நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 09, 2021

தாயின் திருவடி

           

இன்று
விடியும் பொழுதிற்குச்
சற்று முன்பாக
(2:30 மணியளவில்)
எனது தாயார்
ஸ்ரீமதி லீலாவதி துரைராஜன் அவர்கள்
சிவபதம் எய்தினார்கள்..


எண்பத்தைந்து வயதினைக் 
கடந்த அளவில்
ஒன்றரை மாதத்துக்கு முன்
கடும் உடல் உபாதைக்கு
ஆளானார்கள்..

அப்போது காத்தளித்த இறைவன்
இப்போது தன் நிழலில் சேர்த்துக்
கொண்டான்..

உடல் மிகவும் தளர்ந்திருந்த போதிலும்
மேலதிகத் துன்பம் எதுவுமின்றி
தூக்கத்தில் பிரிந்திருக்கின்றது
உயிர்..


தேர்தல் நாளன்று
இளைய மகன் உடன் வர
உற்சாகத்துடன் வாக்களித்துத்
திரும்பியிருக்கின்றார்கள்..

அம்மாவை நல்லபடியாகக்
கவனித்துக் கொள்ளும் பேறு
எனது இளைய சகோதரனாகிய
மனோகரனுக்குக்
கிட்டியிருக்கின்றது..


மூன்று வாரங்களுக்கு முன்
இளைய மகனின் மகள்
(இளைய பேத்தி) சடங்காகிய
மகிழ்ச்சி அம்மாவுக்கு..

அம்மா உடல் நலக் குறைவுடன் இருந்தபோது காணொளியில்
பேசினேன்..

தவிரவும்
என்னுடன் பேசும் பொழுதெல்லாம்
கண் கலங்குவார்கள்..

விதியின் கைப் பாவையாகி விட்ட
என்னால் தாயின்
கண்ணீரைத் தாங்கிக்
கொள்ள முடிவதில்லை..

மறுபடியும் பேசியிருக்கலாம்
என்று பேதை மனம் இப்போது மருகுகின்றது..

சீக்கிரம் வந்து விடு செல்லையா..
என்று கலங்கினார்கள்...

அபுதாபியில் இருக்கும்
எனது மருமகன், மகள்
குழந்தைகளைக்
காண்பதற்குப்
பிரியப்பட்டார்கள்..

என்ன செய்வது?..
நினைப்பதெல்லாம்
நடந்து விடுவதில்லையே..

ஆயினும்
என் தாயின் திருவடி
என்றும் என் நெஞ்சில்
நிலைத்திருக்கும்..


ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக்
கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி..
-: பட்டினத்தடிகள் :-

இறைவன் திருவடிகளில்
என் அன்னையின் ஆன்மா
இனிதிருக்கட்டும்..

ஆனாலும்
மீண்டும் நான் பிறக்கும் போது
என் அன்னையே என்னை
மடி தாங்குவாள்..

இவ்வரத்தை 
நல்க வேணும்
இறைவா..
எம்பெருமானே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

28 கருத்துகள்:

 1. என்றும் ஈடு செய்ய இயலாத இழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் அன்னையின் இழப்பு செய்தி கேட்டு மனம் மிகவும் கனமானது. ரொம்ப வருத்தமாக உள்ளது. அன்னாரின் ஆத்மா இறைவன் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.இப்பிரிவை தாங்கிக் கொள்ளும் சக்தியை ஆண்டவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தந்தருள பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் இனிய தாயின் ஆன்மா இறைவன் திருவடிகளில் அமைதி காணட்டும். உங்களுக்கும் சார்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அன்னாரது நல்லாசிகள் என்றென்றும் கிட்டுமாக.

  எல்லாம் அவனருள் எப்போதும்.

  பதிலளிநீக்கு
 4. ஈடு செய்ய முடியாத இழப்பு. அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 5. தாயொடு அன்பும் அறுசுவையும் போம்... ஈடு செய்ய முடியாத இழப்புதான்.

  தேர்தலின்போது உள்ளூரிலா இருந்தீர்கள்?

  அம்மாவின் பிரிவால் வருந்தும் உங்களுக்கு என்னுடைய ஆறுதல்கள்.

  பத்துமாதம் சுமந்து பெற்றேன் செல்லையா
  நான் பத்தியமும் இருந்ததுண்டே செல்லையா
  உன்னைத் தங்க பிள்ளை என்று சொல்ல செல்லையா
  உனக்கு இங்கிருக்க வாய்ப்பில்லையோ சொல்லையா?

  விதிதான் எப்படி அமைந்துவிடுகிறது. உங்கள் அம்மாவின் ஆன்மா ஈசனின் நிழலில் இளைப்பாறட்டும்.

  பதிலளிநீக்கு
 6. அம்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு
  ஆழ்ந்த இரங்கல்கள்.
  அவர்களுக்கு என் வணக்கங்கள்.
  அதிகம் துன்பம் இல்லாமல் இறைவன் அழைத்து கொண்டது அறிந்து கொஞ்சம் நிம்மதி.
  ஓட்டு போட்டு வந்து இருக்கிறார்களே தம்பியுடன்!
  தாயின் பிரிவால் மனம் வாடும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தர பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. தங்களது தாயின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும். தங்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

  தாங்கள் இத்துயரிலிருந்து மீண்டு வர இறைவன் துணை புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 8. ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள். இத்துயரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 9. ஆழ்ந்த இரங்கல்
  காலம் தங்களைத் தேற்றட்டும்

  பதிலளிநீக்கு
 10. மிகுந்த வருத்தத்தைத் தந்த செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 11. எங்கள் குடும்பத்தாருக்கும் பேரிழப்பே. முன்பு எங்கள் வீட்டருகில் குடியிருந்தபோது என்னுடனும், குடும்பத்தாருடனும் வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்களும் அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம். அவருடன் பேசும்போது ஏதோ ஒரு பெரிய துணை எங்களுக்கு இருப்பதுபோல் உணர்ந்துள்ளோம். இந்த இழப்பினைத் தாங்க இறைவன் உங்களுக்கு மனத் தைரியம் தரவேண்டும் என்சார்பாகவும், எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. இப்போது தான் சில நாட்கள் முன்னர் அமம உடல்நலம் பரவாயில்லை என்று சொல்லி இருந்தீர்கள். இது திடீரென ஏற்பட்டிருக்கிறது போலும். ஆனாலும் அதிகம் துன்பம் அடையாமல் தூக்கத்திலேயே போனதுக்கு இறைவனுக்கு நன்றி. எத்தனை இருந்தாலும் அம்மாவின் இடம் வெற்றிடம் தான்! யாராலும் நிரப்ப முடியாது. உங்கள் மனதைத் தேற்றிக் கொள்ளவும். மனோ தைரியத்துடன் துக்கமான நாட்களைக் கடக்க இறைவன் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 13. மனசுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அம்மாவின் உடல் நலம் சரியில்லாத போதே, ' ஃபோன் சத்தம் கேட்டாலே பயமாயிருக்கிறது' என்று சொன்னீர்கள். நடுவில் அம்மாவின் உடல் நலம் தேறிய போது சற்று நிம்மதியாக இருந்தது. நீங்களும் அந்த நிம்மதியை பகிர்ந்து கொண்டீர்கள். இப்போதோ..உறக்கத்திலேயே அமைதியில் ஆழ்ந்து விட்டார்கள். வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாபக்கேடு. சில சமயங்களில் மிக முக்கியமான இழப்புகளில்கூட உடனே சென்று அவர்களின் முகம் பார்க்க முடிவதில்லை. அதுவும் இப்போது பி.சி.ஆர் டெஸ்ட் வேறு செய்து அதன் ரிஸல்ட் வேறு வர வேண்டும்.
  தாய்மையின் இழப்பு என்றைக்குமே ஈடு செய்ய முடியாத இழப்பு தான். அந்த இழப்பை தைரியமாக தாங்கி மன அமைதியுடன் இந்த நாட்களை நீங்கள் கடந்து செல்ல பெரிதும் விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..