நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

காசிக்கு நிகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசிக்கு நிகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 23, 2023

வாஞ்சியம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 6
புதன்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
ஆறாவது திருத்தலம்..

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திருவாஞ்சியம்


இறைவன்
ஸ்ரீ வாஞ்சிநாதர்


அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை


தீர்த்தம்  குப்த கங்கை
தல விருட்சம் சந்தன மரம்.


மரண பயத்தை - யம பயத்தை  போக்குகின்ற தலம் திருவாஞ்சியம் எனப்படும் ஸ்ரீவாஞ்சியம்..


சிவபெருமானை மதிக்காமல்
தட்சனின் நடத்திய யாகத்திற்குச் சென்ற சூரியன் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு  தனது ஒளியை இழந்தான்..

இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த குப்த கங்கையில் நீராடி சூரியன் மீண்டும் ஒளி பெற்றதால் தலபுராணம்..

திருமகளைப் பிரிந்த மஹாவிஷ்ணு இங்கே  வழிபட்டு மீண்டும் திருமகளை அடைந்தார்..

யமதர்மன் தான் உலக உயிர்களைக் கவர்ந்து எடுப்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில் வருத்தமுற்று ஈசனை நோக்கித் தவம் இயற்றினார்.. 

ஈசன் காட்சி தந்து யமதர்மனின் மன உளைச்சலைத் தீர்த்தருளினார்.. இதனால் மகிழ்ந்த யமதர்மன் சிவசக்தியாகிய அம்மையப்பனை தோளில் தாங்கி வலம் வந்தார்.. 


இக்கோயிலில் யம தர்ம வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருள்கின்றார்..


கோயிலில் யமதர்மன் சித்ர குப்தன் இருவரும் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர்.. 

இத்தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தால் போதும்.. கயிலாயத்தில் சிவ கணமாக விளங்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது தல வரலாறு..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும்
நாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும்  சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும்  கிடைத்துள்ளன..

இங்கே மரணத்தீட்டு எனில் கோயில் அடைக்கும் வழக்கம் இல்லை..

திரு ஆரூரை அடுத்துள்ள
நன்னிலத்தில் இருந்து  9 கிமீ., தூரத்தில் ஸ்ரீவாஞ்சியம்..

ஆறு ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை  தரிசித்திருக்கின்றேன்..


கையி லங்குமறி ஏந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யார் அடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற் றார்திரு வாஞ்சியத்து
ஐயர் பாதமடை வார்க்கடையா அரு நோய்களே.. 2/7/5
-: திருஞானசம்பந்தர் :-

அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மால்இட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க்கு அமரரே.. 5/67/4
-: திருநாவுக்கரசர் :-

வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை அல்லால்
இறையெனக் கருதுதல் இலமே.. 7/76/9
-: சுந்தரர் :-

திருவாஞ்சியத்தில்
சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு 
மகிழ்ந்த வண்ணமும் 
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2023

சாய்க்காடு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 5
செவ்வாய்க்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
ஐந்தாவது திருத்தலம்..

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திரு சாய்க்காடு


இறைவன்
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ குழலினும் இன்மொழியம்மை

தீர்த்தம்
ஐராவத தீர்த்தம் காவிரி
தல விருட்சம்
கோரைப்புல்


காஷ்யப முனிவரின் மனைவி அதிதி வழிபட்ட தலம்.. 

தனது தாய் அதிதிக்காக இத்தலத்தை பெயர்த்து தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டு தோல்வி அடைந்த இந்திரன் தன் பிழையுணர்ந்து மீண்டும் வழிபட்டு நலம் பெற்றான்..

துர்வாச முனிவரின் சாபம் பெற்ற ஐராவதமும் வழிபட்ட தலம்..

முற்பிறவியில் சிலந்தி ஒன்று  சிவ வழிபாடு செய்து திரு ஆனைக்காவில் தனக்கு எதிராய் இருந்த யானையைக் கொன்றது..

அதுவே மீண்டும் அரச குடும்பத்தில் கோச் செங்கட் சோழராகப் பிறந்தது.. கோச் செங்கட் சோழரால் 
யானை ஏற முடியாதபடி எழுப்பப் பெற்ற மாடக் கோயில் இது..


இங்கு கடலில் கிடைத்த பஞ்சலோகத் திருமேனி - வில்லேந்திய 
வேலவர்  சிறப்பு.. 

இயற்பகை நாயனாரும் அவரது மனைவியும்
இயற்பகை நாயனாரின் அவதாரத் தலம் இது..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் இரண்டும்
நாவுக்கரசர் திருப்பதிகங்கள் இரண்டும் கிடைத்துள்ளன..

சீர்காழியில் இருந்து 12 கிமீ., தொலைவில் உள்ளது. சீர்காழி மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.. 

சாய்க்காட்டில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் தான் பூம்புகார்..

இத்தலத்தைத் தரிசிக்கின்ற வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை..


நீநாளு நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவி கேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.. 2/41/3
-: திருஞானசம்பந்தர் :-

இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம்  அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவினாரே..
4/65/5
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், ஆகஸ்ட் 21, 2023

இடைமருது

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 4
 திங்கட்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
நான்காவது திருத்தலம்

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திருஇடைமருதூர்


இறைவன்
ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ பிரஹத் குஜாம்பிகை

தீர்த்தம் அமிர்த தீர்த்தம், காவிரி
தல விருட்சம் 
மருத மரம்


பிரம்மாண்டமான சுதை நந்தி இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று..

ஸ்வாமி, அம்பாள்  சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை..


இருபத்தேழு நட்சத்திர லிங்கங்கள் இங்கு விளங்குகின்றன...


அம்பாள், விநாயகர், முருகன், மஹாவிஷ்ணு, லக்ஷ்மி, காளி, சரஸ்வதி, வேதங்களுடன் வசிஷ்டரும் வழிபட்ட தலம்..

வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற தலம்..


மூகாம்பிகை - எனவும் அம்பிகை தனி சந்நிதி கொண்டிருக்கின்றாள்..

தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்ற தலம்..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் ஆறும் நாவுக்கரசர் திருப்பதிகங்கள் ஐந்தும் சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன..

இளவரசி அம்முனு பாயி
தஞ்சையை மராட்டிய மன்னர் பிரதாப் சிங் ஆட்சி செய்த காலத்தில் அவரது மாமன் மகளான இளவரசி அம்முனு பாயி என்பவர் மன்னரை மணந்து கொள்ள வேண்டி - தன்னைப் போலவே - 1853 ல் செய்து வைத்த பாவை விளக்கு இந்தக் கோயிலில் இன்றும் திகழ்கின்றது..

குடந்தையில் இருந்து நகரப் பேருந்துகள் இயங்குகின்றன..

சில ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை  தரிசித்திருக்கின்றேன்..
**

பொழில் அவன் புயல் அவன் புயல் இயக்கும்
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும்
கழல் அவன் கரியுரி போர்த்து உகந்த
எழில் அவன் வளநகர் இடைமருதே..1/110/5
-: திருஞானசம்பந்தர் :-

வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கும இடைமருதா என்று
பாதம் ஏத்தப் பறையும்நம் பாவமே..5/14/9
-: திருநாவுக்கரசர் :-

குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானங்
கடிய வாயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக்கு உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.. 7/60/6
-: சுந்தரர் :-

இடைமரு துறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், ஆகஸ்ட் 17, 2023

கௌரிமாயூரம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 32
வியாழக்கிழமை

காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
மூன்றாவது திருத்தலம்

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திருமயிலாடுதுறை


இறைவன்
ஸ்ரீ மயூரநாதர்


அம்பிகை
ஸ்ரீ அபயாம்பிகை

தீர்த்தம் ரிஷப தீர்த்தம், காவிரி
தல விருட்சம் மாமரம்

கௌரிமாயூரம்..

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது பழமொழி..

இத்தலத்தில் அம்பிகை மயில் வடிவாகி ஈசனை வழிபட்ட போது ஈசனும் மயிலாகத் தோன்றி மயூர தாண்டவம் நிகழ்த்தியதாக ஐதீகம்..

இத்தலத்தில் ஸ்வாமி, அம்பாள்  சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை..


துலா மாதம் எனும் ஐப்பசியில் கங்கையானவள் இங்கே காவிரியுடன் கலந்து பாய்வதாக தலபுராணம்..

அதனால்  ஐப்பசியில் பெருந் திருவிழா நிகழ்கின்றது..
இங்கு காவிரியின் துலாக் கட்டம் வெகு சிறப்புடையது..


குதம்பைச் சித்தர் முக்தி நலம் எய்தியது இத்தலத்தில் தான்.. 
அவரது ஜீவ சமாதி கோயிலில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு அருகில் உள்ளது..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் இரண்டும் நாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன..

மாவட்டத் தலைநகரான மயிலாடுதுறைக்கு பேருந்து ரயில் வசதிகள் தாராளமாகவே உள்ளன.. 

பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிமீ., தூரத்தில் ஸ்ரீ அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது..

சில ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை  தரிசித்திருக்கின்றேன்..


தணியார் மதிசெஞ் சடையான் தன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே..1/38/5
-: திருஞானசம்பந்தர் :-

வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொலாள் உமைபங்கன் அருளிலே.. 5/39/4
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், ஆகஸ்ட் 16, 2023

திரு ஐயாறு

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 31
புதன் கிழமை


இன்று
ஆடி அமாவாசை..
அப்பர் பெருமானுக்கு கயிலாயத் திருக்காட்சி அருளப் பெற்ற நாள்..


காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
இரண்டாவது திருத்தலம்

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திரு ஐயாறு


இறைவன்
ஸ்ரீ ஐயாறப்பர்


அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

தீர்த்தம் 
காவிரி, சூரிய தீர்த்தம்
தல விருட்சம் வில்வம்

பஞ்சநதீஸ்வரம்..

காவிரியின் வடகரையில் உள்ள இக்கோயிலில் தெற்கு வாசலே பிரதானம்..

ஸ்ரீ ஆட்கொண்டார் ஸ்வாமி
ஏழைச் சிறுவனை விரட்டி வந்த யமனை துவாரபாலகர் சிவாம்சம் பெற்று விரட்டியடித்து ஆட்கொண்டார் என சந்நிதி கொள்ள நந்தி வீற்றிருக்கின்றார்..

இந்த சந்நிதிக்கு எதிரே தான் கலிய நாயனார் அமைத்த குங்கிலியக் குண்டம்.. இங்கு குங்கிலிய தூபம் இடுவது சிறப்பு..


ஐயாறப்பர் அருகில்
அன்னை அறம் வளர்த்த நாயகி.. முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றுவதாக ஐதீகம்..

இத்தலத்தில் ஸ்வாமி, அம்பாள்  சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை..




மாதர்ப் பிறைக்கண்ணி யானை 
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் 
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் 
ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங் களிறு 
வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம் 
கண்டறி யாதன கண்டேன்.. 4/3/1

படாத பாடுபட்டு திருக் கயிலைக்கு சென்ற அப்பர் பெருமானுக்குத் திருக்காட்சி அருளப் பெற்ற தலம்..

காவிரியின் தென் கரையை வந்தடைந்த சுந்தரர் காவிரியில் வெள்ளப் பெருக்கினைக் கண்டு திடுக்கிட்டு அடிகளோ என்று ஓலமிட, அவருடன் சேர்ந்து பிள்ளையாரும் சேர்ந்து ஓலமிட்டு அருளியதாக மரபுச் செய்தி..

கும்பகோணம் கல்லணை மற்றும் அரியலூர் வழியாக திரு ஐயாற்றுக்கு வரலாம் என்றாலும் தஞ்சையைக் கடந்து வருவதே சிறப்பு..

ஏனெனில் இந்த வழியில் தான் - வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி எனும் ஐந்து ஆறுகளும்..

ஐந்து ஆறுகளைக் கடப்பதே புண்ணியம்..
மூவரும் கடந்த வழி இதுவே..

ஆயினும்,
ஆறு என்பதற்கு வழி என்ற பொருள் கொண்டு ஐம்புலன்கள் என்று தெளிவு பெறுவதும் சிறப்பு..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஐந்தும்
நாவுக்கரசர் திருப்பதிகம் பன்னிரண்டும் சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன..

நந்தீசன் திருமணம்
நந்தீசர் பிறப்பும் திருமணமும் தொடர்ந்து
ஏழூர் பல்லக்கு எனும் திருவிழாவும் இத்தலத்தின் சிறப்புகள்.. 

தஞ்சையில் இருந்து திரு ஐயாற்றுக்கு பேருந்துகள் இயங்குகின்றன..

பலமுறை இத்தலத்தை  தரிசித்திருக்கின்றேன்..


கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திரு ஐயாறே.. 1/130/3
-: திருஞானசம்பந்தர் :-


கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :-

பரவும் பரிசொன் றறியேன்நான்
பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக் கோட்டத் தையா றுடைய அடிகேளோ!.. 
7/77/1
-: சுந்தரர் :-

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திரு ஐயாறா போற்றி..
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், ஆகஸ்ட் 14, 2023

திருவெண்காடு

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 29
 திங்கட்கிழமை


காசியம்பதிக்கு சமமானதாகச் 
சொல்லப்படும் ஆறு தலங்களுள் 
முதலாவது திருத்தலம்

விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..

திருவெண்காடு


இறைவன் 
ஸ்ரீ ஸ்வேதாரண்யேசுவரர்
அம்பிகை
ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை

தீர்த்தங்கள்
சூரிய, சந்திர, அக்னி 
தலவிருட்சங்கள்
ஆல், கொன்றை, வில்வம்.

இருபத்தோரு தலைமுறைகளையும் ஈடேற்றும் தலம்..

இத்தலத்தில் பிரமன் வழிபட்டு அம்பாளிடம்  உபதேசம் பெற்றதால் அம்பாளுக்கு பிரம வித்யாம்பிகை என்ற திருப்பெயர். 

இந்திரனின் - வெள்ளை யானை வழிபட்டு துர்வாச முனிவரின் சாபம் நீங்கப் பெற்றது..

மருத்துவன் என்ற அசுரன் பிரம்மனிடம் வரம் பெற்று வழக்கம் போல தேவர்களுக்கு இன்னல்கள் செய்தான்.. 

அவனை அடக்கும்படி ஈசன் நந்திகேசனை அனுப்பி வைக்க மருத்துவாசுரன் நந்திகேசனை எதிர்த்து தாக்கினான்..


ஈசன் சினம் கொண்டு
ஸ்ரீ அகோர மூர்த்தி - எனத் தோன்றினார்.. 

அவரைக் கண்டு  அச்சமடைந்த மருத்துவாசுரன் அடங்கி ஒடுங்கி  அழிந்த தலம்..

இத்தலத்தில் ஸ்வாமி அம்மன் சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை..

அம்மனின் சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும்.. 


அம்மன் சந்நிதிக்கு அருகில் புதன் சந்நிதி..
நவகிரகங்களில் புதன் தொழுத நலம் பெற்ற தலங்களில் இதுவும்
ஒன்று..

பட்டினத்தடிகளின் இயற்பெயர் திருவெண்காடர் என்பதாகும்..

மயிலாடுதுறையில் இருந்தும் சீர்காழியில் இருந்தும் பேருந்துகள் இயங்குகின்றன..

சில ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தை  தரிசித்திருக்கின்றேன்..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் மூன்றும்
நாவுக்கரசர் திருப்பதிகம் இரண்டும் சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன..


சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை இறையவனே.. 2/47/7
-: திருஞானசம்பந்தர் :-

கூடி னான்உமை யாள்ஒரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னார் அடியே அடை நெஞ்சமே.. 5/49/6
-: திருநாவுக்கரசர் :-

குடம் எடுத்து நீரும் பூவுங் கொண்டு 
தொண்டர் ஏவல் செய்ய
நடம்  எடுத்தொன் றாடிப் பாடி
நல்குவீர் நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாதோர்
பாகமாக வார்கடல் வாய்
விடம் மிடற்றில் வைத்த தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.. 7/6/5
-: சுந்தரர் :-

விருந்தினன் ஆகி வெண்கா டதனில்
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***