நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 01, 2013

ஸ்ரீ கால வைரவர்

சர்வேஸ்வரனாகிய சிவபெருமானின் திருக்கோலங்களில் வைரவ திருக் கோலமும் ஒன்று. 

அதிலும் வைரவத் திருக்கோலங்கள் எட்டு. இந்த எட்டும் ஈசன் நிகழ்த்திய அட்ட வீரட்டானங்களுடன் தொடர்புடையவை. 

வீரச்செயல்களை நிகழ்த்துங்கால், ஈசன் ஏற்கும் திருக்கோலமே வைரவத் திருக்கோலம் என்று புராணங்கள் பேசுகின்றன. மேலும் கூடுதலாக-  

வைரவமூர்த்தி அறுபத்துநான்கு திருத்தோற்றங்களுடன்,  அருஞ்செயல்கள் மேற்கொள்வதாகவும் திருக்குறிப்புகள் உள்ளன . 


பைரவர் என்பது சமஸ்க்ருதத்தில்.  

வைரவர் எனவும் வயிரவர் எனவும் வழங்கப்படுவது - தமிழ் மரபில்.

வைரவர் சிவாலயங்களில் ஈசான்யம் எனும் வடகிழக்கில் மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார். சிற்சில திருக்கோயில்களில் மட்டுமே வைரவர் தனியாக சந்நிதியில் எழுந்தருளியிருப்பதைக் காணமுடியும். 

தன்னை அடைக்கலமாக அடைந்தவருடைய பயத்தை நீக்கி,  அபயம் அளித்து அவர் தம் எதிரிகளை அச்சுறுத்தி அப்புறப்படுத்துவதில் வைரவரின் தனிப் பெருங்கருணை அளவிடற்கரியது.

சிவாலயங்களில் விநாயக தரிசனத்துடன் நாம் வழிபாட்டினை ஆரம்பித்து வைரவமூர்த்தியின்  தரிசனத்துடன் நிறைவு செய்கின்றோம்.  

அஷ்டமியில்  எந்த ஒரு செயலையும் செய்வதற்கு மக்கள் விரும்புவதில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

முதன்மையான காரணம் -

அஷ்டமி திதி - அகந்தைக்குத் தண்டனை வழங்கப்பட்ட நாள். பிரம்மனின் சிரம் அறுக்கப்பட்ட நாள்.

சிவபெருமானைப்போலவே ஐந்து திருமுகங்களுடன் திகழ்ந்ததால் அகந்தை மீதூறிக் கிடந்தது பிரம்மனின் நடவடிக்கைகளில். இதில் மஹாவிஷ்ணுவுடன் யார் பெரியவர் என்ற போட்டி வேறு. 

ஞானச்செல்வியாகிய அன்னை கலைவாணி உடனிருந்து உணர்த்திய போதும் உள்வாங்கிக் கொள்ள முடியாதபடிக்கு பிரம்மனின் மனக்கதவுகள் அடைத்துக் கிடந்தன.  

எனவே பிரம்மனின் நெஞ்சகத்தில் வேரூன்றிக் கிடந்த அகந்தைக் கிழங்கினை அகழ்ந்தெடுப்பதற்காக -

சிவபெருமானின் திருமேனியிலிருந்து வைரவமூர்த்தி வெளிப்பட்டுத் தோன்றினார். 

அப்படித் தோன்றிய நாள் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி.  

ஆனால், பிரம்மன் அகந்தையில் இறுமாந்து கிடந்தமையால் தன் முன் ஜோதி வடிவாக வெளிப்பட்ட வைரவ மூர்த்தியை ''..வா!.என் மகனே!..'' என்று அழைத்தான் . அந்த கொடுஞ்சொல்லால் - வேறு வழியின்றி  பிரம்மனின்  சிரங்களை அறுக்க வேண்டியதாயிற்று. 

ஐந்து சிரங்களுள் ஒன்று சேதிக்கப்பட்டு - நான்முகங்களானதும் நல்லறிவு பிறந்தது. செந்நீரும்  கண்ணீரும் வழிய நின்ற பிரம்மனைக் கண்டு இரக்கங் கொண்ட வைரவர் - தான் கொண்ட கோபம் தணிந்து நின்றருளினார். 

தேவாதிதேவரும் நவக்கிரக நாயகர்களும் திருவடிகளைப் பணிந்து நின்றனர். அப்போது சகலமும் தானாகி - எல்லாமும் தன்னுள் அடங்கி ஒடுங்கியிருப்பதை எல்லோருக்கும் உணர்த்தினார் ஸ்ரீ வைரவமூர்த்தி. 

அவர்தம் திருமேனியில் அண்ட பகிரண்டங்களுடன் பன்னிரு ராசிகளையும் தம்மையும் கண்டு மகிழ்ந்த நவக்கிரக நாயகர்கள் வைரவமூர்த்தியின் அனுக்கிரகம் பெற்ற அடியவரைத் தாம் எதுவும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து கொண்டனர். 


நான்முகனும் கலைவாணியும் மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் ஸ்ரீவைரவ மூர்த்தியைப் போற்றி நின்றனர். அவர்தம் போற்றுதல்களை ஏற்று அனைவருக்கும் மங்கலங்களைப் பிரசாதித்து அருளினார் வைரவமூர்த்தி. 

இப்படி -  

எட்டுவகையான அம்சங்களுடன் பெருஞ்செல்வங்களை அள்ளித்தரும் மஹா லட்சுமியும் மற்றுமுள்ள மங்கலதேவியரும் அஷ்டமி திதியன்று வைரவரை வணங்கி நின்று வழிபட்டதால் -  

அன்றைய தினத்தில் எந்த மங்கல காரியமும்  தொடங்கப்படுவதில்லை. 

இது நிகழ்ந்தது -  தஞ்சைக்கு அருகில் உள்ள கண்டியூர் எனும் திருத்தலத்தில் -

இப்படித் தோன்றியருளிய திருக்கோலத்தினை - ஸ்ரீகாலபைரவர் என்பது மரபு. 

காலபைரவர் பாம்பினைப் பூணூலாக அணிந்து சந்திர கலையினை சிரசில் தரித்து மழு பாசம் மற்றும் சூலத்துடனும் தண்டத்துடனும் விளங்குவார். காலபைரவருக்கு இரண்டு திருப்பெயர்கள் விளங்குகின்றன. 

தான் என்ற அகந்தையுடன் தன்னிலை மறந்தவர்களையும்  அடுத்தவர்க்கு அநீதி செய்து உழலும் அக்கிரமக்காரர்களையும் தண்டிப்பதால் அமர்தஹர் எனவும், 

தன் பக்தர்கள் மாயையின் வசப்பட்டு அறியாமையால் செய்யும் பிழைகளை மனங்கனிந்து பொறுத்தருள்வதால் பாப பக்ஷணர் எனவும் புகழப்படுகின்றார். 

ஸ்ரீ வைரவமூர்த்தி தியானித்து குருவாகக் கொண்டு உயர்நிலையினை அடைந்தார் - சூர்யனின் புத்திரராகிய சனைச்சரன். எனவே வைரவமூர்த்தியின் பாதம் தொழுவார்க்கு - சனைச்சரனின் ஏழரை ஆண்டு கெடுபிடி குறைவாகவே இருக்கும் என்று ஜோதிஷ வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும்  தேய்பிறை அஷ்டமி திதி வைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும்.  இந்நாளே வைரவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. 

காலையில் எழுந்ததும் குளித்து,  திருநீறணிந்து இதயசுத்தியுடன் அமர்ந்து - ''ஓம் ஸ்ரீகாலபைரவாய நமஹ'' - என, இயன்றவரை உச்சரித்து வணங்கினால் சகலநன்மைகளும் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. 

தேய்பிறை அஷ்டமி தவிர்த்த வேறு நாட்கள் எனில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகள் சிறந்தவை. அதிலும் ராகு காலம் சிறந்தது. அவசரம், ஆபத்து எனில் எந்தநாளிலும் திருக்கோயில் திறந்திருக்கும் வேளையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு நலம் பெறலாம். 

வேறு பிரச்னைகள் தீரவேண்டும் என்று -  ஸ்ரீ வைரவமூர்த்தியை வழிபட முற்படுவோர் - பிரம்மசர்ய விரதத்துடன் மது, மாமிசம் நீக்கியவராக வழிபட வேண்டும்.


வைரவரின் தியான சுலோகம். 

ரக்த ஜுவாலா ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூல கபால பாச டமருகம்
லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் ஸூநவாஹனம்
த்ரிநயனம் ச அனந்தகோலாகலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

அஷ்டலக்ஷ்மிகளும் நவக்கிரகங்களும் வணங்கி வழிபடுவதால், ஸ்ரீவைரவ மூர்த்தி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் நவக்கிரக தோஷங்களின்றி - நமக்கு அருள் புரிவார் என்பது திருக்குறிப்பு.

அப்படி நாம் அருளைப் பெறுவதற்கு, வைரவர்  சந்நிதியை நெருங்கும் முன் - 

மனம் வாக்கு காயம் - எனும் திரிகரணங்களால் விளையும் அழுக்கினின்று நீங்கியவராக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். 

ஒருமித்தசிந்தையராக காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் அறுவகையான தீய குணங்களையும் விட்டு விலகியவராக -

ஸ்ரீகாலபைரவ மூர்த்தியின் திருவடிகளைத் தொழுதால் நாம் கேட்கும் எல்லா நியாயமான கோரிக்கைகளையும் ஐயன் மனமகிழ்வுடன் நிறைவேற்றித் தருவார். 

இருப்பினும் ஒன்று - 

இப்படியாக - காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் அறுவகையான தீய குணங்களையும் விட்டு விட்டால் -

ஸ்ரீகாலபைரவ மூர்த்தியிடம் கேட்டுப் பெறவேண்டிய தேவை என்று எதுவும் இருக்காது. 

ஏனெனில் - ஐயனின் பரிபூரணமான அருள் நம்மிடம் நிறைந்து விடும்.

ஸ்வான த்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி: 
தந்நோ பைரவ ப்ரசோதயாத்:

2 கருத்துகள்:

  1. விளக்கங்கள், வழிபாடும் முறை என அனைத்தும் அருமை ஐயா... நன்றி...

    இங்கு தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவிலிலும் அஷ்டமி அன்று விசேசம்... கூட்டம் அலைமோதும்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி...திரு. தனபாலன் அவர்களே!...தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் தானே புகழ்பெற்ற ரதி மன்மதன் சிலை உள்ளது?... இன்னும் நான் தரிசனம் செய்ததில்லை...

    பதிலளிநீக்கு