நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 02, 2023

மலர் முகம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 17
 புதன்கிழமை


" மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம் " - என்று அப்போதெல்லாம் கடைகளில் எழுதி வைத்திருப்பார்கள்..

அப்போது என்றால் 1960 - 70 களில்..

இப்போது அப்படியான வாசகங்களை மட்டுமல்ல மலர்ந்த  முகங்களைக் கூட காண முடிவதில்லை..

ஆங்காங்கே தெரிகின்ற புன்னகை, பொலிவு - எல்லாமே ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில் தான் என்பது புரிகின்றது..

ஏன்.. என்ன பிரச்னை?..

வேறொன்றும் இல்லை.. 

பிரச்னை தான் எல்லாருக்கும்  பிரச்னை!..

அங்கே இங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தது எல்லாம் ஏதோ ஒரு வகையில்  உள்ளங்கையில் இருக்கும்  கைத்தலபேசிக்குள் ஏதேதோ பெயர்களுடன் ஒட்டடையாய் படிந்திருக்கின்றன...

தொட்டதற்கெல்லாம் ஆய்வுகள்.. ஆலோசனைகள்.. 

இலை விழுந்ததில் இருந்து இதயத்தை அறுத்து சிகிச்சை செய்வது வரைக்கும்.. 

இனி எல்லாம் இப்படித் தான்!.. - என்றதன் அச்சாரமாக வந்து விழுந்து கொண்டு இருக்கின்றன....

இதை அப்படிச் சாப்பிடுங்கள்.
அதை இப்படிச் சாப்பிடுங்கள்.. - என்று பலவகை மருத்துவங்களுக்கு இடையே,

இட்லியை எண்ணெயில் பொரித்து எடுப்பது எப்படி?..  அதிரசத்தை அவித்து எடுத்து அடுக்குவது எப்படி?.. 

உங்கள் வீட்டில் ஒன்றுமே இல்லையா.. என்று தொடங்கி  சூப்பர் பிறியானி (பிரியாணி) செய்து அசத்தலாம் என்பது வரைக்கும் - அலசி எடுக்கின்ற ஆலோசனைக்  குப்பைகள்!..

வேடிக்கை விபரீதமான
 அவற்றை எல்லாம்  புறந்தள்ளி விட்டு
நல்ல வகையான உணவுகளில் எதை வேண்டுமானாலும் 
சாப்பிடுங்கள்..


நல்ல உணவு..

எது நல்ல உணவு?..
யார் தீர்மானிப்பது அதை!..

அரிசியைப் பிளந்து அதற்குள் வேறொரு மரபின் அணுவைப் பொதிந்து வைப்பவனா?..

அரிசிச் சோற்றுடன் வகை வகையாய் புலாலைக் கலந்து வைக்கும் பிரியாணிக் கடைக்காரனா?..

ஒட்டு முறையில் விளைந்த மாங்காய்களை சந்தைப் படுத்தியவனா?.. 

அவற்றில் ரசாயனம்  வைத்து  - பழம் என்று சொல்லி ஏமாற்றிப் பிழைக்கும்  வல்லரக்கனா?..

வல்லடி வழக்காக ஆகி விட்ட ஏமாற்று வணிகத்தை ஒதுக்கி விட்டால் -
நாம் தான் நமக்கு முதலாளி..

நமக்கு ஆகி வரும் நல்ல உணவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.. 

இதுதான் நியாயம்.. நீதி!..

காலம் அறிந்து சாப்பிடுங்கள்..
அளவு அறிந்து சாப்பிடுங்கள்..

நல்ல உழைப்புக்குப் பின் சாப்பிடுங்கள்..
அல்லது 
பசியெடுத்த பின் சாப்பிடுங்கள்..

ஏனென்றால், 
உடலுக்கு ஏதாவதொரு வழியில் சற்று கடினமான வேலைகள் தேவை..

அது உடலின் சதைக்கும் எலும்புக்கும் சாதகமாக இருக்க வேண்டுமே தவிர பாதகமாக இருந்து விட கூடாது..


பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டதாக உலகம் முழுதிலும் பரிதாபங்கள் பலப்பல..

பொதுவாக உடல் அமைவின்படி மாரடைப்பு என்பது வரலாம். 

ஆனால் உடற்பயிற்சியின் போது அதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது. உடற்பயிற்சியின் போது இதயத் துடிப்பும் ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்கின்றது.
ரத்தத்தில்  ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் 
போது அதைச் சமன் செய்வதற்காக இதயத்தின் வேகமும் அதிகரிக்கின்றது.. இதனால் ரத்தக் குழாய்களில் அழுத்தமும் கூடுகிறது.. 

இவை அனைத்தும் சேர்ந்து கொள்ளும் போது - இதற்கு ஏற்றபடி இதயத்தின் தன்மை இல்லா விட்டால் திடீர் மாரடைப்புடன் வேறு பாதிப்பும் ஏற்படக் கூடும் - என்பது பரவலாக தற்போது அறிவுறுத்தப்படுகின்றது

இந்நிலையில், 
உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு சிலர் வந்தது எப்படி என்று தெரியவில்லை..

உடலுழைப்பு வேறு.. 
உடற்பயிற்சி வேறு!..

பலரும் இன்றைக்கு உழைப்பையும் உடற்பயிற்சியையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்..

முயல் எப்போதும் ஓடிக் கொண்டும் அப்படியும்  இப்படியும் குதித்துக் கொண்டே இருக்கின்றது.. அது பெற்றிருக்கும் வரம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளே.. 

சில வகை முயல்கள் மட்டுமே ஒரு சில ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றன!..


ஆனால் -
ஓடுவது, குதிப்பது என்றால்  - என்ன என்றே தெரியாத 
ஆமைகள் நிலத்தில் சராசரியாக எண்பது முதல் நூறு ஆண்டுகள் வரையிலும் கடல் ஆமைகளில் சில  நூற்றைம்பது வருடங்களும் பிழைத்திருக்கின்றன!..

எல்லாம் அந்தந்த ஜீவன்களும் வாங்கி வந்த வரங்கள்..

எனவே, 
கடினமான உடல் உழைப்பு குறைந்து விட்ட இந்த கால கட்டத்தில் இயன்ற வரை அதிகாலையில் விழித்தெழுங்கள்..

இயல்பானவற்றுக்குப் பின் ஐந்து நிமிடமாவது மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் இருங்கள்.. 

ஆதியான இறைவனிடம் 
பிரார்த்தனை செய்யுங்கள்..

நல்ல உணவை  விருப்பமுடன் சாப்பிடுங்கள்..
தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்..

கிடைத்திருக்கும் வேலையை மனம் ஒன்றிச் செய்யுங்கள்..

ஒவ்வொரு நாளும் ஒரு கிமீ., தூரம் இயல்பாக  நடந்து சென்று திரும்பி வாருங்கள்..

பிடித்தமான இசையுடன் மகிழ்ந்திருங்கள்..

வீண் பிரச்னைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து விடுங்கள்..

மது, புகை போன்ற தீய பழக்கங்கள் கை வசம் இருந்தால் விட்டு விடுங்கள்..

குளிர்ந்த மன நிலையில் அமைதியாக இருங்கள்.
நிம்மதியாக ஓய்வெடுங்கள்..

கிடைக்கும் நேரத்தில்
இயன்றவரை பிறருக்கு உதவுங்கள்..


ஏனெனில், 
வாழும் வாழ்க்கை 
நம்முடையது..
முழுமையான மலர்ச்சியுடன்
 மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!..

உடல் நலனும்
மன நலனும்
முக்கியமானவை..

மலர்ந்த முகமும்
மலர்ந்த மனமும் தான் 
வாழ்வின் சிறப்புக்குக்  
காரணங்கள்!..

பிரியாணியோ
பிஸ்ஸாவோ அல்ல!..
**

வாழ்க நலம்
நலம் வாழ்க
***

18 கருத்துகள்:

  1. உண்மை.  அவசர யுகமாகி விட்டது.  எல்லோரும் ஆலோசனை அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அனுப்புபவர் உட்பட யாரும் அதை பின்பற்றுவதில்லை!  பெரிய செய்திகளாக இருந்தால் நிச்சயம் ஏதோ நல்ல செய்திதான் என்று நம்பி பார்வேர்ட் செய்து தள்ளி விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் ஆலோசனை அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  2. பதிவில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.  ஊர் முழுவதும், தெரு முழுவதும் பிரியாணி கடைகள்.  ஏதோ பெயர்கள்.  எல்லாக் கடைகளிலும் எண்ணெயில் சிவப்பாக ஏதோ பொரிந்து கோனே இருக்கிறது.  அக்காலத்தில் விழித்திருந்து அதையும் சாப்பிட மக்கள் கூட்டம் தவம் கிடக்கிறது.  சென்னையில் ஒரு கடையில் காலை நான்கு மணிக்கு பிரியாணி கிடைக்கும்.  அதை வாங்க அது கடைக்கு வரும் முன்பே பாத்திரங்களுடன் வரிசையில் மக்கள் காத்திருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அது கடைக்கு வரும் முன்பே பாத்திரங்களுடன் வரிசையில் மக்கள் காத்திருப்பார்கள்!///

      நல்ல மக்கள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. என்னுடைய ஸ்கூல் பேகில் ஒரு பெரிய ரோஜா படம் போட்டு அதில் இந்த வரிதான் எழுதி இருக்கும். "மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்" காது வைத்த யானைக்கலர் பை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு மந்திரச் சொல்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. சிறப்பான இன்றைய இளைய சமூகத்தினருக்கு அவசியமான அறிவுரை.

    ஆனால் கேட்கணும்.... முதலில் காதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அதெல்லாம் கேட்க
      மாட்டார்கள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  5. அருமை ஐயா...

    தன்னை போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஐயன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  6. அந்த "தான்" என்று வரும் இடம் சிறப்பானது...

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கை முறை மாறுவதால் உணவிலும் நம் உடல் இயக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும். மனதை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் அவசியம்...

    படங்கள் அழகோ அழகு! மாருதியாச்சே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் அவசியம்...

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  8. இப்போதைய உலகில் எது இல்லை அது இல்லை அந்தக்காலம் போல் இல்லை என்று சொல்வதை விட இப்போது இருப்பதில், கிடைப்பதில் வாழ்க்கை முறையில் நாம் எப்படி நம்மை உடல் நலத்திலும் மன நலத்திலும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று பயணித்தல் நலம் என்று தோன்றும் துரை அண்ணா இது என் தனிப்பட்டக் கருத்து. இப்போது மோசமாகி வருகிறது எனும் எண்ணம் வலுப்பெறும் போது மனம் கோபம் வருத்தம் என்று எதிர்மறையாகச் சோர்வுறுமே....எந்தச் சூழலிலும் மனதை சமன் நிலையோடு, மகிழ்வோடு வைத்தல் நல்லது என்று படும். நீங்கள் தொடக்கத்தில் சொல்லியிருக்கும் அதேதான்...

    ஆனால் பாருங்க துரை அண்ணா கடைக்குப் போனால், காய்களின் விலை வாசி, பொருட்களின் விலைவாசி துரத்துதே பாவம் மக்கள் எப்படி மலர்ந்து புன்னகைப்பாங்க!!!!!!!!!!!!!!

    இங்கு பாலின் விலை கூடிவிட்டது. எனவே எல்லாப் பொருட்களின் விலையும் கூடுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இங்கு பாலின் விலை கூடிவிட்டது. எனவே எல்லாப் பொருட்களின் விலையும் கூடுகிறது.///

      இன்னும் விலைவாசிகள் ஏற்றப்படும்..

      மக்களின் விருப்பம் அதுதானே...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அருமையான பதிவு.
    மலர் முகம் தலைப்பும், மாருதி அவர்களின் மலர்ந்த முகம் ஓவியமும் அருமை.
    வள்ளி கணவன் பேரை வழி போக்கன் சொன்னாலும் என்ற காவடி சித்து பாடல் நினைவுக்கு வருகிறது. எது போனாலும் பரவாயில்லை முருகன் குறுநகை மட்டும் போதும் என்ற பாடல் கேட்டு இருப்பீர்கள்.

    பட்டுக்கோட்டையார் பாடலும் இருக்கிறது

    இணையில்லா மனையாளின்
    வாய்மொழியே இன்பம் – அவள்
    இதழ் சிந்தும் புன்னகையே
    அளவில்லாத இன்பம்..//

    பொன் நகை வேண்டாம், புன்னகை போதும்.
    மலர்ந்த முகத்தை கண்டால் நம் முகமும் மலரும் .

    நீங்கள் சொல்வது போல அளவான ஆரோக்கியமான உணவு,
    நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை உண்ண வேன்டும். அளவான உடற்பயிற்சி, அளவான தியானம், அளவான பேச்சு
    இறைவனிடம் நம்பிக்கை , எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை போதும்.


    இரண்டொழுக்கப் பண்பாடு என்று வேதாத்திரி மகரிஷி சொல்வது:-
    1.நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்,
    2.துன்ப படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை போதும்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..