நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 30, 2024

நினைவெல்லாம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 13
புதன் கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க


நினைவெல்லாம் பகுதி தொடர்கின்றது..

எப்போதும் கலகலப்பாக இருக்கின்ற பத்தாம் வகுப்பு நிசப்தமாக இருந்த விந்தை..

வழக்குரை காதை:

சிலப்பதிகாரத்தின் இந்தப் பகுதி 
திரு. பால சுந்தரம் ஐயா அவர்களால்
நடத்தப்பட்ட போது வகுப்பறை எப்படி இருந்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...


தேரா மன்னா!  செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோ னன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்து 
ஈங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே... 

ஆராய்வதற்கு அறியாத மன்னனே!
சொல்கின்றேன் கேள்.

எங்கள் நாட்டின் சக்கரவர்த்தி சிபி பறவை ஒன்றின் துன்பம் தீர்ப்பதற்காக தன் தசையையே அரிந்து
துலாக்கோலில் இட்டவன்.. 

எங்கள் நாட்டின் மாமன்னன்  மனுநீதிச் சோழன் பசுவின் துயரத்தைத் தீர்ப்பதற்காகத்  தனது மகனையே தேர்ச் சக்கரத்தில் இட்டு நசுக்கியவன்.

அப்படி - நீதி வழங்கிய மன்னர்கள் ஆட்சி செய்த சோழ  நாட்டில்  - புகார் நகரம் எனது ஊர்..

அவ்வூர் வணிகர்களுள் ஒருவர் மாசாத்துவான். அவர் பெரும்  சிறப்பினை உடையவர். அவருடைய மகன் தான் என் கணவர். 

என் கணவரும் நானும் இனிது வாழ்வதற்காக உனது ஊருக்குள் - ஊழ்வினை துரத்தியதால்
வந்தோம். 

எனது சிலம்பினை விற்பதற்காக அங்காடித் தெருவிற்கு வந்த - அவர் உன்னால் கொலைக் களத்தில் மாண்டு போனார். அவர் பெயர் கோவலன். கண்ணகி என்பது என்  பெயர்..  -

கொந்தளிக்கின்ற கோபத்திலும் கொதிக்கின்ற சோகத்திலும் கூட எத்தனை எத்தனை தெளிவான செய்திகள்... 

எனில்.
அவள் தான் கண்ணகி..

தனக்கான சாட்சியாக மாணிக்க சிலம்பினைக் கொணர்ந்தவள் ஆயிற்றே!..

இதே போல ஒன்றை நிரூபிக்கத் தேவையான தரவுகளுடன் தான் வழக்கு மன்றங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான குறிப்பு சுந்தரர் சரிதத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
***
துணைப் பாடத்தின்  பல்சுவைப் பகுதியில் இருந்து :


முக்காலுக்கு  ஏகாமுன்  முன் நரையில் வீழாமுன்
அக்காலரைக்  கால் கண்டு அஞ்சாமுன்  -  விக்கி
இருமா முன்  மாகாணிக்கு ஏகா முன்  கச்சி
ஒருமாவின் கீழரை இன்று ஓது.
-: காளமேகப்புலவர் :-

வாழ்வின் நிதர்சனம் ஆனாலும் பாடலின் முழு விளக்கத்தைத் தருவதற்கு மனம் இல்லை.. 

பாடல் காட்டுகின்ற நெறி : 
இளமை இருக்கின்ற போதே ஈசனை  - கச்சி ஏகம்பனை - வணங்குக.. என்பதாகும்..

வாழ்வின் நிதர்சனத்தைக காட்டுகின்ற இப்பாடலில் குறிக்கப்படுகின்ற பின்ன அளவுகள்..

முக்கால் = ¾ (மூன்றின் கீழ் நான்கு)
அரை = ½ 
(ஒன்றின் கீழ் இரண்டு)
காலரைக் கால் = 3⁄8
(மூன்றின் கீழ் எட்டு)
இரு மா =1⁄10 
(ஒன்றின் 3⁄8 பத்து)
மாகாணி = 1⁄16 வீசம் 
(ஒன்றின் கீழ் பதினாறு)
ஒரு மா = 1⁄20
(ஒன்றின் கீழ் இருபது)

(இதில் மா காணி எனப்படுவது  மயானம்)

இவையே பழந்தமிழ் நில அளவின் கணக்குகள்.. 

இதைச் சொல்லிக் கொடுக்கத் தான்  அரேபியனும் ஐரோப்பியனும் இந்நாட்டுக்குள் நுழைந்ததாக ஊருக்குள் ஒரு பேச்சு இன்னும் உலவிக் கொண்டு இருக்கின்றது..
***
நினைவெல்லாம் தொடரும்

அழகே உந்தன் புகழ் வாழ்க 

ஓம் 
நம சிவாய நம ஓம்
***

2 கருத்துகள்:

  1. அது கண்ணகியின் சிறப்பு என்று சொல்வதை விட அதை எழுதியவரின் சிறப்பு என்று சொல்லலாம்.

    ஆனால் சொல்ல வந்த கருத்து சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. கவிகாளமேகத்தின் பாடல்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை.

    இவரைப் பற்றிய குறிப்புகள் இன்றைய எங்கள் பிளாக் பகுதியிலும் வந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..