நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 23, 2022

சோழ வம்சம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 7
புதன்கிழமை

சோழ வம்சாவளி குறித்த 
பதிவு தொடர்கின்றது..

முதல் பகுதி சோழவம்சம் 1


1. குலோத்துங்கன்.. (1070 - 1120) முதலாம் குலோத்துங்க சோழன். முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப்  பேரன். 

பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் அதிராஜேந்திர சோழர்..  இவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் - மேலைச் சாளுக்கியத்திற்கு சோழர் பெண் கொடுத்த வகையில் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். கலிங்கத்துப் பரணி கொண்ட விறலோன் என்பது சிறப்பு பெயர்..

2. விக்கிரமன் (1118 - 1135) முதலாம் குலோத்துங்க சோழனின் மகன். கூத்தன் உலாக் கொண்ட விக்கிரம சோழன் என்ற சிறப்புடையவன்..

3. (இரண்டாம்) குலோத்துங்கன் (1133 - 1150) விக்கிரம சோழனின் மகன்.

அநபாயச் சோழன் என, புகழப்பட்ட மன்னன்..  
இவரது முதலமைச்சரே சேக்கிழார்..

சேக்கிழார் பெரிய புராணம் இயற்றியது இவரது  ஆட்சியில்.. 

அவையில் இருந்த பெரும் புலவர் ஒட்டக்கூத்தர்..

விக்கிரம சோழன் உலா, தக்க யாகப் பரணி - ஆகியவை ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டன..

விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் விளங்கியவர் -  ஒட்டக்கூத்தர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் தான்
நளவெண்பா பாடிய புலவர் புகழேந்தி..

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் தில்லை மாநகரம்  விரிவுபடுத்தப்பட்டது. கனகசபை கோயிலும் புதுப்பிக்கப்பட்டது..

இச்சமயத்தில் தான்
தில்லை கோவிந்த ராஜர் அப்புறப்படுத்தப் பட்டதாக - தக்க யாகப் பரணியில் கூத்தர் கூறுவதாகச் சொல்கின்றது - விக்கி

4. (இரண்டாம்) ராஜராஜன் (1146 - 1163) இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன்.. தற்காலத்தில் தாராசுரம் எனப்படும் ராஜராஜபுரத்தில் ஐராவதேஸ்வரர் ஆலயத்தை அமைத்த மன்னன் இவரே.. 

5. (இரண்டாம்) இராஜாதிராஜன் (1163 - 1178) இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்.

திருபுவனம் கோயில்
6. (மூன்றாம்) குலோத்துங்கன்.. (1178 - 1218) இரண்டாம் ராஜராஜ சோழனின் மகன். திருபுவனம் ஸ்ரீ கம்பகரேஸ்வரர்  கோயிலைக் கட்டிய மன்னன்.. 

மூன்றாம் குலோத்துங்க சோழன் 
காலத்தினைக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர் வாழ்ந்த காலம் என்று கருதுகின்றனர்..

இந்தக் கருத்திலும் மாறுபாடுகள் சொல்லப்படுகின்றன..

ஸ்ரீ சரபேஸ்வரர்
இந்த மன்னனின் ஆட்சியில் தான் சாளுக்கியத்தின் சரபேஸ்வர வழிபாடு சோழ நாட்டில் ஏற்பட்டது..

அத்துடன்,
மூன்றாம் குலோத்துங்கன் திரு ஆரூர் அம்பலத்தில் பொன்னும் வேய்ந்திருக்கின்றான்.

7. (மூன்றாம்) ராஜராஜன் (1216 - 1256) மூன்றாம் குலோத்துங்க சோழனின் மகன். இம்மன்னனின் காலத்தில் தான் சோழப் பேரரசின் வீழ்ச்சி தொடங்கிற்று..

மதுரையிலிருந்து மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். மூன்றாம் ராஜராஜனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கு இரையாக்கினான். 

அங்கிருந்த மாட மாளிகைகளையும் மணி மண்டபங்களையும் இடித்துத் தள்ளி தரை மட்டமாக்கினான்.

சோழர்களின் பூர்வீக பூமியாகிய பழையாறையின் அரண்மனையில் மாற வர்மன் சுந்தர பாண்டியன்
வீராபிஷேகம் செய்து கொண்டான். 

போரில் தோல்வியுற்ற மூன்றாம் இராஜராஜன் திறை செலுத்துதற்கு ஒப்புக் கொண்டு தனது சுற்றத்தாருடன் தலைநகரை விட்டு வெளியேறி ஒரு தனி இடத்தில் தங்கியிருந்தான்..

சில ஆண்டுகளுக்குப் பின்பு மூன்றாம் இராசராசன் திறை செலுத்த மறுத்துவிட்டான். இதனால் சினங்கொண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது மீண்டும் ஒரு போர் தொடங்கினான். 

இப்போரில் தோல்வியுற்ற மூன்றாம் ராஜராஜன்  நாட்டை விட்டு வடபுலம் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பல்லவ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த கோப்பெருஞ் சிங்கன் என்பவன் தெள்ளாறு என்னும் இடத்தில் மூன்றாம் ராஜராஜனை சிறை செய்து, தனது தலை நகராகிய சேந்த மங்கலம் கோட்டையில் அடைத்து வைத்தான்.

இதே காலகட்டத்தில் போசள நாட்டை வீரநரசிம்மன் (1220 - 1230)  ஆண்டு வந்தான். இவன் தன் மகளை மூன்றாம் ராஜராஜனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான்.  

மூன்றாம் இராஜராஜனை
கோப்பெருஞ்சிங்கன் சிறை வைத்ததை அறிந்து மனம் கொதித்த வீரநரசிம்மன் பெரும்படையுடன் சென்று கோப்பெருஞ்சிங்கனைப் போரில் தோற்கடித்தான். அவன் சிறை வைத்திருந்த மூன்றாம் ராஜராஜனை மீட்டான்..

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து படையுடன் வீரநரசிம்மன் சென்று, காவிரியாற்றங்கரை மகேந்திர மங்கலத்தில் 
சுந்தர பாண்டியனோடு போரிட்டு அவனை வென்று, அவன் கைப்பற்றி இருந்த சோழ நாட்டை மீட்டு மீண்டும் மூன்றாம் ராஜராஜனுக்கு வழங்கினான்.

இத்தோல்விக்குப் பின்னர், பாண்டியர் போசளரோடு மண உறவு  கொண்டனர் என்பது தனியான வரலாறு..

தஞ்சையைத் துறந்து 1023 ல் கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த ராஜேந்திர சோழருக்குப் பின் வந்த  இரண்டாம் நிலைச் சோழ வம்சம் - மாற வர்மன் சுந்தர பாண்டியனிடம் (1216 - 1239) தோற்று கங்கை கொண்ட சோழ புரத்தையும் இழந்தது..

மூன்றாம் இராஜராஜன் மீண்டும் பழையாறைக்கு வந்து தஞ்சையை தன்னுடன் வைத்துக் கொள்ள சோழப் பேரரசு - சிற்றரசு என்றானது.. 

8. (மூன்றாம்) இராஜேந்திரன். 
(1246  - 1279) மூன்றாம் இராஜராஜ சோழனின் மகன். சோழ வம்சத்தின் கடைசி அரசன். மாபெரும் சோழப் பேரரசு வலிமை குன்றி தன்னை இழந்தது..

(இரண்டாம்) மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பிறகு, கி.பி. 1251 ல் மன்னனாக முடி சூடிக் கொண்ட (முதலாம்) சடைய வர்மன் சுந்தர பாண்டியன் 1257 ல் சோழ நாட்டின் மீது படையெடுத்து திறை செலுத்தாதிருந்த மூன்றாம் ராஜேந்திரனை வென்று அவனைத் தனக்குக் கீழ்  ஆக்கினான். 

தனது ஆட்சிக் காலம் முழுவதும் பாண்டியருக்குத் திறை செலுத்தியே வாழ்ந்த
மூன்றாம் ராஜேந்திரன் சோழப் பேரரசின் கடைசி மன்னன் என்று ஆனான்.. 

அவன் இறந்த பின்னர், சோழ நாடு பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது..
***

கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டிய தெற்கு எல்லையில் கண்காணிப்பு குறைந்ததும் பரந்து பட்டிருந்த நிலப்பரப்பின் ஆளுமையில் திறமை குன்றியதுமே சோழர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றுரைப்பார் எங்கள் வரலாற்று ஆசிரியர் திரு S.R.கோவிந்தராஜன் அவர்கள்..

அறங்களும் ஆலயங்களும் பாதுகாக்கப்பட்டன.. தமிழ் முன்னெடுக்கப்பட்டது.. கலைகள் உச்சம் தொட்டன..

நீர் நிலை வயல் வெளிகளின் மேம்பாட்டினால் சமுதாயத்தின் எல்லா மக்களும் இன்புற்று வாழ்ந்தனர்..

இதற்கு மேல் என்ன வேண்டும் வாழ்வு பொன்னாக ஆவதற்கு!..

தஞ்சையும் 
ராஜ ராஜேஸ்வரமும் 
அதன் கல்வெட்டுகளும்
இன்னும் பல காலத்திற்கு 
புகழ் ஏந்தியிருக்கும்..

சோழர் தம் புகழ் நீடூழி வாழ்க..
***

23 கருத்துகள்:

 1. வீரம் என்கிற பெயரில் ஊரை தீக்கிரையாக்குவதும், கலைச்செல்வங்களை அழிப்பதும்....    கேவலமான செயல் - அது எந்த வம்சம் செய்தாலும்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைத் தான் காலகாலமாகச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்..

   பாவம் மக்கள்

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அமைதி.. அமைதி.. அமைதி..

   மகிழ்ச்சி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி..

   நீக்கு
 3. அரிய செய்திகள் அறிந்து கொண்டேன் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 4. அறிந்த அரிய செய்திகள்.ஒட்டக்கூத்தரும், கம்பனும், ஔவையாரும் ஒரே காலம் என நினைத்திருந்தேன். அதே போல் இரண்டாம் குலோத்துங்கன் காலம் தான் ராமானுஜரின் காலம் எனவும் நினைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
 5. அறிந்த அரிய செய்திகள்.ஒட்டக்கூத்தரும், கம்பனும், ஔவையாரும் ஒரே காலம் என நினைத்திருந்தேன். அதே போல் இரண்டாம் குலோத்துங்கன் காலம் தான் ராமானுஜரின் காலம் எனவும் நினைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
 6. சில பெயர்கள் வரலாறு படித்த நினைவு இருக்கிறது. சேக்கிழார் ஒட்டக் கூத்தர் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன் எல்லாம்.....

  அதென்னவோ ஒரு ஊரை அழித்து தன் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்று என்ன வெறியோ இந்த அரசர்களுக்கு...

  முதல் பகுதியும் வாசித்தேன் துரை அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதென்னவோ ஒரு ஊரை அழித்து தன் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்று என்ன வெறியோ இந்த அரசர்களுக்கு...//

   மீள விடாமல் அடித்தல் என்பார்களே.. அது தான்...

   தஞ்சையில் பொன் ஏர் பூட்டி உழு பூமியில் கழுதை பூட்டி உழுதிருக்கின்றான் பாண்டியன்..

   இன்றைக்கும் அதே மாதிரிதான் ஜனநாயகத்தில் நடத்தப்படுகின்றது..

   ஏழை எளிய மக்கள் தான் பாவம்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாறு படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. பதிவை அருமையாக தொகுத்து உள்ளீர்கள். பள்ளியில் சரித்திரம் படித்ததெல்லாம் ஆங்காங்கே நினைவினுள் வந்தது. ஆக.. அதிக ஆசைகளும் எப்போதும் ஒரு வீழ்ச்சிக்கு காரணம். ஒருவரை ஒருவர் தோற்கடிக்க வேண்டுமென்ற எண்ணங்கள் அப்போது மன்னர் ஆட்சியில் நிறைய இருந்தது. அதையும் மீறி நல்லாட்சிகள் புரிந்து மக்களுக்கு நல்ல நல்ல வழிகள் ஏற்படுத்தி இன்றும் நம் நினைவுகளில் மட்டுமல்ல... நமக்குப் பின்னும் காலங்காலமாய் புகழுடன் வாழும் அரசர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்றும் தலை வணங்கி மரியாதை செய்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதையும் மீறி நல்லாட்சிகள் புரிந்து மக்களுக்கு நல்ல நல்ல வழிகள் ஏற்படுத்தி இன்றும் நம் நினைவுகளில் மட்டுமல்ல... நமக்குப் பின்னும் காலங்காலமாய் புகழுடன் வாழும் அரசர்களும் இருக்கிறார்கள்.//

   இப்படியான களேபரங்களுக்குள்ளும் நாட்டில் பல நல்ல விஷயங்களும் நடந்து தானே இருக்கின்றன..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. சோழர் ஆட்சி காலம் பொற்காலம்தான்.சோழ மன்னர்கள் பற்றிய தொகுப்பு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. இரண்டாம் குலோத்துங்கன் 1133-1158. ராமானுஜர் காலம் 1017-1137. அதாவது அவரது 115வது வயதில் திருவரங்கத்தைவிட்டு விலகினார் என்று ஆகிறது. இது தவறான கணக்கு. ராமானுஜர் தன் 40-50 வயதில்தான் திருவரங்கத்தைவிட்டு நீங்கி (கிருமிகண்ட சோழனால்) கர்நாடகத்தில் இருந்தார். தன் 80ம் வயதில் திரும்ப திருவரங்கம் வந்து அங்கேயே கடைசி வரை இருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.. அது விக்கி காட்டிய செய்தி.. சந்தேகத்துக்கு இடமான செய்திகள்
   இங்கே இடம் பெறுவது இல்லை..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. //என்ன போங்க! ஒரே கருத்தை இருமுறை பதிந்தும் இரண்டும் வரவில்லை! :(//Geetha Sambasivam "சோழ வம்சம் 2” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

  அறிந்த அரிய செய்திகள்.ஒட்டக்கூத்தரும், கம்பனும், ஔவையாரும் ஒரே காலம் என நினைத்திருந்தேன். அதே போல் இரண்டாம் குலோத்துங்கன் காலம் தான் ராமானுஜரின் காலம் எனவும் நினைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதே போல் இரண்டாம் குலோத்துங்கன் காலம் தான் ராமானுஜரின் காலம் எனவும் நினைத்திருந்தேன்..//

   நீங்களும் நானும் நினைத்திருக்கலாம்.. விக்கி சொல்வதும் அந்த காலகட்டத்தைத் தான்..

   ஆனால்
   நெல்லை அவர்கள் ஒரு கருத்தை முன் வைத்திருக்கின்றார்.. அது பதிவில் இருக்கின்றது..

   //இரண்டாம் குலோத்துங்கன் 1133-1158. ராமானுஜர் காலம் 1017-1137. அதாவது அவரது 115வது வயதில் திருவரங்கத்தை விட்டு விலகினார் என்று ஆகிறது. இது தவறான கணக்கு.//
   என்று.


   அதனால் ஐயப்பாடாக உள்ளது என்று
   ஸ்ரீ ராமானுஜர் பற்றிய வரிகளை நீக்கி விட்டேன்..

   வேறொன்றும் தவறாக இல்லை.. ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து நீங்கியது இதே காலகட்டத்தில் தான் - என்று சொல்லியிருந்தேன்..

   வேறொரு சமயத்தில் விரிவாகப் பேசலாம்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

   நீக்கு
 11. Geetha Sambasivam "சோழ வம்சம் 2” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

  அறிந்த அரிய செய்திகள்.ஒட்டக்கூத்தரும், கம்பனும், ஔவையாரும் ஒரே காலம் என நினைத்திருந்தேன். அதே போல் இரண்டாம் குலோத்துங்கன் காலம் தான் ராமானுஜரின் காலம் எனவும் நினைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
 12. சோழர் ஆட்சிக் காலம் மீண்டும் படித்த நினைவு வருகிறது.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..