நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 11
செவ்வாய்க்கிழமை
எப்போதோ படித்த கதை..
சற்றே அலங்கரிப்புடன்
அரண்மனைக்கு மீனவர் ஒருவர்
வந்தார்..
வயதானவர் அவர்..
அவரிடம் பெரிய மீன் ஒன்று இருந்தது.. அந்த மீன் தங்க நிறத்தில் ஒளி வீசியது..
வாயிற் காவலர் மன்னரிடம் அழைத்துச் சென்றனர்..
" மகாராஜா நீடூழி வாழ்க .. அரிதான இந்த மீன் எளியேனின் வலையில் கிடைத்தது.. இந்த மீனை தங்களிடம் கொடுப்பது தான் முறை .. அதனால் தான் இங்கே கொண்டு வந்தேன்.. " - என்றார் வணக்கத்துடன்...
மன்னரும் மகிழ்ச்சியுடன் மீனவருக்கு ஐந்தாயிரம் பொற்காசுகளைக் கொண்ட பொற்கிழியைக் கொடுத்தார்.
மகாராணிக்குக் கோபம்..
" காசின் அருமை தெரிகின்றதா உங்களுக்கு!?.. "
அனலாகக் கொதித்தது அவளது மேனி..
" அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதைத் திரும்பப் பெறுங்கள்!.. " - என்றாள்..
" முடிந்த வணிகத்தை மாற்றுவது அழகல்ல. தேவி!.. "
மன்னர் மறுத்தார்.
" சரி.. அந்த மீனவனைக் கூப்பிட்டு இந்த மீன் ஆண் மீனா பெண் மீனா என்று கேளுங்கள்.
ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன் வேண்டும் எனக் கேளுங்கள்.. பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்று கேளுங்கள். எப்படியாவது அவனிடமிருந்து பொற்காசுகளைப் பிடுங்கி ஆக வேண்டும்.. " - என்றாள் உக்ரத்துடன்..
மீனவர் அழைக்கப்பட்டார்..
கேள்விக் கணையை மகாராணியே தொடுத்தாள்..
" மீனவரே.. இது ஆண் மீனா பெண் மீனா?.. சரியாகச் சொல்ல வேண்டும்.. தவறாக இருப்பின் தலை உருண்டு விடும்!.."
மீனவர் சற்றும் தயங்காமல் புன்னகையுடன் பதில் சொன்னார்..
" இது ஆணோ பெணோ.. அத்தனை நுணுக்கமாக அறிந்தேனில்லை -
வயதான காலத்தில் பார்வையும் சற்றே குறைவு.. இந்த மீன் மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அதனால் தான் இதை மன்னருக்குக் கொண்டு வந்தேன்.. " - என்றார் இயல்பாக...
இந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் மேலும் பொற்காசுகளை அள்ளிக் கொடுத்தார்.
மகாராணியின் கோபாக்கினியில் மேலும் நெய் வார்க்கப்பட்டது..
மீனவருக்கு பொற்காசுகள் கொடுக்கப்பட்ட போது - ஒரு காசு தரையில் விழுந்து உருண்டு ஓடியது.
மீனவர் அதைத் தேடி எடுத்து மடியில் வைத்துக் கொண்டார்..
மீண்டும் மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.
" பேராசைக்காரன்!.. கீழே விழுந்த காசை துப்புரவுப் பணியாளர் யாராவது எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டானா பாருங்கள்!.. தேடி எடுத்துக் கொள்கின்றான்!.. -
- என்று மன்னரிடம் மூட்டி விட்டாள்.
மீனவர் நிதானமாக திரும்பிச் சொன்னார்..
" மகாராணி!.. பேராசையினால் நான் தேடி எடுக்கவில்லை..
என்றாலும் நாணயங்களில் நமது மாமன்னரின் திருவுருவம் இருக்கின்றது. நாணயம் தவறி விழுந்ததையே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. நாணயம் எவர் காலிலும் பட்டு விட்டால் - அதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.."'
- என்றார் நெகிழ்ச்சியுடன்.
இதனால் மனம் மகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளுடன் கூடிய பொற்கிழியை வழங்கி -
பொன்னாடை ஒன்றையும் போர்த்தி கௌரவித்தார்..
மேலும் -
கடற்கரைக் கிராமம் ஒன்றையும் எழுதிக் கொடுத்தார்.
இப்போது மகாராணி வாயை மூடிக் கொண்டாள். சொல்லுதற்கு ஏதும் இன்றிப் போனது..
இந்தக் கதை சொல்லுகின்ற தத்துவம்?..
பெரிதாக ஒன்றுமில்லை..
பணியுமாம் என்றும் பெருமை..
என்பது தான்..
இருந்தாலும் -
விதி வலியது..
ஃ
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
நா நயம் வாக்கில்
நாணயம் நோக்கில்!..
நயம்பட உரை.. ன்னு
ஔவையார் சும்மாவா சொன்னாங்க!..
முருகா முருகா
முருகா முருகா
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..