நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 09, 2013

ஸ்ரீ சார்ங்கபாணி

திருக்குடந்தை.

ஆன்மீகத் தென்றல் வீசும் ஆனந்தப் பூந்தோட்டம்.

காணாபத்யம், கெளமாரம் , செளரம், சாக்தம் , வைணவம், சைவம் - என அறுவகையிலும் சிறந்த தலங்கள் சூழ்ந்து விளங்க -

மூர்த்தி, தலம், தீர்த்தம்  - என மூன்றினாலும் பெரும் கீர்த்தியுடைய  அழகான திருத்தலம்.


தேவாரத் திருமுறைகளில் - திருக்குடமூக்கு (ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக் கோயில்), குடந்தைக் கீழ்க்கோட்டம் (ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில்), குடந்தைக் காரோணம் (ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில்) என பரவப்படும் - திருக்குடந்தை -

வைணவத்தில் வெகுவாகக் கொண்டாடப்படும் அருள் தரும் ஆராஅமுதன் எனும் ஸ்ரீ சார்ங்கபாணி பெருமான் விளங்கும் திவ்யதேசம் ஆகும்.

மகாலக்ஷ்மி - ஹேமரிஷிக்கு மகள் என - கமல புஷ்கரணியில் தோன்றிய திருத்தலம். 

அந்தத் திருக்குளம் தான் இன்று பொற்றாமரைக் குளம் எனப்படுவது. 


தஞ்சையில் இருந்து குடந்தைக்குச் செல்லும் போது, 

குடந்தை நகரினுள், ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயிலை அடுத்து - சாலையின் வடபுறமாக விளங்கும் திருக்குளம் . 


இந்தத் திருக்குளத்தின் கிழக்குப் புறமாக பெருமானின் திருக்கோயில். 

ஸ்ரீசார்ங்கபாணி  கிழக்கு நோக்கி சயனத்திருக்கோலத்தில் அருள் புரிகின்றார். 

மூலவர் - ஸ்ரீசார்ங்கபாணி
உற்சவர் - ஸ்ரீசார்ங்கராஜன், ஆராஅமுதன்
தாயார் - ஸ்ரீகோமளவல்லி
தீர்த்தம் - பொற்றாமரைத் தீர்த்தம், காவிரி 
ஸ்ரீ விமானம் - வைதிகம்

பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் - என ஏழு புண்ணியர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமையை உடையது.
 
பல திவ்யஷேத்திரங்களையும் தரிசனம் செய்தபடி - திருக்குடந்தைக்கு வந்த திருமழிசை ஆழ்வார் -

பெருமானை சேவிக்குங்கால் அவருக்காக சயனத் திருக்கோலத்தில் இருந்து எழ முயன்றான் பரமன்.

அது கண்டு  உளம் நெகிழ்ந்த திருமழிசை ஆழ்வார் -

''பெருமானே!..பஞ்சவர்க்குத் தூதாக நடந்த கால்கள் வலிக்கின்றது என்று தானே படுத்திருக்கின்றாய்!.. தேவரீர்.. எழவேண்டாம். அப்படியே சயனத்தில் இருந்தவாறே அருள்க!..'' - என்று திருப்பாசுரம் பாடியருளினார்.

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்கு ஞாலமேனமாய் 
இடந்தமெய்கு லுங்கவோ விலங்குமால் வரைச்சுரம் 
கடந்தகால் பரந்தகாவிரிக் கரைக் குடந்தையுள் 
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசு வாழி கேசனே!..

இப்படி ஆழ்வாருக்காக எழ முயன்ற திருக்கோலம் உத்தான சயனம் எனப்படுகின்றது.


ஹேமரிஷியின் திருமகளாக வளர்ந்து வரும் - பிராட்டியைத் திருமணம் கொள்ளவதற்காக பெருமான் - தேரில் வந்ததாக ஐதீகம். அதன்படி ஸ்வாமியின் சந்நிதி தேர் போன்ற அமைப்பில் விளங்குகின்றது. 

இதனாலேயே திருக்கோயிலின் தேரும் வெகு பிரசித்தம். பிரம்மாண்டமான தேர் சித்திரத்தேர் எனப்படுகின்றது.

சந்நிதியின் வடக்கிலும் தெற்கிலும் - உத்ராயண திருவாசல், தட்சிணாயண திருவாசல் என இரண்டு திருவாசல்கள் உள்ளன. 

தை முதல் ஆனி வரை  உத்ராயண திருவாசலும் , ஆடி முதல் மார்கழி வரை  தட்சிணாயண திருவாசலும் திறந்திருக்கும். அவ்வழியே  சென்று பக்தர்கள் பெருமானைத் தரிசிக்க முடியும். 


கருவறையின் முன்புறம் அர்த்தமண்டபம். அழகிய வேலைப்பாடுகளுடன் இராமாயண சம்பவங்களைக் குறித்த சிற்பங்களுடன் விளங்கும் திருமாமணி மண்டபம். 

அருகில் ஸ்ரீராமன் சந்நிதி. சீதாதேவி லக்ஷ்மணன் அனுமன் அருகிருக்க - கணை ஒன்றினை ஏந்தியவாறு ஸ்ரீராமன் அருள் பாலிக்கின்றான்.

திருக்கோயிலில் பிராட்டியார் பத்மாசனத்தில் கோமளவல்லி எனும் திருப்பெயருடன் விளங்குகின்றனள்.

வேணுகோபாலன் சந்நிதியும் நவநீத கிருஷ்ணன் சந்நிதியும் ஆண்டாள் சந்நிதியும் விளங்குகின்றன. பெருமான் தேவியருடன் தரிசனம் அருளும் இடம் மேட்டு ஸ்ரீநிவாசன் சந்நிதி எனப்படுகின்றது. இது தவிர பாதாள ஸ்ரீநிவாசன் சந்நிதியும் உள்ளது. 

இத்தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. ஏனெனில், ஆழ்வாருக்கு இரங்கிய ஆராஅமுதனின் திருச்சந்நிதியே சொர்க்கம்!.. 

இத்திருக்கோயிலில் மூலவருக்கு உரிய மரியாதைகள் அனைத்தும் உற்சவ முர்த்திக்குச் செய்யப்படுவதால் - உபய ப்ரதான மூர்த்தி எனவும் க்ஷேத்திரம் உபய ப்ரதான க்ஷேத்திரம் எனவும் வழங்கப்படுகின்றது. 


பெருமான்,  சுதர்சனம்  (சக்கரம்), பாஞ்சஜன்யம் (சங்கு),  சார்ங்கம் (வில்), நந்தகி (வாள்), கெளமோதகி (கதை) -  ஆகிய பஞ்சாயுதங்களுடன் திவ்ய தரிசனம் அருள்கின்றார். 

சார்ங்கம் எனும் வில்லினைத் தாங்கியிருப்பதாலேயே - சார்ங்கபாணி!..


இத்திருத்தலத்தில் தாயாருக்கே முதல் மரியாதை. அதிகாலையில் கோமாதா பூஜை கோமளவல்லி சந்நிதியில் தான். 

மகாமகத் தீர்த்தமாட வரும் - கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சிந்து, சரயு - எனும் நதிகளும் தேவர்களும் பெருமானைப் பணிந்து வணங்கி நிற்பதாக ஐதீகம்.

குடந்தை ஸ்ரீநாகேஸ்வரன் திருக்கோயிலின் ராஜகோபுரத்தை - பாடகச்சேரி மகான் ராமலிங்க சுவாமிகள் எழுப்பியதைப் போல, 

ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயிலின் ராஜகோபுரத்தையும் லக்ஷ்மி நாராயணன் எனும் அடியவரே - தன் முயற்சியால் எழுப்பினார். அவருடைய அந்திமக் காலத்தில் அவருக்கு மகனாக ஸ்ரீசார்ங்கபாணியே இருந்து ஈமக்கிரியைகளை நிகழ்த்தியதாக வரலாறு. 

அதன்படியே, இப்போதும் தீபாவளி அன்று மதியம் - ஸ்வாமி - தன் பக்தனுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கின்றது.  

இற்பிறப்பறியீர் இவரவரென்னீர் இன்னதோர்த் தன்மைஎன்று உணரீர்
கற்பகம் புலவர்களைகணென்றுலகில் கண்டவாதொண்டரைப்பாடும்
சொற்பொருளாளீர் சொல்லுகேன் வம்மின்சூழ் புனற்குடந்தையே தொழுமின்
நற்பொருள்காண்மின் பாடிநீரும் உய்ம்மின் நாராயணா எனும் நாமம்!..

என்று திருமங்கை  ஆழ்வார் நம்மை திருக்குடந்தைக்கு ஆட்படுத்துகின்றார்.


நிறைந்த சிற்பச் செல்வங்களுடன் அற்புதமாகத் திகழும் திருக்கோயில். இன்றும் சீரும் சிறப்புமாக - கோலாகலத்துடன்  திருவிழாக்கள் நிகழ்கின்றன. தேர்த் திருவிழாவும் மாசி மகத்தில் தெப்பத் திருவிழாவும் பிரசித்தமானவை. 

சங்குதங்கு முன்கைநங்கை கொங்கை தங்கலுற்றவன் 
அங்கமங்க அன்றுசென்ற டர்த்தெறிந்த ஆழியான் 
கொங்குதங்கு வார்குழல் மடந்தைமார்குடைந்தநீர் 
பொங்குதண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே!..

என்று திருமழிசை ஆழ்வார் பாடிப் பணிந்த பரமனை ,

புண்ணிய புரட்டாசியின் நன்நாளாகிய புதனன்று நாமும் பணிவோம்.

பொங்குதண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே!..
சார்ங்கா.. சார்ங்கா!.. சரணம் .. சரணம்!..

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  2. அற்புதமான படங்களுடன் அருமையான பதிவு!

    வரலாறுகளை அத்தனை சுவாரஸ்யமாக எழுதியிருப்பது நாமும் அங்கு வந்து இவற்றைக் காண மாட்டோமா என ஆவலத்தருகிறது.

    தொடருங்கள்! வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  3. அன்பின் சகோதரி!.. இறையருள் எல்லாருக்கும் கிட்டுவதாக.. தங்களின் ஆவல் விரைவில் நிறைவேற வேண்டுகின்றேன்!..

    பதிலளிநீக்கு

  4. நிறைந்த சிற்பச் செல்வங்களுடன் அற்புதமாகத் திகழும் திருக்கோயில். இன்றும் சீரும் சிறப்புமாக - கோலாகலத்துடன் திருவிழாக்கள் நிகழ்கின்றன. தேர்த் திருவிழாவும் மாசி மகத்தில் தெப்பத் திருவிழாவும் பிரசித்தமானவை.

    அருமையான நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வரவு கண்டு மகிழ்ந்தேன்.. மிக்க நன்றி!...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..