நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2019

செவ்வாய்ப் பிள்ளையார்

மண்ணெல்லாம் மணக்கும் மாதம் - ஆடி..

மனமெல்லாம் மணக்கும் மாதம் - ஆடி... 


நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கின்றது...

ஆடி மாதத்தை முழுக்க முழுக்க பெண்மைக்கே -
என்று நம் முன்னோர்கள் அர்ப்பணித்து விட்டனர்.

ஏன்?.. எதற்கு?.. என்று எந்த ஆணும் எதிர்த்துக்
கேள்வி கேட்க முடியாதபடிக்கு ஒரு விசேஷம்  -
இந்த ஆடி மாதத்தில் நிகழ்கின்றது...

மிகவும் வற்புறுத்திக் கேட்டாலோ - கிடைக்கும் ஒரே பதில் -

''..எல்லாம் உங்க நல்லதுக்குத்தாங்க!..''

இன்னும் சொல்வதானால்- அந்த விசேஷத்தில் கலந்து கொள்ள -
பெண்ணாகப் பிறந்தவர்க்கு மட்டுமே ஏகமனதாக அனுமதி!..

பெற்று வளர்த்து பேணிக் காத்த தந்தையோ,
கண்ணின் மணியாகக் கலந்து பிறந்த அண்ணனோ தம்பியோ,
அன்பின் வடிவான அருமைக் கணவனோ, 
மாமனோ மைத்துனனோ - யாராயிருந்தாலும் - அவ்வளவு ஏன்!...

ஆறு அல்லது ஏழு வயது ஆன -
ஆண் பிள்ளைகளுக்கே அங்கு அனுமதி கிடையாது. 

ஆறு வயது தொடங்கி - பற்றற்று, பற்களும் அற்று -
பழமாக விளங்கும் பாட்டன்களுக்குக் கூட
அந்த விசேஷத்தின் நிவேத்யங்கள் கிடைக்காது என்றால் -
அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை!.

''அதென்ன?.. அப்படிப்பட்ட விசேஷம்!..'' -  என்கின்றீர்களா!..

உங்களுக்கும் தெரிந்திருக்கும்!..

ஆடியில் முதல் அல்லது மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் -
பெண்கள் - பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு விருப்புடன் நிகழ்த்தும் -


செவ்வாய் பிள்ளையார் வழிபாடு!...

இது தென்மாவட்டங்களில் ஒளவையார் நோன்பு என்று வழங்கப்படுகின்றது. 

தஞ்சைப் பகுதியில் - செவ்வாய் பிள்ளையார் கும்பிடுவது என்றே சொல்கின்றனர்... 

அல்லது வேறு பெயர்கள் ஏதேனும் உண்டா? - என்பது தெரியவில்லை...

தமிழகம் முழுவதுமே செவ்வாய் பிள்ளையார் வழிபாடு  உண்டு என்கின்றனர். 

நன்றி - ஓவியர் இளையராஜா  
செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாகவே - பூஜையில் கலந்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ள பெண்கள் ஒன்றாகக் கூடிப் பேசி அல்லது ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு - யார் வீட்டில் வழிபாட்டினை நடத்தலாம் என்று நிச்சயித்துக்கொண்டு அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்கின்றனர். 

எத்தனை பேர் என்று - சமயத்தில் ஒரே குடும்பத்தில் இருந்து  தாயும் மகளுமாக கலந்து கொள்வதானால் அதற்கு ஏற்றபடி -
கணக்கிட்டுக் கொண்டு எல்லாம் நடைபெறுகின்றன.

அன்றைய தினம் விடியலில் எழுந்து குளித்து முழுகி -
சுத்தமான ஆடைகளை அணிந்து விரதம் ஏற்கின்றனர். 

செவ்வாய்க்கிழமை ராகு காலம் கழிந்த பின்னர் -
வேலையை ஆரம்பிக்கின்றனர்..
சுத்தம் செய்து ஊறவைத்த பச்சரிசியை -
உரலில் இட்டு இடித்து -   மாவாக்கிக் கொள்வார்கள். 

உரலில் மாவு இடிப்பது, அம்மியில் ஆட்டுரலில் அரைப்பது,
கிணற்றில் நீர் இறைப்பது, குனிந்து கோலம் போடுவது - இதெல்லாம், இடுப்புக்கும் தோள்களுக்கும் மார்புகளுக்கும் நல்ல பயிற்சிகள்.. 

இன்றைய நாட்களில் நோகாமல் நுங்கு எடுப்பது மாதிரி
தரையில் ஒட்டி வைக்கும் கோலங்கள் வந்து விட்டன.. என்றாலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக - மாக்கோலங்கள் இழைந்திருக்க
மற்றவை எல்லாம் நம்மால் கைவிடப்பட்டு விட்டன?....

சில சந்தர்ப்பங்களில் மாவு இடிப்பது முதற்கொண்டு -
எல்லாவற்றையும் முன்னிரவில்  - செய்வதும் உண்டு...

வழிபாடு தொடங்கும் முன் - முதற்கட்டமாக -
வழிபாடு நடத்தப்படும் வீட்டில் உள்ள ஆண்கள்
அன்புடன் அப்புறப்படுத்தப்படுகின்றனர்!.. 

பூஜை நடத்தப்படும் இடம்  சுத்தம் செய்யப்பட்டு - அழகாகின்றது!..


இந்த விசேஷத்தின் நடுநாயகம் -
சிவநாயகம் தந்தருளிய கணநாயகம்!...

அத்தனைப் பெண்களின் மத்தியில் அவர் ஒருவர் தான் - ஆண் பிள்ளை!..
அவர் ஆண் பிள்ளை என்றாலும் - நீலி திரிசூலி நீங்காத பொட்டுடைய
ஒரு பெண்ணின் பிள்ளை!... 

ஆம்!.. நித்ய கன்னி - நித்ய சுமங்கலியாகிய அம்பாள், தன் திருமேனியில் திகழ்ந்த மஞ்சளைத் திரட்டி -  உருவாக்கி உயிர் கொடுத்து உலகுக்கு அளித்த பிள்ளை!..

இருந்தாலும் - அந்தப் பிள்ளையும் - இறைவனின் கோபத்திற்கு ஆளானது. 

ஏனென்றால், தானொரு பங்காயிருந்தும் தன்னை மீறி - சக்தி மட்டுமே,
அந்தப் பிள்ளையை உருவாக்கியதால் -

இந்தப் பிள்ளை யார்?. எனப் - பெருமான் கேட்டு, பெரும் பிரச்னையாகி - பிள்ளையின் தலை தனியாகப் போனது!.. 

பின்  - அதுவே ஆனைத்தலை கொண்டு  அனைத்திற்கும் தலையானது!..

இப்படி தனி நாயகம் ஆன கணநாயகம் -
இந்த விசேஷத்தின் போது மஞ்சளில் பிடித்து வைக்கப்படுவதில்லை. 

ஈனாக் கன்று!. சூல்கொள்ளாத பசுங்கன்றின் -சாணத்தில் பிடிக்கப்படுவார்.

அரிசி மாவினால் அம்சமாகக் கோலமிட்டு, புங்கமரத்தின் இலைகளைப் பரப்பி அதில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து, பிள்ளையாருக்கு திலகமிட்டு, அருகம்புல் மற்றும் நறுமலர்களைச் சூட்டி  - குத்து விளக்கேற்றி வைப்பர்.

முற்றிய தேங்காயை உடைத்து,  அதன் தண்ணீரை அரிசி மாவில் ஊற்றி, அந்தத் தேங்காயை சிறு சிறு துண்டுகளாகக் கீறிப்போட்டு - உப்பில்லாமல் பிசைந்து கொழுக் கட்டைகளாகவும் அடைகளாகவும் ஆக்கிக் கொள்வர். 

முன்னிரவில் தொடங்கி - இதெல்லாம் செய்வதற்கே  நடு இரவாகி விடும்.

புது மண்சட்டியில் புது வைக்கோலை பரப்பி தண்ணீர் ஊற்றி, ஆவி வந்ததும் - 

''என்னது!... ஆவியா?... நடுச் சாமத்தில் ஆவியா?..''

''ஆவின்னா - அந்த ஆவி இல்லீங்க!.   -  தண்ணீர் கொதித்து வரும் ஆவி!..'' -

''அதானே!.. நல்லவேளை!..''

வைக்கோல் மீது  பிசைந்து வைத்த கொழுக்கட்டைகளையும்  அடைகளையும் வைத்து மூடி - நன்றாக வெந்ததும்  அவற்றை எடுத்து பிள்ளையாருக்கு முன் தலை வாழையிலையில் வைத்து மற்ற பழவகைகளுடன் தாம்பூலமும் சமர்ப்பித்து தீர்த்தம் கொடுத்து - 


தூப,  தீப , கற்பூர ஆராதனைகளுடன்  வணங்கி மகிழ்வார்கள்.

அதன் பின்னர் - வயதில் மூத்தவரான பெண்மணி - பிள்ளையார் நோன்பின் கதையைச் சொல்வாராம். 

அது என்ன கதை!?..

இதுவரை ஆண்கள் யாருக்குமே தெரியாத கதை!.

பிள்ளையார் நோன்பின் கதை ரகசியம்
இன்று வரையிலும் மாதர் குல மாணிக்கங்களால்
மரபு வழுவாமல் கட்டிக் காக்கப்படுகின்றது!.. இனியும் காக்கப்படும்!..

மங்கள ஆரத்தி செய்தவுடன் அவரவர்க்கும் உரிய நிவேதனங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்...
பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் சரடு அவரவர்க்கும் அணிவிக்கப்படும்... சந்தனம், மஞ்சள், குங்குமம் - மலர்ச் சரத்துடன் பிரசாதமாக வழங்கப்படும்.

அத்துடன் அங்கேயே நிவேத்ய பிரசாதங்கள் உண்டு தீர்க்கப்படும். 

முன்பு சொன்ன மாதிரி ஐந்து வயதிற்குட்பட்ட இளம் பாலகர்களுக்கு மட்டுமே அடையும் கொழுக்கட்டையும் வழங்கப்படும்.  

விடிவதற்குமுன் -
ஒருவேளை கொழுக்கட்டை அடை இவை மீதம் இருந்தால், 

பூஜையில் வைக்கப்பட்ட பிள்ளையார்,  நிர்மால்யப் பொருட்கள், 
புங்க இலை புது சட்டிகளுடன் -

அவையும் ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ கரைக்கப்படும்...

''..மீண்டும் நல்லபடியாக இந்த பூஜையைச் செய்யும் வரத்தினைத் தந்தருள வேண்டும். பிள்ளையாரப்பா!..'' - என்ற வேண்டுதலுடனும் - 

மலர்ச்சரங்களைத் தலையில் சூடி, மங்கலகரமாக, மலர்ந்த முகத்துடனும் - மஞ்சள் குங்குமத்துடனும்  - பெண்கள் தமது இல்லங்களுக்குத் திரும்பும் போது - 

கீழ்வானில் வெள்ளி முளைத்து -
புத்தம் புதிய நாள் ஒன்று - புதன் என்று தோன்றியிருக்கும்!..

விடியற்காலையில்  - வீட்டிற்குள் நுழைபவர்களிடம் ஏதாவது கேட்டால் - கிடைப்பது - மலரினும் மெல்லிய புன்னகை மட்டுமே!.. அதன் பொருள் - 

''..எல்லாம் உங்க நல்லதுக்குத்தாங்க!..''

அப்படியே ஆகட்டும்!.. 

இன்பங்கள் ஆவதும் பெண்ணால்!..
துன்பங்கள் அழிவதும் பெண்ணால்!..

நம்மைப் பெற்ற தாய் நமக்கு உவந்தளிக்காமல் - 
நன்மைகளை மனதில் கொண்டு தானே உண்ணுவதும்.. 

எதையும் பகிர்ந்து கொள்ளும் அன்பு மனைவி -
கணவனுடன் பகிர்ந்து கொள்ளாததுவும் எது என்றால் -
செவ்வாய் பிள்ளையார் விரதத்தின்  - நிவேத்யங்கள்!..


அடையையும் கொழுக்கட்டையையும் - தாம் உண்டு விட்டு, 
அருட்கொடையை மட்டும் நம்மிடம் வழங்கும் பெண்மை வாழ்க!..

பெண்மை
மகிழ்ந்திருக்கும் இடத்தில்
மலர்ந்திருக்கும் இடத்தில்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அருள்கின்றாள்!..

பெண்மை வாழ்க!..
பேர் கொண்டு வாழ்க!..
பெருஞ்சீர் கொண்டு வாழ்க..
ஃஃஃ

33 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    லேசாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த விழா பற்றி...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    தங்களுக்கு நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. கோலம் மட்டுமா? மாவையும் ரெடிமேடாக கடையில் வாங்கி கொள்ளலாம். அட, கொழுக்கட்டையையே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இந்தமுறை கொழுக்கட்டை மாவு தயார் நிலையில் கொடுப்பதாக யாரோ சொன்னார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      கொழுக்கட்டை மாவு என்ன?.. கொழுக்கட்டையையே தருகிறோம்.. காசைக் கொடுத்து விட்டு வாங்கிச் செல்லுங்கள்...

      அல்லது நாங்களே கும்பிட்டு விட்டுத் தருகிறோம்..
      அதற்கான செலவைக் கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் கூட வரலாம்..

      நம் மக்கள் எதற்கும் தயார்!...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நடுநாயகம் சிவநாயகம் கணநாயகம்... அப்புறமும் தனிநாயகம்..... ஆஹா...

    பதிலளிநீக்கு
  5. ஆவதும், அழிவதும் வார்த்தைகளுக்கு முன்னால் பொருத்தமான வார்த்தை கோர்ப்பு.

    அந்த ரகசியம் காக்கப்படட்டும். சில விஷயங்கள் தெரியாமல் இருப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ரகசியங்கள் காக்கப்படட்டும்...
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம்.

    இந்தப் பூஜை பற்றி கேள்விப்பட்டதில்லை. சில ரகசியங்கள் ரகஸ்யமாக இருப்பதே நல்லது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      ரகசியங்கள் ரகசியமாகவே இருக்கட்டும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பள்ளியில் தோழிகள் இந்த நோன்பு வழிபாட்டில் கலந்து கொண்டு காலை பள்ளிக்கு வருவார்கள். அவர்களிடம் துருவித் துருவிக் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். நோன்பு செய்கிறவர்கள் மட்டுமே அறியலாம் என்பார்கள். என்றாலும் இப்போது நீங்க சொல்லி இருக்கும் விஷயங்கள் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். தொடர்ந்து இந்த நோன்பைச் செய்து வரும் அனைத்துப் பெண்டிர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். குலம் வாழ, குடி வாழ, நாடும் வாழும். அனைவருக்காகவும் நோன்பிருக்கும் பெண்கள் சிறப்பாக வாழவும் பிரார்த்தனைகள். ரகசியம் என்றென்றும் காப்பாற்றப் படட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      குலம் வாழ, குடி வாழ, நாடு வாழ, நல்லோர் வாழ நாமும் வேண்டிக் கொள்வோம்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. கொழுகட்டை செய்வதில் வித்தியாசம் உண்டு. தஞ்சை பகுதியில் நீங்கள் சொல்வது போல்.

    மற்ற இடங்களில் தண்ணீரில் தான் கொழுக்கட்டை வேக வைக்கப்படும்.
    கதை சொல்லும் பாட்டிகள், வயதில் பெரியவர்களை பொறுத்து கதை நீட்டியும் சுருக்கமாகவும் சொல்லபடும்.

    கடைசியாக 2010 ம் வருடம் கோவையில் என் தோழி வீட்டில் கலந்து கொண்டது.

    விரதம் கடைபிடிக்கபடுவதற்கு பழ மொழிகள் எல்லாம் உண்டு. மறந்தால் மாசி, எனக்கு மறந்து விட்டது.

    நாகர்கோவில் பக்கம் ஒளவையார் அம்மன் கோவில் இருக்கிறது. அங்கு மட்டும் எல்லோரும் கலந்து கொள்வார்கள்(ஆண், பெண்) கொழுக்கட்டைகள் செய்து வைத்து கும்பிடுவார்கள். சிறு வயதில் போனது, கனவில் பார்த்தது போல் நினைவுகள் இருக்கிறது.

    ஓடை ஓடும், வரிசையாக அம்மி, உரல் , அடுப்பு எல்லாம் இருக்கும் மலை மேல் ஒளவையார் கோல் ஊன்றி வெள்ளை சேலையில் இருப்பார், மலையடிவாரத்தில் கோவில் இருக்கும். யாராவது பார்த்து இருந்தால் சொல்லுங்கள்.

    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      மேலதிகச் செய்திகளுக்கும் மகிழ்ச்சி..

      அன்பின் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. உங்களைப்போல் சில பதிவர்கள் இருப்பதால்தான் இம்மாதிரி வெளியில் தெரியாத கதைகள் பிரபலமாகிக்கொண்டு வருகின்றன. உலகமயமாதலினால் நமது பழமையான விஷயங்கள் பலவற்றை இழந்துகொண்டே வருகின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. எங்கள் பகுதியில் ஆண்களின் கண்ணில் கூட காண்பிக்க மாட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >> கண்ணில் கூட காண்பிக்க மாட்டார்கள்..<<<

      ஆகா...

      அப்படியானால் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்...

      எங்கள் பக்கம் முடியும்... ஆனால் முடியாது...

      பட்சணங்களைப் பார்க்க முடியும் .. பசியாற முடியாது..

      நீக்கு
  11. ரகசியங்கள் காக்கட்டும்
    எல்லாம் நன்மைக்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      எல்லாம் நன்மைக்கே!..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. கதையின் ரகசியம் காக்கப்படட்டும். வழிபட்ட செவ்வாய்ப்பிள்ளையார் கொழுக்கட்டைகளை எங்களுக்குத் தெரியாமல், ஆங்காங்கே மறைத்து வைத்துக்கொண்டு வீட்டிலுள்ள அக்கா, தங்கை, அத்தை, சித்தி உண்ணும்போது எங்களுக்கு கோபம் கோபமாக வரும். திருட்டுத்தனமாக அதை எடுக்கக்கூட முடியாது. அந்த அளவிற்கு ரகசியமாக வைத்து அவர்களுக்குள் பரிமாறிக்கொள்வர். இன்னும் அந்த நாள்கள் எனக்கு நினைவில் உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் வருகையும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. இது நம்ம பக்கத்துல ஔவையார் நோன்பு நீங்க சொல்லியிருப்பது போல...

    கதை ரகசியம் என்பதால்தான் இங்க சொல்லவில்லையோ அண்ணா... அதெப்படி பெண்கள் ரகசியம் காக்கறாங்க??!!! ஹிஹிஹிஹி...நோ சான்ஸ்! கதை பத்தி யாராவது பெண் எழுதியிருப்பாங்க அனு அல்லது ராஜி அல்லது கீதாக்கா அல்லது கோமதிக்கா ...எழுதலையோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...

      >>>> அதெப்படி ரகசியம் காக்கறாங்க... நோ சான்ஸ்..<<<

      ஆனானப்பட்ட கீதாக்கா/கோமதியக்கா இவங்களுக்கு தெரிந்திருந்தாலும் ஜொல்ல மாட்டாங்க!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. ஆவதும் நு தொடங்கி பெண்ணைப் பற்றிய மொழியை நீங்கள் மிக மிக நேர்மறையாக எழுதியது ரொம்ப ரசித்தேன் அண்ணா அது போல...

    எல்லா நாயகமும் செம...மிகவும் ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. இப்படி ஒரு பூஜை உண்டு என்று தெரியும், ஆனால் விவரங்கள் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி.
    இதைப்போல கேரளாவில் கண்ணகிக்கு வைக்கப்படும் 'பொங்கலே' என்னும் திருவிழாவில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      மேலதிக செய்திகளுடன் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  16. ஓவியர் இளையராஜா வரைந்திருக்கும் புகைப்படம் போன்ற ஓவியம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியர் இளையராஜா அவர்களுடைய படங்கள் அழகும் நளினமும் நிறைந்தவை..

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. பல பல புதிய தகவல்கள் ...

    பதிலளிநீக்கு
  18. ரகசியம் காக்கபடும் பூஜை பெண்களால் ரகசியமாக irkkattum

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..