நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 01, 2022

மூவர் கண்ட முருகன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 15
செவ்வாய்க்கிழமை


சூர சங்காரம் நிகழ்ந்து விட்டது..

சூரன் உடலற வாரி சுவறிட வேலை வட வலப் பெருமாளே!..

சூரன் எடுத்துக் கொண்ட மாய உடலங்கள் உதிர்ந்து போகும்படியாகவும் கடலானது காய்ந்து போகும்படியாகவும் வேலை விடுத்த முருகப்பெருமானே!.. - என கைகூப்பி நிற்கின்றார் அருணகிரிநாதர்..

சூரனுடன் முருகன் போரிட்டபோது கோடிக் கணக்கில் அசுரர் படை திரண்டெழுந்து வந்திருக்கின்றது..

அவை அத்தனையும் அப்படியே அழிந்து தொலைவதற்காக ஈசன் எம்பெருமான் வயிரவக் கோலத்தில் எழுந்தருளி உடுக்கை ஒலியுடன் வெற்றி முழக்கமிட்டு ஆடிக் களித்திருக்கின்றார்..

" இன்னும் நாம் சண்டையிடவே இல்லையே.. இதென்ன வெற்றி முழக்கம்?.." - என, குழம்பித் தவித்து அசுரர் கூட்டம் மாயையில் மூழ்கிய போது,

வானில் பேரொளியுடன் பாய்ந்து வந்த வேலாயுதம் அப்படியே அவர்களை அள்ளிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து யம தர்மராஜனுடைய வேலையைக் குறைத்து விட்டது..

இதனாலேயே முருகப் பெருமான் மீதும் அவனுடைய அடியார்கள் மீதும் யம தர்மனுக்கு  அன்பும் மரியாதையும்..

வருமொரு கோடி அசுர பதாதி மடிய அநேக இசைபாடி
வருமொரு காலவயிரவர் ஆட வடிசுடர் வேலை விடுவோனே!..
- என்கின்றார் அருணகிரி நாதர் நெகிழ்ச்சியுடன்..

வாரியார் ஸ்வாமிகள் சொல்வார் - முருகனின் பார்வை பட்டதும் கொடியவன் அடியவன் ஆகி விட்டான் என்று..

அந்த அளவில் 
சூர பத்மன் மட்டும் மயிலாக சேவலாக ஆகி விட்டான்..

மண்டி வந்த அசுரர் உருமாறித் தொலைந்ததால் இந்திராதி தேவர்களும் தங்களது அண்டர் பதியில் குடியேறி விட்டனர்..

வெற்றி திருமகனாக தேவ குஞ்சரிக்கு மணமாலை சூட்டி திருக்கரமும் பற்றி விட்டான் இளங்குமரன்.

நமக்கு நல்லாசிகளுடன் பிரசாதமும் கிடைத்து விட்டது..

சங்க காலத்திலிருந்தே பேசப்பட்டிருக்கும் முருகப் பெருமானை ஆர அமர சிந்தித்துக் கொண்டிருக்கையில் தேவார மூவரும் முருகனைப் பற்றி பேசியிருப்பது நினைவுக்கு வந்தது.. 


முருகன் கடம்ப மலர் மாலைக்கு உரியவன்.. அதனாலேயே கடம்பன் எனப்பட்டவன்..

பெரியவராகிய அப்பர் ஸ்வாமிகள் இதனை நினைவு கூர்கின்றார்..

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.. (5/19)

கடம்ப மாலையை உடைய கடம்பனைப் பெற்றெடுத்தவளாகிய பராசக்தியை தனது மேனியில் சரி பாதியாயாக உடையவன் ஈசன் எம்பெருமான்.. அவனுக்குப் பணி செய்வதே எனது பணி.. அப்படி அவனுக்கே பணி செய்து கிடக்கும் என்னைக் காப்பாற்றுவது அவனுடைய பணியே!..

நம் செந்தில் மேய வள்ளி மணாளர்க்கு தாதை கண்டாய்!.(6/23) 
என்கின்றார் திருமறைக்காட்டில்!..

குஞ்சரி மணாளன் - என்று ஏன் சொல்ல வில்லை?..

அசுரரை வென்று அமரரைக் காத்தருளியதும் குஞ்சரிக்குக் கேள்வனாகி விட்டான் திருக்குமரன்..

அப்படியானவன் வள்ளி நாயகிக்கும் மணாளன் தான் என்பதை நமக்கு சுட்டிக் காட்டவே!..

செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்.. (4/43)
செல்வியாகிய அம்பிகையைப் பாகமாக வைத்த சிவபெருமான் சேந்தனாகிய முருகனை மகனாகக் கொண்டார் என்று புகழ்வதுடன் -

பரம்பொருளாகிய பரமேஸ்வரன் திரு வடிவங்கொண்டு
மறம் அழித்து அறம் வளர்ப்பதற்கு அடியார் முன்பாகத் தோன்றும் போது -

படை மலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்.. (6/18) - என்பது அப்பர் ஸ்வாமிகளின் திருவாக்கு..

அப்பர் ஸ்வாமிகளைப் போலவே ஞானசம்பந்த மூர்த்தியும் - முருகப் பெருமானின் அவதார நோக்கத்தைக் குறிக்கின்றார்..

சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே.. (2/74) - சேந்தன் ஆகிய முருகனைப் பெற்று தேவர்களது பகையைக் கெடுத்த ஈசன் திகழும் ஊர் திருப்பிரமபுரம் எனும் சீர்காழி!.. - என்று  பாடுகின்றார்..

வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடை ஒன்றுடையான் .. (2/63)
வள்ளி நாயகியை அணையும் திருக்குமரனின் தந்தையாகிய ஈசன் - வெள்ளி மலை போல விளங்குகின்ற காளை ஒன்றினை உடையவன்.. - என்று
வியக்கின்றார்..

அமர் தரும் குமரவேள் தாதையூர்.. (3/35) 
என்று தென்குடித் திட்டையை சிறப்பிக்கின்றார்..

மடமயில் ஊர்தி (உடைய முருகனின்) தாதை என்று ஈசனை (2/87) விளிக்கின்றார்..

பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள.. (3/67)
அமரர்களின் பகையை முடிப்பதற்காகவே  ஆறுமுகப் பெருமானை ஈசன் தோற்றுவித்தார் - என்னும் திருவாக்கு கவனிக்கத்தக்கது..

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் பல பாடல்களில் முருகனைப் பற்றிச் சொல்லி,

பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை பொடியாடு திருமேனி (7/38)
பொன் வண்ண ஆனைமுகன் மற்றும் மயிலூர்தியினை உடைய முருகவேள் இவர்களது தந்தை - என்று ஈசனைப் போற்றுகின்றார்..

இந்த அளவில் -
இன்னும் உள்ள தேனமுதத் துளிகளை வேறொரு பதிவில் சிந்திப்பதற்கு இறைவன் திருவருள் புரிவாராக..

திருத்தலம் 
கோழம்பம்
தற்காலத்தில் குழம்பியம்


இறைவன் ஸ்ரீகோகிலேஸ்வரர்
அம்பிகை ஸ்ரீசௌந்தர்யநாயகி

சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே..(5/64)
-: அப்பர் ஸ்வாமிகள் :-

போரில் எதிர்த்து வந்த சூரபன்மனைக் கொன்றழித்த வேற்படையை உடைய முருகவேளுக்குத் தந்தையும், கோழம்பம் எனும் தலத்தில்  தேவர்களுக்குத் தலைவன் -  என்று மேவி விளங்கும்
சிவபெருமானுக்கு அன்புடைய தொண்டர்கள், அமர லோகத்தினை ஆளுதற்கு உரிமை உடையவர் ஆவர்..

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ்.புதூர் வந்து அங்கிருந்து இத்திருக்கோயிலுக்கு வரலாம்..
**
ஓம் சரவண பவ குக
சண்முக சரணம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

 1. முருகனின் பெருமைகளை படித்து இன்புற்றேன். வாழ்க தமிழ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயன்றவரை பதிவில் சொல்லியிருக்கின்றேன்..

   தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. மூவர் கண்ட முருகன் அருமை. தேவார பகிர்வும், படங்களும் அருமை.
  சண்முக கடவுள் போற்றி! சரவணத் துதித்தாய் போற்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..