நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 16, 2013

ஸ்ரீராம நவமி

ஸ்ரீராம ராம... ஜயராம ராம...

ஸ்ரீ ராமன் தன்னை  அண்டினோர்க்கு என்றும் ஆனந்தத்தைத் தந்தவன். சுக துக்கங்களால் சலனம் அடையாமலும் சஞ்சலப்படாமலும் வாழ்ந்து காட்டியவன். 

பறவையாகிய ஜடாயுவுக்கு மகனாக நின்றவன். 

வானர வேந்தனான சுக்ரீவனுக்கும் கடைநிலையில் நின்ற குகனுக்கும் அசுரனான விபீஷணனுக்கும் சகோதரனாக ஆனவன். 

எல்லையற்ற வலிமையுடைய அனுமனுக்கு - அனைத்துமாக   நின்றவன்.

தான் சுவைத்த பழங்களைத் தந்த - சபரிக்கு முக்திக் கனியினை நல்கியவன்.

வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகத்தியர், மதங்கர்  - என எல்லா மகரிஷிகளையும் தொழுது வணங்கிய தூயவன். வீரத்தை நிலைநாட்டி ஜானகியின் கரம் பற்றிய உத்தமன். தாய் தந்தை சொல்லே வேதம் என தலைமேற்கொண்ட தயாபரன். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் - என இலங்கியவன். காகத்தின் வடிவு கொண்டு தகாததைச் செய்த ஜயந்தனையும் மன்னித்தவன். பகைவனுக்கும் அருளிய பண்பாளன்.

தர்மத்தைக் கைக்கொண்டு கடமை உணர்வுடன் வாழ்ந்த மாவீரன். தீயவைகளை வெறுத்து ஒதுக்கி - நன்மைகள் எங்கிருந்தாலும் அவற்றை ஆதரித்தவன். 

அதனால் தான் , 

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ர நாம ததுல்யம் ராம நாம வரானனே!...

ஸ்ரீராமன் எனும் ஒரு திருப்பெயர் ஆயிரம் திருப்பெயர்களுக்குச் சமம் என்று சிவபெருமான் அம்பிகையிடம் புகழ்ந்துரைத்தார். 

சிவபெருமான் புகழ்ந்துரைத்த திருப்பெயரினைத் தாங்கி, கருமாமுகில் என கருணை ததும்பி வழிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தி உலகம் உய்யும் பொருட்டு திருஅவதாரம் செய்தருளிய நாள் - நவமி.

சூர்ய குலத் தோன்றலாகிய தசரத மாமன்னன் - கோசலை, கைகேயி, சுமித்ரை எனும் பட்டத்தரசியருடன் அயோத்தி மாநகரை முறை தவறாது ஆட்சி செய்து வருகின்றார். வசிஷ்ட மகரிஷி குலகுரு. 

காலங்கள் கடந்தும் தனக்கு புத்திரப் பேறு கிட்டவில்லையே என வருந்தி - மகப்பேறு வேண்டி பெரும் யாகம் செய்கையில், யாக குண்டத்திலிருந்து பூதகணம் ஒன்று தோன்றி பாயச கலசத்தைக் கொடுத்து, ''தேவியர் அருந்துவதற்கு ''  - எனச் சொல்லி மறைந்தது.  

அவ்வண்ணமே யாகப்பிரசாதமாகக் கிடைத்த பாயசத்தை கோசலை, கைகேயி, சுமித்ரை மூவரும் அருந்த,  காலம் கூடிக் கனிந்தது. கோசலையின் மணிவயிற்றில் கருவாகி -   

சித்திரையில் சுக்ல பட்ச நவமி திதியன்று கடக லக்னத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் - நண்பகல் நேரத்தில் மகவாக அவதரித்தருளினான் அருட் கடலாகிய ஸ்ரீராமசந்திரன்.

 
ஸ்ரீராமன் பிறந்த வேளையில் - சூரியன், குரு, சனி, செவ்வாய், சுக்கிரன் எனும் ஐந்து கிரகங்களும் உச்சம் பெற்றிருந்தன.
 
ஸ்ரீராமனைத் தொடர்ந்து,  சுதர்சனமாகிய சக்கரம் - கைகேயியின் மகன் பரதனாக பூச நட்சத்திரத்திலும், ஆதிசேஷன் - லட்சுமணனாக ஆயில்ய நட்சத்திரத்திலும், வலம்புரிச் சங்கு - சத்ருக்னனாக மக நட்சத்திரத்திலும் சுமித்ரையின் மக்களாகத் தோன்றியருளினர்.  

அங்கே மஹாலட்சுமி தானும் மிதிலையில் ஜனக மகாராஜன் பொன் ஏர் பூட்டி உழும் போது தங்கப்பேழையில் குழந்தையாகத் தோன்றியருளினள். 

மண்ணில் தோன்றியருளிய மாணிக்கங்கள் மண்ணிற்கேற்றவாறே நடந்து கொண்டன. 

காலதேவனை உருவாக்கி அவனுக்குக் கட்டளையிடும் கருணையின் சிகரம்,  காரண காரியங்களை  உத்தேசித்து - காலதேவனுக்குக் கட்டுப்பட்டு - அதற்கும் இதற்கும் பரிகாரம் என்று தேடி அலையாமல், நீதியின் வழியில் -

கல்லிலும் முள்ளிலும் நடந்து காரியங்களை   நிறைவேற்றிக்  கொண்டது.
 
நீதியின் வழி நடத்தல் - அதுதான் ஸ்ரீ ராமாயணம்.

பத்து தினங்களுக்கு முன்னதாகவே ஸ்ரீ ராமாயண ப்ரவசனம் தொடங்கி, ஸ்ரீராமநவமி அன்று ஸ்ரீராம பட்டாபிஷேகத்துடன் மங்களமாக பூர்த்தி செய்வர். ஸ்ரீராமன் பிறந்த நாளில் ராமநாம ஜபம் செய்வதும் தொன்றுதொட்டு வரும் பழக்கம்.
 
ஸ்ரீராமகாவியம் படிப்பதும் கேட்பதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும் என்பர்.

இன்றைய  காலகட்டத்தில் ஸ்ரீராமனின் வழி நடப்பது அதைவிட மிக மிக அதிக புண்ணியத்தைக் கொடுக்கும்

ஸ்ரீராமன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களில் உபந்யாசங்களும் வழிபாடுகளும் திருவிழாக்களும் கோலாகலமாக நடக்கின்றன. 


ஸ்ரீராமனின்  மேன்மையை உணர்ந்து - அவன் வழி நடந்து கொள்வோம்!.. 

எதற்கும் உதவாத - காம, குரோத, மோக, லோப, மத, மாச்சர்யம் - எனும் தீய குணங்களை விட்டொழித்து, 

ஸ்ரீராமனின் நற்குணங்களைப் பின்பற்றி எல்லாரையும் நேசிக்கப் பழகுவோம்.

அத்தகைய மனப்பாங்கு நம்மிடம் வளரவேண்டும் என - அந்த ஸ்ரீராமனையே சரணடைவோம்!...

நல்ல குணங்கள் நம்மிடையே தழைக்கும் நாள் எதுவோ - 

அதுவே ஸ்ரீராமன் பிறந்த பொன்னாளாகும்!..  

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே 
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே 
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்...
           - கம்பர். 


ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே 
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நமஹ: 

ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜயராம்!...


2 கருத்துகள்:

  1. எப்படி வாழ வேண்டும் என்று மனிதனாக வாழ்ந்து காட்டியவர்...

    கம்பரின் வரிகளோடு சிறப்பான பகிர்வு... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு.தனபாலன் அவர்களே!.. தங்களின் கருத்தும் வாழ்த்தும் உற்சாகப்படுத்துகின்றன...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..