நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 18, 2018

தினைப் பாயசம்

நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை விடியற்காலையில்
எங்கள் பிளாக்கில் -

இன்னைக்கு வெள்ளிக் கிழமை..
பால் பாயசம் வைக்கலாம்..

- என்று எழுதியிருந்தேன்..


அதற்கு திரு ஸ்ரீராம் அவர்கள் -

தை வெள்ளிகளில் பாஸ் ச.பொ. செய்து தந்தார்..
பால் பாயசம்.. கேட்டுப் பார்க்கிறேன்!..

என்று எழுதியிருந்தார்..

மதியப் பொழுதில் தளத்திற்கு வருகை தந்த
அதிரடி அதிரா அவர்கள்

கர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்..))
ஆர் என்ன சொன்னாலும்
உடனே தனக்குத்தான் என முடிவெடுத்திடுறது:)..
துரை அண்ணன் சொன்னது:).. இங்கு வரும் நமக்கு
பால் பாஆஆஆஆஆஆஅயாசம் செய்து தரலாம் என:)

- என பொங்கியிருந்தார்..

அடுத்து வருகையளித்த 
கீதா சாம்பசிவம் அவர்கள்

இன்னிக்கு வெள்ளிக் கிழமை. பால் பாயசம் வைக்கலாம்!..
- அப்படின்னு துரை சொன்னது எனக்காக்கும்!.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

ஸ்ரீரம் பாட்டுக்கு அவரை நினைச்சுண்டால் இங்கே அதிரடி வந்து
எல்லோருக்கும் பால் பாயசம் வேணும்னு சொல்லிட்டு இருக்காங்க..

நான் முதல்லே வந்ததுக்குப் பால் பாயசம் வைக்கச் சொல்லி
துரை சொல்லி இருக்கார்...

- என்று பால் பாயசப் புதிரை மிகச் சரியாகக் கணித்திருந்தார்கள்..

பால் பாயசம் வைக்கச் சொல்லி நான் எழுதியது
கீதா சாம்பசிவம் அவர்களுக்குத் தான்!..

இதைக் கடந்து மீண்டும் தளத்திற்கு வருகை தந்த
அதிரடி அதிரா அவர்கள்

கீசாக்கா இது ரொம்ம்ம்ம்ம்ம்ப ஓவரூஊஊஊஊ:))..
உங்களுக்கு பால் பாயசம் ஆகாது:)
இப்போ ஸ்ரீராம் பொஸ் இடம் டொல்லியிருப்பார்:)
எதுக்கும் சேமியாப் பாயாசமாகவே செய்யச் சொல்லுங்கோ:)

- என்று மீண்டும் சலங்கை கட்டியிருந்தார்..

வேடிக்கை அப்படியே போக - இன்று காலையில்,

பால் பாயசம் இன்றைக்கு யார் செய்கிறார்களோ தெரியவில்லை..
- என்று எழுதியிருந்தேன்..

உடனே அதற்கு மறுமொழி வந்தது - ஸ்ரீராம் அவர்களிடமிருந்து..

பால் பாயசமா?.. கஞ்சி கொடுக்கும் ஆளைக் கூடக் காணோம் ஸார்!.. 

அடப் பாவமே.!. - என்றிருந்தது..

அடுத்து வந்த தில்லையகத்து கீதா அவர்கள் -

ஆ!.. கஞ்சியா!.. இதோ கொடுக்க வந்துட்டேன்!..

- என்று காய்ச்சியிருந்தார்..

அதனைத் தொடர்ந்து ஒரே களேபரம்..

கீதா அக்கா மாமாவுக்கு கஞ்சி கொடுத்து விட்டு வருவார்..
இப்போ இன்னும் கஞ்சியே கொடுக்கலை போல.. பாவம் மாமா!..

- என்றும்

கீதா அக்கா வெங்கட் தளத்தில் இட்லி சுட்டுகிட்டு இருக்காங்க!...

என்றும் உளவுத் துறை தகவல்கள் வெளியாகின..

அந்தப் பக்கத்தில் -

காஃபி ஆத்தறச்சேயே ஆறு மணி ஆயிடுச்சு..

- என்று கீதா சாம்பசிவம் அவர்கள் விளக்கினாலும் நிலைமை சீராகவில்லை.

உடனடியாக -

காஃபி ஆத்தாம எப்படிக் கடமை ஆத்தறது?.. ஹா..ஹா...ஹா...

- என்று அடுத்த அஸ்திரம்..

படங்களைப் பற்றிய பேச்சை விட
சாப்பாடு காபி கொஞ்சம் தூக்கலாக இருக்கு!..

- என்று நெல்லை அவர்கள் சொல்லும் அளவுக்கு ஆனது..

சரி.. இனிமே விடக்கூடாது..
பாயசம் செய்து விடவேண்டியது தான்!.. 

- என்று, உடனடியாகக் களத்தில் இறங்கினேன்...

பால் பாயசமா.. தினைப் பாயசமா?.. - கேள்விக்குறி முன்னே நின்றது..

இந்தா.. பிடி தினை!.. - என்றது அசரீரி..

இதற்குப் பின்னும் காத்திருக்க முடியுமா!..

சற்று நேரத்தில் -
கொழுக்கட்டையும் தினைப்பாயசமும் தயாராகின...

இதோ - உங்களுக்காகப் பதிவில்!..


கொழுக்கட்டையில்
அரிசி மாவுடன் சிறிதளவு பயற்றம் மாவும்
Bleach செய்யப்படாத பழுப்பு ஜீனியும் ( இந்தோனேஷியா)...


தினைப் பாயசத்தில் 2:1:2:1  என்ற விகிதத்தில்
ஜவ்வரிசியும் தினையும் வெல்லமும் பாலும்..

அத்துடன் வழக்கம் போல
சிறிதளவு உலர் திராட்சையும் முந்திரியும் நெய்யும்!..

எளிமையான உணவு..
என்றும் மகிழட்டும் மனது..

வாழ்க வளமுடன்.. 
***  

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

வந்துட்டேன்!..

கடந்த செவ்வாய்க்கிழமை முன்னிரவு ..

குறித்த நேரத்தில் -
தஞ்சையிலிருந்து உழவன் விரைவு ரயில் புறப்பட்டது..

அதிகாலையில் சற்றே தாமதத்துடன் - தாம்பரம்..

அங்கிருந்து திரிசூலத்திற்கு மாறி -  இதோ சென்னை விமான நிலையம்..

விமான நிலையத்தினுள் அழகுறும் சிற்பங்கள்




கீழே சிங்காரச் சென்னை
காலை 9.25க்கு வானில் ஏறியது விமானம்..
அபுதாபி வழியாக குவைத்திற்குப் பயணம்..



 அபுதாபி - தரையிறங்குவதற்கு முன்பாக
அபுதாபி விமான நிலையத்தில்
அபுதாபி விமான நிலையத்தில் நமது தளம்
Transit Flight ஆனதால் குவைத்திற்கு வந்தபோது இருட்டி விட்டது..

முன்னிரவுப் பொழுதில் -
குடியிருக்கும் வசந்த மாளிகையை நோக்கி விரைந்தால் -

அடுக்குமாடி குடியிருப்பு பூட்டப்பட்டுக் கிடந்தது..

என்ன இது சோதனை!?..

அரே..பாய்.. கட்டிடத்தைக் காலி செய்து ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆனால் எங்கே போயிருக்கிறான் என்று தெரியவில்லை!..

- என்று குரல் வந்தது - அருகிலிருந்த கடைக்குள்ளிருந்து...

குவைத்திலிருந்து ஊருக்குத் திரும்பினால் அவ்வளவு தான்..
இங்கிருப்பவர்களிடம் நான் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை...

அதனால் இருப்பிடம் மாறிய தகவல் தெரியவில்லை..

ஆனால் -
புதிய இருப்பிடத்தின் முகவரியும் தொலைபேசி எண்ணும்
பழைய கட்டிடத்தின் முகப்பில் தெரியப்படுத்த வேண்டுமல்லவா!..

அப்படி எதையும் செய்யவில்லை..

அந்த அளவுக்கு அறிவாளிகள் இங்கே!..

திகைத்துப் போனேன்.. எங்கென்று தேடுவது?..

கைபேசி ஆழ்ந்த தூக்க நிலையில்!..

என்ன செய்வது?..

பழைய குடியிருப்பின் அருகில் உணவகம்.. நடத்துபவர் தஞ்சாவூர்க்காரர்..

அங்கே சென்று விசாரிக்க -

அது வெகு தூரம்.. இரவு இங்கே தங்கிக் கொள்ளுங்கள் .. நாளை காலையில் செல்லலாம்!.. - என்றார்கள்..

வேறு வழி ஏதும் இல்லை..

சரி!.. - என்று இசைந்தபோது அதிர்ஷ்டம்..

உடன் வேலை செய்யும் எகிப்து நாட்டுக்காரன் எதிரில் வந்தான்..

நலம் விசாரித்து விட்டு அவனுடன் டாக்ஸியில் பயணம்..

புதிய இருப்பிடத்திற்கு வந்து -

எங்கே எனது பொருட்கள்?.. எது எனது அறை?.. என்று கேட்டால்,

உங்களுக்கு அறை ஒதுக்கவில்லை!.. - என்றான் Camp In-charge..

ஏன்.. டா?.. - மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்...

உங்களுடைய பொருட்கள் எல்லாம் வேறு இடத்தில் இருக்கின்றன.. தற்காலிகமாக நான்காவது தளத்தில் பதினைந்தாவது அறையில் தங்கிக் கொள்ளுங்கள்..

அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை...

பொருட்கள் என்ன கதியாகியிருக்கும்!..

மனத்திரையில் காட்சிகள் விரிந்தன..

மறுநாள் காலை..

பழைய இருப்பிடத்திலிருந்த பொருட்கள் (98 %) இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன..

ஆனால் -

சமையலறையில் ஒரு மாதத்திற்கு சேர்த்து வைத்திருந்த அரிசி எண்ணெய் முதலான உணவுப் பொருட்களும் பாத்திரங்களும் எனக்குக் கிடைக்க வில்லை..

அவற்றின் கதி என்ன என்று தெரியவில்லை...


இவனுங்களுடைய சமையல் ஆகாது.. சமையல் செய்தே ஆகணும்!..

குவைத்தில் இன்னும் வெயில் அடங்கவில்லை..

ருத்துபா எனும் புழுக்கம்..
நீராவிக் குளியல் போன்று இருக்கும்..

அருகிலுள்ள பாஃஹீல் (Fahaheel ) நகருக்குச் சென்று
வெயிலோடு வெயிலாக அலைந்து பண்ட பாத்திரங்கள் வாங்கி வந்து
அலுப்பு தீர அமர்வதற்குள் மூன்று நாட்களாகி விட்டன..

தட்ப வெப்ப நிலையின் தடுமாற்றத்தினால் -
ஜலதோஷமும் கூடவே காய்ச்சலும் கூட்டு சேர்ந்து கொண்டன...

தற்காலிகமான தங்குமிடம் என்றுதான் எனக்கு சொல்லப்பட்டிருக்கின்றது..

என்றாலும் அறையில் முன்பே இருப்பவர்கள்
அறைக்குள் புதிய வரவாக கணினியைக் கண்டதும்
அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமோ!.. - என்று விழிக்கின்றார்கள்...

இன்று காலையில் தான் கணினியை ஒருங்கிணைத்து பதிவுகளை வாசித்தேன்..

கையில் Galaxy இருந்தாலும் பதிவுகளுக்கு கருத்துரைகள் இடவில்லை..

எல்லாம் இனிமேல் தான்..

ஒன்றரை மாதம் .. காற்றில் எழுந்த அன்னத்தின் தூவியாக பறந்து விட்டது..

விடுமுறை நாட்களின் செயல் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது..
அவற்றில் நிறைவேறியவை ஒரு சில மட்டுமே!..

எதிர்பாராத பயணங்கள் அதிகம்..

அன்புக்குரிய கில்லர் ஜி அவர்களைச் சந்திக்க தொடர்பு கொண்டேன்..

அப்போது அவர் கோவையில் இருந்து சென்னைக்கு பயணம்...
தொலைபேசியில் சில நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது..

ஆனால் அது கூட கிடைக்கவில்லை..

அன்புக்குரிய Dr. பா. ஜம்புலிங்கம் அவர்கள்
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

இருவரும் பொறுத்தருள வேண்டும்..
இரண்டு முறை முயன்றும் அவர்களைச் சந்திக்க இயலாமற்போனது..

என் பிழையே அன்றி வேறெதும் இல்லை...

அது சரி.. ஜி!.. உங்களுக்கென்று அறை ஒதுக்காமல் - தற்காலிக இருப்பிடம் கொடுத்திருக்கின்றார்களே ஏன்?..

கில்லர் ஜி அவர்கள் கேட்பது புரிகின்றது...

அந்த அளவிற்கு அவருக்கு இடைஞ்சல்களைச் செய்திருக்கின்றோம்..
அதனால் கடுப்பாகி - போங்கடா.. போங்க!.. - என்று, புறப்பட்டு விட்டார்..
இனி அவர் வருவதற்கில்லை.. ஊரிலேயே தங்கி விட்டார்!..

என்று, மனப்பால் குடித்திருக்கின்றார்கள்.. என்ன ஒரு வக்கிரம்!..

ஆனால் -

விடாது கருப்பு!.. - என்பது வீணர்களுக்குத் தெரியவில்லை..

அவர்கள் குடித்த பால் செரிக்காமல் போனது -
மீண்டும் என்னைக் கண்ட அதிர்ச்சியில்!..


சொல்லு!.. 
வந்துட்டேன்..ன்னு சொல்லு!..
திரும்பி வந்துட்டேன்..ன்னு சொல்லு!..

தீமைகள் வெருண்டு ஓடட்டும்..
திசைகளில் திருவருள் கூடட்டும்!..

ஓம் சக்தி ஓம்!.. 
*** 

திங்கள், ஜூன் 05, 2017

சில்.. எனும் காற்று

அக்கா.. அக்கா!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா.. வெகு நாளாச்சு இல்லே!..

என்னக்கா.. நீங்க?.. போன வாரந்தானே.. கோயில்..ல பார்த்து பேசிக்கிட்டு இருந்தோம்!..

ஆமா..மா!.. ஆனாலும் பல நாளான மாதிரி இருக்கு!...


எங்கே பசங்களைக் காணோம்?...

நாட்டுக் கோழி வளர்க்கிறது எப்படின்னு.. பயிற்சி பட்டறை நடத்துறாங்களாம்!.. அங்கே போயிருக்காங்க!..

தெரிஞ்சுக்கிட்டுமே.. நல்லது தானே அக்கா!..

அப்போதெல்லாம் வீட்டுக்கு பத்து கோழி நிக்கும்.. அதுங்களுக்கு தீனி போடறதும் முட்டை எடுக்கிறதும் அடை வெக்கிறதும்.. காக்கா கிட்டேயிருந்து காப்பாத்துறதும் - அதெல்லாம் பழைய கனவாப் போச்சு!.. இப்போ உள்ள பிள்ளைங்களுக்கு நாட்டுக் கோழி எப்படி இருக்கும்...ன்னே தெரியாது!...

அதான் காலம் மாறிப் போச்சே!..

அது கிடக்கட்டும்.. துபாய் ..ல உன்னோட டார்லிங் எப்படி.. சௌக்கியமா!..

ம்ம்.. நேத்து கூட பேசினேன்.. கில்லர் ஜி அங்கிள் வேலையத் தூக்கிப் போட்டுட்டு போடா... சரிதான் ..ன்னு வந்துட்டாராம்!.. குமார் அண்ணனும் லீவுல போய் இருக்காராம்!... கலகலப்பா பேசறதுக்கு ஆள் இல்லாம அலுப்பா இருக்குதாம்!...

அடக் கடவுளே!.. அதான் கம்ப்யூட்டர் இருக்குது..ல்ல!.. அதைத் திறக்க வேண்டியது தானே.. நமக்கு வேண்டியப்பட்டவங்க எத்தனை பேரு நல்ல விஷயங்களை வலைப் பதிவு..ல எழுதிக்கிட்டு இருக்காங்க... அதை எல்லாம் படிக்க வேண்டியது தானே!.. அதுக்கு அப்புறம் அலுப்பு எப்படி வரும்..ன்னேன்!..

அதெல்லாம் படிக்கிறது தான்.. என்கிட்டேயும் அதைப் பத்தி பேசுவாங்க!.. உங்க அண்ணாச்சி ஆப்பிள் பழத்தைப் பத்தி ஏதோ எழுதியிருந்தாங்களாம்.. அதைப் படிச்சுட்டு அட்வைஸ் ஆறுமுகம் மாதிரி ஏகப்பட்ட சேதி... நான் கொய்யாப் பழத்துக்கு மாறிட்டேன்.. நெல்லிக்காய்க்கு மாறிட்டேன்..ன்னு ஒரே களேபரம்!..

மாறிட்டேன்..ன்னு சொன்னதும் என் ஞாபகம் அந்தக் கதைக்குப் போயிடுச்சு!..

எந்தக் கதைக்கு அக்கா!...

அந்த ராஜாமணியோட வறட்டுக் கோபத்தால.. அந்த அப்பாவிப் பொண்ணுக்கு என்ன ஆனதோ?.. அவ எப்படி இருக்காளோ?.. ந்னு நினைச்சு அடி வயிறு வலிக்குது...

என்னக்கா.. இது... இப்படிச் சொல்றீங்க?...

ஆமாம்.. தாமரை.. எதிர்த்த வீட்டுல நடக்கிறதைப் பார்த்த மாதிரி இருக்கு!... கதை தான்.. ஆனாலும் படிச்சு முடிக்கிறப்போ.. அந்தப் பொண்ணோட சாந்தமான குணத்துக்கு அவ நல்லா இருக்கணும் கடவுளே... ந்னு கும்பிடத் தோணுது..

அக்கா.. அக்கா.. சொல்லுங்க அக்கா!.. அந்தக் கதைய!...

வலங்கைமான்..ல இருந்து ஒருத்தர்.. ராஜாமணி..ன்னு பேரு.. சென்னைக்குப் போய் அங்கே அம்பத்தூர்ல.. ஒரு ஹோட்டல்ல வேலைக்கு இருக்கார்.. அங்கே சாப்பிட வர்ற மதுசூதனன்..ங்கறவரோட பழக்கமாகுது.. இவரு திருவிடைமருதூர்...

இந்த ஹோட்டல்...ல வேலை செய்ற ராஜாமணி - தானே புதுசா ஹோட்டல் ஆரம்பிக்க இருக்கிறதாவும் அங்கே தனக்கு ஆதரவு தரணும்...ன்னு, வேண்டுகோள் வைக்கிறார்...

ம்ம்.. நல்லா இருக்கே!...

மறுநாள் ராஜாமணியோட சாப்பாட்டுக் கடைக்குப் போறார் மது... ஒரு வீட்டோட பெரிய திண்ணைதான் சாப்பாட்டுக் கடையா மாறி இருக்கு.. ஏதோ ஓரளவுக்கு சாப்பாடும் இருக்கு... மதுவும் ராஜாமணிக்காக தொடர்ந்து அங்கே சாப்பிடுகின்றார்...

ஹோட்டல் மாதிரி இந்தத் திண்ணையை மாத்திக் கொடுத்த ஆசாரியார் காசு ஏதும் கொடுக்காம சாப்பிடுவதைப் பார்த்து ராஜாமணியோட நிலைமையைப் புரிஞ்சுக்கிறார் மது...

ம்!..

ஒரு நாள் மது சாப்பிடும்போது எதிரே ஆசாரியார் .. அவர் சாப்பிட்ட வடையில நீளமான தலைமுடி.. என்ன ராஜாமணி.. வடைக்கு சவுரி வெச்சிருக்கே!.. ந்னு அவர் சொன்னதைத் தாங்கமுடியாத ராஜாமணி - கடை மத்தியில வெச்சி பத்மாவை - அது தான் ராஜாமணியோட மனைவி பேர் - சட்டுவத்தால கன்னத்தில அடிச்சிடுறார்!...

அடப்பாவி!..

பத்மா அடி வாங்கறப்போ அவ இடுப்பில கைக்குழந்தை வேற!.. ஒன்னுமே சொல்லாம அந்தப் பொண்ணு பரிதாபமா அங்கேயிருந்து உள்ளே போயிடுறா...

இந்தக் கொடுமையப் பார்க்க சகிக்காத மது -
நீயும் ஒரு மனுசனா.. ங்கற மாதிரி சாப்பிடாம வெளியே போய்டுறார்...

அக்கா.. நானா இருந்தா அந்த இடத்திலேயே -
ராஜாமணிக்கு ஓங்கி ஒரு அறை - பளார்..ன்னு கொடுத்திப்பேன்!..

நான் மட்டும் என்ன சும்மா வருவேன்...னா நினைக்கிறே!..

பாவி.. படுபாவி!.. கட்டுன பொண்டாட்டிய அடிக்கிறவனெல்லாம் ஒரு மனுசனா?.. அவங்கையால சமைச்சது சாப்பாடா ?.. அதைத் தின்னவனும் உருப்பட மாட்டானே!... அந்தக் கடையும் வெளங்காதே!..

அப்படித் தானே ஆகிப் போச்சு!..

..... ..... ..... ..... .....!..

அன்னைக்கு ராத்திரி மது தங்கியிருக்கிற இடத்துக்கே போயி -
இல்லாமையும் இயலாமையும் தான் என்னைய இந்த மாதிரி ஆக்கிடுச்சு..
இனிமே இந்த மாதிரி அடிக்க மாட்டேன்...ன்னு ராஜாமணி கெஞ்சறார்...

மது சமாதானமாகிற மாதிரி இல்லை.. ஆனாலும் ராஜாமணி கெஞ்சறார்.. ரெண்டு நாளாத் தான் கையில காசு பார்க்கிறேன்.. என் கடையப் புறக்கணிச்சிடாதீங்க... ந்னு கலங்குறார்..

சரி.. நாளைக்கு வர்றேன்.. போங்க..ன்னு ராஜாமணிய அனுப்பிடுறார்...

ஆனா - அன்னைக்கு இரவே ஊர்ல...யிருந்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லை..ன்னு தந்தி வருது... மது பதறி அடிச்சுக்கிட்டு ஓடுறார்..
அங்கே எல்லாம் முடிஞ்சு சென்னைக்கு திரும்பி வர்றதுக்கு ஒரு மாதம் ஆகிடுது...

ம்!...

ஞாபகம் வந்து ராஜாமணியோட ஹோட்டலுக்குப் போனால் -

போனால்!?...

அந்தத் திண்ணை காலியாக் கிடக்குது...

அட!...

அந்த வீட்டுக்கார மாமியை விசாரிக்கிறார்... அவங்க சொல்றாங்க..
மறுபடியும் புருஷன் பொண்டாட்டி தகராறு.. கொடுமையப் பார்க்க சகிக்காம
குடக்கூலியக் கொடுத்துட்டு இடத்தை விட்டுக் கிளம்பு ... ந்னு சொல்லிட்டேன்!... அவங்கிட்ட பணம் இல்லை.. பண்ட பாத்திரமெல்லாம் திண்ணையிலயே போட்டுட்டுப் போய்ட்டான்!... - அப்படின்னு சொல்றாங்க!..

அக்கா.. குடக்கூலி..ன்னா என்னாக்கா?..

குடக்கூலி..ன்னா வாடகை.. ந்னு அர்த்தம்!..

மாறிட்டேன்...ன்னு சொன்ன ராஜாமணி மாறவே இல்லை...
மறுபடியும் கை நீட்டல்.. தகராறு.. ஆற்றாமை.. ஆத்திரம்.. அராஜகம்!..

மதுவுக்கு மனசு நொந்து போகுது.. அந்தத் திண்ணைய பார்க்கிறார்..

அங்கே அந்த சட்டுவம்.. அதே சட்டுவம்!.. அதுமட்டும் நிமிர்ந்து நிக்குது..
நிமிர்ந்து நிற்கிற சட்டுவம் நூறு கண்களோட மதுவைப் பார்த்து விழித்தது..
அப்படின்னு கதையை முடிக்கிறப்போ...

சொல்லாதீங்க.. அக்கா... சொல்லாதீங்க!...
கைப்புள்ளைக்காரி.. அந்த பத்மா.. பாவம்!.. மனசு கிடந்து அடிச்சுக்குது!...

கண்ணீரோட கண்ணீரா கஷ்டத்தையும் மறைச்சுக்கிட்டு... பத்மாவைப் போல எத்தனை எத்தனையோ பேர்... கதை தான்...ன்னாலும் கடந்து போகமுடியலை.. தாமரை!..

உண்மைதான் அக்கா!.. ஆனாலும், எனக்கொரு சந்தேகம்!..

என்ன தாமரை?..

சட்டுவம்...ன்னா என்ன அக்கா?..

சட்டுவம்...ன்னா அரிகரண்டி.. சாரணி..ன்னு சொல்லுவமே.. அது!..

அப்போ சரி!.. சட்டுவம் மாதிரி ஜடமாத் தான் இருந்திருக்கார்.. ராஜாமணி...
அரிகரண்டி சட்டுவத்துக்குத் தெரியுமா சமையல் ருசி?...
அந்த மாதிரி வாழ்க்கையோட ருசி தெரியாம போச்சு - ராஜாமணிக்கு!...

வாய்க்கு ருசியா சமைக்கத் தெரிஞ்ச ராஜாமணி -
வாழ்க்கையோட ருசியை தெரிஞ்சிக்க மறந்துட்டார்!..

அக்கா.. இந்தக் கதைய எழுதுனவங்க யாரு?..

பச்ச மொழகா!.. - ங்கற இந்தக் கதைய எழுதினவங்க திரு மோகன் ஜி.. 
கதை, கவிதை, நாடகம்..ன்னு நிறைய எழுதியிருக்காங்க...
புகழ் பெற்ற சாகித்ய அகாதமியின் மொழி பெயர்ப்பாளர்..ங்கறது சிறப்பு..


இவங்களோட ஆக்கங்களைப் பற்றி,

திரு. வை.கோ அண்ணா அவர்களும்

திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களும்

தங்களுடைய தளத்தில் சிறப்பு செய்திருக்கிறாங்க...

திரு மோகன் ஜி அவர்களுடைய கதைகள் - நிறைய!...
ஒன்னு தான் உனக்கு சொல்லியிருக்கேன்...

பச்சை மிளகாய் காரத்தினால கண் கலங்கும்..

ஆனா - இங்கே,
பத்மா மேல ஏற்படற கருணையால கண் கலங்குது!..

அக்கா!.. அது தான் எழுத்தின் வெற்றி.. எழுத்தாளனுடைய வெற்றி!.. 
இங்கே இருக்கிற ராஜாமணிகள் - இந்த எழுத்தினால திருந்தணும்!.. 

உண்மை தான் தாமரை!.. அது தான் நோக்கம்!...

சரி.. அக்கா.. நான் புறப்படுறேன்!.. அத்தை காத்துக்கிட்டு இருப்பாங்க!..

இரும்மா... மழை வரும் போல இருக்கு.. சிலுசிலு..ன்னு காற்று வேற வீசுது..
கதகதப்பா ஒரு காபி குடிக்கலாம்!..

ஓ.. கதைக்கு கதையும் சொல்லி குடிக்கிறதுக்கு காபியும் தர்றீங்களா!..
அக்கா..ன்னா அக்கா தான்!...

தாமரை சிரித்தாள்.. 
தமிழ்ச்செல்வியும் சிரித்தாள்..

வாழ்க நலம்!..
***

புதன், ஏப்ரல் 26, 2017

பதிவுக்குள் பதிவு..

அண்ணே!.. அண்ணே!..

தம்பி!.. வாங்க.. எப்படியிருக்கீங்க?..

எங்கே..ண்ணே!.. ஒரு வாரமா குளிரும் மழையும் புரட்டி எடுத்துடிச்சி.. அது சரி.. உங்களுக்கும் உடம்பு சரியில்லை.. ந்னு கேள்விப்பட்டேன்!..

என்னப்பா.. செய்றது.. நானும் இருக்கேன்... னு, எதிர்பாராத விருந்தாளியா  தலைவலி, ஜூரம்...

இத்தனை வருஷமா ஐயப்ப விரதம்.. ன்னு ஒவ்வொரு நாளும் இரண்டு தரம் குளியல்... அப்போதெல்லாம் வராத ஜூரம் இப்போது!..

ஆனாலும் - காய்ச்சல் போவதும் வருவதுமாக மிகுந்த சிரமமாகி விட்டது...

ஏன்.. ண்ணே!.. ஓய்வு எடுத்து இருக்கலாம்..ல்லே!..

ஓய்வா?.. சரியாப் போச்சு.. போ!.. ஜனவரி பதினைஞ்சில இருந்து தினமும் கூடுதலாக நாலு மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்...

8 + 4 + 2 ..ன்னு பதினாலு மணி நேரம்.. மீதமுள்ள நேரத்தில் தான் வலைத் தளம், உணவு, உறக்கம்...

அடடா?..

அதுக்கு இடையில தான்.. தலைவலி, ஜூரம்..
ஓய்வு நாள் இல்லாம எல்லா நாளும் வேலை.. ன்னு அறுபது நாள்...
கூடுதலான நாலு மணி நேர வேலை போன வாரம் தான் என்னை விட்டது.. 

என்னமோ.. அண்ணே!.. ஊரு விட்டு ஊரு போனாலே -  நாம தான் நம்மை நல்லபடியா பார்த்துக்கணும்.. அதிலயும் நாம கடல் கடந்து வந்திருக்கோம்!.. அது சரி.. நீங்க என்ன சினிமா பொட்டியை...

ஏ.. இது சினிமா பொட்டியில்லை!.. கம்ப்யூட்டர்.. தமிழ்..ல கணினி!..

இருக்கட்டுமே.. கம்பியூட்டர்..ல.. சினிமாவும் பார்க்கிறீங்கதானே!.. அதுக்குள்ள என்ன குடைஞ்சிக்கிட்டு இருக்கீங்க?..

அதுவா!.. நம்ம மனசு குமார் தெரியுமா?..

அங்கே அபுதாபி..ல இருக்காரே.. நீங்க கூட சொல்லுவீங்களே... இந்த வயக்காட்டு கதையெல்லாம் எழுதுவாருன்னு!..

வயக்காடு மட்டுமா!.. குடும்பம்.. அரசியல்.. இலக்கியம்.. சினிமா..ன்னு நாலா பக்கமும் சலங்கை கட்டி ஆடுறவராச்சே!... அவரு கேட்டிருந்தார்... 

என்னைப் பற்றி நான்!.. - ன்ற தலைப்பு..ல நீங்க உங்களைப் பற்றி எழுதுங்க ஐயா..ன்னு!.. அது ஆச்சு.. மூனு மாசம்..

அப்போ இதுவரைக்கும் எழுதிக் கொடுக்கவே இல்லையா?.. இத்தனை நாள் என்ன..ண்ணே செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?..

என்னப்பா.. இது!.. விடிய விடிய கதை கேட்டமாதிரி ஆயிடுச்சு?.. இப்ப தானே பிரச்னையை சொன்னேன்!..

ஆமா..மா!.. குழம்பிட்டேன்!.. அது இருக்கட்டும்... அவங்க கேட்டதுக்கு என்ன.. ண்ணே எழுதப் போறீங்க?..

அது தான்..யா குழப்பமா இருக்கு!.. அந்த அளவுக்கு நம்ம கிட்ட விஷயம் இருக்கா..ன்னு!..

உங்களுக்கும் குழப்பமா!.. அண்ணே உங்களப் பத்தி உங்களுக்கு தெரியாது!..

உனக்குத் தெரியுமா?..

எனக்கும் தெரியாது.. நீங்க தான் சொல்லணும்!.. நானும் தெரிஞ்சுக்கிறேன்!.. 

..... ..... .....!..

என்ன.. ண்ணே.. சும்மா இருக்கீங்க!.. உங்களப் பத்தி சொல்லுங்க.. சரி.. நானே கேக்கிறேன்?.. உங்க சொந்த ஊர் எது?..

நீர்வளமும் நிலவளமும் நெறைஞ்சிருக்கும் தஞ்சாவூர் தான் சொந்த ஊர்.. இங்கே தான் பிறந்தேன்.. ஏழு வயசு வரைக்கும் இங்கே தான் வளர்ந்தேன்..

அதுக்கு அப்புறம்?..
* * *

அதுக்கு அப்புறம்!?..

மனசு திரு. குமார் அவர்களின் 
வலைத்தளத்தில் காண்க!..

அன்பு நண்பர்களுக்கு...

என்னைப் பற்றி நான்!.. - என, எழுதித் தரும்படி 
வலைத் தள நண்பர்களை அழைத்திருக்கும் 
திரு. குமார் அவர்களுக்கு நன்றி..


பதிவுக்குள் பதிவாக நானும் என்னைப் பற்றி எழுதியிருக்கின்றேன்...

இன்றைய தினம் (ஏப்ரல் 26) வெளியாகியுள்ளது..

எனக்கு முன்பாக - கடந்த வாரங்களில்
தம்மைப் பற்றி அறியத் தந்த அனைவருக்கும் வணக்கம்..

சில மாதங்களாக - அவ்வப்போது குமார் அவர்களின் தளமும் 
திரு துளசிதரன் அவர்கள் தளமும் 
திருமதி மனோசாமிநாதன் அவர்கள் தளமும்
எனது கணினியில் திறப்பதில் மிகுந்த தாமதமாகின்றது 

பதிவுகளில் கருத்துரையிடுவது என்பது வெகு சிரமமாக இருக்கின்றது...

ஆண்ட்ராய்டு வழியாக வந்தால் - 
செல்லினம் தட்டச்சு ஒத்துழைப்பதில்லை... 

மேற்குறித்த தளங்களில் பதிவைப் படித்து விட்டு
பதில் ஒன்றும் சொல்லாமல் செல்வது மனதை உறுத்துகின்றது....

இங்கே குவைத்தில் -
தற்போது இருக்கும் இடத்தில் இணைய வேகம் குறைவு..

மாதந்தோறும் இணைய இணைப்பிற்கான அட்டைகளை விற்று
பல்லாயிரக் கணக்கில் பெட்டியைக் கட்டுகின்றார்களே தவிர - 
கவனத்தில் கொண்டு ஒழுங்கு செய்வார் யாரும் இல்லை...

நாள்முழுதும் கைத் தொலைபேசியில் பேசுபவர்கள்
இணைய வேகத்தைப் பெரிதாய்க் கொள்வதில்லை...

இணைய வேகம் சீராக இல்லாததனால் -
கணினியில் பதிவுகளைச் செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் அதிகம்...

உண்ணாமல் உறங்காமல் பதிவுகளைச் செய்து முறைப்படுத்தி விட்டு -
தளத்தினை ஒருமுறை மூடித் திறந்தால் - 

ஏதாவது ஏடாகூடமாகியிருக்கும்...

இன்னும் ஒருபுறம் -

இரவு வேலை முடிந்து - 
காலையில் அறைக்குத் திரும்பியதில் இருந்து 
பதிவுகளில் மூழ்கி விட்டு 
மதியம் உறங்கலாம் என்று நினைக்கும்போது -

வேலைத் தளத்திலிருந்து அவசர அழைப்பு வரும் - 

இன்றைக்கு மதியமும் சேர்த்துப் பாருங்கள்!.. -  என்று...

அப்போது ஏற்படும் மன உளைச்சல் இருக்கின்றதே!?..

இதிலெல்லாம் உழன்று தான் -
தஞ்சையம்பதியின் பதிவுகள் உங்கள் முன் மலர்கின்றன...

பலதரப்பட்ட மனிதர்கள் வேலையின் காரணமாக
ஒன்றாகத் தங்கியிருக்கும் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில்

எனக்கு உற்ற துணை எனது கணினியும் எனது வலைத் தளமும் தான்!..

இரவு வேலை முடிந்து அறைக்குத் திரும்பியதும் முதல் வேலை
கணினியைத் திறந்து சகோதர வலைத் தளங்களில் சுற்றி வருவது தான்!..

அன்புக்குரிய அனைவருடைய தளங்களையும் வாசிப்பது மகிழ்ச்சி.. .

அவர்களது கை வண்ணங்களில் - ஆழ்ந்திருப்பது உற்சாகம்.. 

மற்றபடிக்கு,
ஆறுதல் தேறுதல் -  இவற்றுக்கெல்லாம் அருகில் யாரும் இல்லை...

எனக்கு நான்!..
நானே நண்பன்.. நானே எதிரி!..

எனினும் -
இப்படியான அறிமுகத்தால்
மனம் சற்றே நெகிழ்ந்தாற்போல இருக்கின்றது..

திரு. குமார் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவிற்கான இணைப்பு இதோ..

என்னைப் பற்றி நான்...  

இன்னும் கூட சொல்லலாம்... இருக்கட்டும் .. 
மீண்டும் ஒரு இனிய பொழுது கிடைக்கும்...

வாழ்கின்ற வாழ்க்கையை ஓரளவுக்கு 
நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதில் 
மனம் நெகிழ்வாக மகிழ்வாக இருக்கின்றது..

நம்பிக்கை எப்படி வாழ்க்கை ஆகின்றதோ -
அப்படியே நன்னெறியும் வாழ்க்கை ஆகின்றது!...

வாழ்க நலம்!..
***  

திங்கள், நவம்பர் 21, 2016

தஞ்சாவூர் கதம்பம்

எப்படியிருக்கின்றீர்கள் ஜி!.. என்னவாயிற்று?.. பதிவுகளைக் காணோம்.. 
மற்ற பதிவுகளிலும் தங்களுடைய வருகையைக் காணோம்.. குவைத்தில் தான் இருக்கின்றீர்களா அல்லது ஊரில் இருக்கின்றீர்களா?..

புன்னை நல்லூர் மாரியம்மன் சந்நிதியை வலம் வந்து கொண்டிருந்தபோது -

தேவகோட்டையாரின் குரல் - அபுதாபியிலிருந்து!..

தவிரவும் மின்னஞ்சலிலும் இதே கேள்வி!.. 


பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் என்று எழுந்த ஆவல்!..

அவசரம்.. சிறு விடுப்பு வேண்டும்!.. - எனக் கேட்டதும் கிடைத்தது..

நவம்பர் மூன்றாம் தேதி விடியற்காலை..

ஐந்தாவது தளத்தில் அறை எண் 1/9 இழுத்துப் பூட்டப்பட்டது..
(நான் தங்கியிருக்கும் அறை தானுங்க!..)

சற்றைக்கெல்லாம் இழுவைப் பெட்டியுடன் கீழே வந்தேன்..

டாக்ஸி காத்திருந்தது...

இரண்டு மாதங்களாகத்தான் -
வரலாறு காணாத புதுமையாக எங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து
விமான நிலையத்திற்கு விரைவுப் பேருந்தினை இயக்குகின்றார்கள்..

அந்தப் பேருந்தில் செல்வதென்றால் அடுத்திருக்கும் சாலைக்கு மாறி
அங்கிருந்து ஒரு கி.மீ தொலைவிற்கு நடக்க வேண்டும்..

அதெல்லாம் நடக்கின்ற (!) காரியமா!?..

அடுத்த இருபத்தைந்தாவது நிமிடம் - குவைத் விமான நிலையத்தில்!..

ETIHAD  விமான நிறுவனம் (அபுதாபி) வரவேற்பு நல்கியது..

பயணம் குறிக்கப்பட்ட நேரம் காலை 10.10..

மேலெழுந்து வானில் பரவிய வெள்ளிப் பறவை -
அபுதாபியில் தரையிறங்கியபோது பகல் 12.55..

அபுதாபி 
அங்கே இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பின் -
சென்னையை நோக்கிப் பறந்தது எண்ணப் பறவை..

இரவு 7.40..

ஐப்பசி மாத இரவிலும் மழை முகம் காணாமல்
வியர்த்துக் கொண்டிருந்தது - சென்னை..

அனைத்து நடைமுறைகளையும் கடந்து வெளியே வந்தபோது
காத்திருந்த அன்பின் முகங்களைக் கண்டு ஆனந்தம்..

அடுத்த சிறிது நேரத்தில் - தாம்பரம்..

இரவு உணவு அங்கேதான்..

உழவனுக்கு மரியாதை இருக்கின்றதோ இல்லையோ..

உழவன் விரைவு ரயிலுக்கு இருந்தது..

நள்ளிரவு 12.05.. பெருங்கூச்சலுடன் ஓடி வந்து நின்றது..

முண்டியடித்துக் கொண்ட மக்களின் ஊடாகப் புகுந்து -
இருக்கையைக் கண்டு சற்றைக்கெல்லாம் கண்ணுறக்கம்..

விழிப்பு வந்தபோது பாபநாசம் கடந்திருந்தது..

பனிவாடையுடன் பொழுது விடிந்து கொண்டிருந்தது...

கார்மேகங்களுக்காகக் காத்திருந்தன கழனிகள்...

இயற்கை இன்னும் கண்கொண்டு நோக்கவில்லை..


ஆயினும்,

ஆங்காங்கே விழுகின்ற சிறு தூறல்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் உளறிக் கொண்டிருந்தன..

இல்லம் திரும்பியதும் - குளித்து முடித்துவிட்டு காலை உணவுக்குப் பின்

மடிகணினியைத் தேடினால் -

அப்பா.. அது கெட்டுப் போய்விட்டது!.. - என்றான் மகன்...

முன்பே சொல்லியிருக்கலாமே.. - என்றேன்..

களைப்பு கண்களைத் தழுவிட சற்றே கண்ணுறக்கம்...

அருகிலுள்ள Browsing Center கள் சொல்லும் தரத்தில் இல்லை..

சரி.. நமது வலைத் தள நண்பர்களைக் கொஞ்ச நாட்களுக்குத் தொல்லைப் படுத்தாமல் இருப்போமே!.. - என்று எண்ணிக் கொண்டேன்..

அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் பயணங்கள் தொடர்ந்தன...

தஞ்சை சட்டமன்றத் தேர்தல்..   எனவே மாநகருக்குள் ஓயாத இரைச்சல்..

கந்த சஷ்டியன்று தஞ்சை பூக்காரத் தெரு ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் சூர சம்ஹாரத் திருவிழா..

கந்த சஷ்டி திருவிழா - தஞ்சை
ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க -
ஆணவ மாயா கன்மம் எனும் மும்மல வடிவான அசுரன் வதம் செய்யப்பட்டான்..

அன்னதானம், சித்ரான்னங்கள், பசும்பால் - என,
அன்பர்களுக்கு வழங்கி தனித்ததோர் அன்புடன் மக்கள் கொண்டாடினர்..

மன்னார்குடி தெப்பக்குளம்
தொடர்ந்த நாட்களில் -
மன்னார்குடிக்குச் சென்று விட்டு அங்கிருந்து
புள்ளிருக்கு வேளூர் எனும் ஸ்ரீ வைத்தீஸ்வரன் திருக்கோயிலில் தரிசனம்..

மயிலாடுதுறையைக் கடக்கும்போது மனம் வலித்தது..

துலா உற்சவங்கள் தொடங்கியிருந்தன..

ஆனால் - காவிரியில் புல்லும் புதரும் மண்டிக் கிடந்தன...



நவம்பர் 9.. ஐப்பசி சதய நட்சத்திரம்..

மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா..

அந்த விழாவில் கூட ஆரம்பர ஆரவார கூச்சல்கள் ஏதும் இல்லை..

ஆயினும்,
திருக்கோயிலினுள் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்..

பெருவுடையாருக்குப் பேரபிஷேகம் செய்விக்கப்பட்டு
மகாதீப ஆராதனை சமர்ப்பிப்பதற்கே மதியம் ஒருமணிக்கு மேலாகி விட்டது..

அதன் பின் பெரியநாயகி அம்பிகைக்கு பேரபிஷேகம்..

திருக்கோயிலை வலம் வந்து வணங்கினேன்..

மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து சதய விழாவில் தரிசனம் செய்யும் பேறு..

மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..

திருக்கோயிலுக்கு வெளியேயிருக்கும் - 
ராஜராஜ சோழன் சிலையைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு..

அதனால் வழக்கத்திற்கு மாறாக - சாதீய அமைப்புக்கள் அடக்கி வாசித்தன..

அடுத்தடுத்த நாட்களில் பயணங்கள் தொடர்ந்தன..

நவம்பர் 11..

சிக்கல் அகற்றும் சிக்கல் மற்றும் கேடு நீக்கும் கீழ்வேளூர் ஆகிய திருத்தலங்களில் தரிசனம்..

நவம்பர் 12..

துலா உற்சவத்தின் ஏழாம் நாளன்று மயிலாடுதுறையில் திருக்கல்யாண வைபவம்..

அன்றைய தினம் திருவையாற்றில் துலா ஸ்நானம்..

காவிரி - திருவையாறு
அந்தப் பக்கமாக புறவழிச் சாலைப் பணிகள் நடைபெறுவதால் காவிரி சிறைப்பட்டிருந்தாள்..

அனைவரது நலனுக்காகவும் வேண்டிக் கொண்டு துலா நீராடி
அருள் தரும் அறம் வளர்த்த நாயகி உடனாகிய அருள்திரு ஐயாறப்பர் தரிசனம்...

நவம்பர் 14.. திங்கட்கிழமை.. ஐப்பசி மாதத்தின் நிறை நிலா நாள்..

ஐப்பசி மாதத்தின் நிறைநிலா
காலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வழிபாடு..

மாலை மயங்கியபின் -
ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயில் பௌர்ணமி தரிசனம் செய்துவிட்டு
தஞ்சை ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேக தரிசனம்..

இரவு 10.30 மணியளவில் அன்பர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.. 

அதன்பின் - திருக்கோயில் பணியாளர்களுடன் வெண்ணாற்றுக்குச் சென்று அபிஷேக அன்னத்தைக் கரைத்துவிட்டு கரையேறினேன்..

நவம்பர் 15.. செவ்வாய்க்கிழமை..

தஞ்சை நிசும்பசூதனி திருக்கோயிலில் ஸ்ரீ வடபத்ரகாளி தரிசனம்..

ஸ்ரீ வடபத்ரகாளி திருக்கோயில் - தஞ்சை
மாலைப் பொழுதில் முனைவர் திரு B. ஜம்புலிங்கம் அவர்களுடன் சந்திப்பு..


இனிய பொழுதில் அன்பான உபசரிப்பு.. மனதில் என்றும் நிலைத்திருக்கும்..

நவம்பர் 16.. புதன் கிழமை.. மதியம் 12.30..

சிறப்புமிகு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் -
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் மற்றும்
முனைவர் பாலமகி ஆகியோருடன் சந்திப்பு..

எதிர்பாராமல் என்னைக் கண்டதும் அவர்களுக்கெல்லாம் ஆனந்த மகிழ்ச்சி..

வழக்கம் போல நான் தான் பேசிக் கொண்டிருந்தேன்...

பிரிவதற்கு மனமில்லைதான்..

ஆனாலும், அவர்கள் தங்களது பணியினைத் தொடரவேண்டுமே!..

அலைபாயும் மனதை அங்கேயே விட்டு விட்டுப் பிரிந்தேன்...

நவம்பர் 14... வியாழக்கிழமை

வேலைத் தளத்திற்குத் திரும்ப வேண்டிய நாள் நெருங்கி விட்டது

வழித்துணை வந்திடும் திருவுடைக் கோடியம்மனைத் தரிசித்து விட்டு அரியலூர் ரயில் நிலையத்தை நோக்கிப் பயணம்..

வைகையைப் பிடிக்கவேண்டுமே!...

காலை 10.10.. பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்து நின்றது..

முன்பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கைகள்.. ஜன்னலின் அருகில்!..

தாயையும் தாய் மண்ணையும் வணங்கியவாறு பயணம் தொடர்ந்தது..

பகல் 1.55 மணிக்குத் தாம்பரம்... மதிய உணவு.. அதற்குப்பின் சற்று ஓய்வு..

அங்கிருந்து திரிசூலம்.. சென்னை விமான நிலையம்..

அபுதாபி வழியாக குவைத்திற்கு இரவு 9.15 க்கு விமானம்

விமான நிலையத்தில் மாலை 6.00 மணிக்கு Check In..


கலைப் பொருட்கள் - சென்னை விமான நிலையம்
வெள்ளிக்கிழமை அதிகாலை 3.10 மணியளவில் குவைத் வான்வெளியில் நுழைந்து ஓடு தளத்தில் இறங்கி ஓடியது - வெள்ளிப் பறவை ...

மீண்டும் ஐந்தாவது தளத்தில் அறை எண் 1/9 திறக்கப்பட்டது..

குறுகிய நாட்கள்.. எனினும் இனிய பயணம்..

வேறு சில செயல் திட்டங்களுடன் தான் தஞ்சைக்கு வந்தேன்..

ஆனால் - நினைப்பவை எல்லாமும் நடந்து விடுவதில்லையே!..

அன்பு தான் இன்ப ஊற்று!.. என்றர்கள்..

எப்படியிருக்கின்றீர்கள்.. நலமா!.. - என்ற வார்த்தைகளே உயிருக்கு ஊட்டம்..

திருமிகு தேவகோட்டையார், 
திருமிகு முனைவர் B. ஜம்புலிங்கம், 
திருமிகு கரந்தை ஜெயக்குமார், 
திருமிகு முனைவர் பாலமகி
ஆகியோரின் அன்பில்
மனமெல்லாம் நிறைந்திருக்கின்றது..

திருமிகு GMB ஐயா அவர்களும் 
திருமிகு கோமதி அரசு அவர்களும் 
புதிய பதிவுகளைக் காணாததால்
அன்புடன் விசாரித்திருந்தனர்..

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.. 
* * *

தஞ்சை பூக்காரத்தெரு சுப்ரமண்ய ஸ்வாமிக்கு
சூர சம்ஹார மகா தீபஆராதனை..


Fb வழியாகக் கிடைத்த நாட்டு நடப்பு.. 


இந்த அளவில்
குறையொன்றும் இல்லை..
கூடும் அன்பினில் கூடுவதே அன்றி 
குறைவதொன்றும் இல்லை..

வாழ்க நலம்.. 
* * *