நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2023

சாய்க்காடு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 5
செவ்வாய்க்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
ஐந்தாவது திருத்தலம்..

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திரு சாய்க்காடு


இறைவன்
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ குழலினும் இன்மொழியம்மை

தீர்த்தம்
ஐராவத தீர்த்தம் காவிரி
தல விருட்சம்
கோரைப்புல்


காஷ்யப முனிவரின் மனைவி அதிதி வழிபட்ட தலம்.. 

தனது தாய் அதிதிக்காக இத்தலத்தை பெயர்த்து தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டு தோல்வி அடைந்த இந்திரன் தன் பிழையுணர்ந்து மீண்டும் வழிபட்டு நலம் பெற்றான்..

துர்வாச முனிவரின் சாபம் பெற்ற ஐராவதமும் வழிபட்ட தலம்..

முற்பிறவியில் சிலந்தி ஒன்று  சிவ வழிபாடு செய்து திரு ஆனைக்காவில் தனக்கு எதிராய் இருந்த யானையைக் கொன்றது..

அதுவே மீண்டும் அரச குடும்பத்தில் கோச் செங்கட் சோழராகப் பிறந்தது.. கோச் செங்கட் சோழரால் 
யானை ஏற முடியாதபடி எழுப்பப் பெற்ற மாடக் கோயில் இது..


இங்கு கடலில் கிடைத்த பஞ்சலோகத் திருமேனி - வில்லேந்திய 
வேலவர்  சிறப்பு.. 

இயற்பகை நாயனாரும் அவரது மனைவியும்
இயற்பகை நாயனாரின் அவதாரத் தலம் இது..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் இரண்டும்
நாவுக்கரசர் திருப்பதிகங்கள் இரண்டும் கிடைத்துள்ளன..

சீர்காழியில் இருந்து 12 கிமீ., தொலைவில் உள்ளது. சீர்காழி மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.. 

சாய்க்காட்டில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் தான் பூம்புகார்..

இத்தலத்தைத் தரிசிக்கின்ற வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை..


நீநாளு நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவி கேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.. 2/41/3
-: திருஞானசம்பந்தர் :-

இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம்  அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவினாரே..
4/65/5
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. இந்த இடங்களை எல்லாம் தரிசிக்க வேண்டும் என்று ஆவல் பெருகுகிறது. எப்போது வாய்க்கும் என்றுதான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றுக்கும் நேரம் வரும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தல வரலாறு நன்று. உங்களுக்கே இன்னும் தரிசனம் கிடைக்கலைனா எனக்கு எப்போ கிடைக்குமோ.

    70+ கோவில்களில் சில வைணவக் கோவில்களையும் கோட்செங்கணான் கட்டியிருக்கிறார் (சிலந்தி யானை கதை). அதில் திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலும் ஒன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படித்திருக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சாய்க்காடு இறைவன் ஈஸ்வரரையும், அன்னை உமா தேவியையும், வேலுடைய முருகனையும் மனதார வணங்கிக் கொண்டேன். சிறப்பான இக்கோவில் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன். இங்கெல்லாம் சென்று தரிசிக்கும் வாய்ப்பை அந்த இறைவன்தான் அனைவருக்கும் அருள வேண்டும். தினம் தினம் ஒரு கோவிலைப் பற்றிய நல்ல செய்திகளாக தரும் தங்களுக்கு மிகவும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இங்கெல்லாம் சென்று தரிசிக்கும் வாய்ப்பை அந்த இறைவன்தான் அனைவருக்கும் அருள வேண்டும்.//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சாய்க்காடும், பூம்புகாரும் போக எத்தனையோ முயற்சித்தும் போக முடியலை. சீர்காழி வரை போயிட்டு இங்கெல்லாம் போகாமலே வந்தாச்சு. வேதாரண்யமும் போகலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு என்ன சொல்வது?..

      இறைவன் தானே வந்து அருள்வான்..

      நீக்கு
  5. கோவில் தலவரலாறும், படங்களும் அருமை. அடிக்கடி பார்த்த கோவில். பல நினைவுகளை தந்தது இன்றைய சாய்க்காடு கோவில்.
    வில் ஏந்திய முருகன் மிக அழகாய் இருப்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தேவாரத்தை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..