நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 07, 2022

மூவர் பாடிய காவிரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 21
 திங்கட்கிழமை

துலாமாதத்தின்
நிறைநிலா நாள்
அன்னாபிஷேக நன்னாள்.

கௌரி மாயூரம் எனப்படும் திரு  மயிலாடுதுறையில் காவிரித் திருமுழுக்கு திருவிழா தொடங்கி இருக்கின்றது..

இவ்வேளையில்
இறைவனுடன் சேர்த்து காவிரியையும் புகழ்ந்து தேவார மூவர் பாடியருளியுள்ள பன்னிரண்டு திருத்தலங்களின் திருப்பாடல்களை மட்டும் இன்றைய பதிவில் காண்போம்..

அன்னத்திற்கும் மற்ற அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் காவிரியைப் போற்றி வணங்குவோம்..


திருநெய்த்தானம்
ஸ்ரீநெய்யாடியப்பர்
ஸ்ரீபாலாம்பிகை

பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புனல் அரவும்படு சடை எம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானம் எனீரே.. 1/15/2

திருவடகுரங்காடுதுறை
ஸ்ரீ குலைவணங்கும் நாதர்
ஸ்ரீ ஜடாமகுடநாயகி

முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள் தம்மேல்
சித்தமா அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே..3

திருஇடைமருதூர்
ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி
ஸ்ரீ பிரகத்சுந்தர குஜாம்பிகை

அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
கந்தம் கமழ்கா விரிக்கோலக் கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவேத முதல்வன்
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ..1/32/4

திருமயிலாடுதுறை
ஸ்ரீ மயூரநாதர்
ஸ்ரீ அஞ்சொல்நாயகி

பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறு நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமை எனலாம்
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே.. 3/70/5

திருசாய்க்காடு
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்
ஸ்ரீ குயிலினும் இன்மொழியாள்

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே.. 2/38/1
-: திருஞானசம்பந்தர் :-
*
ஸ்ரீ காவிரி
திருஐயாறு
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி

களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரி வாய்க்
குளித்துத் தொழுதுமுன் னின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்
திளைத்து சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே..4/92/7

காவிரியில் மனம் ஒன்றிக் குளித்துக் கரையேறினாலே நம்மைப் பிறவிக் கடலில் இருந்து கரையேற்றுவார் ஐயாறப்பர் என்று அருள்கின்றார் அப்பர் ஸ்வாமிகள்.
*
திருப்பழனம்
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்
ஸ்ரீபெரியநாயகி

கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் 
காவிரிப் பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மொழி கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.. 4/12/8

 திருச்சோற்றுத்துறை
ஸ்ரீ ஓதவனேஸ்வரர்
ஸ்ரீ அன்னபூரணி

தன்னவனாய் உலகெல்லாந் தானே யாகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனா ய் என்னிதயம் மேவி னானே
ஈசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே..6/44/8


திருக்கொட்டையூர்
ஸ்ரீ கோடீஸ்வரர்
ஸ்ரீபந்தாடுநாயகி

செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய்தயிர்தே னாடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே..6/73/3

நவ நதிக் கன்னியர
 குடந்தைக் கீழ்க்கோட்டம்
(ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்)
ஸ்ரீ நாகேஸ்வரர்
ஸ்ரீபெரியநாயகி

ஏவியிடர்க்கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி ஆங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத் தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரி நல் யமுனை கங்கை
சரசுவதி பொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.. 6/75/10
-: அப்பர் பெருமான் :-

காவிரியுடன் யமுனை , கங்கை, சரசுவதி, பொற்றாமரை, பிற தாமரைத் தடாகங்கள், தெளிநீர்க் கிருஷ்ணை , குமரி ஆகிய தீர்த்தங்கள் தாவியோடி வந்து சூழ்ந்திருக்கும் குடந்தைக் கீழ்க் கோட்டம் என்று அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிட்டருளுகின்றார்..

பதிவிலுள்ள
நவ நதிக் கன்னியர் சந்நிதி 
கும்பகோணம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் 
கோயிலில் உள்ளது..
*
திரு கொடுமுடி
ஸ்ரீ கொடுமுடிநாதர்
ஸ்ரீ வடிவுடைநாயகி

எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவிரி அதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நம சிவாயவே.. 7/48/4

திருப்புறம்பயம்
ஸ்ரீ சாட்சிநாதர்
ஸ்ரீ கரும்பன்ன சொல் உமையாள்

மலமெலாம் அறும் இம்மை யேமறு
மைக்கும் வல்வினை சார்கிலா
சலமெலாம் ஒழி நெஞ்ச மேஎங்கள்
சங்க ரன்வந்து தங்குமூர்
கலமெலாம் கடல் மண்டு காவிரி
நங்கை யாடிய கங்கைநீர்
புலமெலாம் மண்டிப் பொன்வி ளைக்கும்
புறம்ப யந்தொழப் போதுமே.. 7/35/8
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் :-

கப்பல்கள் நிறைந்த கடலில் கலக்கின்ற காவிரியுடன் கலந்து ஆடுகின்ற கங்கையின் நீர் வயலெல்லாம் பாய்ந்து செழிக்கின்றது என்கின்றார் ஸ்வாமிகள்..
**
கங்கா தேவி போற்றி போற்றி..
காவிரித் தாயே போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

 1. நல்லதொரு தொகுப்பு.  காவிரி பாயும் கன்னித்தமிழ்நாட்டில் வாழ்கிறோம் என்பதே பெருமைதான்.  அதுவும் நீங்கள்..  வாழ்க காவிரி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. //காவிரி பாயும் கன்னித் தமிழ்நாடு..//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. அருமையான தொகுப்பு. இவற்றில் திருவிடைமருதூர் மாத்திரம் சென்றிருக்கிறேன். கும்பகோணம் கோயிலில் யானையைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். வருத்தமாத்தான் இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய திவ்ய தேசங்களை தரிசனம் செய்திருக்கும் புண்ணியர் நீங்கள்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமையாக உள்ளது படங்கள் அழகாக இருக்கிறது காவிரி தாயின் பாடல்கள் அருமை. நவநதி அன்னையர்களை வணங்கி கொண்டேன். காவிரி நீர் பாயும் தலங்களைப்பற்றியும், அங்குள்ள இறைவன் உடனுறை அம்பிகை பற்றியும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // காவிரி நீர் பாயும் தலங்களைப்பற்றியும், அங்குள்ள இறைவன் உடனுறை அம்பிகை பற்றியும் தெரிந்து கொண்டேன்..//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. படங்கள் எல்லாம் அருமை. தேவாரங்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
  அருமையான தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தேவாரங்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. எல்லாப்படங்களும் அருமையாக இருக்கின்றன. நாலைந்து கோயில்கள் சென்றிருக்கோம். எல்லாவற்றிற்கும் போனதில்லை.விளக்கமான விரிவான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // எல்லாப்படங்களும் அருமையாக இருக்கின்றன.//

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..