நீர்!..
தண்ணீர்!..
உண்ணும் சோறு
பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி..
பருகும் நீரை கண்ணன் என்று மனம் உருகுகின்றார் - நம்மாழ்வார்.
இவ்வண்ணமே - சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் -
அம்பரமே
தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்!..
- என விளிக்கின்றாள்..
வைணவத்துடன் இணைந்து சைவமும் ஈசனைப் புகழும் விதம் இதோ!..
நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்!..
- என்று ஆனந்தப் பரவசம் எய்துபவர் மாணிக்கவாசகப் பெருமான்.
திருப்பெருந்துறையில் - இறைவன் குரு வடிவாக வீற்றிருக்க,
(கல்லாக இருக்கும் என் மனதை)
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே!..
என்று உருகுகின்றார். மேலும் எம்பெருமானை -
காக்கும் என் காவலனே!.. காண்பரிய பேரொளியே!..
ஆற்றின்ப வெள்ளமே!..
- என்றெல்லாம் புகழ்ந்துரைக்கின்றார் - மாணிக்கவாசகப் பெருமான்.
அதானால் தான் -
திருவாசகத்திற்கு உருகார் - ஒரு வாசகத்திற்கும் உருகார்!.. - என்றானது.
சூழொளி
நீர் நிலம் தீ தாழ்வளி ஆகாசம்.. - என்று ஆனவன் இறைவன் என்று போற்றுகின்றார் - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்.
இறைவனின் பேரழகை -
நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கு அணிந்த தத்துவன்!..
- என்று சுட்டிக் காட்டி மகிழும் திருஞானசம்பந்தப் பெருமான் -
கா - எனப்படும் பூந்தோட்டங்களையும் மரக் கூட்டங்களையும் பேணிக்காத்து - குளம் முதலான
நீர் நிலைகளை விளங்கச் செய்பவர் தம்மை - எவ்வித தீவினையும் வந்து தீண்டப்பெறாது. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை!..
- என்று அறுதியிட்டுக் கூறியருள்கின்றார்.
இறை வழிபாட்டில் எளிமையினைக் கூறியருளும் ஞானசம்பந்தப் பெருமான் நம் பொருட்டு இறைவனிடம் வைக்கும் வேண்டுகோள் என்ன!.
பொன்னடியே பரவிநாளும் பூவொடு
நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!..
நெடுங்களத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானே!.. நின் பொருட்டு பூவும் நீரும் சுமந்து வரும் நின் அடியாருடைய இடர்களைக் களைந்தருள்வாய்!..
ஞானசம்பந்தப் பெருமான் - இவ்வாறு கூறியருளியதற்கு ஏற்றார் போல,
திருஐயாற்றில் திருக்கயிலாயத் திருக்காட்சி கண்டபின் - திருக்கோயிலினுள் புகுந்த விதத்தை திருநாவுக்கரசர் - இவ்வாறு கூறியருள்கின்றார்.
மாதர்ப் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்தி
புகுவார் அவர்பின் புகுவேன்!..
எம்பெருமானின் பூசனைக்கென -
நறுமணம் மிக்க மலர்களோடு நீரையும் சுமந்து கொண்டு செல்லும் அடியவர்களைப் பின் தொடர்ந்து - திருக்கோயிலினுள் புகுந்தேன்!..
அப்பேர்ப்பட்ட அடியார் - திருநாவுக்கரசு என இறைவனால் திருப்பெயர் சூட்டப் பெற்றவர்,
ஞானசம்பந்தப் பெருமானால் - அப்பா!.. - என அழைக்கப்பட்ட புண்ணியர்,
எளியர்க்கு எளியராக நீர் சுமந்து செல்வோர் தம்மைப் பின் தொடர்ந்து - திருக் கோயிலினுள் புகுகின்றார்.
திருமுனைப்பாடி நாட்டில் - திருவாமூர் எனும் திருத்தலத்தில் - புகழனார் மாதினியார் எனும் தம்பதியரின் அன்புச் செல்வங்கள் - திலகவதி மற்றும் மருள் நீக்கியார்.
நிச்சயிக்கப் பெற்ற மணாளன் போர் முனையில் வீர மரணம் அடைந்து விட - திலகவதியின் வாழ்க்கை கேள்விக் குறியாகின்றது.
மகளின் நிலை கண்ட தந்தை மனம் உடைந்து சிவகதியடைகின்றார். கணவனைத் தொடர்கின்றார் - மாதினியார்.
தம்பிக்காக உயிர் தாங்குகின்றார் - திலகவதியார்.
தாம் கொண்ட செல்வத்தைக் கொண்டு அறம் செய்கின்றார் - மருள் நீக்கியார்.
சோலைகளை வளர்த்தார்.
குளங்களை உருவாக்கினார்.
தண்ணீர்ப் பந்தல்களை அமைத்தார்
- என பெரிய புராணம் கூறுகின்றது.
ஆயினும், மனம் அமைதி அடையாததால் - சைவ சமயத்தை விட்டு நீங்கி புறச்சமயத்தில் ஒழுகினார்.
சகோதரி திலகவதியாரின் வேண்டுதலினால் - சூலை நோயுடன் மீண்டும் சைவ சமயத்திற்குத் திரும்பினார்.
நோயின் கொடுமை தாங்கமாட்டாதவராக - திரு அதிகை வீரட்டானத்தில் இறைவனைத் துதித்து - பாடிய திருப்பதிகத்தில் -
சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்!.. - என்று தன் நிலையைக்குறிக்கின்றார்.
நீரும் பூவும் தூபமும் கொண்டு உன்னை வழிபட மறந்தறியாத எனக்கு இந்த நிலையா!.. என் நோயைத் தீர்த்தருளல் ஆகாதா?..
இப்படி வருந்திய மருள்நீக்கியார் தான் - திருநாவுக்கரசர் ஆகின்றார்.
இவரைப் பற்றிக் கேள்விப்பட்டதாலேயே - திருநாவுக்கரசர் திருப்பெயரில் - திங்களூரில் அப்பூதி அடிகள் எனும் தனவந்தர் - தண்ணீர்ப் பந்தல் அமைத்து அறம் செய்கின்றார்.
பின்னும் திருநாவுக்கரசர் - திருத்தல யாத்திரையின் போது - வயோதிகத்தினால் வாட்டமுற்றுக் களைத்து மயங்குகின்றார்.
அப்போது, வாழைத் தோட்டத்தின் அருகில் - தண்ணீருடன் தயிர் சோற்றுப் பொதியும் கொணர்ந்து - இறைவன் தம் கையால் அப்பர் பெருமானுக்குப் பரிமாறி - களைப்பு நீக்குகின்றான்.
இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த திருத்தலம் - திருப்பைஞ்ஞீலி.
திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தின் தலவிருட்சம் - வாழை.
திருநாவுக்கரசரின் தாகம் தீர்த்ததால் திருக்குளத்தின் பெயர் - அப்பர் தீர்த்தம்.
நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே!..
- என்று போற்றிப் புகழ்ந்துரைக்கும் அப்பர் பெருமான் -
சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திருஆலங்காடுறையும் செல்வர் தாமே!..
- என்று, தீர்த்தங்களை - சிவ ஸ்வரூபமாகக் கண்டு மகிழ்கின்றார்.
போலியான புறச் சடங்குகள் அற்ற - இறை வழிபாடு எல்லாருக்கும் கூடி வருவதல்ல!..
இறைவனை வழிபடுவதே புண்ணியம் என்கின்றார் திருமூலர்.
அப்படியான - புண்ணியம் செய்ய முற்படுவோர்க்கு
பூவும் நீரும் கிடைத்தே தீரும் - என்றருள்கின்றார்.
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறியாமல் நழுவுகின்றாரே..
- என்பது திருமூலரின் திருமந்திரம்.
வழுவாத மழைக்கு மரங்களே ஆதாரம்.
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே!..
மரங்களைப் பேணி வளர்க்காதவர் - எஞ்சிய நாட்களுடன் நரகத்தில் நிற்பர்!..
- என்று நம்மை எச்சரித்து அறிவுரை அளிப்பவர் திருமூலர்.
ஆனால் -
நாம் தான் கேளாச் செவியராக -
பசுமை அழிவதைக் கண்டும் காணா விழியராக ஆனோம்!..
.jpg) |
Mabella slum in
Sierra Leone's capital Freetown. |
.jpg) |
Natwarghad -
Gujarat.
|
.jpg) |
Polluted water
flowing Jian River in Luoyang, North China
|
.jpg) |
Village in Tariq
district, Baghdad. Iraq.
|
ஊற்று, சுனை, குட்டை, குளம், அகழி, கிணறு, ஏரி, ஆறு - நினைக்கவே பிரமிப்பு.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீர் மேலாண்மைத் திறம் நம்முடையது.
ஆனால் - இன்று பெய்யும் மழையைத் தேக்கி வைப்பதற்கும் வகையற்றுப் போனோம்.
திருக்கோயில்களில் திருவிழாக்களின் நிறைவு -
தீர்த்தவாரி, தெப்பம்!..
இன்று பல திருக்குளங்களைத் திடல்களாக ஆக்கிய பெருமை நம்முடையது.
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகள..
- என்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் சொல்லுகின்றாள்..
அவள் மட்டுமா சொல்லுகின்றாள் - அப்படி!..
இதோ அருணகிரியார் திருவாக்கு -
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற் பொழில்!..
இப்போது - நாம் அழித்தது போக மிச்சம் மீதியிருக்கும் வயற்பொழில்களில் நீருக்கே பஞ்சம்!..
அப்புறம் எங்கே வயல் நீரில் வாளையும் விராலும் சேலும் கெண்டையும் துள்ளி விளையாடுவது?..
இன்று
சர்வதேச தண்ணீர் தினம்!.. உலக நீர் நாள்!..
நீர் ஆதாரங்கள் எப்படியெல்லாம் நம்மால் சிதைவுற்றன - என்ற விவரங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்கின்றன..
எதிர்வரும் ஆண்டுகளில் நீருக்காக போராட வேண்டியிருக்கும் என்கின்றனர்.
நீர் நிலைகளைக் காப்பாற்றி - இயற்கையைப் பேணுதலே அறிவுடைமை.
நீரிடை பூத்த தாமரையில் - நான்முகன் விளங்குவதும்
நீரிடை அனந்த சயனத்தில் அரங்கன் துலங்குவதும்
நீரின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்வதற்காகவே!..
ஆயிரம் முகத்தினொடு இறங்கிய கங்கையாளை தனது ஜடா மகுடத்தில் சிறை வைத்து - கட்டுப்படுத்திய சிவபெருமானின் திருவிளையாடல் -
நீரின் மேலாண்மையை உணர்த்துதற்கே!..
ஏதொன்றும் கொடுக்க இயலவில்லையே என ஏங்கித் தவிக்கும்
விழிகளின் கண்ணீர்த் துளியினை அன்புடன் ஏற்றுக் கொள்கின்றேன்!..
- என்கின்றான் ஸ்ரீஹரிபரந்தாமன்.
அது - அன்பு ததும்பி ஆற்றாமையில் தவிக்கும் உள்ளங்களுக்கு!..
நாம் தான் வேறு மாதிரி ஆயிற்றே!..
அனைத்தையும் கெடுத்து விட்டோம்!. அல்லலுற்று ஆற்றாது அலைகின்றோம்!. ஆதரித்து அருள்வாய் ஐயனே!..
விழி நீர் சிந்துவதற்குக் கடைசி புகலிடம்
அவனது திருவடிகள் மட்டுமே!..
பஞ்ச பூதங்களின் வரிசையில்
நீர் இரண்டாவதாக குறிக்கப்படுகின்றது.
வள்ளுவப் பெருந்தகையும்
வான் சிறப்பு என நீரின் சிறப்பை
இரண்டாவதாக வைத்து நமக்கு அறிவுரைக்கின்றார்.
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. (0020)
நீர் காப்போம்!.. நிலம் காப்போம்!..
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..
* * *