நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 27, 2024

நினைவெல்லாம் 7

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 12
புதன் கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க..

கல்லூரியின்
தமிழ் வகுப்புகள் தொடர்கின்றன..


அன்றைய சூழலில் தமிழ்நாட்டில் 
எங்காவது ஆ ஊ என்றால் இங்கே கல்லூரிக்கு விடுமுறை என்றாகி விடும்..

இந்நிலையில் கிடைக்கின்ற நாட்களில் நடத்தப்பட்ட வகுப்புகளில் மனதில் பதிந்தவை இன்றைய பதிவில்..

குற்றாலக் குறவஞ்சி காட்டுகின்ற அழகு


ஓடக் காண்பது பூம் புனல் வெள்ளம்
     ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
     வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
     புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து
தேடக் காண்பது நல்லறம் சீர்த்தி
     திருக்குற்றாலத் தென் ஆரிய நாடே..

எங்கள் நாட்டில் ஓடிப் பாய்வது பூக்களைச் சுமந்து வரும் நீர் மட்டுமே.  யோகியர்களிள் மனம் அடங்கி இருக்க - 

மெலிந்திருப்பது பெண்களின் இடை மட்டுமே.. 

துன்பப்படுபவை முத்துகளை ஈனுகின்ற சிப்பி சங்குகள் மட்டுமே.

நிலத்தில் போடப்படுபவை விதைகள்.. ஒலி எழுப்புவன கிண்கிணியின்  மணிகள் ..  

ஒவ்வொருவரும் ஈட்ட  முயல்வது நல்லறம் புகழினை மட்டுமே.. 

எனவே, 
இப்படியான  குற்றாலத் திருநாட்டில் 
வாடுவோரும் இல்லை வருந்துவோரும் இல்லை -
எனப் பாடுகின்றாள்.

குற்றாலத் திருநாட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்பது இப்பாடலின் உட்குறிப்பு.

இப்பாடலின் வழிநடையாக - ஊட்டி வரை உறவு +
எனும் திரைப் படத்தில் - அங்கே மாலை மயக்கம் யாருக்காக -  என்ற பாடலில் கவியரசர் தனது கவித் திறனைக் காட்டியிருப்பார்..

அன்றைய  வகுப்புகளில் மனதில் பதிந்த -
திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்..


பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே ..

போற்றப்படுகின்ற சிவபெருமானை வணங்கித் துதிக்கவும் இல்லை.. இரந்து நின்றவர்க்கு கொடுத்ததும் இல்லை.. குடத்தில் நீர் எடுத்து ஊற்றி  மரங்களை வளர்க்கவும் இல்லை.. 
வாழ்நாள் குறைவுடைய 
நீங்கள்,  எஞ்சிய நாட்களில் நரகத்தில் நின்றிருக்கப் போகின்றீர்களோ?..

என்று, ஊருக்கான சமூக பங்களிப்பை ஒவ்வொருவரிடமும் வினவுகின்றார் திருமூல நாயனார்..

உள்ளங்கை நெல்லிக்கனி எனப் பொருள் விளங்கக் கூடிய இன்னொரு இன்தமிழ்ப் பாடல் :


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரை தானே.
-: திருமூலர் ;-
**
நினைவெல்லாம்
 தொடரும்

அமுதே உந்தன் புகழ் வாழ்க

ஓம்  சிவாய நம ஓம்
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..