நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 29, 2022

சித்தப்பா வீடு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 13
  செவ்வாய்க்கிழமை

இன்றொரு சிறுகதை
-: சித்தப்பா வீடு :-
-::-


சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் முதலாவது நடைமேடைக்கு வந்து சேர்ந்த போது விடியற் காலை நான்கு மணி.. 

ஸ்டேஷனில் இருந்து புறநகரில் இருக்கும் வீட்டுக்கு வந்து சேர்வதற்கு நாலரை ஆகி விட்டது.. 

வீட்டுக்குள் வந்தவுடன் அனைவரும் ஆங்காங்கே தூங்கி விழுந்து கண் விழித்த போது மணி 5:45..

முகத்தைத் துடைத்துக் கொண்டே வந்தாள் லதா..

" பல் விளக்கி விட்டு வாம்மா.. காஃபி குடிக்கலாம்.. "  - என்றாள் காமாட்சி..

" சித்தி.. இவ்வளவு சீக்கிரம் காவின் பால் வந்துடுமா..  டோர் டெலிவரியா?..  "

லதா கேட்டாள்..

" டோர் டெலிவரி தான்.. ஆனா இது காவின் பால் இல்லே.. பசும் பால்!.. "

" அதுவும் பசும்பால் தானே.. அம்மா சொல்வாங்க!.. "

" பசும்பால்... நீங்க தான் மெச்சிக்கணும்!.. "

" ஏன்.. சித்தி?.. "

" அது மிஷின்ல சலிச்சு பிரிச்சு லாரி..ல வந்து இறங்குறது.. இது கன்னுக் குட்டி குடிச்ச பால்..  மடி சுரந்து கறந்து வாங்குனது.. "

" ஓ.. fresh milk!.. "

மென்மையாகப் புன்னகைத்தாள் சித்தி..

" ஹையா ... அப்போ நான் பார்க்கணுமே.. கன்னுக்குட்டி எங்கே!.. "  - பரபரப்பானாள் லதா..

" மாடு கன்னுக்குட்டி எல்லாம் அவங்க தோட்டத்துல இருக்கு.. "

" அப்போ பார்க்க முடியாதா?.. "

" ஏன் முடியாது?.. சாயங்காலம் நாம போய் பால் வாங்குவோம். அப்போ பார்க்கலாம்.. "

அதற்குள் பெரியவள் சுதாவும் காமாட்சியின் மகளும் எழுந்து வந்தார்கள்.. 

" ஏய்.. ஓட்ட வாய்!.. காலைல. ய ஆரம்பிச்சுட்டியா?.. "

" சுதா.. நீயும் brush பண்ணிட்டு வாம்மா.. அங்கே போன் பண்ணி சொல்லிட்டீங்களா?.. "

" நெட் வொர்க் இல்லே சித்தி.. அதுவும் இல்லாம அந்த ஏரியாவுல பவர்கட் இருக்கும் போல.. "

குரலில் கவலை தெரிந்தது..

" இங்கே வந்து இறங்குனதுமே மெசேஜ் பண்ணிட்டேன்... அதான் கவலை இல்லாம தூங்குறாங்க.. "

சோபாவில் இருந்தபடி லக்ஷ்மி சொன்னாள்..
இரவு முழுதும் தூங்காமல் பயணித்த களைப்பு முகத்தில் இன்னும் இருந்தது..

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக விடாத மழை..   

மூத்தவருக்கு வேலை மாற்றல் ஆகி சென்னைக்குச் சென்றதும் அங்கே குறைந்த விலைக்கு வருகின்றது என்று வாங்கிப் போட்ட மனைப் பிரிவு - வீட்டைக் கட்டி முடித்து மூன்று வருடங்களுக்குப் பிறகு  தன் சுயரூபத்தைக் காட்டியது.. 

அப்போது மூன்று வருடங்களுக்குப் பின் பெய்த மழையில் அங்கிருந்த அனைத்து வீடுகளும் ஒரு அடி தண்ணீருக்குள்..

பல்லவர் காலத்து ஏரி தூர் வாரப்படாமல் கிடந்து சுதந்திர பூமியில் வீட்டு மனைகளாகி ஏதோ ஒரு நகர் என்றாகி விட்டது.. 

வீட்டை விற்று விடுவதற்கு மழையும் தேங்குகின்ற நீரும் காரணங்கள் என்றால் விற்காமல் இருப்பதற்கு பலப்பல காரணங்கள்..

மழைக் காலத்தில் வீட்டின்  பொருட்களை எல்லாம் மாடி அறைகளுக்கு மாற்றி விடுவதும்  தை மாதம் பிறந்ததும் மேலேயிருந்து கீழே அள்ளிக் கொண்டு வருவதுமாக பத்து ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டன.. 

இப்போது தான் முதல் முறையாக மழை வந்ததும் - புதிதாய் தோண்டப் பட்டிருக்கும் பாதாள சாக்கடைப் பள்ளங்களுக்குப் பயந்து கொண்டு மனைவி மக்களை இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார் மூத்தவர் - இயல்பு நிலை திரும்பியதும் வந்தால் போதும்!.. என்று

' தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் ' .. - என்று பயமுறுத்திக் கொண்டு இருந்தாலும் இங்கே கனமழையும் இல்லை. தொடர் மழையும் இல்லை. அவ்வப்போது சற்றே பலத்த மழை.. 

இதுவும் இல்லை என்றால் தன்னை மறந்து விடுவார்களே!.. - என்ற நினைப்பில் வானம் பொழிந்து கொண்டிருந்தது..

நேற்று பிற்பகலில் அடித்துக் கொண்டு பெய்ததோடு சரி.. இரவில் இடி முழக்கங்கள் மட்டுமே.. மயிலாடுதுறை சீர்காழிப் பக்கம் அளவுக்கு அதிகமாக ஆட்டம் விட்டுப் போனதாக செய்திகள்..

பொழுது விடிந்தும் கூட
வானம் கரேல் என்று தான் இருக்கின்றது.. 

இங்கே பத்து நாட்களுக்கு அடைத்துக் கொண்டு பெய்தாலும் கவலை இல்லை.. தெருக்களில் தண்ணீர் தேங்காது.. சோழர்கள் ஆட்சி செய்த ஊரல்லவா!.. 

அதுவுமில்லாமல் இந்தப் பகுதி சற்றே மேடு.. 

ஆனாலும் நாங்கள் விடமாட்டோம் என்றிருக்கின்றது இன்றைய சூழ்நிலை..

இதற்கிடையில்
காய்கறிப் பைகளும் வாழை இலைகளுமாக
ஸ்கூட்டியில் வந்து இறங்கினார் சித்தப்பா..

" ஹை.. சித்தப்பா!.. "

ஓடி வந்த பிள்ளைகளிடத்தில் பெரியதொரு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தார்.. 

அதனுள் கமகம..  வாசத்துடன் சூடாக இருந்தன உளுந்து வடைகள்..

" காலை.. லயே வடையா!.. "

" ஆமா.. ராவ் ஜி போட்டுக்கிட்டு இருந்தான்.. "

பேச்சும் சிரிப்புமாகப் பொழுது நகர்ந்து கொண்டிருந்த வேளையில் பின்பக்கத்தில்,     ' க்ரா.. க்ரா.. '  - என்ற ஒலிகள்..

" அது என்ன சத்தம் சித்தி?.. "

" மயில்.. மா.. "

பிள்ளைகளுக்கு வியப்பு..
பார்ப்பதற்கு ஓடினார்கள்..

" ஓடாதீங்க... பயந்துடும் அதுங்க.. ஜன்னல் வழியா பாருங்க!.. "

ஜன்னலைத் திறந்து பார்த்த  பிள்ளைகளின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன..

ஆணும் பெண்ணுமாக ஆறேழு மயில்கள்... கூடவே அவற்றின் குஞ்சுகள்..

" இதை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடுங்க.. "

சித்தியின் கைகளில் இரண்டு கிண்ணங்கள்.. அவற்றில் முத்துச் சோளமும் நிலக் கடலை பருப்புகளும் இருந்தன..


பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.. அள்ளி வீசினார்கள்..  

மயில்களும் ஜன்னல் வழியே  அள்ளி வீசப்பட்ட தானியங்களை ஒன்று விடாமல் தின்று விட்டு  நீலமும் பச்சையும் சேர்ந்து மினுமினுக்கும் கழுத்தை உயர்த்தி இப்படியும் அப்படியுமாக பார்த்தன.. 

சிறகுகளை விரித்து சிலுப்பிக் கொண்டன.. தலையை ஆட்டியபடி அலகை தீட்டிக் கொண்டன.. ஜன்னலுக்கு அருகாக வந்து பிள்ளைகளை உற்று நோக்கின..  

கண்களில் மகிழ்ச்சி ததும்பியிருந்தது..

" முருகா.. முருகா.. " -  கூச்சலிட்டனர் பிள்ளைகள்..

" கர்ரோக்.. கர்ரோக்.. " - என்று அகவியபடி ஒவ்வொன்றாக மேலெழுந்து பறந்து அந்தப் பக்கமாக இறங்கி நடந்தன...

குஞ்சுகள் பின் தொடர்ந்து ஓடிச் சேர்ந்து கொண்டன..


" நாளைக்கும் வருமா சித்தி?.. "

" தினசரி வரும் டா... "

" இந்த மயிலுங்க எல்லாம் எங்கேருந்து வருது?.. "

எல்லாம் அந்தப் பக்கத்து காடுகள்.. ல இருந்தது தான்.. காடுகள் ஏதோ காரணத்தால அழிஞ்சதும் நம்ம ஊர் பக்கம் வந்துடுச்சுங்க. இப்போ இருக்கிறது அதோ அந்த ஆத்தங்கரை புங்க மரம்.. ரோட்டுப் பக்கத்து புளிய மரம்.. அங்கேருந்து காலார நடந்தே வந்துடுவாங்க.."

சித்தப்பாவின் விளக்கத்துக்கு எதிர் கேள்வி..

" ராத்திரியில எங்க தங்குவாங்க?.. "

" இதுகளுக்கு குறுங்காடுகளும் மலை இடுக்குகளும் தான்  பிடிக்கும். அதெல்லாம் அழிஞ்சு போனதும் சாலை ஓரத்து புளிய மரத்திலயும் தூங்கு மூஞ்சி மரத்திலயும் உக்கார்ந்து இருக்குதுங்க... கூடு கட்டத் தெரியாத  இதுகளுக்கு புதர்கள் தான் அடைக்கலம். புதர்களும் அழியறதுனால இதுகளோட எண்ணிக்கை ரொம்பவும் குறையுதாம்.. "

சித்தப்பாவின்  குரலில் வருத்தம் தெரிந்தது..

மறுநாளும் மயில்கள் வந்தன.. பிள்ளைகளின் புன்னகையிலும் மகிழ்ச்சியிலும் நாட்கள் நகர்ந்திட மழை ஓய்ந்த ஒருநாளில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்..

அடுத்த நாலைந்து நாட்களுக்குப் பின் ஒரு நாள் - " மயில் எல்லாம் எப்படியிருக்கு சித்தி?.. * - என்ற  நலம் விசாரிப்பு தொலைபேசியில்..

நகர் விரிவாக்கப் பணிகளுக்காக " சாலையோர மரத்தை எல்லாம் அடியோட வெட்டித் தள்ளிட்டாங்க.
மயிலுக்கு எல்லாம் போக்கிடம் இல்லாமப் போச்சு.. - என்ற சேதியை எப்படிச் சொல்வது ?.. "  - எனத் தெரியாமல் தடுமாறினாள் காமாட்சி..
***

வாழ்க நலம்
*

20 கருத்துகள்:

 1. காலம் கலிகாலம்  ஆகிப்போச்சுடா என்று பாடவேண்டியதுதான்.  நகர்ப்புறங்களுக்கு, கிராமப்புறங்களுக்குமான வித்தியாசம் இன்னும் இப்படி இருக்கிறதா?   இது அந்தக் காலம் போல அல்லவா இருக்கிறது?  இந்தக் காலத்தில் கிராமம், நகரம் எல்லாமே நரகம் ஆகிக்கொண்டு வருகின்றனவே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிகழ்காலத்தின் சம்பவங்கள் தான் இந்தக் கதை..

   தற்போது வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் மயில்கள் வந்து மேய்கின்றன... எங்களுக்குத் தினமும் பசும்பால் கிடைக்கின்றது.. இன்னும் ஓரளவுக்கு மலிவான காய்கறிகள்.. நகருக்குள் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. இங்கே ஏதிலியாய் மயில்கள்..

   இது அந்தக் காலத்துக் கதை அல்ல... பாதாள சாக்கடைப் பள்ளங்கள் எல்லாம் வருகின்றனவே..

   சொந்த சித்தி சித்தப்பாவிடம் அலாதியான பிரியம்..

   அவ்வளவு தான்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. இங்கேயும் மயில்கள் வருகின்றன. மரங்கள் ஓரளவுக்கு இருக்கின்றன. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கரையோரக்காடுகள் சின்னஞ்சிறிசாகத் தெரியும். என்றாலும் தம்பி துரை சொல்லி இருக்கிறாப்போல் நகர/நரக விரிவாக்கம், சாலை விரிவாக்கம் என மரங்கள் வெட்டுப்பட்டால்? இவற்றின் கதி என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இங்கேயும் மயில்கள் வருகின்றன. மரங்கள் ஓரளவுக்கு இருக்கின்றன. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கரையோரக்காடுகள் சின்னஞ்சிறிசாகத் தெரியும். //

   இப்படியான சூழல் ஆங்காங்கே இன்னும் இருக்கின்றது..

   மரங்களை அழித்து புதர்களையும் ஒழித்து விட்டால் பாவம் வாயில்லா ஜீவன்களின் கதி?..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   நீக்கு
 3. எங்களுக்கும் சுத்தமான பசும்பால் பக்கத்தில் உள்ள சிறுகனூர் கிராமப் பண்ணையில் இருந்து வருது. வெண்ணெய் எல்லாம் வீட்டில் எடுப்பது தான். நான் கல்யாணம் ஆகி வந்ததில் இருந்தே கறந்த புத்தம்புதுப் பால் தான் எங்கே போனாலும். இதுவரை அந்தக்கண்ணன் நடத்தி வருகிறான். எல்லாம் அவன் செயல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எங்களுக்கும் சுத்தமான பசும்பால் பக்கத்தில் உள்ள சிறுகனூர் கிராமப் பண்ணையில் இருந்து வருது. வெண்ணெய் எல்லாம் வீட்டில் எடுப்பது தான்.//

   அதுதான் நல்லது..
   நம்பிக்கையானவை நமது சொந்தத் தயாரிப்புகளே..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   நீக்கு
 4. இரண்டு வெவ்வேறு கருத்துக் கொடுத்திருக்கேன். எது தெரியுமோ எது தெரியாதோ? பின்னாடி வந்து பார்க்கணும். :)

  பதிலளிநீக்கு
 5. சித்தப்பா வீட்டுக்கு வந்த குழந்தைகளுக்கு மயில், மயில் குஞ்சுகளை பார்த்ததும், மற்றும் கன்னுக் குட்டியுடன் பசுமாட்டை பார்த்ததும் மகிழ்ச்சி தரும்.

  நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னலுடன் நல்ல மழை.
  இங்கும் பசும்பால் கிடைக்கிறது.

  இங்கு பெண்மயில் அடிக்கடி வரும். காலை உயர்ந்த கட்டிடத்திலிருந்து அகவும். நானும் படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
  கதை அருமை.

  கதையில் சமுதாய அக்கறை மிளிர்கிறது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இங்கு பெண்மயில் அடிக்கடி வரும். காலை உயர்ந்த கட்டிடத்திலிருந்து அகவும். நானும் படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பெயரில்லா29 நவம்பர், 2022 08:15

  நாமக்கல்லிலிருந்து கரூர் வழியாக பெங்களூருக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது ஏகப்பட்ட மயில்களைப் பார்த்தோம். வயல்களின் வரப்புகளில் இருபது மயில்களுக்கு மேல் பார்த்தோம். சாலையிலும் சில வந்தன. படங்கள் எடுத்தேன். நெல்லையிலும் நிறைய மயில்கள் உண்டு. நெல்லைத்தமிழன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருக்கருகாவூர் பகுதியில் வெட்டாற்றின் கரையில் மூங்கில் மரங்கள் அதிகம்..

   மயில்களும் அதிகம்..

   தங்கள் அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. //ஏதோவொரு நகர் என்றாகி விட்டது//

  அந்த சாக்கடை தேங்கிய நகரின் பெயர் பூஞ்சோலை நகராக இருக்கலாம்.

  நகரத்தை நரகமாக்கும் இன்றைய இழிநிலையை மயிலின் அழகுபோல்... அழகாக சொன்னீர்கள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படித்தான் இங்கே வயற்காட்டை மொட்டையடித்து விட்டு பூஞ்சோலை நகர் என்று பெயர் வைத்திருக்கின்றான்..

   தங்கள் அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  கதை அருமையாக உள்ளது. மயில் படங்களும் நன்றாக உள்ளது. காணொளி தன் குழந்தைகளுடன் அந்த மயிலின் ஒற்றுமையையும், அன்பையும் வெளிப்படுத்துகிறது.

  தங்களின் திறமையான எழுத்தினால் , நகர்புறங்களை, அதன் அவலங்களை கண்ணுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள்.

  /இதுவும் இல்லை என்றால் தன்னை மறந்து விடுவார்களே!.. - என்ற நினைப்பில் வானம் பொழிந்து கொண்டிருந்தது../

  ஆகா.. இதை ரொம்பவும் ரசித்தேன். இப்போதெல்லாம், இயற்கையையும், அதனால் வரும் நன்மைகளையும் மறந்துதான் விடுகிறோம்.

  கதையில் வரும் குழந்தைகளின் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது. கதை படித்த போது, அந்த உறவுகளின் மேம்பட்ட நிலையை விளக்கிய போது, மனதுக்கு எவ்வளவு மகிழ்வாக உள்ளது தெரியுமா? ரசித்துப் படித்தேன். அருமையான கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // மனதுக்கு எவ்வளவு மகிழ்வாக உள்ளது தெரியுமா? ரசித்துப் படித்தேன். அருமையான கதை..//

   இதுதான் இந்த மகிழ்ச்சி தான் எனக்கு வேண்டும்..

   தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. மனிதர்களின் தேவை விரிவாக்கத்தால் அழியும் உயிரினங்கள் பல. கவலை கொள்ள வைக்கும் நிகழ்வுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.. மனிதனின் பேராசை தான் காரணம்..

   தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..