நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 11, 2017

செந்தூரில் ஒருநாள் 2

விடியுங்காலம்...


திருக்கோயிலுக்கு வெளியே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த
அலை கடலைப் போல -

சந்நிதி வாசலில் பக்தர் கூட்டம் -
முருகா.. முருகா!.. - என முழங்கிக் கொண்டிருந்தது..

உதய மார்த்தாண்ட பூஜை!...

துவார பாலகர்களை வணங்கி விட்டு - 
சூரிய உதயத்தில் சந்நிதியைத் திறந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி. 

செந்தில் நாதனின் திருமார்பினை அலங்கரித்துக் கொண்டிருந்த
மாணிக்கப் பதக்கத்தைக் காணவில்லை.

கதவுகளைப் பிணைத்திருப்பவை பெரும் பெரும் பூட்டுகள்...
மிக்க வலிமையானவை... 

பூட்டை உடைத்துக் கதவின் தாளைத் திறந்ததாக எவ்வித அடையாளமும் இல்லை.

வெளியே இருந்து யாரும் உள்ளே நுழைந்து களவாட வாய்ப்பும் இல்லை.

ஆயினும், அந்த மாணிக்கப் பதக்கம்  எங்கே!?... 


திருக்கோயிலினுள்  விளைந்த பரபரப்பு
மெல்ல மெல்ல வெளியிலும் பரவியது.

ஆட்கள் அங்குமிங்குமாக ஓடித் தேடலாயினர். 

ஆங்காங்கே வெளிநடைகளில் தூங்கிக் கொண்டிருந்த
அன்பர்களும் பதற்றத்துடன் விழித்தெழுந்தனர். 

அப்படி விழித்து எழுந்து அமர்ந்தவர்களுள் - பகழிக்கூத்தரும் ஒருவர்.

மாணிக்கத்தினைத் தேடி, ஓடி வந்தவர்கள் -
பகழிக் கூத்தரைக் கண்டதும் அதிர்ச்சியால் உறைந்து நிற்க -

அவர்களை ஏதும் அறியாத சிந்தையராக ஏறிட்டு நோக்கினார் பகழிக்கூத்தர்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!.. - அவர்
ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே!..

- எங்கோ யாரோ பாடிக்கொண்டிருந்தார்கள்..

அது - இவர்களுக்காகப் பாடியதைப் போலிருந்தது!...

அதிர்ச்சியிலிருந்து மீளாத திரிசுதந்திரர்கள் -
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு,
பகழிக் கூத்தரை நோக்கி - விரலால் சுட்டிக்காட்டவும்  - 

குழப்பமடைந்த பகழிக்கூத்தர் தன்னிச்சையாய் மார்பினை வருடினார்..

மார்பினில் -

செந்தில் நாதனின் சந்தனச்சாந்தும் மலர்மாலையும் மாணிக்கப் பதக்கமும்!...

இப்போது கூத்தர் அதிர்ந்தார்!..

இது... இது... எப்படி!... என் மார்பில்?....

நடந்தது என்ன - என்று வந்தவர்களுக்குப் புரிந்தது!..

உள்நின்று உறுத்தியது உண்மை.. அதனால் கலங்கித் துடித்தது நெஞ்சம்!... 

அதை உணர்த்தியது அவர்கள் கண்களில் கசிந்து வழிந்த கண்ணீர்!...

பெரியீர்!... தாம் யாரோ.. எவரோ!.. யாம் அறியோம்!.. 
ஆயினும், எமது பிழைதனைப் பொறுத்தருள்க!.. 

வடிவேலனைக் காண வண்ண மலர் கொண்டு வருவோர் மத்தியில்
வாடாத வண்ணத் தமிழ் கொண்டு கந்தனுக்குக் கவிமாலை சூட்டி மகிழ்ந்த உம்மை மனதில் கொள்ளாமல் உதாசீனம் செய்தோம்.. 

அறிவிலிகளாகிய எமது புத்தியில் உறைக்கும்படிக்கு -  
ஷண்முகப் பெருமானே... நடத்திக் காட்டிய நாடகம் இது!...

அவனைத் தேடி வந்து அருந்தமிழால் அலங்கரித்துப் 
பாடிய உம்மை அலட்சியப்படுத்தினோம்!... 

எம் புத்திக்கு விளங்குமாறு எம்பெருமானே -  
உம்மைப்  பெருமைப்படுத்தியது கண்டு பேதலித்து நிற்கின்றோம்!.. 
என்னே.. உமது பெருமை!..

- என்று பலவாறு புகழ்ந்து போற்றி - அவர்தம் தாள் மலர்களில் விழுந்து வணங்கினர்.

முருகனின் திருவிளையாடலை எண்ணி மனம் நெகிழ்ந்தது கூத்தரின் மனம்..

அவரது விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

பகழிக்கூத்தரை கெளரவித்து பல்லக்கினில் அமரச் செய்தனர்.

பல்வேறு வாத்தியங்கள் முழங்க நகர்வலஞ்செய்து -
செந்தில் நாதனின் திருமுன்பு ஏகினர்..

தீர்த்தமும் திருநீறும் மாலையும் மரியாதையும் அளித்து மனம் மகிழ்ந்தனர்...

திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா!..
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா!..

வள்ளல் பெருமானின் சந்நதியில் எழுந்த ஆனந்த முழக்கம்
வானகம் எங்கும் பரவி எதிரொலித்தது..

அன்று முதல் செந்தில்நாதனின் சந்நிதியில் திருப்புகழ் அமுதத்துடன்
பகழிக் கூத்தர் பாடிய முருகன் பிள்ளைத் தமிழும் ஓதப்படுகின்றது..
***

புண்ணியமிகும் மாசி மக நன்னாளாகிய இன்று
அற்புதமான பிள்ளைத் தமிழில் இருந்து 
சிறப்பு மிக்க ஒரு பாடல்..

- : முத்தப்பருவம் : -


கத்துந் தரங்கம் எடுத்தெறியக் 
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள் 
கரையில் தவழ்ந்து வாலுகத்திற் 
கான்ற மணிக்கு விலையுண்டு !...

தத்துங் கரட விகடதடத் 
தந்திப் பிறைக்கூன் மருப்பில் விளை
தரளந்தனக்கு விலையுண்டு
தழைத்துக் கழுத்து வளைந்த மணிக்

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர் முத்தினுக்கு விலையுண்டு
கொண்டல் தரு நித்திலந்தனக்கு
கூறுந்தர முண்டு - உன் கனிவாய்

முத்தம் தனக்கு விலையில்லை
முருகா முத்தம் தருகவே!...
முத்தம் சொரியும் கடலலைவாய்
முதல்வா! முத்தம் தருகவே!...


கருவினைத் தாங்கிக் கடுமையாக வருத்தமுற்று, 
அலை முழங்கும் கடலினுள் இருந்து வெளியேறிய 
வலம்புரிச் சங்குகள் 
மணற்பரப்பில் தவழ்ந்து ஈன்றெடுத்த 
முத்துக்களுக்கு மதிப்பும் விலையும் உண்டு.

எந்நேரமும் விகடக்கூத்தினைப் போல தலையினை 
ஆட்டிக் கொண்டிருக்கும் மா மதயானையின்
பிறைச் சந்திரனைப் போன்ற
தந்தத்தினுள்ளிருந்து விளையும்  
முத்தினுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.

பசுமையாய் வளர்ந்து, கொத்து கொத்தாக விளைந்து, 
அடர்ந்து வளைந்த செழுங்கதிர்களில் நிறைந்திருக்கும் 
நெல்மணிகளுக்கும் மதிப்பும் விலையும் உண்டு. 

நீருண்டு வந்த கார்மேகங்கள் - 
நிலம் செழிக்க என்று - 
பெய்விக்கும் மழை முத்துக்களுக்கும் 
மதிப்பும் விலையும் உண்டு...

ஆனால் - 

கனிந்த இதழ்களால் நீ தரும் முத்தத்தினை
மதிப்பிடமுடியுமோ!... 
அதற்குத் தான் ஒரு விலையும் உண்டோ?... 

திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூரில் -
முத்துக்களை வாரி இறைக்கும் 
அலைவாயிலில் அமர்ந்த முருகனே!...
திருச்செந்தில் முதல்வனே!..
ஒரு முத்தம் அருள்க செல்வனே!.. 

பூமாதேவி புனிதம் உறட்டும்!.. - என,
பூக்களின் நடுவில் தோன்றியவனே!..

தமிழ் வாழ
தமிழுடன் தரணியும் வாழ
தத்தித் தவழ்ந்தவனே!..
தென்மலைத் தென்றலாய் நடந்தவனே!..

எத்திக்கும் வாழப் புரிந்தவனே...
வருக.. வருக!..
தித்திக்கும் கனி எனச் சிவந்திருக்கும் 
திருஇதழ்களால் ஒரு முத்தம் தருக.. தருக!..

முருகா... வருக.. வருக!... 
திருச்செந்தில் முதல்வா... வருக.. வருக!...
* * *


மகப்பேறின்றி மனம் வாடும் தம்பதியினர், சஷ்டி விரதமிருந்து ஒருமித்த சிந்தையராகி,  இத்திருப்பாடலை நாளும் பாராயணம் செய்வராயின் வேண்டிய நலம் எய்தப் பெறுவர் என்பது திருக்குறிப்பு!...

வேலும் மயிலும் துணை!..
***

19 கருத்துகள்:

 1. பகழிக்கூத்தரைப் பற்றிய அரிய விடயம் அறிந்தேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. பகழிக் கூத்தரைப் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...
  முருகனின் திருவிளையாடல் எப்பவும் அவனைப் போல் அழகு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அறியாத கதை நன்றி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. இரு பகுதிகளையும் வாசித்துவிட்டோம். அருமையான இதுவரை அறியாத பகழிக்கூத்தரைப் பற்றிய கதையை அறிந்தோம் ஐயா.

  இணையப் பிரச்சனையினால் வர இயலாமல் போனது ஐயா தவறாக நினைத்திட வேண்டாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தாங்கள் வெளியூர் சென்றிருப்பீர்கள் என நினைத்திருந்தேன்..

   தங்கள் வருகையே மகிழ்ச்சி.. தவறாகக் கொள்வதற்கு ஏதுமில்லை..

   அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. பகழிக் கூத்தர் பற்றிய சிறப்பான தகவல் அறிந்தேன். நன்றி ஜி!

  பதிலளிநீக்கு
 8. நியூஜெர்சியில் இப்போது காலை 6 மணி. செந்தில்முருகனப் பற்றிய உங்கள் அழகான பதிவோடு இன்றைய பொழுதைத் தொடங்குகிறேன். மிக்க நன்றி.
  - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. பகழி கூத்தரைப்பற்றி அறிந்து கொண்டேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அன்புடையீர்..

  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..