நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 05, 2019

மங்கல மார்கழி 21

ஓம் 
தமிழமுதம்


முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்..(388)

*
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 21
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் 
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.. 
*

கையிலெடுத்த பொற்கலங்கள்
பொங்கி வழியும் வண்ணம் 
பாலைப் பொழிந்து தரும் பசுக்களை உடைய
நந்தகோபனின் திருக்குமாரனே!...

நீ வளர்க்கும் பசுக்களே
வள்ளல் தன்மை உடையதாக இருக்கும்போது
நினது செந்தண்மையைக் கூறுதற்கு
வேறொரு மொழியேது?..

அன்பு சுரக்கும் ஊற்றினைப் போல
மனம் உடையவனே!..

பெரியோனாக நின்று 
எல்லார்க்கும் நலம் அருள்பவனே!..

எல்லா வலிமைகளையும்
இழந்த பகைவர்
ஏதும் செய்ய இயலாதவராகி
நின் வாசற்கடையில் வந்து
காத்துக் கிடப்பதைப் போல

நாங்களும் வந்திருக்கின்றோம் 
உந்தன் பணி செய்வதற்கும்..
உந்தனைப் புகழ்வதற்கும்!..


உய்த்து உணரும் வண்ணம்
இவ்வுலகில்
ஜோதியாய் நிற்பவனே...
இனியாகிலும் துயில் எழுவாயாக!..
*

தித்திக்கும் திருப்பாசுரம் 

திரு அரங்கன்  
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பாலின்று.. (2282) 
-: ஸ்ரீ பேயாழ்வார் :-

இன்று ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்திஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்நம்மை அளித்துக் காப்பான்..
-ஸ்ரீ கம்பராமாயணம்:-

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்  
***


இயற்கையின் சீதனம்

பாகல்


பிஸ்கட், சாக்லேட் மற்றும்
இதர அதீத இனிப்பு வகைகளால் வயிற்றுக்கு உண்டாகும்
கேடுகளைத் தீர்த்து வைக்கும்
அற்புத சஞ்சீவினி!...

பாகல் இலைகளைக் கொதிக்க வைத்து
வடிகட்டி மிதமான சூட்டில் ஒரு குவளை குடித்தால்
வயிற்றில் எந்தப் பிரச்னையும் இருக்காது...
மலச்சிக்கல் வராது.. பூச்சி புழு தொந்தரவுகள் இல்லாமல் போகும்..

இந்த விஷயத்தில்
வேப்ப இலைக்கு நிகரானது பாகல் இலை...


வாரம் ஒருநாள் பாகற்காயை சாப்பாட்டில்
சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது..
அதிக காரம் அதிக புளிப்பு இல்லாமல் செய்யவேண்டும்..
பாகற்காய் சமையலில் கொஞ்சம் வெல்லம் போடுவது
வழக்கமாக இருக்கிறது..
ஊடகங்களும் அப்படித்தான் சொல்கின்றன..

அதற்கு பாகற்காயை சமைக்காமலே இருக்கலாம்...

பாகல் இலைச் சாறெடுத்து
கண்ணாடி விரியன் கட்டு விரியன்
இந்த மாதிரி விஷங்களுக்கு
விஷ முறிவு செய்வது பாரம்பர்ய மருத்துவம்..

ஆனால் அதெல்லாம் முறையான
சித்த வைத்தியர்கள் தான் செய்யவேண்டும்..
.
சமீப காலமாக எல்லாரும் பாகற்காயை
விரும்புவதற்கு ஒரே காரணம்
எல்லாருக்கும் சர்க்கரை பிரச்னை வந்தது தான்...  
*

சிவ தரிசனம்
திரு நெடுங்களம்


இறைவன் - ஸ்ரீ நெடுங்கள நாதர்
அம்பிகை - ஸ்ரீ மங்கல நாயகி

தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம்


அகத்திய மகரிஷிக்கு
கல்யாணத் திருக்கோலம்
காட்டியருளிய 
திருத்தலங்களுள் இதுவும் ஒன்று...

இத்தலத்தில்
ஞானசம்பந்தப்பெருமான் அருளிய
இடர் களையும் திருப்பதிகம்
நல்லோர் தமக்கு
எல்லாவித இடர்களையும் களைய வல்லது... 

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுஉனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!... (1/52)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப்
பாரானை விண்ணாயிவ் வுலகம் எல்லாம்
உண்டானை உமிழ்ந்தான உடையான் தன்னை
ஒருவருந்தன் பெருமைதனை அறிய ஒண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்துபொடி ஆகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.. (6/60) 
*

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை..
திருப்பாடல் 01


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா!

  அட இன்று பாகற்காய் பற்றிய சிறப்பா...வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அப்போவே போட்ட கமென்ட் பப்ளிஷ் ஆகாம இருந்துருச்சு...இப்பதான் மீண்டும் ரிஃப்ரெஷ் பண்ணி பப்ளிஷ் பண்ண முடிஞ்சுச்சு...

  அமுதம் அருமை!! வழக்கம்போல்...ஏற்றகலங்கள் நினைத்து பெருமூச்சு..

  பாகற்காய் எனக்கு சிறிய வயதிலேயே பிடிக்கும். இப்போதெல்லாம் நான் வெல்லம் சேர்ப்பதில்லை அண்ணா...

  பாகல் இலையின் சிறப்பும் அறிந்தேன்...சென்னையில் செடிகள் பால்கனியில் பாகல் எல்லாம் வைத்தேன். இங்கும் தொட்டிதான் வைக்கனும்...பார்க்கனும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 3. குட்மார்னிங். தமிழமுதம் பருகினேன்.

  பதிலளிநீக்கு
 4. // சமீபத்தில் எல்லோரும் பாகற்காயை விரும்புவதால் காரணம் எல்லோருக்கும் சர்க்கரைப் பிரச்னை வந்ததுதான்..//

  ஹா... ஹா... ஹா... உண்மை.

  பதிலளிநீக்கு
 5. அனைத்தும் மிக சிறப்பு ...

  பதிலளிநீக்கு
 6. இன்றைய பகிர்வு சிறப்பு ஜி.

  பாகற்காயை நான் விபரந்தெரிந்த வயது முதல் விரும்பி சாப்பிடுவேன்.

  பதிலளிநீக்கு
 7. அனைத்தும் அருமை.

  நீங்கள் இங்கு பகிர்ந்த பாடல்களை பாடி மகிழ்ந்தேன்.
  வாழ்த்துக்கள்.


  பாகற்காய் பிடிக்கும், ஆனால் தக்காளி, வெங்காயம், தேங்காய் எல்லாம் போட்டு தான் சாப்பிடுவேன்.
  வெல்லம், சீனி சேர்ப்பது இல்லை.

  பதிலளிநீக்கு
 8. ஓவியம் சிறப்பான தேர்வு. பாடலின் பொருள் விளக்கமும் எளிமை. அரங்கன் தரிசனமும், ஆஞ்சுவின் தரிசனௌ கிடைக்கப் பெற்றேன். பாகல் வார ஒரு முறை இங்கேயும் உண்டு. இன்று கூட மெது /மிதி/வேலிப் பாகல் தான் சமைத்தேன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..