நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 18, 2016

மாசி மகம்

நாம் - நமக்காக நியாயமான வேண்டுதல்களையும் 
நன்மைக்காகத் திட்டமிட்டுள்ள முக்கியமான காரியங்களையும் 
சிறப்பாக நடத்துதற்கு உகந்தது மாசி மாதம்...

அதற்கான வழிமுறை தான் என்ன?..

வழிபாடு.. அமைதியான இறைவழிபாடு!..

அப்படியான வழிபாட்டினை நிகழ்த்துதற்கு - மாசி மாதத்தில் 
சிவராத்திரி தினமும், மக நட்சத்திர நாளும் குறிப்பிடத்தகுந்தவை..


ஸ்ரீ கும்பேஸ்வரர் - ஸ்ரீ மங்களாம்பிகை
முன்பு ஒரு சமயம் ஈசனும் அம்பிகையும் திருக்கயிலை மாமலையில் வீற்றிருந்தபோது,  ஐயனை வணங்கி, பெருமானின் தத்துவத்தினை விளக்கியருளும்படி கேட்டுக் கொண்டாள் - அம்பிகை. 

அம்பிகையின் வினாவிற்கு அன்புடன் விடையிறுத்தான் விடைவாகனன்..

தேவி!.. பேரும் குணமும், உருவமும் செயலும் இல்லாத நாம், சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்!..

எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

இதனைக் கேட்டதும் உமையவளின் உள்ளத்துள் - தன்னால் தான் எல்லாம்!... என்ற எண்ணம் உண்டாயிற்று.

அதனை உணர்ந்த சிவபெருமான் - தான் இன்றி சக்தி இயங்காது என மொழிந்து தனித்து நின்றார்.

இதனால் பிரபஞ்சத்தின் இயக்கம் நின்றது.

சகலமும் உறைந்து போனதால் - அதிர்ந்தனள் அம்பிகை..

அம்பிகை ஐயனை வணங்கி -

எம்பெருமானே!.. எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டேன். முன் போலவே இப்பிரபஞ்சம் இயங்குதற்கு கருணை புரிந்தருளுக!. - என்று இறைஞ்சினாள்.

அப்பொழுது பெருமான், தான் தக்கனுக்குக் கொடுத்த வரத்தை நிறைவேற்றத் திருவுளங்கொண்டு, தேவியை நோக்கியருளினன்..

உலகம் இயக்கமற்று இருக்க நீ காரணமானதால், யமுனை நதியில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ் செய்வாயாக!..

அதன்படி,  அம்பிகை யமுனை நதிக்கரையில் தாமரை மலரில் வலம்புரிச் சங்கின் வடிவமாகி தவஞ்செய்து கொண்டிருந்தாள்.

ஒரு மாசிமக நன்நாளில்  தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடிய தட்ச பிரஜாபதி, அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டான்.

அதனைக் கையில் எடுத்த மாத்திரத்திலே அது அழகான குழந்தையாயிற்று. 

சிவபெருமான் தந்தருளிய வரத்தின்படி அம்பிகையே மகளாக வந்தாள்.. - என உணர்ந்து கொண்டு - குழதையுடன் அரண்மனைக்குச் சென்றான்.

அம்பிகைக்கு தாட்சாயிணி என்று திருப்பெயர் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்பது புராணம்.

அம்பிகை மாசியில் மக நட்சத்திரத்தில் அவதரித்தால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மாசி மக நட்சத்திரத்தன்று  குங்கும  அர்ச்சனை செய்து அம்பிகையை வழிபடுவோர் - எல்லா நலங்களையும் எய்துவர் என்பது ஐதீகம்.


வருணனை ஒரு சமயம் பிரம்மஹத்தி பீடித்தது . 

இதனின்று விடுபட வருணன் சிவபெருமானை வேண்டித் துதிக்க, ஈசனும் அவனைக் காத்தருளினார். வருணனை விட்டு பிரம்மஹத்தி நீங்கிய நாள்  மாசிமகம் ஆகும்.

தன் தோஷம் நீங்கியதால் மகிழ்ந்த வருணன் இறைவனை ஆராதித்து- அன்றைய தினத்தில் வழிபட்டு புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு முக்தி -  அருளும்படி இறைவனிடம் வேண்டினான்.

ஈசனும் அவ்வாறே வரமளித்தார்.


மாசி மாதத்தில் சூரியனும் (கும்ப ராசியில்) குரு எனப்படும் வியாழனும் (சிம்ம ராசியில்) முழுநிலவும், மகநட்சத்திரமும், பூமிக்கு நேராக வருகின்றன..

இதனை அனுசரித்தே பெரும்பாலான சிவாலயங்களில் வருடாந்திரப் பெருந்திருவிழாக்கள்  நிகழ்வுறும்.

மக நட்சத்திரத்தை அனுசரித்து ஆலயங்களில் திருவிழாக்களும் இல்லங்களில் ஏனைய நல்ல செயல்களும் நடத்தப்படுவதால் -

மக உற்சவம் என்பதே -  மகோற்சவம் என்று வழங்கப்படுகின்றது..

மாசி மாதத்தின் மக நட்சத்திரத்தன்று  நதி தீரங்களிலும் திருக்குளங்களிலும் மக்கள் பெருவாரியாக நீராட, இறைவன் ரிஷப வாகனராக எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது பாரம்பர்ய வழக்கமாகும்.

திருமயிலையில் சிவநேசஞ்செட்டியாரின் அன்பு மகள் பூம்பாவையை - அஸ்திக் கலசத்திலிருந்து மீண்டும் எழுப்பும் பொழுது -

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானேறு ஊரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!.. (2/47)

- என்று திருஞானசம்பந்தப்பெருமான் திருப்பதிகம் அருளுகின்றார்..

இந்நாளில் ரிஷப லக்ன வேளையில் ஈசன் எம்பெருமானும் அம்பிகையும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நீர் நிலைகளில் தீர்த்தவாரி அருளும் நேரமே புண்ணிய காலம்..

தமது வினைகளை நீக்கியருளுமாறு வேண்டிக் கொண்ட நதிக்கன்னியரை -காசியிலிருந்து ஸ்ரீ விஸ்வநாதப்பெருமான் தெற்கு நோக்கி அழைத்து வந்து கும்பகோணத்தின் மக தீர்த்தத்தில் நீராடுதற்கு அருளியதாகவும் ஐதீகம்..

அதன்படி நதிக்கன்னியர் நீராடிய நன்னாளே மாசி மகம்..

இதன் பொருட்டே மாசி மாதத்தில் நதி தீரங்களிலும் திருக்குளங்களிலும் மக்கள் பெருவாரியாக நீராடுவதும் இறைவன் ரிஷப வாகனராக எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவதும் வழக்கமானது.

ஆதியில், மாசி மக தீர்த்தவாரி' நடைபெற்ற சிறப்புடையது திருநல்லூர் எனும் தலமாகும்.

திருத்தலம் - திருநல்லூர்இறைவன் - ஸ்ரீ கல்யாணசுந்தரர்
அம்பிகை - ஸ்ரீ கல்யாண சுந்தரி
தீர்த்தம் - சப்த சாகர தீர்த்தம்
தல விருட்சம் - வில்வம்

மகம் பிறந்தது நல்லூரில் என்பது தஞ்சை மாவட்டத்தின் சொல்வழக்கு.

இந்த திருநல்லூர், தஞ்சையிலிருந்து பாபநாசம் வழியாக வலங்கைமான் செல்லும் வழித்தடத்தில் உள்ளது.பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மிகச் சிறப்பாக நிகழ்வதே மகாமகம்.

திருக்குளங்களிலும் புண்ணிய நதிகளிலும் தீர்த்தமாடும் வேளையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் நிறையவே உள்ளன..

மகாமகம் போன்ற திருவிழாக்களின் போது
அவையனைத்தையும் கடைபிடிப்பதற்கு - இயலுமா?..

தெரியவில்லை!..

இயன்றவரை சுற்றுப்புற சூழ்நிலையைப் பாதுகாப்பதுடன் - 
அகத்திலும் புறத்திலும் தூய்மை நலம் பேணி
மகாமகத்தைக் கொண்டாடுவோமாக!..

ஓம் நம சிவாய சிவாய நம ஒம்
***

9 கருத்துகள்:

 1. திருநல்லாருக்குச் சென்றுள்ளேன். தங்களது பதிவின் மூலமாக மறுபடியும் சென்றேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஜி திருநல்லாரைக்குறித்து அரிய பல விடயங்கள் அறிந்தேன் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. திரு நல்லாரை பற்றிய விபரங்களை உங்கள் பதிவின் மூலம் நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. எத்தனை தகவல்கள்..... பிரமிக்க வைக்கும் தகவல்கள்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. வணக்கம்,

  தங்களை இம்முறையும் சந்திக்க இயலாமல் போனது என் துர்பாக்கிய நிலைதான் வேறு என்ன சொல்ல,, ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சி என்பது, தங்களை நான் கோடியம்மன் கோயிலில் கண்டது. உடன் பேச இயலா சூழல் வேகமாக கடந்துவிட்டேன் ஆனால் கண்ணில் மறையும் வரை பார்த்து சென்றேன். நாங்கள் வரும் போதே எங்களைக் கண்டுக்கொள்வீர்கள் என நினைத்தேன். தங்களை நான் பதிவுகளில் புகைப்படத்தில் பார்த்து இருந்ததால் அடையாளம் கொண்டேன்.
  இருந்தாலும் பேசியது மிகுந்த மகிழ்ச்சி,,, தங்களை வரவேற்க இல்லையே என்ற வருத்தம் எனக்க அதிகம் உண்டு. வந்து சாரிடம் கேட்டேன்.
  சரி பார்ப்போம் என்றாவது பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று,,,
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   பேருந்திற்காக நான் - காத்திருந்த வேளையில் என்னைக் கண்டு கொண்டது மிகவும் ஆச்சர்யம்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..