தலைநகருக்குச் சென்றிருந்த
பாணர் வீட்டு வாசலுக்கு வந்து விட்டார்..
சமையலுக்குள் முனைப்பாக இருந்த அவள் வாசலுக்கு வந்து பார்க்காமலேயே கேட்கின்றாள்..
அரசரைப் புகழ்ந்து பாடுதற்குச் சென்றிருந்தீர்களே.. என்ன பரிசு கிடைத்தது?..
களபம்!.. என்கிறார் பாணர் பெருமிதத்துடன்...
அதைக் கேட்ட அவரது மனைவிக்கு களபம் எனில்
சந்தனம் எனப் புரிந்தது..
திங்கிற சோத்துக்கு வழியக் காணோம்.. இந்தக் கெரகத்துல பூசிக்கிறதுக்கு சந்தனமா!. - என, நொந்து கொண்டு, நீங்களே பூசிக் கொள்ளுங்கள் என்கிறாள்..
தான் சொன்னதைத் தன் மனைவி தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்த பாணர் அவளுடன் மேலும் விளையாட எண்ணியவராக
மாதங்கம்!.. என்கிறார்.
அவளோ, சந்தனக் கட்டைகளுடன் சிறப்புடைய பொற் காசுகளும் என நினைத்துக் கொண்டு, இனி நல்ல காலம் தான் நமக்கு என்கிறாள் மகிழ்ச்சியுடன்..
தொடர்ந்து, வேழம் கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.பாணர்
மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, நல்லது கடித்துத் துப்புங்கள் என்கிறாள்
பாணர், புன்சிரிப்புடன், கம்பமா கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
அவள் இது என்ன வேடிக்கை.. எதற்காக கம்பு மாவு!?.. எனக் குழம்பியவளாக , இதையுமா கொடுத்தான் அரசன்?.. என, நினைத்துக் கொண்டாலும்
நல்ல களி செய்து களிக்கலாம் என்கிறாள்.
இதற்கு மேலும் இந்த விளையாட்டு சரி வராது என உணர்ந்த பாணர், கைமா கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்..
அப்போதுதான் கணவன் யானையுடன் வந்திருக்கின்றான் என்பது விளங்குகின்றது அவளுக்கு..
யானையின் தீனிக்கு என்ன செய்வது!?.. எனக் கலங்கினாலும் - வெளியே ஓடி வந்து - ஆனையின் மீது அமர்ந்திருக்கின்ற கணவனை ஆவலுடன் பார்க்கின்றாள்..
- என்று பாடல் நிறைவு செய்யப்படுகின்றது..
சமையலுக்குள் முனைப்பாக இருந்த அவள் வாசலுக்கு வந்து பார்க்காமல் கேள்வி கேட்டதே நல்லது..
இல்லையெனில் இப்படியான பாடல் நமக்குக் கிடைத்திருக்குமா!..
யானைக்குத் தமிழில் எத்தனைப் பெயர்கள் என்பதைப் பாருங்கள்.
**
இரட்டைப் புலவர்கள்..
ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் விளங்காது என்றும் அறியப்படுகின்றது.
கால் விளங்காதவரை பார்வையற்றவர் தோளில் சுமந்து கொள்ள
பார்வையற்றவருக்கு மற்றவர் வழி கூறுவார்..
ஊர் ஊராக இவர்களது பயணம் தொடர்ந்திருக்கின்றது..
கவியின் முதல் இரு அடிகளை ஒருவரும் ஈற்றடிகளை மற்ற்வரும் பாடி முடிக்கின்ற வல்லமை பெற்றிருந்தனர்..
ஒருமுறை மதுரையில் குளிக்கும் போது துவைத்து அலசிய வேட்டி நழுவிச் செல்வதை கண்டு சொல்லிய முடவர் தம் கூற்றுக்கு பார்வையற்றவர் மொழிந்ததே ஈற்றடிகள்..
அந்தக் காலத்தில் வேட்டிக்குக் கலிங்கம் என்றும் பெயர் இருந்திருக்கின்றது.