நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 10, 2023

பாத யாத்திரை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 25
வியாழக்கிழமை


தஞ்சையில்
முருக வழிபாடு..
 
அடியார் தம் அல்லல் அகற்றும் ஆறுமுகப் பெருமான் அறுபடையின்  அழகனாக - ஆறு திருத் தலங்களில் அருள் பாலித்து வருகின்றான்..


முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளைப் போல - முருகனை மூலஸ்தானத்தில் கொண்டு - தஞ்சை மாநகரில்  ஆறு கோயில்கள் அமைந்துள்ளன..

இதனை சிந்தையில் கொண்டு தஞ்சை நகரில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தின் கடைசி ஞாயிறன்று சிறப்பான முறையில் முருக தரிசன பாதயாத்திரை நடைபெறுகின்றது..

நூறாவது ஆண்டினை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வைபவத்தினை வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை குழுவினர் முன்னெடுத்து நடத்துகின்றனர்.

ஆடி மாதத்தின் கடை ஞாயிறன்று தொடர்புடைய முருகன் கோயில்களில் - பெருமானுக்கு அபிஷேக அலங்காரங்களுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது.. 


இதன்படி -
தஞ்சை ராஜ ராஜேஸ்வரமாகிய பெரிய கோயிலில் இருந்து பக்தர்கள் - காலை ஏழு மணியளவில் நகரில் உள்ள முருகன் கோயில்கள் ஆறினையும் தரிசிப்பதற்கு பாத யாத்திரையாகப் புறப்படுவர்.. 

பிற ஊர்களில் இருந்தும் அன்பர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது சிறப்பு..

முதலில்  - 
மேல அலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்) தரிசனம்..

தொடர்ந்து அப்பகுதி மக்களால் ராஜராஜ சமய சங்கத்தில் இட்லி பொங்கல் கேசரி தேநீர் - என, காலை உணவு..

தொடர்ந்து - வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்ச்சோலை)..

மூன்றாவதாக - கீழவாசல் குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி) தரிசனம் ஆனதும் கீழவாசல் வட்டார வணிகர்களால் சிறப்பான அன்ன தானம். மதிய விருந்து..

நான்காவதாக,  கீழவாசல் ஆட்டு மந்தைத் தெரு தண்டாயுதபாணி கோயில் (சுவாமிமலை) தரிசனம்.. 

அடுத்து - சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி) தரிசனம்..

சின்ன அரிசிக்காரத் தெரு கடந்து மகர்நோன்புச் சாவடி வழியாகச் செல்லும் போது சௌராஷ்டிர மக்களின் உபசரிப்பு..

ஆறாவதாக - பூக்காரத்தெரு சுப்ரமணிய சுவாமி கோயில் (திருச்செந்தூர்) .. 

பூக்காரத் தெருவிற்கு பாத யாத்திரை வந்து சேரும் போது மாலைப் பொழுதாகி விடும்.. அந்நேரத்தில அங்குள்ள மக்களால் மிகப்பெரிய அளவில் விருந்து உபசரிப்பு நடத்தப்படும்..

இந்த பாதயாத்திரை,  பெரிய கோயில்  முருகன் சன்னதியில் சிறப்பு வழிபாடுகளுடன் நிறைவடையும்..

மேல அலங்கம் முருகன் கோயில் மாடக் கோயிலாகும்..
வடக்கு அலங்கம் முருகன் கோயில் மேற்கு நோக்கியது.. பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் கருவறையில் தவழும்..

கீழவாசல் ஆட்டு மந்தைத் தெரு தண்டாயுதபாணி கோயிலும்
சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயிலும்  மேற்கு நோக்கியவையே.. இங்கு முருகன் சந்நிதியில் யானை வாகனம்..

திருச்செந்தூரில் இருந்து வந்த முருகனை ஆதாரமாகக் கொண்டு பூக்காரத் தெரு சுப்ரமணிய சுவாமி கோயில்..
கோயிலுக்கு முன்பாக காவிரியின் கிளை நதியான புது ஆறு.. 

இப்படி ஆறு கோயில்களுக்கு  பக்தர்கள் சென்று வணங்குவதை - எண்பது ஆண்டுகளுக்கு முன்பு  பெரிய கோயிலில் இருந்த யோகி ஒருவர்  தொடங்கி வைத்தார் என்பது செவிவழிச் செய்தி.. 

இக்கோயில்களைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்
தஞ்சையம்பதியில் பதிவிட்டதாக நினைவு.. 

பாதயாத்திரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர்..

2010 ல் இப்படியான பாதயாத்திரை சென்று நானும் தரிசித்துள்ளேன்.. 

சென்ற ஆண்டு உடல்நலம் மோசமாக இருந்தது.. இப்போது அவனருளால் மீண்டிருக்கின்றேன் என்றாலும் முழங்கால் மூட்டு வலி இன்னும் குறையவில்லை..  அவனைத் தான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.

எதிர்வரும்,
ஆடி 28 ஞாயிற்றுக் கிழமை (13/8) தஞ்சையில் பாத யாத்திரை முருக வழிபாடு நிகழ இருக்கின்றது..

பதிவில் - தஞ்சை 
ராஜராஜேஸ்வரத்தின்
முருக தரிசனம்..
**

அவனே ஆறுதல்  - அவன்
அருளே அருமருந்து..
**

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே.. 38
-: கந்தரலங்காரம் :-
**

முருகா முருகா
முருகா முருகா..
***

16 கருத்துகள்:

  1. ஆயின், இப்போது பாதயாத்திரையில் இருக்கிறீர்கள் என்று பொருளா?  நல்ல படி தரிசனம் செய்யுங்கள் - எங்கள் சார்பாகவும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நல்வரவு..

    பாத யாத்திரை வரும் ஞாயிறன்று..

    எல்லா ஊர்களையும் போலவே இங்கும் பொறுப்பின்றிக் கிட்க்கும் சாலைகள்..

    உடல் நலம் உடையவர்களுக்கே
    செருப்பு இன்றி நடக்க இயலாத நிலை..

    எனக்கோ முழங்கால் வலி.. தடுமாற்றம்.. வெயிலின் உச்சம்..

    அவனருள் ஒன்றே துணை..

    அன்பின் வருகைக்கு
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ பாதயாத்திரையில் செருப்பு கூடாது இல்லையா?

      கீதா

      நீக்கு
    2. பாதயாத்திரையில் செருப்பு கூடாது..

      ஆனால் இன்றைய சாலையில் செருப்பு இல்லாமல் நடக்க முடியாது..

      ஜல்லிக் கற்கள் அரண்டு புரண்டு கிடக்கின்றன.

      நீக்கு
  3. உடல் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.. தஞ்சையில் ஆறுபடை வீடு....போன்ற...இவ்வாறான வழிபாடுகள் நம்மை இறைவனிடம் அணுக்கமாகக் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள். போற்றத்தக்க முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு
  4. துரை அண்ணா, பாத யாத்திரை நல்ல விஷயம்தான். உங்கள் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பார்த்துக்கோங்க. அடுத்த முறை உங்க மூட்டுவலி எல்லாம் சரியாகிவிடும். போவீங்க! தரிசிப்பீங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நன்றி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  5. பாதயாத்திரை செய்திகள் அருமை. முருகனின் படங்கள் எல்லாம் மிக அருமை. கந்தர் அலங்கார பாடலை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கந்தர் அலங்கார பாடலை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் மிக அருமை. அழகான முருகப் பெருமானை தரிசித்து கொண்டேன். தஞ்சையிலுள்ள முருகப் பெருமானின் ஆறுபடை கோவில்களைப் பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டேன். பாத யாத்திரை பற்றிய விபரமும் அறிந்து கொண்டேன். ஏற்கனவே இக்கோவில்களுக்குச் சென்று தரிசித்த தங்களுக்கு இறைவன் தேக பலத்தையும், பாத பலத்தையும் தருவான். அடுத்த முறை நீங்களும் கண்டிப்பாக உற்சாகத்துடன் பங்கு கொள்வீர்கள் . கவலை வேண்டாம். இறைவன் நம் விருப்பத்தை கண்டிப்பாக பூர்த்தி செய்வார். நல்லதொரு ஆறுபடை கோவில்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இறைவன் தேக பலத்தையும், பாத பலத்தையும் தருவான். அடுத்த முறை நீங்களும் கண்டிப்பாக உற்சாகத்துடன் பங்கு கொள்வீர்கள் ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  7. அழகிய முருகன் அலங்காரங்கள் கண்கொள்ளாக் காட்சி.

    பாதயாத்திரை பற்றி அறிந்தோம்.

    முருகனுக்கு அரோகரா.

    பதிலளிநீக்கு
  8. உடம்பு முக்கியம். எனக்கும் இப்போதெல்லாம் செருப்பு இல்லாமல் நடக்க முடிவதில்லை. வீட்டிலேயே ஒரு சின்னக் கடுகு காலில் பட்டாலும் வலி துடித்துப் போகிறது மலையே காலில் குத்தினாற்போல்.
    நீங்கள் எழுதி இருக்கும் இந்தப் பாத யாத்திரை பற்றி இன்றே தெரிந்து கொண்டேன். காரைக்குடி அருகே பச்சைக்காவடி என்னும் சாமியார் ஒருவர் வருடா வருடம் பாத யாத்திரை நடத்துவார். ஓரிரு முறை அவர்கள் திருச்சியில் தங்கினப்போப் போய் உபசரித்ததும் உண்டு. இப்போல்லாம் முடியலை.காசிக்குக் கூடப் போயிட்டு வந்திருக்கார்கள் பாத யாத்திரையாகவே.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..