நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 14, 2015

மார்கழிக் கோலம் 30

குறளமுதம்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணிய
திண்ணியராகப் பெறின். (666)  

எண்ணியதைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பவர்
எண்ணியதை எண்ணியவாறே 
வெற்றியுடன் அடைவர். 
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 30


வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்!..


திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே 
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே 
ஒருநூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள் வாழியே
உயர்ரங்கற்கே கண்ணி உகந்தருளி தாள் வாழியே 
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீஆண்டாள் அருகிருந்து 
 மார்கழிக் கோலம் எனும் பதிவுகளை 
அவளே மங்கலகரமாக நிறைவு செய்தாள்..

ஆண்டாள் திருவடிகள் சரணம்!..

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
தஞ்சை யாளி நகர்

தஞ்சை யாளி நகர்
மூலவர் - வீரநரசிம்ஹ பெருமாள்
உற்சவர் - லக்ஷ்மி நாராயணன்
தாயார் -  தஞ்சை நாயகி
விமானம் - வேதசுந்தர விமானம்

ப்ரத்யட்சம்
பராசரர், மார்க்கண்டேயர்

தஞ்சை மாமணிக்கோயில்
மூலவர் - நீலமேகப்பெருமாள்
தாயார் - செங்கமலவல்லி 
விமானம் - செளந்தர்ய விமானம்

தஞ்சை மணிக்குன்றம்
மூலவர் - மணிக்குன்றப்பெருமாள்
தாயார் - அம்புஜவல்லி 
விமானம் - மணிக்கூட விமானம்

மூன்று திருக்கோயில்களிலும் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். 

தலவிருட்சம் - மகிழமரம். தீர்த்தம்  - வெண்ணாறு. ப்ரத்யேகமாக அம்ருத தீர்த்தம், கன்னிகா புஷ்கரிணி, சூர்ய புஷ்கரிணி, ஸ்ரீ ராமதீர்த்தம் ஆகியனவும் விளங்குகின்றன.

திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகிய புண்ணியர் தம் திருவாக்கினால் மூன்று திருமேனிகளுடன் கூடிய சாந்நித்யங்களை ஏக திவ்ய தேசமாக மங்களாசாசனம் செய்விக்கப்பட்டதிருத்தலம்.

பிரம்மாண்ட புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சோழ மண்டல சதகம், பிரகதீசுவர மகாத்மியம் முதலிய நூல்கள் இத்தலத்தின் மகத்துவத்தைப் பற்றி சிறப்பித்துப் புகழ்கின்றன.

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் பெரும்பதி - தஞ்சையம்பதி. 

வானளாவ உயர்ந்த - அடர்ந்த சோலைகள் சூழ்ந்த விசாலமாக விளங்கிய தஞ்சபுரி. இதன் பேரழகும்  வளமும் பராசர மகரிஷியை மிகவும் கவர்ந்தது. தம் சீடர்களுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து  தவம் மேற்கொண்டார். 

இந்நிலையில் வடக்கே தண்டகாரண்யத்திலிருந்து வளமையான தென்திசை நோக்கி வந்த - தஞ்சன், தாரகன், தண்டகன் ஆகியோர் வானளாவிய மரங்களும் சோலைகளும் நிறைந்து விளங்கிய இந்த பகுதியில்  குடியேறினர்.  

அரக்க குணங்களுக்கு ஆட்பட்ட அவர்களால் - முனிவர்களுக்கு தீராத இடையூறு ஏற்பட்டது.

பராசர மகரிஷி இதனை முறையிட்டு  ஸ்ரீமந் நாராயணனைக் குறித்துத் தவம் செய்தார். 

மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமாள், முதலில் நீலமேகமாகத் தோன்றி அமிர்த புஷ்கரணி நீரைப் பருகி - ஸ்ரீநீலமேகப் பெருமாளாய் அவதாரம் செய்தார்.


தண்டகன் -  பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். பெருமாள் ஸ்ரீவராஹ மூர்த்தி எனத் தோன்றி  பூமிக்குள் சென்று அவனை அழித்தார்.

பெருமாள் வராஹ மூர்த்தியாக எழுந்ததால் -
இந்த தலத்துக்கு வராஹ க்ஷேத்ரம் எனும் பெயரும் உண்டு.

தாரகனை - பெருமானுடன் தோன்றிய ஸ்ரீகாளி வதைத்தருளினாள்.

தஞ்சகன் கோரமான யானை வடிவத்துடன் எதிர்க்க - மகாவிஷ்ணு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி என எதிர்நின்றார். 

புகழ் தஞ்சை யாளியைப் பொன் பெயரோன் தன் நெஞ்சம் அன்றிடந்தவனை -  
- என திருமங்கை ஆழ்வார் புகழ்ந்துரைப்பது - இந்தத் திருக்கோலத்தையே!.

பெருமானின் திருக்கரங்களுக்குள் சிக்கினான் தஞ்சகன்.  ஸ்பரிச தீட்சை ஆனதால் - அந்த அளவில் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் நீங்கப் பெற்ற அவன் பெருமானைப் பணிந்து -

என் பொருட்டு நரசிம்மமூர்த்தியாக வந்த தாங்கள் இங்கேயே தங்கி சகல மக்களுக்கும் அருள வேண்டும். எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்!.. - என வரங்கேட்டான். 

பெருமாளும் அவ்வாறே  அருள் புரிந்தார்.

தஞ்சை யாளி நகர் ஸ்ரீ வீரநரசிம்மர்
அரக்கர்களை அழித்து  அனைவரையும் காப்பாற்றினார். அதன்பின்,  ஸ்ரீபராசர மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன், இத்தலத்திலேயே திருக்கோயில் கொண்டார். 

அசுரர்களை அழித்து கருட வாகனத்தில் தேவியுடன் பெருமாள் காட்சி கொடுத்த நாள் -  வைகாசி  திருஓணம். 


வருடந்தோறும் வைகாசித் திங்கள் திருஓண நட்சத்திரத்தன்று  கருடசேவை மகோத்சவம், ஸ்ரீ நீலமேகப்பெருமான் அருளால் சிறப்புற நடைபெறுகின்றது.

கருட மகோத்சவத்தில் முதல் நாள் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி திவ்ய தேசப் பெருமாள்களை மங்களாசாசனம் செய்விப்பார். 

அன்றிரவு திவ்ய தரிசனம். மறுநாள் காலையில் கருட சேவை. 


நகரிலுள்ள ஏனைய சந்நிதிகளிலிருந்தும், பெருமாள் கருட வாகனத்தில் ஆரோகணித்து உடன் வர - தஞ்சாவூர் கோட்டை நான்கு ராஜ வீதிகளிலும் கண்கொள்ளாக் காட்சியாக கருட சேவை நிகழும். 

மூன்றாம் நாள் நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி. 

நிறைவாக விடையாற்றி நடத்துவதும், எல்லா நாள்களிலும் அனைவருக்கும் அன்னதானம் செய்வதும் சிறப்பாக நிகழ்கின்றது.

தஞ்சை மாமணிக் கோயில்கள்  - வெண்ணாற்றின் தென்கரையில் அருகருகே அமைந்துள்ளன.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாறு, பாபநாசம், திருக்காட்டுப்பள்ளி,  திருக்கருகாவூர் - செல்லும்  நகரப் பேருந்துகள் -

ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் திருக்கோயில் வாசல் வழியே செல்கின்றன. 

நல்லனவெல்லாம் அருளும் நாயகன்  - ஸ்ரீமந்நாராயணன் - ஸ்ரீவீரநரசிங்கப் பெருமாளாக, ஸ்ரீமணிக்குன்றப் பெருமாளாக, ஸ்ரீநீலமேகப் பெருமாளாக - சேவை சாதிக்க - 

சனிக்கிழமைகளிலும், பிரதோஷ வேளைகளிலும் தஞ்சையம்பதியின் மிகப் பழைமையான -  திவ்ய தேசத்தை மக்கள் தரிசித்து இன்புறுகின்றனர். 

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் 
எனக்கரசு என்னுடை வாழ்நாள் 
அம்பினால் அரக்கர் வெருக்கொள 
நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல் 
வம்புலாஞ்சோலை மாமதில் 
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி 
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் 
நாராயணா என்னும் நாமம். (953) 
திருமங்கை ஆழ்வார்.

ஓம் ஹரி ஓம்.
* * * 

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவாசகம் - பிடித்த பத்து

ஸ்ரீ பிரகதீஸ்வரர்
பால் நினைந்தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய 
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!.. (9) 
* * *

திருக்கோயில்
தஞ்சையம்பதி

ஸ்ரீ கொங்கணேஸ்வரர் சந்நிதி
இறைவன் - கொங்கணேஸ்வரர்
அம்பிகை - ஞானாம்பிகை, அன்னபூரணி
தீர்த்தம் - கமல தீர்த்தம்
தலவிருட்சம் - மகிழ மரம்

தலப்பெருமை
கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்து வணங்கிய திருத்தலம்.

பிரதோஷ நந்தி
காவிரியின் தென்பால் - தஞ்சையம்பதியின் - மணிமுத்தா நதி எனப்படும் வடவாற்றின் கரையில் கரந்தை எனும் பதியில் மகரிஷி வசிஷ்டரும் அவரது பத்னியாகிய அருந்ததி அம்மையாரும் தெய்வ பசுவாகிய நந்தினியுடன் வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து தவம் இருக்கின்றனர் என்பதை அறிந்த கொங்கண சித்தர் ஹிமாசல மலையிலிருந்து விரைந்து வந்து மகரிஷியைச் சந்தித்தார். 

அவர்களுடன் அளவளாவி மகிழ்ந்தார்- கொங்கண சித்தர்.

வசிஷ்ட மகரிஷி சற்றே தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகவே கரந்தை வனத்திலிருந்த சந்திர தீர்த்தத்தில் நீராடி நாளும் சிவபூஜை செய்து கொண்டிருந்தார். 

மகரிஷியைத் தரிசித்த பிறகு கொங்கணசித்தர் தாமும் தஞ்சையம்பதியின் மகிழ வனத்தில் தவநிலை கொண்டார். 

அவரது தவத்திற்கு இரங்கிய ஈசன் - அவரது மேனியிலிருந்து வெளிப்பட்ட ஜோதியில் ஐக்கியமாகி அவருடனே இருந்தார். 

ஈஸ்வரன் சித்தரின் மேனியில் ஐக்கியமாகி விட்டதால் பிரபஞ்ச இயக்கம் தடுமாறியது.

அதைக் கண்டு திகைத்தனர் தேவர்களும் சப்த ரிஷிகளும். கொங்கண சித்தரின் தவத்தைக் கலைக்க முயற்சித்தனர். தேவகணங்களுள் ஒருவனை புலியாக்கி சித்தரின் தவத்திற்கு இடையூறு செய்ய அனுப்பினர். 

சித்தரோ மாயப் புலியை தனது தண்டத்தால் அடக்கி வாகனமாகக் கொண்டு தவத்தைத் தொடர்ந்தார். 

வேறு வழியின்றி சித்தரையே சரணடைந்து நிலைமையை விளக்கினர். மனம் இரங்கிய சித்தர் ஓராண்டு காலம் ஜோதி வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்று அருளினார்.

365 தீபங்கள் கொண்ட ஜோதி பீடம்
அதன்படி மகாமேரு எனும் ஜோதி வழிபாடு செய்தனர். ஈசனும் கொங்கண சித்தரின் மேனியில் இருந்து வெளிப்பட்டனன்.

பின் யாவரும் வேண்டிக் கொண்டதன் பேரில் கொங்கண சித்தர் தாம் தவமிருந்த இடத்தில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்தார். 

ஈசன் கொங்கணேஸ்வரராக அந்தத் திருமேனியில் நிலைத்து கோயில் கொண்டு அருளினன் என்பது தலவரலாறு. 

அதன் பின் ஈசனுக்கு இணையாக அம்பிகையையும் சித்தர் பிரதிஷ்டை செய்தார். 

அம்பிகை ஞானாம்பாள். நின்ற திருக்கோலம். அம்பிகையும் ஈசனைப் போலவே ஜடாமகுடம், மான் மழு, அபய வரத ஹஸ்தங்களுடன் அற்புதத் தோற்றங்கொண்டு விளங்குகின்றாள்.

ஞானாம்பிகையை வழிபட கல்வியும் ஞானமும் விளையும்.


நவராத்திரியில் சாகம்பரி அலங்காரம்
குழந்தை வரம் வேண்டிய அன்பர் ஒருவருக்கு அம்பிகையே மகளாகத் தோன்றி - வளர்ந்து - ஈசனை மணம் செய்து கொண்டதாகவும் ஒரு ஐதீகம்.

ஈசனை மணந்து கொண்ட அம்பிகை அன்னபூரணி என விளங்குகின்றாள். காஞ்சி காமாட்சியைப் போல யோகாசனத்தில் அமர்ந்திருக்கின்றாள்.

அன்னபூரணிக்குக் காவலாக மேற்கு நோக்கி காளியும் கிழக்கு நோக்கி துர்க்கையும் எழுந்தருளியுள்ளனர். 

சோழ வளநாட்டில் அன்னபூரணி விளங்குவது இங்கே தான்!.. இங்கே எழுந்தருளியிருக்கும் அன்னபூரணியை வழிபட ஒருநாளும் சோற்றுக்குக் குறைவு வராது என்பது ஐதீகம்.

அம்பிகை தோன்றியது ஐயன் குளம் எனப்படும் கமல தீர்த்தத்தில்.
இக்குளம் திருக்கோயிலுக்கு எதிரில் ஈசான மூலையில் உள்ளது.

கொங்கண சித்தர் வடிவமைத்த மகாமேரு ஜோதி பீடம் - கொங்கண சித்தரின் முன்பாக உள்ளது. 365 தீபங்களை உடையது. வியாழக் கிழமைகளிலும் பௌர்ணமி நாட்களிலும் மிகச் சிறப்பாக ஜோதி வழிபாடு நிகழ்கின்றது. 

வைகாசி விசாகத்தை அனுசரித்து பெருந்திருவிழா. ஸ்வாமி அம்பாள் திருக் கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகின்றது.

கொங்கணேஸ்வரர் திருக்கோயில் - மேலராஜ வீதியின் நடுநாயகமாக அமைந்துள்ளது.

அடுத்த வீட்டுக்கு அடுத்த வீடு அடையாளம் என்பது போல இந்த மேல ராஜ வீதியின் தெற்கு மூலையில் - 

சித்திகணபதி - சங்கர நாராயணர் திருக்கோயில் அடுத்து கொங்கணேஸ்வரர் அடுத்து காசி விஸ்வநாதர் அடுத்து விஜய ராமர் எதிரில் படித்துறை விஸ்வ நாதர் அடுத்து பங்காரு காமாட்சி அடுத்து நவநீத கிருஷ்ணன் அடுத்து மூலை ஆஞ்சநேயர் - என வரிசையாக திருக்கோயில்கள்..

தஞ்சையின் புராதனமான திருக்கோயில்களுள் கொங்கணேஸ்வரர் திருக் கோயிலும் ஒன்று..

தேவாரம் பாடிய மூவர் திருநாவிலும் தஞ்சைத் தளிக்குளம்  - என்று
வழங்கியதோடு தனியாக திருப்பதிகம் இத்தலத்திற்கு கிடைக்கவில்லை.

தஞ்சைத் தளிக்குளம் என -  அப்பர் சுவாமிகள் குறிப்பிடும் திருக்கோயில் எது என இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றன. 


இந்த அளவில் மார்கழிக் கோலம் என்ற பதிவுகளின் வாயிலாக ஒவ்வொரு நாளும் திருக்கோயில்களில் தரிசனம் காண வைத்த இறைவனின் திருவடித் தாமரைகளைத் தொழுது எழுகின்றேன். 

இவற்றில் ஒரு சில கோயில்களைத் தவிர மற்ற அனைத்தும் நான் தரிசனம் செய்த திருத்தலங்களாகும்.

நண்பர்கள் பலரும் - பதிவுகளில் பதிவிடப்பட்ட படங்களைப் பாராட்டினர்.
அவை இணையத்தில் இறையன்பர்களால் வலையேற்றப்பட்டவை.
Facebook - வழியாகவும் எனக்கு படங்கள் கிடைத்தன.

வழி நடத்திய வள்ளல் பெருமானுக்கு நன்றி!..

இன்னும் நிறைய செய்திகளைப் பதிவிட வேண்டும்.. 
அருகிருந்து ஐயனும் அம்பிகையும் அருளிடவேண்டும்!.. 
      இந்த வேளையில் என்னுடன் பயணித்த அன்பு நெஞ்சங்களுக்கு 
மனமார்ந்த நன்றியும் வணக்கமும் என்றும் உரியன..

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!.. (5/90/1)

நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நமசிவாயவே நானறி இச்சையும்
நமசிவாயவே நாநவின் றேத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமே!.. (5/90/2) 
திருநாவுக்கரசர்.

அனைவருக்கும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!..  

திருச்சிற்றம்பலம் 
* * *

18 கருத்துகள்:

 1. தளப் பெயரின் மகிமையை அறிந்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. தஞ்சை மாமணி கோவில்கள் பார்த்து இருக்கிறேன்.(மூன்றூ கோவில்களும்)
  கொங்கணசித்தர் கோவில் பார்த்தது இல்லை.
  மார்கழி கோலம் 30 நாளும் சிறப்பான கோவில்களை கண்டு மகிழ்ந்தோம். இடையில் ஊருக்கு போய் விட்டாலும் வந்து படித்து மகிழ்ந்தேன்.
  இறைவன் அருளால் அழகாய் நிறைவு பெற்றது மார்கழி கோலம்.
  வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
   வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
   வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தஞ்சை கோவில்கள் கண்டு மகிழ்ச்சி.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
   இனிய வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. மார்கழிக் கோலங்கள் மிகவும் அழகாக நிறைவு பெற்றுள்ளது!!

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
   தங்களுக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

   நீக்கு
 6. மார்கழித் திங்களில் பல கோயில்களுக்கு அழைத்துச்சென்றதோடு திருப்பாவை, திருவெம்பாவை பகிர்ந்தமைக்கு நன்றி. தாங்கள் கூறியுள்ள கோயில்களைப் பார்த்துள்ளேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

   நீக்கு
 7. இக்கோவில்களைப் பற்றி அறிந்தது இல்லை. மார்கழி மாதத்தில் நிறைய கோவில்கள் பற்றி அறிய வாய்ப்பு தந்த உங்களுக்கு நன்றி.
  பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
   அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

   நீக்கு
 8. அனைத்தும் அருமை பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

   நீக்கு
 9. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..
   தங்களுக்கும் தங்கள் அன்பின் குடும்பத்தினருக்கும்
   இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

   நீக்கு