நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 09, 2019

மங்கல மார்கழி 25

ஓம்

தமிழமுதம்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.. (423) 
*
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 25


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
*
எங்கள் பெருமானே..

தேவகிக்கு மகனாகப் பிறந்து
பொழுது விடிவதற்குள்
யசோதையின் அருகில்
கிடத்தப்பட்டு வளர்ந்தவன் நீ!...

நீ
வசுதேவ தம்பதியர்க்கு
மகவாகப் பிறந்ததைத் தாங்கிக் கொள்ள
இயலாதவனாகிய கம்சன்
நெஞ்சம் எல்லாம் நெருப்பாகி நிற்க

அவனது வயிற்றில்
நெருப்பாக நின்ற நெடுமால் நீ!..

உன்னையே போற்றிப் புகழ்ந்து
வந்திருக்கின்றோம்..

எமக்கு
பறையெனும் மங்கலத்தை
அருளிச் செய்வாயாக!..

மாறாத மங்கலத்தையும்
விட்டு அகலாத
திருவுடைச் செல்வத்தையும்
நினது திருத்தோளின் திறலையும்
நாங்கள் பெருமகிழ்ச்சியுடன்
பாடிக் கொண்டிருக்கும்படிக்கு
நீயருளல் வேணும்...
*

தித்திக்கும் திருப்பாசுரம் 

ஸ்ரீ சாரநாதப்பெருமாள் - திருச்சேறை..
கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்
திருமா மனிவண்ணன் தேசு.. (2290)
-: ஸ்ரீ பேயாழ்வார் :-

இயற்கையின் சீதனம்

கத்தரி


குள்ள கத்தரிக்காய்..
குண்டு கத்தரிக்காய்..
என்றெல்லாம்
ஒருவருக்கொருவர்
சீண்டி விளையாடிய நாட்கள்
நினைவுக்கு வருகின்றன..

கார் உள்ளளவும் கடல் நீருள்ளளவும்...
என்பார்கள்..

அது கத்தரிக்கு மிகப் பொருந்தும்...
இதுவும் நமது மண்ணிற்கே உரியது...

சமையலறையின் ராணி!...

என்னென்ன விதமாகச் சமைக்கலாம்?..
எத்தனையோ விதமாகச் சமைக்கலாம்!...

பற்பல வண்ணங்களில்
பற்பல வடிவங்களில்
கண்களைக் கவர்வது - கத்தரிக்காய்..

பண்டைக்காலத்தின் இதன் பெயர்
வழுதுணங்காய்!...நீர்ச்சத்துடையது - கத்தரி..

இருப்பினும்,
பிஞ்சு தான் சமையலுக்கு ஏற்றது..

சந்தைக் கடையில்
கத்தரியை அழுத்திப் பார்த்து வாங்கினால்
கடைக்காரருக்குக் கோபம் வந்து விடும்...

நாலு பேர் அழுத்தினால்
கத்தரிப் பிஞ்சு கன்றி விடும்...

தாது உப்புகள் நிறைந்துள்ள கத்தரி
உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் த்ருகின்றது..

கொழுப்பைக் கரைப்பதனால்
உடல் பருமன் குறைகின்றது..

டைப் 2 சர்க்கரை குறைபாட்டை தடுப்பதாகவும்
புற்றுநோய் செல்களை அழிப்பதாகவும்
தற்போது கண்டறிந்துள்ளனர்..இருப்பினும்
விதைகள் எதுவும் இல்லாத
மரபணு மாற்றப்பட்ட கத்தரிகளை
புழக்கத்தில் விட்டுவிட்டது
இன்றைய அறிவியல்...

மரபணு மாற்றப்பட்ட கத்தரி
புதிதாக எதையெல்லாம்
உண்டு பண்ண இருக்கின்றதோ!..


சிவ தரிசனம்
திருச்சேறை


இறைவன் - ஸ்ரீ சாரபரமேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ ஞானவல்லி


தலவிருட்சம் - மாவிலங்கை மரம்
தீர்த்தம் - மார்க்கண்டேய தீர்த்தம்


மார்க்கண்டேயர் வழிபட்ட திருத்தலம்..

ருண விமோசனத் தலம்
என்று ஆன்றோர்களால் குறிக்கப்பெற்றது...

இங்கே
அம்மையப்பனை வணங்கி நின்றால்
கடன்கள் தீர்கின்றன என்பது ஐதீகம்...

நம்முடைய கடன்கள் என்பன
காலகாலமாகப் பிறவிகள் தோறும்
தொடர்ந்து வருகின்ற வினைகள்...

ஆனால்,
கடன் நிவாரணத் தலம் என்பதற்கு
வேறு விதமாக அர்த்தம் ஆக்கி விட்டார்கள்...

இக்காலத்தில்
தத்தமது ஆடம்பரச் செலவுகளுக்காக
வாங்கிய கடன்கள் தீர்கின்ற தலம் 
என்றால் தான் மக்களுக்குப் புரிகின்றது...

அப்படிச் சொல்வதைத் தான்
மக்களும் விரும்புகின்றார்கள்...

இத்தலத்தில் வனப்பு மிக்க
வயிரவ மூர்த்தியைத் தரிசிக்கலாம்...

புகழ்மிக்க ஸ்ரீ சாரநாதப் பெருமாள் திருக்கோயிலும்
இத்தலத்தில் தான் அமைந்துள்ளது...

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படுதலை இடுபலி யதுகொடு மகிழ்தருஞ்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.. (3/86) 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


ஸ்ரீ வயிரவமூர்த்தி
திருச்சேறை..
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி வேழம்
உரித்துஉமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே..(4/73) 
*

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத்தொகை
திருப்பாடல் 02

எம்பிரான் சம்பந்தமூர்த்தி
வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

9 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  குறளமுதமும், திருப்பாவையும் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. இயற்கைக் கத்தரிதான் வாங்குகிறோமா என்று தெரிவதில்லை. ஆயினும் பிடித்த காய்கறி.

  பதிலளிநீக்கு
 3. திருச்சேறை ஒருமுறை சென்ற நினைவு.

  பதிலளிநீக்கு
 4. திருச்சேறை சாரநாதர் கோயிலுக்குப் போன நினைவு இருக்கு. சிவன் கோயில் தரிசனம் செய்யலைனு நினைக்கிறேன். படங்கள், கேஷவின் பொருத்தமான ஓவியம் எல்லாம் வழக்கம் போல் அழகு. கத்தரிக்காய்க்காக நான் சொர்க்கம் கூட வேண்டாம்னு சொல்லுவேன். ஆனால் இப்போல்லாம் வெள்ளைக் கத்திரியையும், பச்சைக்கத்திரியையும் அரிதாகவே பார்க்கமுடிகிறது. பச்சையாவது எப்போதேனும் பார்க்கலாம். வெள்ளை கிடைக்கவே இல்லை.

  பதிலளிநீக்கு
 5. இனிய காலை வணக்கம்.

  மங்கலமாகத் தொடக்கம். ஒருத்தி மகனாகப் பிறந்து.... பிடித்த பாசுரம்.

  கத்தரிக்காய்- சமைக்கும் விதத்தில் சமைத்தால் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் சொல்வது சரிதான் கடன் நீங்க என்றுதான் அந்த கோவிலுக்கு கூட்டம் வருகிறது. இத்தனை விளக்கு போட்டால் நல்லது என்று வேறு சொல்வார்கள்.
  கல்யாணம் ஆவதற்கும் இப்போது வேண்டுகிறார்கள். குருக்கள் வரும் ஆண், பெண் எல்லோருக்கும் மாலை அணிவித்து சீக்கிரம் திருமண்ம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அங்கு போன போது பார்த்தோம்.

  கத்திரிக்காய் படங்களும், செய்திகளும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 7. மனக்கவலை இருந்தால் அது தீர ஒருத்திமகனாக பிறந்து பாடலை தினம் பாடலாம் என்று நாகை முகுந்தன் அவர்கள் இன்று சொன்னார்.

  பதிலளிநீக்கு
 8. மிக இனிய தரிசனம் ...

  ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  பதிலளிநீக்கு
 9. இன்றைய தரிசனம் நன்று ஜி

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..