நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 11, 2019

மங்கல மார்கழி 27

ஓம் 

தமிழமுதம் 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள.. (527)
*

அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 27

இன்று மங்கலகரமான கூடாரவல்லிகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் 
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் 
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் 
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் 
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்..
*

மனம் உருகி உன்னைத் தேடாரையும்
மனம் ஒன்றி எதனுடனும் கூடாரையும்
நினது அன்பினால் வென்று முடிக்கும்
கோவிந்தனே!...

நினது திருவடிகளைப் புகழ்ந்து பாடி
நாங்கள் எய்திய சன்மானங்கள் எல்லாம்
நாடு புகழக்கூடியவை...

அத்தகைய பரிசுகளை அடைந்து விட்ட பிறகு
வேறெது எங்களுக்கு ஆனந்தமாக இருக்க முடியும்!..

இனி நாங்கள்
தோள் வளைகளையும் செவிப் பூக்களையும்
இன்ன பிற மங்கல அணிகலன்களுடன் 
புத்தாடைகளையும் அணிந்து கொள்வோம்...

கருவிழிகளில் மையெழுதி
இளங்கூந்தலில் புது மலர்களைச்
சூடிக் கொள்வோம்..

புதுப்பானையில் பொங்கி எழும் பாற்சோறு  
மூடும்படிக்கு நெய்யினைப் பெய்து
அந்த நெய்யும் முழங்கை வழியாக
வழியும் படிக்கு
எல்லாருடனும் கூடி இருந்து
குலவி மகிழ்ந்து நெஞ்சம் குளிர்ந்து
உண்டு மகிழ்வோம்...

அந்த மகிழ்ச்சியினை அருளிய
உன்றனைப் போற்றித் துதித்திருப்போம்!..
*

தித்திக்கும் திருப்பாசுரம் 

ஸ்ரீ பெருமாள் கருடசேவை
தஞ்சை 
தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால்விடையேழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து.. (2306) 
-: ஸ்ரீ பேயாழ்வார் :- 

இயற்கையின் சீதனம்

தேங்காய்கற்பக விருட்சத்தின் கனி..

இதுவும் நமக்கே உடைமையான ஒன்று..

தமிழோடும் தமிழரோடும்
பின்னிப் பினைந்திருப்பது தேங்காய்...


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்..

என்று
ஔவையாரின் திருவாக்கில்
இடம்பெற்றது தென்னை...

எல்லா வைபவங்களிலும்
முன் நிற்பது தேங்காய்...

தேங்காய் உடைபடாத வழிபாடு
சிறப்பதே இல்லை...

இதன் மீது மஞ்சளைப் பூசி விட்டால்
தெய்வீகம்..மஞ்சள் தேங்காயின் மீது வைக்கப்பட்ட
பின்னரே மாங்கல்யதாரணம்...

குடத்து நீரில் சில மாவிலைகளும்
மஞ்சள் தேங்காயும்
நிறைமங்கலம்!...

தென்னையின் இளங்கனி
இளநீர் எனப்பட்டது...

இதன் பயன்கள் அனைவரும் அறிந்ததே..

தேங்காய் அரைப் பருவத்துக்கு மேல் தான் 
சமையலுக்கு நன்றாக இருக்கும்..

அதிகமாக முற்றி விட்டாலும்
சரிப்பட்டு வராது..

பக்குவமான தேங்காய்
சமையலுக்கு வரப்ரசாதம்...

தஞ்சை மாவட்டத்துப் பெண்கள்
பெரும்பாலானவர்களுக்கு
தேங்காய் இல்லாமல் சமைக்கத் தெரியாது..

தும்பைப் பூ இட்லியும்
தேங்காய்ச் சட்னியும் ஆகா!.. ஆகா!..

தேங்காய்ப் பால் உடலுக்குக் குளிர்ச்சி...

தேங்காய்ப் பூவில் இருந்து எடுக்கப்படும்
முதல் பால் வயிற்றுப் புண்களுக்கு அருமருந்து...

இயற்கைச் சமையலில் தேங்காய்ப்பாலை
தயிராக்குகின்றார்கள்..

சுத்தமான தேங்காய் எண்ணெய்
தலைக்கும் தலைமுடிக்கும் பாதுகாப்பு..மேனியழகிற்கு தேங்காய் எண்ணெய்க்கு
மாற்று வேறதுவும் இல்லை..  

பற்பல பதிவுகள் தேங்காயைப் பற்றி
வழங்கலாம்..

நேரம் கூடி வரட்டும்..
வழங்குகின்றேன்!..
*

சிவதரிசனம் 
திருப்பூவனூர்


இறைவன் - ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர்..  
அம்பிகை - ஸ்ரீ கற்பகவல்லி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி.. 


தலவிருட்சம் - பலா.  
தீர்த்தம் - க்ஷீர தீர்த்தம்..  

சுக முனிவர்
வழிபட்ட திருத்தலம்...

அம்மன் இரண்டு திருச்சந்நிதிகளில்
எழுந்தருளியிருக்கின்றனள்..

திருக்கோயிலின் எதிரில் திருக்குளம்..
இதன் கரையிலுள்ளது - இச்சி மரம்..

இந்த மரத்தில்
ஸ்ரீ முனீஸ்வரன் குடியிருப்பதாக ஐதீகம்..

விஷப் பூச்சிகளால்
குறிப்பாக எலிக்கடியினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
இத்தலத்தில் மந்திரித்து
கயிறு கட்டப்படுகிறது...

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி 
கொடி மரத்தின் முன்பாக தெற்கு நோக்கியவளாக
ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அம்மன்
விளங்குகின்றாள்...

வெண்ணாற்றின் கிளைநதியாகிய
பாமணி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது...
  
கும்பகோணம் மன்னார்குடி நெடுஞ்சாலையில்
நீடாமங்கலத்திலிருந்து 5 கி.மீ., தொலைவில்
உள்ளது - பூவனூர்..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
நீடாமங்கலம் வழியாக மன்னார்குடிக்குச்
செல்கின்ற பேருந்துகளும்
கோவிலின் எதிரில் நின்று செல்கின்றன..
*

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 

ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் நீறு துதைந்த செம்மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவனூர் புகுவார் வினை போகுமே.. (5/56)

நாரணன் னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்கும் கழற்
பூரணன் திருப் பூவனூர் மேவிய
காரணன் எனை ஆளுடைக் காளையே.. (5/65)
*

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை
திருப்பாடல் 07


கடல் நாகை அதிபத்தர்  
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க்கு அடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையற் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

26 கருத்துகள்:

 1. குட்மார்னிங். பொங்கும் பால் சோறை விட இனிமையானவர் கண்ணன்.

  பதிலளிநீக்கு
 2. பெருமாள் தஞ்சை என்று பொதுவாகப் போட்டிருக்கிறீர்கள். எந்த கோவில் என்று சொல்லி இருந்தால் நான் தரிசித்திருக்கிறேனா என்று பார்த்துக்கொண்டிருப்பேன்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்...

   தஞ்சை 23 கருடசேவை படங்களுள் அதுவும் ஒன்று....

   பெயரில்லாமல் வந்தது....
   அநேகமாக ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாளாக இருக்கலாம்....

   நன்றி.. மகிழ்ச்சி...

   நீக்கு
  2. ஸ்ரீ மணிக்குன்றம்? கேள்விப்பட்ட நினைவில்லை!

   நீக்கு
 3. தேங்காயைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ! அவ்வையாரின் வாக்கை நினைவுபடுத்தி விட்டீர்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்..

   வீட்டில் தேங்காய் துருவும்போது அள்ளித் தின்றதெல்லாம் நினைவுக்கு வருகின்றன...

   நீக்கு
  2. இப்போது அப்படி அள்ளிச்சாப்பிட முடிவதில்லை. புரைக்கேறுகிறது, இருமல் வருகிறது!!!

   நீக்கு
 4. ஆண்டாளின் கண்கள் அழகைச் சொல்வதா? கண்ணனின் செந்தாமரைக்கண்களின் அருளைச் சொல்வதா? அழகான ஓவியம். அருமையான பாசுரம். திருப்பூவனூர் போனதே இல்லை. படங்கள், விளக்கம் எல்லாமே சிறப்பு. தேங்காயின் பெருமை சொல்லி முடியாது! எனினும் சிறு வயதில் தேங்காய் அவ்வளவாகச் சாப்பிடக் கொடுத்து வைக்கலை. பின்னாட்களில் தான். தேங்காயின் பெருமை குறித்து நானும் எழுதி இருக்கேன். "சாப்பிடலாம் வாங்க" பதிவுகளில்.

  பதிலளிநீக்கு
 5. தென்னங்குருத்து முற்றும்முன்னர் பறித்துக் கறியாகச் சமைப்பாராம் எங்கள் மாமியார். என் கணவர் அடிக்கடி சொல்லுவார். நானெல்லாம் முழுத்தேங்காயே கல்யாணம் ஆகி வந்து தான் பார்த்தேன். :))) இளநீர் குடிச்சதும் அப்போத் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தென்னங்குருத்து கறி சமைப்பது புதிய தகவல்...

   சென்ற வருடம் மதுரைக்குச் சென்றிருந்த போது மீனாட்சி அம்மன் கோயில் அருகே தென்னம்பாளையை செதில் செதிலாக செதுக்கி உப்பு மிளகு தூவி விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர்...

   தகவலும் வருகையும் மகிழ்ச்சி...

   நீக்கு
 6. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ...சிறப்பான விளக்கம் கண்டேன் ...

  அனைத்தும் மிக சிறப்பு ..

  ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 7. இன்றைய பகிர்வில் தேங்காயின் சிறப்பை அழகாக தந்தமைக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அருமையான பதிவு.
  பட்ங்கள் பாடல் விளக்கம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  தேங்காயின் பெருமை மிக சிறப்பு.
  தென்னப்பாளை நான் சாப்பிட்டது இல்லை இங்கு விற்பார்கள். ஒரு நாள் வாங்கி சாப்பிட்டு பார்க்க வேண்டும்.
  தேங்காய் இல்லாமல் சமைப்பது கஷ்டம். தேங்காய் இருந்தால் மகிழ்ச்சி.
  திருகும் போது கை ஏந்தும் குழந்தைகள், தேங்காயை கீறி சீனியுடன் சாப்பிடும் வளர்ந்த குழந்தைகள் எங்கள் குடும்பத்தில் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   தேங்காய் துருவலுடன் சர்க்கரையைச் சேர்த்து தின்று மகிழ்ந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன...

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. அமுதம் அனைத்தும் அருமை ஐயா. எங்கள் ஊரிலும் தேங்காய் இல்லாமல் எதுவும் இல்லையே.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 10. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களது வருகை மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. இப்பகுதியில் நான் பார்க்காத கோயில்களில் ஒன்று திருப்பூவனூர்.அங்கு செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 12. கூடாரை இன்று நம் வீட்டில் அக்காரம் பாலில் கலந்து பாற்சோறு செய்து மூட நெய் பெய்து முழங்கை வழிவார இல்லை என்றாலும் கொஞ்சம் போல நெய் சேர்த்து அக்காரவடிசல் செய்து ஆவி உமக்கு அமுது எமக்கு என்று திங்க வும் செய்தாச்சு.!!!!!!

  பாடல் விளக்கம் அமுதம் எல்லாம் சிறப்பு வழக்கம் போல்..

  அண்ணா ஒரு சின்ன பஞ்சயாத்து அதென்ன தஞ்சை பெண்களுக்கு? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தின்னவேலி, நாரோயில் சேரநாட்டு பெண்களுக்கும் தேஞ்ஞா இல்லைனா சமைக்கத் தெரியாதாக்கும் ஹா ஹா ஹா....

  நான் கல்யாணம் ஆகி சென்னை வந்தப்ப எங்க வீட்டுல தேங்காயே கண்ணுல காட்ட மாட்டாங்க...எனக்கு ஆச்சரியமா இருக்கும்..இதென்ன பொரியல் எல்லாம் தேங்காய் இல்லாம கூட்டுல ஒரே ஒரு பல்லு தேங்கா அரைப்பாங்க அவ்வளவுதான். சட்னி எல்லாம் ரொம்ப அபூர்வம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   வரும்போதே கொக்கியோடு வந்தாச்சா!...

   பொதுவாக பெண்களைக் குறை சொல்லக்கூடாது....

   நம்ம வீட்டுப் பெண்களுக்கு
   தேங்காய் இல்லாமல் சமைக்கத் தெரியாது என்று சொன்னாலும்

   அடுத்த வீட்டுப் பெண்களுக்கும் தெரியாது என்று எப்படிச் சொல்வது?...

   பெண்ணின் பெருந்தக்க யாவுள!..

   அப்பாடி..
   தப்பித்தாயிற்று!...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..