நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 26, 2019

கத்தாழைக் காடு

அன்பின் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துகள்..
ஃஃஃ

மீனாச்சி... மீனாச்சி!....

காலையில கடத்தெருவுக்குப் போன ஆம்பள இப்பத்தான் ஊட்டுக்கு வர்றதுன்னா... ஊரு உலகத்துல நீதி எங்கே இருக்கு.. நியாயம் எங்கே இருக்கு?...

ஏ... என்னா நீ அலுத்துக்குற... நான் என்ன வேல வெட்டிக்குப் போகாம ஊரச் சுத்திட்டா வர்றேன்?...

வேல வெட்டிக்குப் போனா.. எல்லாம் சரியாப் போச்சா?... பொங்கலு போயி எத்தன நாளாச்சு?..

வீடு வாசலை அப்பிடி இப்பிடி சுத்தம் செஞ்சு வெக்கலாம்!...

வேலிப் பக்கம் காட்டுக் கத்தாழை மறுபடியும் மொளைச்சி வருது..
அதெல்லாம் புடுங்கிப் போட்டுட்டு நல்லதா நாலு சோத்துக் கத்தாழைய வெச்சி தண்ணி ஊத்தலாம்!...

கோழிக் கூடாரம் எப்பிடிக் கெடக்கு!..  சுத்தம் பண்ணிட்டு சுண்ணாம்பு வாங்கி அடிச்சி நாக பாசாணத்தைக் கரைச்சி தெளிக்கலாம்...

வேலைக்கிப் போயி சம்பளம் வாங்கறது வயித்துப் பாட்டுக்கு...
இந்த மாதிரி எல்லாம் இழுத்துப் போட்டு செய்யிறது வாழ்க்கப் பாட்டுக்கு!...

சரி..சரி.. இப்ப என்னா செய்யணும்...ங்கறே!...

ஒன்னும் செய்ய வேணாம்.. எல்லாம் நானே செஞ்சிட்டேன்...
கத்தாழையப் புடுங்கணும்.. அது மட்டுந்தான் பாக்கி!..

அப்புறம் எதுக்குடி ராசாத்தி... இத்தனை கோவம்!.. இவ்வளவு பேச்சு?...

புருசம் பொண்டாட்டிக்குள்ள கோவமாவது?.. ஒன்னாவது!..
அப்பிடி கோவப்பட்டுக்கிட்டு இருந்தா ஊடு தான் வெளங்குமா?...

மீனாட்சியின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே வந்த சிங்காரம்
வாசல் திண்ணையில் உட்கார்ந்தான்...

முத்தண்ணன் மகன் வடை போட்டுருப்பானே!.. ஒன்னும் வாங்கிட்டு வரலையா?...

அவன் பழைய பேப்பர்ல சுத்திக் கொடுத்தான்.. நான் வேணாம்...ன்னுட்டேன்!..

ஏன்!?.. முந்தியும் பழைய பேப்பர்ல தானே சுத்திக் கொடுத்தான்!?..

கொடுத்தான்... இப்போ தான் பிளாஸ்டிக் எல்லாம் ஒழிக்கணும்..ன்னு சொல்லிட்டாங்கள்...ல...

அதால.. அந்த மெழுகுத் தாள் எல்லாம் போயாச்சு... இப்போ பழைய நியூஸ் பேப்பர கையில எடுத்துருக்கானுவோ... அதுலயும் ஏதோ கெமிக்கலு கலந்துருக்குதாம்... அதான் வேணாம்...ன்னு வந்துட்டேன்...

என்.. ராசா.. எவ்வளவு அறிவு!...

பின்ன என்ன வாழ எலைக்கா பஞ்சம்?... முத்து மச்சான் அந்தக் காலத்துல
புரச எலையிலயும் மந்தார எலையிலயும் பலகாரம் பட்சணம் எல்லாம் வெச்சி ஏவாரம் செஞ்சிருக்காரு.. நானே சாப்பிட்டு இருக்கேன்...

இப்போ இவனுங்க என்னடா...ன்னா
ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுறானுங்க!..
அந்த எண்ணையப் பார்த்தாலும் கண்றாவியா இருக்கு...
வண்டி மையைக் கரைச்சி ஊத்துன மாதிரி...

மாட்டு வண்டி எல்லாத்தையுந்தான் ஒழிச்சிப் போட்டுட்டாச்சே..
அப்புறம் வண்டி மையிக்கு எங்க போறதாம்!...

சரி.. நீங்க வாங்க.. பச்சக் கடலை அவிச்சு வெச்சிருக்கேன்..
ஒடம்புக்கு நல்லது... புள்ளைங்களுக்கும் புடிக்கும்!..
நாலு கடலய ஒடச்சித் தின்னுட்டு அப்புறமா இஞ்சி டீ குடிக்கலாம்...

ஒரு கிண்ணத்தில் அவித்த கடலையை
அள்ளிக் கொண்டு வந்தாள் - மீனாட்சி ..

நாலு கடலையை கையில் அள்ளிய சிங்காரம்
அவற்றை உரித்து வாயில் போட்டுக் கொண்டே கேட்டான்...

அதென்ன மீனாச்சி.. கடத் தெருவெல்லாம் தோரணம் கட்டுறாங்க...
ஸ்கூலு பக்கமும் கொடி எல்லாம் கட்டி இருந்திச்சு...

அதுவா... நாளைக்கி குடியரசு தினம் இல்லையா.. அதுக்காகத் தான்!...
இதெல்லாம் ஸ்கூலுக்குப் போயி நல்லபடியா நாலு எழுத்துப் படிச்சிருந்தா தெரியும்....

ம்... நானும் அஞ்சாங்கிளாஸ் வரைக்குப் படிச்சிருக்கேனே..

ஆமா... பொல்லாத அஞ்சாங்கிளாஸ்...
ஏதோ.. அத்த மவனாச்சே... போனாப் போவுது... ன்னு
எட்டாங்கிளாஸ் படிச்ச நானு உங்களுக்கு வந்து வாக்கப்பட்டேன்!...

ஆகா... நீ படிச்சவ.. நாலுந் தெரிஞ்சவ...  சொல்லு..
குடியரசு தினம் ...னா சொதந்திர கொடியேத்துற நாளு தானே!...

அது வெள்ளக்காரன் கிட்ட அடிமையா கெடந்து விடுதலை ஆன நாளு..

இது அப்பன், மகன், பேரன்.. ன்னு இருந்த வம்சாவளிய மாத்தி
எல்லாருக்கும் சம உரிமை... அப்படின்னு ஆக்குன நாளு...

ஒன்னும் புரியலையே...

அப்பன் ராசா... ன்னு இருந்தா அவன் செத்ததுக்கு அப்புறம்
அவனோட மவன் ராசா..ன்னு ஆட்சிக்கு வருவான்...
இவனுக்கு அப்புறம் இவனோட மவன் வருவான்!...

அது தானே அந்தக்காலத்து நடமுறை...

அதுதான் முடியாட்சி... அதெல்லாத்தையும் ஒழிச்சிட்டு தான் குடியாட்சி... அதாவது  குடியரசு...

அப்போ குடியரசு..ன்னா என்னாதான் அர்த்தம்?...

மக்களாட்சி... ஜனங்க எல்லாம் ஒன்னாக் கூடி அவங்கள்ள ஒருத்தன தேர்ந்தெடுத்து
அவங்கிட்ட ஆட்சி செய்யிற பொறுப்பை ஒப்படைக்கிறது.... இந்த நாட்டு ஜனங்க எல்லாருக்கும் இதுல உரிமை இருக்கு... கடமையுமிருக்கு!.. அப்படி..ன்னு அர்த்தம்!... புரியுதா?..

ஓ... அப்படி... ன்னா... ஏன்.. உங்க அக்கா புருசனோ
எந் தங்கச்சி புருசனோ வார்டு மெம்பரு ஆகலை?...

அதெல்லாம் பணங்காசு உள்ளவங்களுக்குத் தானே!...

ம்.. அப்பிடியும் ஒன்னு இருக்குதோ!...

காசு பணம் வெச்சிருக்குறவங்களுக்குத் தானே
பட்டம் பதவி கவுரவம்.. ந்னு நாம கொடுக்குறோம்...
அட... அது இல்லாட்டியும் பரவாயில்லை..
நரிய நனையாம குளிப்பாட்டணும்...

அப்படிக் குளிப்பாட்டுனவங்க கிட்டதானே
தமிழ்நாட்டைத் தூக்கிக் கொடுத்தோம்!...

ஏ... இதெல்லாம் என்னா பேச்சு?...
சும்மா எதையாவது ஒளறக் கூடாது!...

காமராசர்....ன்னு ஒருத்தர் இருந்தாராம்...
அவர இப்படித்தான் கவுத்து உட்டாங்களாம்!..
எங்கப்பா அடிக்கடி சொல்வாரு!..

அதுக்கு அப்புறம் கவர்மெண்டுக்கு வந்தவங்க எல்லாரும்
லச்சாதிபதி கோடீஸ்வரன்... ன்னு ஆகிட்டாங்களாம்..

ஆகிட்டாங்களாம்.. என்ன?...
நம்ம தேங்காக் கடைக்காரன் வார்டு மெம்பர் ஆனதுக்கு அப்புறம் அவன் ஊட்டு வாசல்..ல எத்தனை எத்தனக் காரு நிக்கிது பாத்தியா!...  

ஆமா... நம்ம பையன ஸ்கூல்..ல சேக்கிறப்போ
என்னா சாதின்னு சர்ட்டிபிகேட் கொடுக்குறதுக்கு
எரநூத்து அம்பது ரூவா கேட்டு வாங்கிக்கலையா!...

கீழே இருக்கிற ஆளுங்களே இப்படி இருந்தா மேல இருக்கிறவங்க எப்படி இருப்பாங்க!.. எங்கே பார்த்தாலும் லஞ்சம் .. பகல் கொள்ளை தான்...

கவர்மெண்டு வேலைக்காரங்க செத்தாக்கா
அவங்க புள்ளைக்கு உடனே வேலை கொடுத்துடுறாங்க...

கட்சித் தலைவரு செத்தாக்கா அவரு மகன் வந்துடறாரு..
நாந்தான் தலைவன்.. என்னைத் தான் தேர்ந்தெடுத்துருக்காங்க....ன்னு சொல்லிக்கிட்டு...

இப்போ அதுக்கும் மேல போயாச்சு...
உசிரோட இருக்குறப்பவே எம்மவன் தான் சின்ன தலைவரு...
எம்பங்காளி தான் துணைத் தலைவரு...
எம்மச்சான் தான் இணைத் தலைவரு... ன்னு இழுத்து உட்டுறானுங்க...

அப்பன் அங்கே மந்திரி.. ன்னா
மகன் இங்கே மந்திரி...

புருசன் மந்திரி.. போலீஸ் கேசு...ல உள்ளே போய்ட்டா பொண்டாட்டி மந்திரி...

அப்பன், மவன், மாமன், மச்சான்.. ன்னு குடும்பமே மந்திரி...

இந்த லெச்சணத்துல மக்களாட்சி... ன்னு பேரு!...

உசுரைக் கொடுத்து ஊரைக் காப்பாத்துனாங்க... அந்தக் காலத்துல...

ஊரை அடிச்சு உலையில போடுறானுங்க இந்தக் காலத்துல... 

இவனுங்க எல்லாம் வாழணும் - ன்னு சத்தம் போடறதிலேயே
ஏழைபாழைங்களுக்கு தொண்டத் தண்ணி வத்திப் போகுது!...

எனம் எனத்தைப் பார்க்கும்... ன்னு சொன்ன மாதிரி
அவனுங்களுக்கு உள்ளேயே எல்லாத்தையும் பங்கு போட்டுக்கிட்டு
ஒங்களுக்காக ஒழைக்கிறோம்.... ன்னு கதை உடுறானுங்க!...   

நாமளுந்தான் வருசம் பூரா கஷ்டப்படுறோம்..
நாலு காசு கையில தங்க மாட்டேங்குது!..

அதுதான் சர்க்கார்...ல எல்லாம் இலவசமா தர்றாங்களே..

அதெல்லாம் ஒழிஞ்சாத் தான் ஊரும் நாடும் உருப்படும்...
ஆனா அதெல்லாம் சுளுவா நடக்கிற காரியம் இல்லை...

அது சரி... இந்த ஸ்கூலு வாத்தியாருங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்களாமே!.. நாளைக்கு ஸ்கூல்..ல யாரு கொடியேத்துவாங்க!?..

ஏன்.. நீங்க போய் ஏத்திட்டு வாங்களேன்!.. - மீனாட்சி சிரித்தாள்...ஏன்!... நான் ஏத்தக் கூடாதா?.. எனக்கு அந்த தகுதி இல்லையா?...
நான் என்ன படிச்சவன் மாதிரி ஊரக் கெடுத்தனா.. லஞ்சம் வாங்குனனா.. குடி கெடுத்தனா.. கோயில் சொத்தைக் கொள்ளை அடிச்சனா?... குற்றவாளிக்கும் கொலைகாரனுக்கும் கூட்டாளியா இருந்தனா?...
எதுக்கு நான் ஏத்தக்கூடாது கொடி!?..

வீராவேசம் ஆனான் சிங்காரம்..

ஏத்துங்க... தாராளமா ஏத்துங்க...
உங்களை யாரும் வேண்டாங்கலை...

கடத்தெருவுக்குப் போயி கொடி வாங்கிக்கிட்டு வாங்க!..

நம்ம வீட்டு வாசல்...ல நாமளே ஏத்துவோம்!..

மீசையை முறுக்கியபடி கடைத்தெருவுக்குப் புறப்பட்டான் சிங்காரம்...

நம்ம நாட்டுக் கொடிக்கு அடையாளம் தெரியுமா!...

ஏன் தெரியாது!..
சக்கரம்.. தர்மச் சக்கரம் இருக்குமே நடுவாலே.. அதானே!...

அதே தான்..
நல்ல பெரிய கொடியா பார்த்து வாங்கிக்கிட்டு வாங்க!... 

நம்ம வீட்டு வாசல்..ல நாமளே ஏத்துவோம்!..
புள்ளைங்க ரெண்டு பேரும் சந்தோசப்படுவாங்க!...

- என்றபடி,
எழுந்து நடந்த 
மீனாட்சி தனக்குள் பேசிக் கொண்டாள்...

கத்தாழை..ன்னாவே பயங்கரம்...
சரி.. சோத்துக் கத்தாழை நல்லது..ன்னு பார்த்தா
காட்டுக் கத்தாழையும் சேர்ந்து முளைக்கிது..

ஊர்க் கோடியில முளைச்சித் தொலையாம
வீட்டுப் பக்கத்தில வந்து முளைக்கிது...

இப்படியே விட்டுட்டா கத்தாழைக் காடு ஆயிடும்!..
கட்டு விரியனும் கண்ணாடி விரியனும் தேடி வந்துடும்..
எல்லாத்தையும் பிடுங்கிடணும்... அதான் நல்லது!...
*** 


கற்றாழையும் கட்டு விரியனும் ஆகிய
லஞ்சமும் ஊழலும் ஒழியட்டும்..
குறைவிலாத குடியரசு மலரட்டும்...
மாண்புடன் மக்களாட்சி தழைக்கட்டும்!..

வாழிய பாரத மணித்திருநாடு
ஜய் ஹிந்த்
ஃஃஃ

12 கருத்துகள்:

 1. மிக அருமையான பதிவு.
  நல்லது வளர அல்லது மறைய வேண்டும்.
  குறைவிலாத குடியரசு மலரட்டும்.
  வாழிய பாரத மணித்திருநாடு
  ஜய்ஹிந்த்.
  வீட்டு வாசலில் கொடி பறக்கட்டும்.
  பாடுவோம், நாம்
  தாயின் மணிக்கொடி பாரீர்- அதைத்
  தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம். மீனாச்சியும் சிங்காரமும் பாடம் எடுத்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 3. ஆனால் உண்மையில் இப்படியான வெள்ளந்தி மனிதர்களையே கூட நாம் இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. தேடித்தான் பிடிக்கவேண்டும். கிராமங்கள் என்று ஒன்றில்லாமல் எல்லாமே "நரகங்"களாகிப்போயின!

  பதிலளிநீக்கு
 4. குடியரசு தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப நன்றாக எழுதியிருக்கீங்க. இப்பவும் கிராமத்துல இந்தமாதிரி பேசிக்பிட்டிருப்பாங்க சில வெள்ளந்தி ஆசாமிகள்.

  தங்கள் தங்கள் வீட்டில் தேசியக்கொடி ஏற்றும் சிலரையும் எனக்குத் தெரியும்.

  பதிலளிநீக்கு
 6. எல்லா விவரமும் தெரிந்தாலும்நேர் செய்ய முடியாமல் அங்கலாய்ப்பதுதானே நமக்கு முடியும்

  பதிலளிநீக்கு
 7. இன்றைய நிலைப்பாடு இதுதான்...

  //மீசையை முறுக்கியபடி கடைத்தெருவுக்குப் புறப்பட்டான் சிங்காரம்//

  ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
 8. பலவற்றை உணர்த்திய, உணர வேண்டிய பதிவு ஐயா...

  குடியரசு தின வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான பகிர்வு....

  குடியரசு தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. துரை அண்ணா அன்றே வாசித்தேன் ஆனால் வந்து கருத்திட முடியலை. நேற்று மாலைதான் கொஞ்சம் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போய்ட்டேன்...

  அருமையான பதிவு. மீனாட்சியும் சிங்காரமும் உரையாடுவதை வைத்தே பல விஷயங்கள் சொல்லிட்டீங்க.

  குடியரசுதின வாழ்த்துகள் தாமதமாக.

  கீதா

  பதிலளிநீக்கு
 11. குடியரசு தின வாழ்த்துகள் எல்லோருக்கும்!

  நல்ல பதிவு. இந்தக் கத்தாழை போலத்தானே நாட்டிலும் பல விஷக்கிருமிகள் கலந்து கட்டி விஷத்தை விதைத்து வருகின்றனர். மீனாட்சி அதைப் பிடுங்கி எறிய நினைப்பது போல நம்மால் முடிந்தவரை நாமேனும் செய்ய முயற்சி செய்வோம்.

  பொருள் பொதிந்த பதிவு.

  துளசிதரன்

  (அண்ணா நான் தானே இங்கு டைப்பி வெளியிடுவது எனவேதான் துளசியின் கருத்து தாமதமாகிவிட்டது. - கீதா)

  பதிலளிநீக்கு
 12. அருமையான உரையாடலுடன், அர்த்தமுள்ள உரையாடலுடன் கூடிய பதிவு. கடைசியில் மீனாக்ஷி சொல்வது சரியே! இதைப் படிக்கையில் அந்தக்காலத்து விகடன் திரைப்பட விமரிசனங்களில் முனுசாமி-மாணிக்கம், மீனாக்ஷி அம்மாள்-ஷண்முக சுந்தரம் பிள்ளை என்றெல்லாம் இருவர் பேசிக்கொள்கிறாப்போல் எழுதுவாங்க. உரை நடை அவ்வளவு அற்புதம்! தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. இப்போதைய விகடனில் இம்மாதிரிப் பார்த்தாலோ, படித்தாலோ நீங்க தான் எழுதினதோ என நினைக்கச் சொல்லும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..