நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 19, 2016

திருமண மங்கலம்

கல்யாணம்.. திருக்கல்யாணம்..

அண்டசராசரத்திற்கும் அதிபதியாகிய அம்மையப்பனின்
அன்பு மகனாகிய நந்தீசனுக்குக் கல்யாணம்..


நல்லன எல்லாவற்றையும் தந்தருளும்
விழிக் கடையினை உடையவள் அபிராமவல்லி!..

அவள் -
அறம் வளர்த்த நாயகியாய் நின்று -
தன் மகனுக்குத் திருமணம் என்று -
ஆங்கொரு திருவிளையாடலை நிகழ்த்தும்போது
அவளுக்கு என்ன தேவையாயிருக்கும்!..

யாதொன்றும் இல்லை!..

ஆயினும், புவி கொண்ட புகழாக - திருமழபாடியில் நந்தீசனுக்குக் கல்யாணம் நிகழ்த்தும் வேளையில் உலகோர் தம் நடைமுறைகளைத் தானும் ஏற்றுக் கொண்டருளினாள்..

ஈசன் எம்பெருமானும் புன்னகையுடன் அனைத்தையும் அங்கீகரித்தருளினன்

அதன்படி,

பெரியோர்கள் மங்களச் சின்னங்களைத் தாங்கிய வண்ணம் வியாக்ர பாத முனிவரின் குடிலைத் தேடிச் சென்றனர்..

புலிக்கால் முனிவரே!.. நீர் பெரும்பேறு பெற்றவராகினீர்..
நீர் பெற்ற பேற்றினை - பெண் எனும் பெருஞ்செல்வத்தை
தமது மகன் நந்தீசனுக்கு மணம் முடிக்க விழைந்துள்ளனர் -
பரமனும் பரமேஸ்வரியும்!.. உமது விருப்பம் தனைக் கூறுவீராக!..

முனிவர்களின் வார்த்தையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த வியாக்ரபாதர் -

என் விருப்பம் என்று தனியாக ஒன்றும் உளதா!.. ஆயினும் வாழப் போகின்றவள் அவளாயிற்றே!.. அவளுடைய விருப்பமே எனது விருப்பம்!..

- என்று மொழிந்தவராக

சுயசாம்பிகா!.. உனக்கு மணம் எனும் மங்கல நிகழ்வினை பெரியோர்கள் கூடிப் பேசியிருக்கின்றார்கள். அன்பு மகளே.. உன் உள்ளத்தில் உள்ளதைக் கூறுவாயாக!..

- தனது மகளிடம் வினவினார்..

சுயம்பிரகாஷினி - சுயசாம்பிகா எனவும் சுயசை எனவும் அழைக்கப்படுபவள்..

பெற்று வளர்த்துப் பேணிக்காத்த என் தந்தையே.. தங்கள் திருவடித் தாமரைகளுக்கு என் வணக்கம்.. தாம் அறிவீர்.. தக்கது எது என்று!.. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!.. - என, எனக்கு அறிவூட்டி வளர்த்த தங்களை மீறுதற்கு யாதொரு சொல்லும் இல்லை.. செயலும் இல்லை!.. மாறாக ஏதும் நினைவேனாயின் கடுநரகில் வீழ்வேனன்றோ?..

ஓலைக்குடிலின் உள்ளிருந்து வந்த தேனினும் இனிய மொழியைக் கேட்டதும் தந்தையின் கன்னங்கள் ஆனந்தக் கண்ணீரால் நனைந்தன..

ஆனாலும் மகளே.. உலக இயல்பு என்றொன்று இருக்கின்றதே!..

தலைமேற்கொள்வதற்கே தந்தையின் வாக்கு!..  சித்தமெல்லாம் சிவமயம் என்றிருக்கும் தங்களின் திருவாக்கே எனக்கு வேதவாக்கு!..

ஆஹா!.. தர்மதேவனாகிய நந்தீசனுக்கு ஆன நற்றுணை இவளே!..
ஆகும் அனைத்தையும் அறிந்தவள் அறம் வளர்த்த நாயகி!..
அவளே இந்த மங்கலத்தையையும் நடத்துகின்றாள்!..
வாழி மகளே!.. சுயசாம்பிகா.. நீடூழி நின் மணாளனுடன் வாழி.. வாழி!..

- என, மணம் பேச வந்திருந்த மறையோரும் முனிவோரும் வாழ்த்தினர்..

மகிழ்ச்சியடைந்த வியாக்ரபாத முனிவர் -
ஐயனே.. ஐயாறப்பா.. அறம் வளர்த்த நாயகியே.. அனைத்திற்கும் துணை புரிக!..
என்று பணிந்து வணங்கினார்..


வியாக்ரபாத முனிவர்!..

விடிவதற்கு முன்பாக கொன்றை மரங்களைப் பற்றி ஏறி
மலர்க்கொத்துகளைப் பறித்து ஈசனுக்கு அர்ப்பணிப்பதற்கு ஏதுவாக -

புலியின் பாதங்களையும் இருளில் விளங்கக்கூடிய கூரிய விழிகளையும் வரமாக வேண்டிப் பெற்றவர்..

தனது தோழரான பதஞ்சலியுடன் நித்தமும் சிவ தியானத்திலிருந்து - 
திருச்சிற்றம்பலத்தில் - சிவகாமசுந்தரியுடன் தில்லைக்கூத்தன் நிகழ்த்தும் திருத்தாண்டவத்தைத் தரிசித்த பிறகே உணவு உண்ணும் பழக்கமுடையவர்..

இன்றைய நாட்களில் -
பொன்னையும் பொருளையும் குவித்து வைத்து
அவற்றைப் பூதம் எனக் காத்துக் கிடக்கும்  
வேடதாரிகளைப் போன்றவர் அல்ல அவர்!..

கந்தலான காவியும் காலங்கள் பலவான கமண்டலமும் ஒருசில ருத்ராட்ச மாலைகளும் விபூதிச் சம்படமும் தான் அவரது சொத்து!.. 

ஆனாலும் - மகளுடைய திருமணம் என்ற போதில்
அவருக்கும் உலகியலின் பொருளாதாரம் தேவைப்பட்டது!..

ஆயினும், 
அவர் அதைப் பற்றி யோசிக்கவும் இல்லை..
பிறரிடம் - பொன் பொருள் வேண்டுமென யாசிக்கவும் இல்லை!..

ஆனாலும், அம்மையும் அப்பனும் அனைத்தையும் அருளினர்..

அதன்படி -

திருப்பழனத்தார் பழவகைகள் அனைத்தையும் சீராகக் கொணர்ந்தனர்..

திருச்சோற்றுத் துறையினர் விருந்து உபசரிப்பு எங்களுடையது என்றனர்..

திருவேதிகுடியினர் மனைமங்கலம் ஆற்றுதற்கு முன்வந்தனர்..

திருக்கண்டியூரர் கூடி - சித்ரான்னங்கள் அனைத்தும் எம்முடையது என்றனர்..

திருப்பூந்துருத்தியினர் - வாசமலர்களைக் கூடை கூடையாய்க் குவித்தனர்..

திருநெய்த்தானத்தினர் - நெய்யும் பாலும் எம்முடையது என்று மொழிந்தனர்..

இத்தனை மங்கலங்களுடன் மேள தாளங்கள் முழங்க -

திருஐயாற்றிலிருந்து பொற்பல்லக்கில் ஆரோகணித்து -
திருநெய்த்தானம், கடுவெளி, வைத்யநாதன்பேட்டை  வழியாக கொள்ளிடம் ஆற்றைக் கடந்து - திருமழபாடிக்கு எழுந்தருளிய -


ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகியையும் நந்தீசனையும் -

எதிர் கொண்டு அழைத்தனர் - அங்கே முன்னதாகவே கண்ணாடிப் பல்லக்கில் சென்று காத்திருந்த சுந்தராம்பிகையும் வைத்யநாதப்பெருமானும்!..

சந்தனமும் தாம்பூலமும் வழங்கி -  நல்வரவு கூறி வரவேற்றனர்.

எல்லாவற்றையும் முன்பே உணர்ந்திருந்த வியாக்ரபாதர் - 
அனைவரையும் அன்புடன்  வரவேற்று இன்முகத்துடன் உபசரித்தார். 

வியாக்ர பாதரின் மகன் உபமன்யு, மாப்பிள்ளை நந்தீசனை எதிர்கொண்டு அழைத்து மணமாலை அணிவித்து வரவேற்றான். 

இந்த உபமன்யு பச்சிளம் பாலகனாக , பசி தாளாது அழுதபோது தான் - ஈசன் இரக்கங்கொண்டு பாற்கடல் ஈந்து அருள் புரிந்ததாக திருக்குறிப்பு உள்ளது.


வேத மந்த்ர கோஷங்களும் மங்கல வாத்தியங்களும் முழங்க - மணப் பந்தலினுள் கம்பீரமாக நந்தீசன் நுழைந்ததும் -

இல்லத்தினுள் தனியறையில் தோழியர் மத்தியில் இருந்த -
சுயம்பிரகாஷினி தேவிக்கு செய்தி மின்னலெனச் சென்றது.

கொள்ளை அழகு மாப்பிள்ளை!.. கொடுத்து வைத்தவள் நீ!.. 

குதுகலித்த தோழியர் மாப்பிள்ளையைச் சுட்டிக் காட்டினர்.  

மண் பொதிந்த மரபின் வழி வந்த நாணத்தால் -
முகம் சிவந்தாள் இளங்கன்னி சுயசாம்பிகா. 

மணப்பந்தலில் குழுமி இருந்த அனைவரது முகங்களிலும் ஆனந்தப் பரவசம். 

என்ன அழகு மாப்பிள்ளை முகத்தில்!.. 
இப்படியொரு தேஜஸை இதுவரை எங்கும் கண்டதில்லையே!..

ஒவ்வொருவரும் பேசிக் கொண்டனர்.. 

மங்கல வினைகள் தொடர்ந்து நிகழ்த்தப் பெற்றன..

விநாயகப் பெருமான் தாமே கல்யாண விநாயகராக எழுந்தருளினார்..

அக்னி வலஞ்சுழித்து வேள்வி குண்டத்தில் எழுந்தனன்..
நான்முகப் பிரம்மன் மங்கல வேள்வியை நிகழ்த்தினார்..

சிவகணங்கள் பல்லாண்டு பாடி மங்கலம் இசைத்தனர்

செல்வத் திருக்குமரன் - தன் இளவலான நந்தீசனின் திருக்கரத்தைனைப் பற்றி மணமேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தான்..

தேவ குஞ்சரியும் வள்ளி மயிலும் சர்வ அலங்கார பூஷிதையாகத் திகழ்ந்த சுயம்பிரகாஷினி தேவியை மணமேடைக்கு நடத்தி வந்தனர்..

ஆயிரமாயிரம் விழிகள் ஆவலுடன் பூத்துக் கிடந்தன..

அம்மையும் அப்பனும் மங்கல நாணைத் தொட்டு வழங்கினர்..  

பார்வதி பரமேஸ்வரர் தம் ஸ்வீகார புத்திரரும் 
சிலாத முனிவரின் திருக்குமாரரும் 
சகல வரங்களையும் பெற்றவரும் 
திருக்கயிலாய மாமலையில் 
அதிகார நந்தி எனும் பெரும் பதவியினை வகிப்பவரும் 
ஜபேசன் எனப் புகழப்படுபவருமான 

நந்தீசன் 
எனும் திருநிறைச் செல்வனுக்கு, 

அருந்தவ முனிவரான வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் 
வியாக்ர பாதரின் திருக்குமாரத்தியும் 
உபமன்யுவின் பிரிய சகோதரியும் 
சுயசாதேவி  எனப் புகழப்படுபவளுமான
  
சுயம்பிரகாஷினி  
எனும் திருநிறைச் செல்வியை

மணம் முடிக்க என்று நல்ல முகூர்த்தத்தில் 
பேசி முடித்த வண்ணமாக 

மங்கலகரமான மன்மத வருடம் பங்குனி மாதம் 
புனர்பூச நட்சத்திரங் கூடிய
வெள்ளிக்கிழமையாகிய சுப தினத்தின் 
சுபயோக  சுபவேளையில் 
திருமாங்கல்யதாரணம் நிகழ்ந்தது..

அஷ்ட மங்கலங்கள் பொலிந்தன. 
எட்டுத் திக்கிலும் மங்கல வாத்யங்கள் முழங்கின.

விநாயகனும் வேலவனும் அருகிருக்க,
முப்பத்து முக்கோடிதேவர்களும் சிவகணங்களும் மகரிஷிகளும் சூழ்ந்திருக்க, 

பஞ்சபூத சாட்சியாக, அக்னி சாட்சியாக -
அறம் வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் முன்னின்று -

ஸ்ரீநந்தீசனுக்கும் சுயம்பிரகாஷினி தேவிக்கும் திருமண வைபவத்தை நடத்தி வைத்து அருளினர். 

பூமாரி பொழிந்து அனைவரும் மகிழ்வெய்திய வேளையில் -
அரம்பையர் கூடி வந்து ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தனர்..

இந்த ஆனந்த வைபவம் - 
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் மற்றும் அகிலத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கண்குளிரக் காணும்படிக்கு இனிதே நடந்தேறியது. 

திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்தேறிய அளவில் - 

ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் வளர்த்த தாய் தந்தையர்க்கும் ஆதிகாரணராகிய அறம் வளர்த்த நாயகிக்கும் ஐயாறப்பனுக்கும் பாதபூஜைகள செய்து சுயம்பிரகாஷினி தேவியுடன் வலஞ்செய்து வணங்கினார். 

இளந்தம்பதியர் இருவரும் திருமணக் கோலத்தில் - ஸ்ரீசுந்தராம்பிகை சமேத வைத்யநாதப் பெருமானையும் வலஞ்செய்து வணங்கினர். 

விசேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களைப் பணிந்து வணங்கி இன்புற்றனர்.

மாட வீதிகளில் வலம் வந்த தம்பதியர்க்கு - திருமழபாடியின் மக்கள் அனைவரும் மாவிலைத் தோரணம் மங்கலச் சின்னங்களுடன் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.

ஐயாற்றிலிருந்து எம்பெருமானுடன் கூடி வந்த அனைவரும்  மணமக்களை தத்தமது ஊர்களுக்கு வந்தருளுமாறு வேண்டி விரும்பி அழைத்தனர்.  

சித்ரா பௌர்ணமியை  அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று - 
தாமே மணமக்களை அழைத்து வருவதாக அம்மையும் அப்பனும் 
அவர்களுக்கு வாக்களித்தனர்.

அனைவருக்கும் மனம் நிறையும்படி  அன்னமும் சொர்ணமும் வழங்கி அருள் பாலிக்கப்பட்டது.  

அந்த அளவில், 
அனைவரும் இன்புற்றிருக்க வேண்டி   - 
ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் சிவசாயுஜ்யம் பெற்றனர்.

சிவராஜதானியாகிய திருக்கயிலாய மாமலையில் - 

நெற்றிக்கண் இலங்கும் ரிஷபமுகத்துடன் 
அதிகார நந்தி எனத் திருத்தோற்றங் கொண்டு,
வலமும் இடமுமாக மழுவும் மானும் விளங்க,
பொற்பிரம்பு  தாங்கி திருக்குறிப்பு உணர்த்தியவாறு
திருத்தொண்டு புரிந்து இன்புற்றனர்.

* * *

இந்த அளவில் -
என் தந்தையினும் தந்தையாய், எங்கள் குல தெய்வமாய் விளங்கும்  -
ஸ்ரீ நந்திகேஸ்வரர் சுயசாம்பிகை தேவி திருமண வைபவம் சிந்திக்கப்பட்டது. 

நந்தீசர் திருமண வைபவத்தினைக் கேட்டவர்க்கும் படித்தவர்க்கும்
சிந்தித்தவர்க்கும் மனை மங்கலம் சிறக்கும் என்பது திருக்குறிப்பு!.. 

நந்தியம்பெருமான் திருமணத்தைத் தரிசித்தால் -  
தடைகள் உடைபட்டு திருமணம் கைகூடி வரும்..
அத்துடன் வாழ்வின் நற்பயன்கள் அனைத்தும் தேடி வரும் என்பது நிதர்சனம்..

இதனால் தான் - 
நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்!.. 
- எனும் சொல்வழக்கு வழங்குகின்றது.
***

வியாழக்கிழமையன்று திருஐயாற்றின் நிகழ்வுகள்..


நந்தீசன் திருஅவதார வைபவம்




திருமழபாடிக்கு எழுந்தருளல்
வெள்ளிக்கிழமையன்று திருக்கல்யாண நிகழ்வுகள்.






நிகழ்வின் படங்களை வழங்கிய 
திருமிகு தம்பிரான் ஸ்வாமிகளுக்கு மனமார்ந்த நன்றி..

வருடந்தோறும் திருமழபாடியில் நந்தீசனின் திருமண வைபவம் சிறப்பாக நிகழ்கின்றது.  

இந்த வைபவத்தில் திருமழபாடியைச் சுற்றியுள்ள மக்களும் மற்றும் 
வெளியூர்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.

திருமழபாடி
இறைவன் - ஸ்ரீ வைத்யநாதர்
அம்பிகை - ஸ்ரீ சுந்தராம்பிகை
தலவிருட்சம் - பனை
தீர்த்தம் - லக்ஷ்மி தீர்த்தம், கொள்ளிடம்

அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் - என மூவராலும் திருப்பதிகங்களைப் பெற்ற திருத்தலம் -  திருமழபாடி. 

தஞ்சை - அரியலூர் நெடுஞ்சாலையில் திருமானுரை அடுத்து, மேற்காக கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது திருமழபாடி.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாறு , திருமானூர் வழியாக சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

தவிரவும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயங்குகின்றன.

நந்தியம்பெருமானின் திருமண வைபவத்தின் தொடர்ச்சியாக  -

திருஐயாற்றில் சித்திரையில்  ஏழூர் வலம் வரும் சப்தஸ்தானத் திருவிழாவும் நடைபெறும்.

இனி வரும் நாட்களில் - சப்த ஸ்தான மங்கல வைபவங்களைச் சிந்திக்கும் வாய்ப்பினை - எல்லாம் வல்ல சிவம் அருள்வதாக!..

நெற்றிமேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர் 
பொற்றடம் புய நான்கும் பொருந்துறப்
பெற்றெம்மான் அருளால் பிரம்பு கைப் 
பற்றும் நந்தி பரிவொடு காப்பது!.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

12 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    பிரமிக்கத்தக்க ஆன்மீக விடயங்கள் அறிந்து பிரமிப்பாக இருக்கின்றது
    நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் திருமழபாடியைப்பற்றி தந்தமைக்கு நன்றி வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருமழபாடி பல முறை சென்றுள்ளேன். இன்று தங்கள் பதிவு மூலமாக அரிய நிகழ்வு கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருமழபாடி கோயிலுக்கு நாங்கள் சென்றதைக் காண உங்களை அழைக்கிறேன். ஓய்விருக்கும்போது வாருங்கள்.
    http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_29.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நிச்சயம் வருகின்றேன்.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான பகிர்வு. உங்கள் பதிவில் தரும் படங்கள் மூலம் நாங்களும் அவ்விடங்களுக்குச் சென்று தரிசனம் செய்த உணர்வு. நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் சிறப்பு ஐயா... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..