நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

காவிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 07, 2022

மூவர் பாடிய காவிரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 21
 திங்கட்கிழமை

துலாமாதத்தின்
நிறைநிலா நாள்
அன்னாபிஷேக நன்னாள்.

கௌரி மாயூரம் எனப்படும் திரு  மயிலாடுதுறையில் காவிரித் திருமுழுக்கு திருவிழா தொடங்கி இருக்கின்றது..

இவ்வேளையில்
இறைவனுடன் சேர்த்து காவிரியையும் புகழ்ந்து தேவார மூவர் பாடியருளியுள்ள பன்னிரண்டு திருத்தலங்களின் திருப்பாடல்களை மட்டும் இன்றைய பதிவில் காண்போம்..

அன்னத்திற்கும் மற்ற அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் காவிரியைப் போற்றி வணங்குவோம்..


திருநெய்த்தானம்
ஸ்ரீநெய்யாடியப்பர்
ஸ்ரீபாலாம்பிகை

பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புனல் அரவும்படு சடை எம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானம் எனீரே.. 1/15/2

திருவடகுரங்காடுதுறை
ஸ்ரீ குலைவணங்கும் நாதர்
ஸ்ரீ ஜடாமகுடநாயகி

முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள் தம்மேல்
சித்தமா அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே..3

திருஇடைமருதூர்
ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி
ஸ்ரீ பிரகத்சுந்தர குஜாம்பிகை

அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
கந்தம் கமழ்கா விரிக்கோலக் கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவேத முதல்வன்
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ..1/32/4

திருமயிலாடுதுறை
ஸ்ரீ மயூரநாதர்
ஸ்ரீ அஞ்சொல்நாயகி

பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறு நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமை எனலாம்
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே.. 3/70/5

திருசாய்க்காடு
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்
ஸ்ரீ குயிலினும் இன்மொழியாள்

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே.. 2/38/1
-: திருஞானசம்பந்தர் :-
*
ஸ்ரீ காவிரி
திருஐயாறு
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி

களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரி வாய்க்
குளித்துத் தொழுதுமுன் னின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்
திளைத்து சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே..4/92/7

காவிரியில் மனம் ஒன்றிக் குளித்துக் கரையேறினாலே நம்மைப் பிறவிக் கடலில் இருந்து கரையேற்றுவார் ஐயாறப்பர் என்று அருள்கின்றார் அப்பர் ஸ்வாமிகள்.
*
திருப்பழனம்
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்
ஸ்ரீபெரியநாயகி

கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் 
காவிரிப் பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மொழி கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.. 4/12/8

 திருச்சோற்றுத்துறை
ஸ்ரீ ஓதவனேஸ்வரர்
ஸ்ரீ அன்னபூரணி

தன்னவனாய் உலகெல்லாந் தானே யாகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனா ய் என்னிதயம் மேவி னானே
ஈசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே..6/44/8


திருக்கொட்டையூர்
ஸ்ரீ கோடீஸ்வரர்
ஸ்ரீபந்தாடுநாயகி

செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய்தயிர்தே னாடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே..6/73/3

நவ நதிக் கன்னியர
 குடந்தைக் கீழ்க்கோட்டம்
(ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்)
ஸ்ரீ நாகேஸ்வரர்
ஸ்ரீபெரியநாயகி

ஏவியிடர்க்கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி ஆங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத் தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரி நல் யமுனை கங்கை
சரசுவதி பொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.. 6/75/10
-: அப்பர் பெருமான் :-

காவிரியுடன் யமுனை , கங்கை, சரசுவதி, பொற்றாமரை, பிற தாமரைத் தடாகங்கள், தெளிநீர்க் கிருஷ்ணை , குமரி ஆகிய தீர்த்தங்கள் தாவியோடி வந்து சூழ்ந்திருக்கும் குடந்தைக் கீழ்க் கோட்டம் என்று அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிட்டருளுகின்றார்..

பதிவிலுள்ள
நவ நதிக் கன்னியர் சந்நிதி 
கும்பகோணம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் 
கோயிலில் உள்ளது..
*
திரு கொடுமுடி
ஸ்ரீ கொடுமுடிநாதர்
ஸ்ரீ வடிவுடைநாயகி

எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவிரி அதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நம சிவாயவே.. 7/48/4

திருப்புறம்பயம்
ஸ்ரீ சாட்சிநாதர்
ஸ்ரீ கரும்பன்ன சொல் உமையாள்

மலமெலாம் அறும் இம்மை யேமறு
மைக்கும் வல்வினை சார்கிலா
சலமெலாம் ஒழி நெஞ்ச மேஎங்கள்
சங்க ரன்வந்து தங்குமூர்
கலமெலாம் கடல் மண்டு காவிரி
நங்கை யாடிய கங்கைநீர்
புலமெலாம் மண்டிப் பொன்வி ளைக்கும்
புறம்ப யந்தொழப் போதுமே.. 7/35/8
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் :-

கப்பல்கள் நிறைந்த கடலில் கலக்கின்ற காவிரியுடன் கலந்து ஆடுகின்ற கங்கையின் நீர் வயலெல்லாம் பாய்ந்து செழிக்கின்றது என்கின்றார் ஸ்வாமிகள்..
**
கங்கா தேவி போற்றி போற்றி..
காவிரித் தாயே போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, நவம்பர் 10, 2019

மண் கொண்ட மாட்சி

அத்தனை பெருமையும் மயிலாடுதுறைக்கே!..

அன்னை தவம் செய்து ஐயனை அணைந்த திருத்தலங்கள் பற்பல!..

அவற்றுள்ளும் சிறப்பானவை - அம்பிகை மயிலாக உருக்கொண்டு வழிபட்ட திருமயிலையும், திருமயிலாடுதுறையும்!..

அதிலும் திருமயிலாடுதுறையில் தான் -
ஐயன் தானும் மயில் வடிவாகி அம்பிகையுடன் நடமாடிக் களித்தனன்.

ஐயன் - அம்பிகையுடன் மயூர தாண்டவம் நிகழ்த்தியதனாலேயே - 
திருத்தலம் மயிலாடுதுறை என்றாகியது.

மேலும் சிறப்புறும் வண்ணம் - கங்கை தன் மனதில் கொண்ட மாசுகள் நீங்கப் பெற்ற திருத்தலம்.

துலா மாதம் எனும் ஐப்பசி மாதம்..

இம்மாதம் முழுதும் பின்னையும் கார்த்திகை முதல் நாள் வரைக்கும், கங்கை - தான் புனிதம் ஆவதற்காகத் தென்னகத்தின் பொற்பாவை காவிரியுடன் கலந்திருக்கின்றதாக ஐதீகம்....

அந்த - வைபவம் தான் என்ன!..


திருக்கயிலாய மாமலை!.. 

முப்பத்துமுக்கோடி தேவர்களும் மகரிஷிகளும்
வித்யாதரர்களும் யட்சர்களும் மற்றும் சகல ஜீவராசிகளும் கூடி நின்று - ஐயனையும் அம்பிகையையும் போற்றி வணங்கி அவர்தம் பெருமைகளைப்  புகழ்ந்து பாடிக் கொண்டிருந்த புண்ணிய வேளை!..

சிவபெருமானின் ஜடாபாரத்தினுள் சிக்கிக் கிடக்கும் கங்கைக்கு மகிழ்ச்சி!..

தன்னை முன்னிட்டல்லவோ - ஈசனுக்கு கங்காதரன் எனும் திருப்பெயர்!..
பூவுலக மக்களின் பாவச்சுமைகளை நான் நீக்காவிடில் - யாரால் அதனைச் சுமக்க இயலும்!?..

என் பெருமையை அறிந்த அதனால் தானே
பெருமானும் என்னைத் தன் தலையின் மீது தாங்குகின்றார்!..

இப்படியான - 
கங்கையின் எண்ணத்தை உணர்ந்த அம்பிகை அதிர்ந்தாள்..

எம்பெருமான் புன்னகைத்தார்..

அந்த அளவில் கங்கையின் மங்கலங்கள் மாசடைந்தன. 
பொன் மஞ்சள் எனத் திகழ்ந்த திருமேனி - ஒளி குன்றியது. 
கங்கையின் தேஜஸ் அவளை விட்டு அகன்றது...

கூடியிருந்த பெருங்கூட்டம் திகைத்து நிற்கையில் - 

அங்கே - அவலமான வடிவத்துடன் கங்கை தோன்றினாள்..

கங்கையின் கண்களில் பிரவாகமாக கண்ணீர்...

ஐயனே!. என்னைக் காத்தருளுங்கள்!.. என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்!..

சற்று முன் - ஐயனின் சிரசில் இருப்பதாக அகந்தை கொண்டு ஆர்ப்பரித்தவள் - சில விநாடிப் பொழுதில் அநாதரவாக ஐயனின் திருவடிகளில் கிடந்தாள்..

அம்பிகை ஆதரவு கொண்டு கங்கையைத் தேற்றினாள்...

ஸ்ரீ அபயாம்பிகை
தேவி.. என்னை மன்னித்தருளுங்கள்..
தமது கருணையின்றி இந்தப் பூவுலகில் நிலைத்த செல்வம் என்பதேது.. அகந்தையின் வசப்பட்டு அவலம் எய்தினேன்.. அதனால் ஐயனின் ஜடாமகுடத்திலிருந்து வீழ்ந்தேன்.. பிராயச்சித்தம் அருள்க.. தேவி!.. 

- என கண்ணீர் உகுத்தாள்...

அகத்திய மகரிஷி ஆறுதலாகப் பேசினார்...

கங்கா தேவி!.. பரந்தாமனால் புகழப் பெற்றவள் நீ..  மக்களுக்கு சேவை செய்பவர்களுள் முதன்மையானவள் நீ.. மக்கள் பணி செய்வோர்க்கு ஆணவமும் இறுமாப்பும் கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பாடம்!.. உன் பிழையினை நீ உணர்ந்தாய். இதுவே உனக்குப் பொன்னான வேளை. கலங்க வேண்டாம்!.. 

எல்லாம் வல்ல சிவம் இனிதே புன்னகைத்தது...

காவிரியை அறிவாயா நீ!.. அகத்தியனின் உருவங்கண்டு எள்ளி நகையாடிய பிழையால் -  அவள் காலகாலத்துக்கும் கமண்டலத்துக்குள் சிறைபட்டுக் கிடந்தாள். கணேசன் காகத்தின் வடிவங்கொண்டு அவளை மீட்க வேண்டியதாயிற்று. அந்தக் காவிரி உனக்கு நலம் அளிப்பாள்..

அது எவ்விதம் என்பதை தேவரீர் விளக்கம் செய்தருள வேண்டும்!..

அனைவரும் பணிவுடன் விண்ணப்பம் செய்து கொண்டனர்...

ஈசன் எம்பெருமான் அதிகார நந்திதேவனை திருநோக்கம் செய்தருளினார்.

நந்தியம்பெருமான் விளக்கம் தரலானார்...

ஒரு சமயம் - ஐயன் வேதத்திற்குப் பொருள் கூறியபோது சற்றே கவனக் குறைவிற்கு ஆளான அம்பிகை சிவபெருமானைப் பிரிந்து மயிலாக மாறி காவிரியின் தென் கரையில் சிவபூஜை புரிந்தார்...


காலம் கனிந்த வேளையில் ஐயனும் மயில் வடிவங்கொண்டு அம்பிகையுடன் மயூர தாண்டவம் நிகழ்த்தி அருளினார். அதனாலேயே மயிலாடுதுறை என - திருப்பெயர் கொண்டது திருத்தலம்...

ஐயனும் அம்பிகையும் திருநடனம் நிகழ்த்திய அவ்வேளையில் - காவிரியாள் செய்து கொண்ட பிரார்த்தனை ஒன்றுண்டு!..

நந்தியம்பெருமான் சற்றே நிறுத்தினார்...

அதற்கு மேல் ஐயன் அருளுரைத்தார்...

காலக் கணக்கில் ஏழாவது - துலா மாதம். அனைத்தும் சமன் செய்யப்படும் மாதம். துலா மாதம் நெருங்கும் இவ்வேளையில் தென் திசைக் காவிரியுடன் கலந்திருப்பாயாக!.. அங்கே நீ நலம் பெறுவாய்!..

அவ்வண்ணமே - ஈசனின் திருவாக்கினைத் தலைமேற்கொண்டு, கங்கை தென் திசைக்கு விரைந்தாள்....


அந்த விடியற்காலைப் பொழுதில் தன்னை நோக்கி  வந்த கங்கையைக் கண்டு பரவசமானாள் - காவிரி!.. 

வருக.. வருக.. சகோதரி!.. - என வாஞ்சையுடன் வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டாள். 

ஒருவர் முகம் மற்றவர் கண்ணீரால் நனைந்தது.

கங்கையின் மனம் அன்னத்தின் தூவி (மெல்லிறகு) போலானது..

தங்காய்!.. திசை தொழும் திருமகள் நீ!..
உன்னால் நான் நலம் பெற்றேன்!.. வாழிய நீ!.. - என்றாள் கங்கை.

சகோதரி!.. தேடி வந்த திருமகள் நீ!..
உன்னால் நான் புகழ் பெற்றேன்!.. வாழிய நீ!.. - என்றாள் காவிரி.

நீரொடு நீர் கலக்க -
நிர்மலமான அன்பு எங்கும் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.

இனிமேல் என்னை விட்டு தாங்கள் பிரியக்கூடாது!.. - என்றாள் காவிரி.

அன்புத் தங்கையே!.. வற்றாத நதியாகிய நான், வாழும் கலையினை உன்னிடம் பயில வந்துள்ளேன்.. ஐயன் சிவபெருமான் எனக்கு விதித்தபடி துலா மாதம் முழுதும் உன்னுடன் இருப்பேன். உன்னுடைய பிரவாகத்தில் கலந்து நானும் பெரும் பேறடைவேன்!.. - என மகிழ்ந்தாள் கங்கை.

நான் என்ன அறிவேன் சகோதரி!.. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்று பெரியோர் என்னைப் பாராட்டினர். ஆயினும், சிறுமதியோர் சிறையில் நானும் சிக்கிக் கொள்கின்றேன். மணற்கொள்ளையினால் என் வழி படுகுழியாகின்றது. அதனால் வயல் வெளிகள் பாழாகின்றன. நீரலைக் கரங்களை நீட்டி விளையாடிய நாட்கள் எல்லாம் தொலைந்து போயின. 

நான் கட்டிக் காத்த களஞ்சியங்கள் கண் முன்னே கட்டிடங்களாகி விட்டன. செல்லும் வ்ழியெல்லாம் எனக்கு நிழல் கொடுத்த விருட்சங்களும் வீழ்த்தப் பட்டன.. வெறிச்சோடிக் கிடக்கின்றன நெடுங்கரைகள்.. எனினும் மட மதியினராகிய மக்கள் மீது கோபம் கொள்வதில்லை. அவர்கள் திருந்தும் காலம் விரைவில் வரும். 


ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளிலும் ஊற்றுப் பெருக்கால் ஊர் காத்து வந்தேன். கெடுமதியோர் ஊற்று நீரையும் உருக்குலைத்து விட்டனர். ஊர் கொண்ட ஈசன் தான் இதற்கொரு வழி கூற வேண்டும்!..


- காவிரி தன் குறைகளைக் கங்கையிடம் கூறினாள்..

என்ன செய்வது தங்காய்!..
பேர் கொண்ட பேரழகு பெண்ணாக இருந்தாலும் சரி..
பெண் கொண்ட பேர் கொண்டு நதியாக இருந்தாலும் சரி..
நிம்மதி என்பது ஏது இவ்வையகத்தில்?... 

என்குறையும் இவ்விதமே!..
பவித்ரமான என்னைப் பாழ்படுத்தியே பரவசம் அடைகின்றனர்...
பாவிகளின் செய்கையால் நானும் உன்னைப் போலவே பரிதவித்து நிற்கின்றேன்.. பரமன் ஒருவனே நமக்குப் பாதுகாப்பு!..

கங்கையும் காவிரியும் கூடிக்களித்து
ஒருவர் அன்பினில் ஒருவர் மகிழ்ந்தனர்..

கங்கையின் பழி தீரும் நாளும் வந்தது...

கோபுர தரிசனம்
அந்த இளங்காலைப் பொழுதினில் முப்பத்து முக்கோடித் தேவரும் கூடி இருந்த வேளையில் - ஐயனும் அம்பிகையும் ப்ரத்யட்சமாகினர்!..

அதுவும் - மயில் வடிவங்கொண்டு ஆனந்த நடனம் புரிந்தனர்...

அதற்காகக் காத்துக் கிடந்த காவிரி
ஆனந்தக் கண்ணீருடன் கைகூப்பி நின்றாள்...

கங்கையின் கண்களிலும் ஆனந்த வெள்ளம் கரை புரண்டது...

கன்னியர் இருவருக்கும் மஞ்சளும் தந்தாள்..
மலர்களும் தந்தாள் - மங்கல மங்கையாகிய அபயாம்பிகை!..

அம்மையப்பனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர் அனைவரும்...

துலா தீர்த்தவாரி
காவிரியும் அவளுடன் கலந்து நிற்கும் கங்கையும் -
துலா மாதம் எனும் புண்ணிய ஐப்பசியின் அனைத்து நாட்களிலும்
இந்தத் தீர்த்தத் துறையில் நீராடும் மக்களின் பாவங்களைத் தீர்த்து -
நல்லோர் தம் வாழ்வுக்குத் துணையிருப்பீர்களாக!.. 

- என்று வரமளித்த மயூரநாதர் -

கங்கையை நோக்கி - திருக்கயிலைக்கு ஏகும்படி பணித்தார்.

காவிரியைப் பிரிய மனம் இல்லாத கங்கை கலங்கினாள்..

ஸ்வாமி.. பொன்னியையும் அவளால் வளமுற்ற
இந்த மண்ணையும் பிரிவதற்கு மனம் இல்லை...
ஆயினும் தங்கள் ஆணையை சிரமேற்கொள்ளும் வேளையில்
ஆண்டு தோறும் துலா மாதத்தில் - காவிரியுடன் கூடிக் களிக்கும்படியான வரத்தினைத் தாங்கள் நல்க வேண்டும்!.. 

வரங்கேட்டு நின்றாள் - கங்கை.

அஞ்சொலாள் அம்பிகையும் மயூரநாதரும் புன்னகைத்தனர்.

கங்கை கேட்ட வண்ணமே வரம் அருளினர்.

கலங்கிய கண்களுடன் காவிரியிடம் விடை பெற்றுக் கொண்டாள் கங்கை.

கண்களைத் துடைத்துக் கொண்டு - தானும் தன் பயணத்தைத் தொடர்ந்தாள் கங்கையினும் புனிதமாய காவிரி!..

அம்மையும் அப்பனும் அன்று அருளியபடியே - ஆண்டு தோறும் துலா மாதமாகிய ஐப்பசியில் -

கங்கை தென்னகத்திற்கு ஓடி வந்து காவிரியுடன் கலந்து இன்புறுகின்றனள்.

இந்த வைபவம் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய வரபிரசாதம்!..

ஆயினும்,

கண் கண்ட காட்சியாக காவிரியும் கங்கையும் கலந்திட வேண்டும்!..
மண் கொண்ட மாட்சியாய் மங்கலம் எங்கும் நிறைந்திட வேண்டும்!..


ஐந்தாண்டுகளுக்கு முன்னர் எழுதிய பதிவு இது..
புதிதொன்றை எழுதுதற்கு ஏதுவான சூழல் இல்லை - இவ்விடத்தில்..

கங்கையும் காவிரியும் மன்னித்தருள்வார்களாக!...

வாழிய காவிரி!.. வாழிய கங்கை!.. 

வளர் நலம் சிறக்க பாரதம் செழிக்க
வாழிய காவிரி!.. வாழிய கங்கை!.. 
* * *

சனி, ஆகஸ்ட் 03, 2019

காவிரியே நிதி..

இன்று ஆடி பதினெட்டாம் நாள்...
ஆடிப் பெருக்கு விழா!.. 

அனைவருக்கும் ஆடி பெருக்கு நல்வாழ்த்துகள்..!

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள்  ஆடிப்பெருக்கு விழாவாக காலகாலமாக முழு உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது... 

காவிரியில் பொங்கிப் பெருகி வரும் புதுவெள்ளம் புத்துணர்வு  தரும்... 

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை காவிரியாள் செழிக்க வைக்கின்றாள்.. சனாதன தர்மத்தைக் கடைப்பிடித்து மதித்து நடக்கும் ஒவ்வொரு இல்லத்திற்கும் அவள் செல்லப் பெண்ணாகின்றாள்... 

தஞ்சையின் மக்கள் -
தங்கள் வீட்டுப் பெண்ணாக மதித்து வழிபடுகிறார்கள்... 

காவிரிக்கு மங்கலம் கூட்டும் விழாவாக
ஆடிப்பெருக்கு திகழ்கின்றது...  


காவிரி பொங்கிப் பெருகிப் பாய்வதற்குக் காரணம்
முழுமுதற்பொருளான விநாயகப் பெருமான்...

அகத்திய மகரிஷியின் கமண்டலத்துள் சிறைப்பட்டுக் கிடந்த காவிரியை
கணபதி - காக்கை வடிவில் வந்து விடுவித்ததாக புராணம்...

எனவே - காவிரி பூஜையில் அவருக்கு இஷ்டமான காப்பரிசியும் விளாங்கனியும் நாவற்பழமும் கண்டிப்பாக இருக்கும்.

காவிரி பாயும்  -  திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மாவட்டங்களில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

ஐந்து ஆறுகள் பாயும் காவிரிச் சமவெளியில்
திருவையாறு காவிரியின் புஷ்ய மண்டப படித்துறை
மயிலாடுதுறையில் துலா கட்டம் மற்றும்
திருஅரங்கத்தில் அம்மா மண்டபப் படித்துறை ஆகியன
ஆடி பெருக்கு வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றவை...

இருந்தாலும் காவிரியின் வழி நெடுக
எல்லா இடங்களும் சிறப்பு பெற்றவையே!...

ஆனாலும் இந்த வருடமும் எதிர்பார்த்த வகையில்
தண்ணீர் திறந்து விடப்படவில்லை. 

எனினும் மங்கல மரபுகளை மாற்றிக் கொள்வதற்கில்லை!..

வைகாசி ஆனி மாதங்களில் மனை மங்கலம் கண்ட
புதுமண தம்பதிகளுக்கு மிக மிக உற்சாகமான நாள் ஆடிப் பெருக்கு...

ஆடி மாதம் பிறப்பதற்கு
சில நாட்களுக்கு முன்பாகவே பிரிக்கப்படும் இவர்கள்
கண்களால் கதை பேசிக் கொள்வது காவிரியின் கரையினில் தான்!.. 

இப்படியான மகிழ்ச்சியான தருணங்கள்
தற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகின்றன...

ஆடிப்பெருக்கு முழுக்க முழுக்க பெண்களுக்கே உரியது..

ஆடிப்பெருக்கு நாளில் வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன்
பெருகி வரும் புது வெள்ளத்தில் நீராடுவதைப் பெரும் பேறாகக் கருதுவதும்
புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டு மகிழ்வதும்...

ஆகா!...

என்ன மாதிரியான கலாச்சாரம்!..

பெரும்பாலும் மூத்த சுமங்கலிகளே இளம் பெண்களுக்கு
புதிய மஞ்சள் சரடு அணிவித்து வாழ்த்துவர்...


தலைக் காவிரி
இன்றைய சூழ்நிலையில் - ஆடிப்பெருக்கன்று
காவிரிக்குப் பூஜை செய்வது விசேஷமானது என்பதால் -
காலையில் பெண்கள் காவிரியில் குளித்து எழுந்து
ஆற்றங்கரைப் படித்துறையில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு
அந்த இடத்தை சுத்தம் செய்து அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் பிடித்து வைத்து அகல்விளக்கு ஏற்றி வைப்பதும் 


பூஜையில் காப்பரிசி, விளாங்கனி, நாவற்பழம், எலுமிச்சங்கனி,
காதோலை கருக மணி, வாசமுள்ள மலர்கள், தாம்பூலம், பழங்கள்
எல்லாம் படைத்து தூப தீப கற்பூர ஆராதனையுடன் வழிபடுவதும்
அரிதான காட்சிகள் ஆகிக் கொண்டிருக்கின்றன...

பூஜை முடிந்ததும் காவிரியில் மஞ்சள் மற்றும் பூக்கள்,
காதோலை கருகமணி ஆகியவற்றை தாமரை இலையில் வைத்து
அகல் விளக்குடன் மிதக்க விடுவதும்

அதை எடுக்க விடலைகள் போட்டி போட்டு
தங்களது வீர தீரப் பராக்கிரமங்களைக் காட்டி
கன்னியரின் கவனத்தை ஈர்ப்பதுவும் -

அடுத்த ஆடிப்பெருக்கு நாளில் அதே கரையில்
தம்பதியராக மணங்கொண்டு நிற்பதும்
கனவுக் காட்சிகளாகிக் கொண்டிருக்கின்றன...

சில இடங்களில் மாலை  நேரத்தில் விளக்கேற்றி பூஜை செய்து -
வாழை மட்டையில் தெப்பம் கட்டி அதில் அகல் விளக்குகளை வைத்து -  காவிரியில்  மிதக்க விடுவர்.

காவிரி பெருகி வரக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்வதும்
சித்ரான்னங்கள் படைத்து வழிபடுவதும் பாரம்பர்யமாவை.

நதிக்கரையில் கூடும் புதுமணத் தம்பதிகள்
திருமண மாலைகளை ஆற்றில் மிதக்க விட்டு 
புது வெள்ளம் போல வாழ்வில் மகிழ்ச்சி பெருக வேண்டும்
என்று வேண்டிக் கொள்வர்... 

திருமணமாகாத கன்னியர்க்கு
விரைவில் திருமணம் கூடி வருவதற்கும்
நல்ல கணவன் அமைவதற்கும் மற்ற சுமங்கலியர்
வாழ்த்தி மஞ்சள் கயிறு கட்டி விடுவர்...

இந்த மகிழ்ச்சி எல்லாம் வேறெங்கு கிடைக்கும் சொல்லுங்கள்!...

ஸ்ரீ காவிரி - அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் 
திருவரங்கத்தில் ஆடிப் பெருக்கு அன்று
நம்பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.

அங்கே - அரங்கனின் சார்பில் பட்டுப் புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், வெற்றிலை ஆகிய மங்கலப் பொருட்கள் அனைத்தும் யானை மீதேற்றி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, காவிரி ஆற்றின் நீரில் சீதனமாக விடப்படும்.

ஆடிப்பெருக்கு நாளன்று திருஐயாற்றில் ஸ்ரீ அறம் வளர்த்தநாயகியும் எம்பெருமான் ஐயாறப்பரும் பூசப் படித்துறையின் மண்டபத்திற்கு எழுந்தருள்வர். 

அங்கு  தீர்த்தவாரி நடக்கும்.

ஆனால் ஆடிப் பதினெட்டு அன்று காவிரிச் சமவெளி முழுதும்
வறண்டு கிடப்பதே வழக்கம் என்றாகி விட்டது...

கல்லணையில் காவிரி (பழைய படம்) 
ஆடிப்பெருக்கின் புது வெள்ளத்தில்  யோகிகளும், சித்த புருஷர்களும் ஒளி வடிவாக நீராடி, காவிரி அன்னையை வணங்குவதாக ஐதீகம்.

எனவே, காவிரியில் நீராடி  ஏழை எளியோர்க்கு தான தர்மங்களைச் செய்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம். 

ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில்
ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டில் எளிய முறையில் செய்யலாம். 

வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் திருவிளக்கேற்றி 
ஒரு செம்பில்  -  சுத்தமான தண்ணீர் எடுத்து
அதில் சிறிதளவு மஞ்சள் பொடியைக் கரைத்து
அதனைத் திருவிளக்கின் முன் வைத்து
அந்தத் தண்ணீரில் வாசமுள்ள பூக்களை  இட்டு
மஞ்சள் குங்கும திலத்துடன் பூச்சரம் சூட்டி
செம்பினை அலங்கரிக்கவும்...

இயன்றபடிக்கு காப்பரிசி அல்லது ஏதாவதொரு
சித்ரான்னம் செய்து பழங்களுடன் நிவேதனமாக வைக்கவும்...

கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, பொருணை
எனும் புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்துக் கொண்டு.  
சாம்பிராணி தூபமும் நெய் தீபமும் காட்டி கற்பூர ஆரத்தி
செய்து வழிபடுதல் சாலச் சிறந்தது.  

நிவேதனங்களைப் பிரசாதமாக எடுத்துக் கொண்டபின்
செம்பிலுள்ள நீரை வீடு முழுதும் மாவிலை கொண்டு தெளித்து
உள்ளங்கை அளவு  தீர்த்தப் பிரசாதமாக அருந்தவும்...

புனித நீர் மீதமிருந்தால் - செடி, கொடிகளின் வேரில் ஊற்றி விடவும். 


ஆடிப் பெருக்கு விழா காவிரியை மையமாகக் கொண்டே நிகழ்கின்றது. 

கல்லணையிலிருந்து - காவிரியிலும் அதன் கிளை நதிகளான
புது ஆறு, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆகியவற்றில் நீர் மிகுதியாக திறந்து விடப்படும்.  

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் 
ஆனால், இந்த வருடம் அப்படியில்லை.

கடந்த பசலியில்- அறுவடையான வயல்களெல்லாம் எரு அடித்து உழப்பட்டு புதுத் தண்ணீரின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. 


சீரும் சிறப்பும் பெற்ற காவிரி - வரும் ஆண்டுகளிலாவது -
முன்பு போல பொங்கிப் பெருகி வர வேண்டும்!..
- என இந்நாளில் வேண்டிக் கொள்வோம்... 

காவிரி இயற்கையால் வழங்கப்பட்ட நிதி..
காவிரியன்றி வேறொன்றும் இல்லை கதி!..

நடந்தாய் வாழி காவேரி!..
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி!..
* * *