நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 03, 2019

மங்கல மார்கழி 19

ஓம்

தமிழமுதம்

ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.. (190) 
*

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 19
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் 
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் 
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை 
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் 
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.. 
*

ஆனைத் தந்தத்தால் இழைக்கப்பட்ட
கட்டிலில் அழகிய மஞ்சம்...

கட்டிலைச் சுற்றிலும்
ஒளிவீசிக் கொண்டிருக்கும்
குத்து விளக்குகள்..

மெத்தெனும் அழகிய மஞ்சத்தில் 
வீணையும் அதன் நாதமும் போல
மல்லிகையும் அதன் மணமும் போல
மாதவன் மதுசூதனன் நம்பியும்
அவனைப் பிரிந்தே அறியாத 
கொத்து மலர்க் குழலழகி நப்பின்னையும்!...

மையெழுதிய கண்ணாலே
உன் மணாளனை எழுதியவளே!...

நின்னுடைய பொன்மேனி தழுவி
திருத்தன பாரங்களில் முகம் வைத்துக் கிடக்கும்
அந்தக் கார்மேக வண்ணனை
இதயக் கமலத்தில் கமலப் பூவினைச்
சூட்டியிருக்கும் கண்ணனை
ஒருபோதும் துயிலெழ விடமாட்டாய் நீ!...

நீதான் இப்படி என்றால்
அவனாவது தனது அமுத வாய் திறந்து
இதோ வருகிறேன்!.. என்று
சொல்கிறானா!.. - என்றால்
அதுவும் இல்லை!...

எது தத்துவம்.. எது தகவு!..
அறியோம் நாங்கள்...

இப்போதைக்கு
திருக்கதவங்களைத் திறந்து
எங்களை அனுக்கிரகிக்கவேணும்..

இதுவே
நாங்கள் யாசிக்கும் விஷயம்!...
***

தித்திக்கும் திருப்பாசுரம்

அருள்தரும் அரங்கன் 
பேசிற்றே பேசலல்லால் பெருமையொன் றுணரலாகாது
ஆசற்றார் தங்கட்கல்லால் அறியலாவா னுமல்லன்
மாசற்றார் மனத்துளானை வணங்கிநாம் இருப்பதல்லால்
பேசத்தான் ஆவதுண்டோ பேதைநெஞ்சே நீசொல்லாய்.. (0893)
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-

இயற்கையின் சீதனம்

துளசிதிருத்துழாய் என்று 
வைணவத்தில்
வெகுவாகச் சிறப்பிக்கப்படுவது...

துளசி வனத்தில் தான்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
திருஅவதாரம் செய்தனள்..

துளசி என்றே
பாரதத்தின் அனைத்து மொழிகளிலும் 
அறியப்படுவது..

துளசி தீர்த்தம் 
புனிதம் என்று போற்றப்படுவது...

துளசியும் மிகுந்த 
மருத்துவ குணங்களை உடையது..

துளசி தீர்த்தம்
சுவாச மண்டலத்தைச் சுத்திகரித்து
சுவாசத்தைச் சீராக்கும்...

துளசி நிறைந்திருக்கும் இடத்திற்கு
விஷ ஜந்துகள் வராது...

மிக முக்கியமான செய்தி
துளசி இலையும் துளசி தீர்த்தமும்
காமத்தைக் கட்டுப்படுத்த வல்லவை...

அதனால் தான் விரத நாட்களில்
துளசி மணி மாலை அணிவதும்
துளசி மணி மாலையை ஸ்பரிசித்து
விரல் கொண்டு எண்ணுவதும்!... 
***

சிவ தரிசனம்
திரு ஆனைக்காஇறைவன் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ அகிலாண்டநாயகி

தல விருட்சம் - நாவல்
தீர்த்தம் - காவிரி

பஞ்ச பூதங்களுள்
நீரின் பகுப்பாக விளங்கும் திருத்தலம்...

அம்பிகையின் அருள்
அளவிடற்கரியது...அம்பிகை சிவபூஜை நிகழ்த்திய தலங்களுள்
திருஆனைக்காவும் ஒன்று...

இங்கே சிலந்தியும் யானைவும் கூட
சிவபூஜை நிகழ்த்தியுள்ளன...

யானை முக்தி நலம் எய்திட
சிலந்தி தனது கர்மவினையினால்
சோழ மன்னனாகப் பிறந்தது...

அப்படிப் பிறந்த மன்னனே
கோச்செங்கணான்...

மாமன்னன் கோச்செங்கணானை
தேவாரத்தின் பலபகுதிகளில் காணலாம்...

யானை ஏற முடியாதபடிக்கு
மாடக்கோயில்களை எழுப்பியவன்
மன்னன் கோச்செங்கணான்...

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதமேதும் இல்லையே.. (3/53)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி உளத்தடைத் தார்வினை
காவாய் என்றுதங் கைதொழுவார்க் கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே.. (5/31) 

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 17 - 18


செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

 1. குட்மார்னிங். எனக்கு மிகவும் பிடித்த குறள்.

  பதிலளிநீக்கு
 2. பச்சை விளக்கு பாடல் நினைவுக்கு வருகிறது! கண்ணதாசன்(தானே?) நமக்கு அவ்வப்போது இவற்றை எல்லாம் நினைவூட்டுபவர்...

  பதிலளிநீக்கு
 3. துளசியின் அருமைகளை சொல்லவும் வேண்டுமோ...

  ஆஹா... திருவானைக்கா... நான் சென்றிருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 4. இனிய காலை வணக்கம் துரை அண்ணா..

  கொஞ்சம் கும்மி அடிச்சுட்டு வீட்டு வேலை பார்த்துட்டு வந்ததுல லேட்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. இன்றைய பாடலுக்கு கேஷவின் படம் அட்டகாசம்...

  பாடல்கள், விளக்கங்கள், படங்கள், துளசியின் சிறப்பு எல்லாமே அருமை...

  திருவானைக்காவும் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 6. துளசியின் மகிமை பற்றிய பகிர்வு நன்று

  பதிலளிநீக்கு
 7. மிக அருமையான பதிவு.
  படங்கள் அழகு.
  கோவிலின் சிறப்பு சொன்னது அருமை.அங்கு பாடிய தேவாரம், திருக்கடைகாப்பு எல்லாம் பாடி வணங்கினேன்.

  துளசி மகிமை மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. துளசியின் மகிமையும்...

  ஆண்டாளின் பாசுரமும் சேவிக்க பெற்றேன் ...

  பதிலளிநீக்கு
 9. அமுதம் அனைத்தும் அருமை. திருவானைக்கா சென்றதுண்டு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 10. அருமையான படங்கள். மீண்டும் அரங்கன் தரிசனம். திருஆனைக்கா இப்போக் கும்பாபிஷேஹம் ஆனப்புறமாப் போகலை. போகணும்.

  பதிலளிநீக்கு
 11. //நம் மனோபலத்தை ஒருமுகப்படுத்தி இறைவன் அருளை வேண்டுகையில் இல்வாழ்க்கையின் சுகங்கள் அவற்றிற்கு முட்டுக்கட்டை போடும். அவற்றைத் தாண்டிக் கொண்டு அத்தகைய எண்ணங்களை நம் மனதிலிருந்து மெல்ல மெல்ல அகற்றி அனைத்தும் நாராயணன் செயலே என நினைத்து ஒருமுகமாக அவனையே நினைக்க வேண்டும். அதற்கு அருள்பவளே பெருமானின் பத்தினியான சக்தி. சக்தியை நல்ல முறையில் பிரயோகம் செய்ய வேண்டும்.// கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்! மைத்தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்! இந்தத் திருப்பாவை வரிகளுக்கான விளக்கம்! முன்னர் எழுதியது!

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..