நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 22, 2013

மீனாட்சி திருக்கல்யாணம்

எனக்கென்ன மனக் கவலை!.... 
என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை!...

''...அவள் இருக்கையில் எனக்கு என்ன கவலை!... எல்லாவற்றையும்  அவள் பார்த்துக் கொள்வாள்!.... '' என நாம் இருப்பதால் தான் அவள்  எந்நேரமும் விழிப்பாகவே இருந்து தம் மக்களின் குறைகளை தீர்த்த வண்ணமாக இருக்கின்றாள். அதனாலேயே அவள் மீனாட்சி - கயற்கண்ணி எனப்பட்டாள்.

அவரவர் மனக்குறைகளை அவரவர்க்கேற்றபடி அவள் தீர்த்து வைப்பதால் தான், அவள் - அங்கயற்கண்ணி!....

வேண்டும் வரம் எல்லாவற்றையும் தந்தருளும் அன்னை மீனாட்சி நம் அருகில் இருக்கின்றாள் என்பதால் தான் - நம் மனம் கொஞ்சமேனும் நிம்மதியுடன் தூங்குகின்றது!...  

பக்தர்களின்  அத்தனை பிரார்த்தனைகளையும் அன்னை நிறைவேற்றித் தருவதால்தான் உலகம் முழுவதும் உள்ள கோடானுகோடி பக்தர்களின் இல்லங்களில் - அவள் பெயரைச் சொல்லியபடி  தீபங்கள் பிரகாசிக்கின்றன.

இரவும் பகலும் கண் இமையாத மீனைப் போல தேவியும் விழித்துக் கொண்டிருக்கின்றாள். அவள் விழித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதை உணர்ந்த உள்ளங்கள் தான் - தவறு செய்து தண்டனைக் குழிக்குள் சிக்காமல் தப்பித்துக் கொள்கின்றன.

வாழ்க்கை பிழையாத வண்ணம் நாம் பிழைத்துக் கொண்டால் போதும். ''குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழும் திருநெடுந்தோளுடன், வேரியம் பாணமும் வெண்ணகையுமாக'' - அன்னை நமக்குக் காட்சி தந்தருள்வாள்!....


அன்னை மீனாட்சியின் திருப்பெயர்களில் சொல்லச் சொல்ல தித்திப்பது எது?...

அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கற்பூரவல்லி, கனகவல்லி, மரகதவல்லி, சுந்தரவல்லி, மாணிக்கவல்லி,  கயற்கண்ணி, கருந்தங்கண்ணி, செந்தமிழ்ச் செல்வி, பாண்டியன் செல்வி,  தடாதகைப் பிராட்டி  - ? 

பாண்டிய மன்னன் மலயத்துவஜன் - காஞ்சனமாலை தம்பதியருக்குப் பிள்ளை இல்லாப் பெருங்குறையைத் தீர்க்க வந்த பெருமாட்டி. புத்திர காமேஷ்டி யாகம் செய்தபோது உமாதேவி மூன்று வயதுடைய பெண் குழந்தையாக வேள்விக் குண்டத்தினின்று மூன்று தனங்களுடன் திருக்கரத்தினில் பூச்செண்டுடன்  மரகதவல்லியாகத் தோன்றினாள்.

இயற்கைக்கு மாறாக குழந்தைக்கு மூன்று தனங்கள் இருப்பதைக் கண்டு அரசன் வருந்தியபோது இறைவன் அசரீரியாக, ''..மணாளன் எதிர்ப்படும் போது ஒரு தனம் மறையும்..''  என்று கூறியருளினார்.

"தடாதகை'' என்ற திருப்பெயருடன்  சிறப்பாக வளர்ந்த கயற்கண்ணி பல கலைகளிலும் சிறந்து விளங்கினாள். தந்தை மலயத்துவசன் வானகம் ஏகிய பின், தனயை பாண்டியப் பேரரசின் சிம்மாசனத்தில் செங்கோல் கொண்டு அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்தாள்.

மணப்பருவத்தை அடைந்த தடாதகை, நால்வகைப் படைகளுடன்  திக்விஜயம் செய்து அனைத்து திசைகளையும் வென்றாள். இறுதியாகத் திருக்கயிலாய மாமலையை அடைந்தாள். பொழுது போகாமல் தூங்கிக் கிடந்த பூதகணங்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்தன. யாரென்று புரியாததால் - மீன் கொடியாளை எதிர்த்துப் போரிட்டன.

வெற்றிகரமாகத் தோற்று - ஓடி , ஈசனின் திருவடிகளில்- ''...பெருஞ்சினம் கொள்ளாதீர்கள் ஸ்வாமி!... அபயம்!... அபயம்!...'' என்றபடி விழுந்தன.

யோகாசனத்திலிருந்த ஈசன் திருமுகத்தில் குறுஞ்சிரிப்பு தவழ்ந்தது. ஒன்றும் புரியவில்லை பூதகணங்களுக்கு - ஒரே வியப்பு!.. அதற்குள் -

வில்லும் கணையுமாக, ''அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள்'' நூபுரங்கள் சலசலக்க -  திருமாமணி மண்டபத்தினுள் நுழைந்தாள்.. அங்கே -  மஹாமந்த்ர பீடத்தில் பெருமானைக் கண்டாள். கண்டவுடன் -

மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன்பு ஒரு சமயம் - ''நீயின்றி நானில்லை!''- என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டதும் நினைவுக்கு வந்தது!... நாயகனைக் கண்டதும் நாணித் தலை குனிந்தாள்!...

மதுரையிலிருந்து புறப்பட்ட பின், முதன்முறையாக கயற்கண்ணியின் திருக் கரங்களிலிருந்து வில்லும் அம்பும் நழுவி விழுந்தன.

அன்று அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது உடன் வந்தவர்களுக்கும் புலப்பட்டது. பிறகென்ன!....

திருமணம் தான்!....  தேவர்களும் முனிவர்களும் திரண்டார்கள்.

மாமதுரையே மணக்கோலம் பூண்டது. திருமண மண்டபத்தில் - 

செம்பொற்சோதியான சிவபெருமானுக்கு அருகில் மரகதக்கொடி போல கயற்கண்ணி அமர்ந்திருந்ததை காணக் காண -  கண் தித்தித்தது.

மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்தை நந்தியம் பெருமான் சிவகணங்களுடன் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். கணபதியும் கந்தனும் கலைவாணியின் கரங்களைப் பற்றியவாறு ஆனந்தத்துடன் அம்மையப்பன் திருமண வைபவத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

மங்கலச் சடங்குகளை பிரமதேவன் முன்னிருந்து நடத்தினார். மஹாலட்சுமி தோழியாய் கரம் பற்றி கயற்கண்ணியை அழைத்து வர, திருமால் உடனிருந்து கன்யாதானம் செய்து கொடுக்க -

சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டியருளினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்று இன்புற்றனர்.


மதுரை - அம்மனின் சக்தி பீடங்களில்  ராஜமாதங்கி சியாமளா பீடம். இங்குள்ள மீனாட்சி அம்மனின் திருமேனி மரகதத்தால் ஆனது.

சித்திரை மாதம் வளர்பிறையில் நடக்கும் 12 நாள் விழாவில் முதல் நாள் கொடியேற்றம். பின் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர்.

எட்டாம் நாள் மீனாட்சி பட்டாபிஷேகம், ஒன்பதாம் நாள் மீனாட்சி திக்விஜயம்,

பத்தாம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், பதினோராம் நாள் தேர்த்திருவிழா, பன்னிரண்டாம் நாள் தீர்த்த விழா.

அழகர் கோவிலில் இருந்து கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வரும் கள்ளழகர் - வைகையில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரைத் திருவிழா நிறைவடையும்.

வரலாற்று சிறப்புமிக்க சித்திரைத் திருவிழா - மீனாட்சி அம்மன் கோவிலில் 14/4 அன்று  கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

21/4-ல்  பட்டாபிஷேகமும், 22/4-ல் திக்விஜயமும் சிறப்பாக நடைபெற்றன.


நாளை (23/4) செவ்வாய்க்கிழமை காலை 8.17 க்கு மேல் 8.41 க்குள் மீனாட்சி - சுந்தரேசர்  திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நிகழ  இருக்கிறது.

24/4-அன்று அம்மனும், சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையும் அலங்காரத்  தேர்களில் மாசி வீதிகளில் பவனி வருகிறார்கள்.
 
25/4 - அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகின்றார்.


நம் பொருட்டு, நம் சந்ததியினர் நலமாக வாழும் பொருட்டு - அம்மையும் அப்பனும் திருமணக் கோலங்கொள்கின்றனர்.

இயன்றவர்கள் மதுரைக்குச் சென்று - நேரில் தரிசித்து இன்புறலாம்...

எல்லைகளைக் கடந்து வாழும் நிலையில் இருப்போர் - அம்மையையும் அப்பனையும் இதயக்கமலம் எனும் தேரில் இருத்தி, ஐம்புலன்கள் எனும் பிரகாரங்களில் வலம் வரச் செய்து நலம் பெறலாம்!...

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி!...

மீனாட்சி சுந்தரேசர் திருவடிகளே போற்றி!... போற்றி!...

1 கருத்து:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..