நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 16, 2013

வைகாசியே வருக!..

வைகாசி பிறந்து விட்டது.

வைகாசி - தமிழ் வருடக்கணக்கில், ரிஷப மாதம் எனும் இரண்டாவது மாதம். உத்ராயண காலத்தின் ஐந்தாவது மாதம். இது தான் வசந்தருது எனப்படும் வசந்த காலம். 




சித்திரையும் வைகாசியும் இணைந்த இளவேனிற் காலம். கத்தரி வெயில் சற்று அதிகமாக இருக்கும் . ஆனால் அதுவும் நன்மைக்கே!.. அக்னி நட்சத்திர நாட்களில் மக்கள் தான தர்மங்களில் மனம் செலுத்தி ஆங்காங்கே தண்ணீர்ப்பந்தல் அமைத்து பராமரிக்கும் காலம். 

வைகாசியில் நிறைந்த விசேஷங்கள். 

திருவையாற்றின் வடக்கே கொள்ளிடக்கரையில் உள்ள திருமழபாடி திருத்தலத்தில் வைகாசி விசாகத்தன்று இறைவன் திருநடனம் புரிந்ததாக ஐதீகம். திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயிலிலும் வசந்த உற்சவம் தொடங்கியுள்ளது. 


எம்பெருமானாகிய ஸ்ரீமஹாவிஷ்ணு - தன் பக்தன் பிரகலாதன் பொருட்டு தூணில் ஸ்ரீநரசிம்ம அவதாரமாகத் தூணில் தோன்றியருளிய நாள் - வைகாசி மாத சுவாதி நட்சத்திரங்கூடிய பிரதோஷ வேளை. (வளர்பிறை சதுர்த்தசி திதியினை அனுசரித்து நிகழும்)
 
நம்மாழ்வாரின் திருநட்சத்திரமும் வைகாசி விசாகம் தான். நம்மாழ்வார் அவதரித்த திருநாள் ஆழ்வார்திருநகரியில் வெகுசிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. 




உலக உயிர்கள் உய்யும் பொருட்டு சரவணப் பொய்கையில் திருமுருகன் தாமரை மலரில் உதித்ததும் வைகாசி மாதத்தில் தான்!... விசாகம் முருகனின் திருநட்சத்திரம்...

வைகாசி பூச நட்சத்திரம் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான் தவநிலையில் அமர்ந்து சிவபெருமானின் திருவடிகளிச் சிந்தித்து முக்திப்பேறு எய்திய நாளாகும். 

வைகாசி மூல நட்சத்திர தினத்தில் தான் - திருஞானசம்பந்தப் பெருமான் - தமது திருக்கல்யாண வைபோகத்தில் மனையாளின் திருக்கரத்தைப் பற்றியவாறே - சிவஜோதியுள் ஒன்றினார். அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்க நாயனார், முருகநாயனார் ஆகியோரும் சிவஜோதியுள் ஒன்றி உடனாகினர்.

ஸ்ரீ மனோன்மணி அம்பிகையுடன் ஸ்ரீ சந்திரசேகரர். உவரி.
 உவரி அருள்மிகு சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் மகர மீனுக்குத் திருக்காட்சி அளிக்கும் வைபவம் மூன்று நாள் திருவிழாவாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடிக் களிக்க கோலாகலமாக நடைபெறுகின்றது. 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. 


காஞ்சி காமகோடிபீடாதிபதி மகாபெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய்தது வைகாசி - அனுஷ நட்சத்திரத்தில். 

வைகாசியில் தமிழகத்தின் பற்பல திருக்கோயில்களிலும் வசந்த உற்சவம் நடைபெறுகின்றன. 

இறையன்பர்கள் - தம்மால் இயன்றவரை தண்ணீர்ப்பந்தல் அமைத்து நலம் எய்தலாம். வசதியிருப்பின் குளிர்ந்த மோர் கூட வழங்கலாம். 

திங்களூரில் - தன்னலமற்ற சிவநேசச் செல்வராகிய அப்பூதி அடிகள் தண்ணீர்ப்பந்தல் அமைத்து மக்களுக்கு சேவை புரிந்த சிறப்பினால் அல்லவோ - அப்பர் பெருமானின் திருவாக்கினால் புகழப்பட்டார். 

பகைவனே ஆனாலும் - தவித்த வாய்க்குத் தண்ணீர் வழங்குவது, தமிழர் தம் அறச்செயல்களுள் ஒன்று. 

அதே சமயம் காலந்தாழ்த்தி தண்ணீர் கொணர்ந்ததால் - மான உணர்வினால் உந்தப்பட்டு, தன்னுயிர் நீத்த சேரமான் கணைக்கால் இரும்பொறையின் மறமும் மானமும் இன்று வரையிலும் தமிழ் கூறும் நன் நெஞ்சங்களால் போற்றப்படுபவை.

அன்னை அறம் வளர்த்த நாயகி ஐயன் அளந்த, நாழி நெல் கொண்டு - இயற்றிய முப்பத்திரண்டு அறங்களுள் தண்ணீர் வழங்குதலும் ஒன்றாகும்!.. 

அறம் உரைத்த ஐயன் திருவள்ளுவரின் திருக்குறிப்பும் அதுதான்!...

நீரின்றி அமையாது உலகு!...

2 கருத்துகள்:

  1. எத்தனை எத்தனை சிறப்புகள்...

    விளக்கங்களுக்கு மிக்க நன்றி அய்யா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு. தனபாலன் அவர்களே!...தண்ணீரையும் விலைக்கு வாங்கிக் குடிக்க வேண்டிய அவலம் நிகழும் இந்தக் காலத்தில் - நம்மையெல்லாம் நல்ல நிலையில் வைத்திருக்கும்படி இறைவனை வேண்டிக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..