாமதுரைத் திருவிழா, புரட்டாசி தரிசனம், மார்கழிப்பூக்கள், குடமுழுக்குத் தரிசனம் போன்ற ஆன்மீகப்பதிவுகளை மின்னூலாக்கலாம். பக்தி ரசம் சொட்டச் சொட்ட, மனம் லயித்து நீங்கள் எழுதும் ஆன்மீகப்பதிவுகள், உலகமுழுக்க வாசகர்கள் பலரை ஈர்க்க்க் கூடும். கண்களைக் கவரும் கோவில் மற்றும் திருவிழாப் படங்களை இணைத்து மின்னூல்களை உருவாக்குங்கள். இயற்கை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பதிவுகளையும் தொகுத்து நூலாக்கலாம்.
  வளரும் கவிதையில் மின்னூலாக்க முகாம், நாம் என்ன செய்ய வேண்டும் என்ற பதிவை வாசியுங்கள். என் தளத்திலும் திரு ஜீவி சார் கேள்விக்கு நான் விரிவாக எழுதியிருக்கிறேன். என் தளத்தில் மின்னூல் முகாம் இணைப்பும் கொடுத்திருக்கிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களது பணி மிகவும் சிறப்பானது..

   தாங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கு மனமார்ந்த நன்றி..
   எனது எழுத்துக்களை மின்னூலாக வெளியிடுவதைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை..

   தாங்கள் வழங்கியுள்ள இணைப்புகளை வாசிக்கின்றேன்..

   தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் என்றும் உரியன..

   நீக்கு
 11. என்னே தமிழின் அழகு!!!! அழகே அழகு!! அன்பின் அழகு!! எல்லாமே அழகு! அழகு தமிழில் அன்பின் அழகு மிளிர்கிறதே!! மயங்கிவிட்டோம்!! நாங்கள். மிக மிக ரசித்தோம்!!ஐயா!

  கீதா: மேற் சொன்னதுடன்......

  நாவினிக்கும் தமிழினிலே
  பா இனிக்கும் உங்கள் மொழியினிலே
  தேன் சுவையின் வரியினிலே
  இன்பமாய் மூழ்கிட்டோம் கவியினிலே!

  பதிலளிநீக்கு
 12. மாருதியின் ஓவியம் மயக்குகிறது!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   மாருதி அவர்களின் ஓவியங்கள் அழகுக்கு அழகு..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..