நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 08, 2015

மார்கழிக் கோலம் 24

குறளமுதம்

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. (213)

பிறர்க்கு உதவி செய்து வாழ்வதே நல்லொழுக்கம். 
அதைப் போன்ற நல்லனவாகிய அறத்தின் பயனை
விண்ணிலும் மண்ணிலும் பெறுதல் அரிது.
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 24


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம்
* * *நலம் பெற வேண்டும்!..  
* * *

ஆலய தரிசனம்
திருக்குடந்தை


மூலவர் - ஆராஅமுதன்,சார்ங்கபாணி
உற்சவர் - சார்ங்கபாணி
தாயார் - கோமளவல்லி
தீர்த்தம் - ஹேமபுஷ்கரணி, காவிரி

ப்ரத்யட்சம்
ஹேம ரிஷி, திருமழிசை ஆழ்வார்

ஹேமரிஷியின் திருமகளாக - பொற்றாமரைக் குளத்தில் - மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளுடைய திருக்கரம் பற்றுதற்கு வந்தவன் ஆராஅமுதன்.

வேத விமானம். சேஷசயனத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். 
திருமழிசையாழ்வாருக்காக உத்தான சயனம்.

பெருமாளின் தரிசனம் வேண்டி நின்றார் திருமழிசையாழ்வார். 
அவருக்காக சேஷ சயனத்தில் கிடந்த பரமன் எழுந்திருந்தான் .

ஆழ்வார் மனம் பதறியவாறு - அப்படியே கிடந்து கொள்!.. என்றார்.

எனவே கிடந்தவாறு எழுந்திருக்கும் திருக்கோலம் காட்டினான்.
இதனால் உத்தானசாயி எனத் திருப்பெயர்.

ஸ்ரீ சார்ங்கபாணி தேவியருடன்
சந்நிதிக்கு எதிரில் - நதிக்கன்னியர் வணங்கிய கோலத்தில் விளங்குகின்றனர்.

சயனத்திலிருக்கும் பெருமாள் சார்ங்கம் எனும் வில்லுடன் திகழ்வதால் - ஸ்ரீசார்ங்கபாணி.

திருக்கோயில் புராதனமானது. தேர் போன்ற வடிவத்தில் பெருமாள் சந்நிதி திகழ்கின்றது. சார்ங்கபாணி திருக்கோயிலின் தேரும் வெகுசிறப்புடையது.

ஸ்வாமியின் சந்நிதிக்கு உத்ராயணம் தட்சிணாயனம் என இருவாசல்கள் உள்ளன.

தை முதல் ஆனி வரையில் - உத்ராயண வாசலும்
ஆடி முதல் மார்கழி வரையில் - தட்சிணாயண வாசலும் திறந்திருக்கும்.

மேலும், இத்தலத்தில் - தாயாரைச் சேவித்த பின்னரே பெருமாளை சேவிக்க வேண்டும். 

பொற்றாமரைக் குளம் - நூறாண்டுகளுக்கு முன்
தாயார் அவதரித்த தலம். ஆகையால் - இங்கே அவளுக்கே முதல் மரியாதை.

காலையில் தாயாரின் சந்நிதியில் கோபூஜை நடந்த பின்னரே ஸ்வாமியின் சந்நிதியில் நடைபெறுகின்றது.

திருக்கோயிலில் - ஸ்ரீநிவாசன், ஸ்ரீராமன் சந்நிதிகள் பிரசித்தம்.

குடந்தையில் -  அஷ்ட புஜங்களுடன் திகழும் ஸ்ரீசக்ரபாணி திருக்கோயிலும் பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் விளங்கும் ஸ்ரீராமஸ்வாமி திருக்கோயிலும் புகழ்பெற்றவை.

குடந்தை ஸ்ரீராமஸ்வாமி
குடந்தை சார்ங்கபாணியின் திருக்கோயிலே வைகுந்தம் என்பதாக ஐதீகம்.
எனவே - வைகுந்தவாசல் என தனியே கிடையாது.

குடந்தை நகரின் மத்தியில் திகழ்கின்றது இத்திருக்கோயில்.
தென்புறம் இணைந்தாற்போல ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்.

திருக்கோயிலின் பின்புறம் பொற்றாமரைக் குளம். இதன் மேல்கரையில் புகழ் பெற்ற ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்.


மங்களாசாசனம்  
பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், 
திருமழிசையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார்

சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்
அங்கமங்க அன்றுசென்றடர்த்து எறிந்த ஆழியான்
கொங்குதங்கு வார்குழல் மடந்தைமார் குடைந்தநீர்
பொங்குதண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே!..
திருமழிசையாழ்வார் திருப்பாசுரம் (808)  

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்கு ஞாலமேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தெழுந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே!..  
திருமழிசையாழ்வார் திருப்பாசுரம் (812) 

கிடந்த நம்பி குடந்தை மேவிக்கேழ லாயுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியாரிலங்கை உலகை யீரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே!..
திருமங்கையாழ்வார் திருப்பாசுரம் (1538)
* * * 

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருப்பொன்னூசல்

முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம் நிற்பத்
தன்னீறெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தரகோச மங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ!..  (3)
 * * *

திருக்கோயில்
நாகேஸ்வரன் திருக்கோயில் - குடந்தை


இறைவன் - நாகேஸ்வரன்
அம்பிகை - பிரகந்நாயகி
தீர்த்தம் - , மகாமக தீர்த்தம், காவிரி
தலவிருட்சம் - வில்வம்

தலப்பெருமை
ஆதிசேஷனும் நாகராஜனும் வழிபட்ட தலம்.
மகாசிவராத்திரியின் முதல் கால பூஜைக்குரிய திருத்தலம்.

அப்பர் ஸ்வாமிகள் குடந்தைக் கீழ்க்கோட்டம் என தேவாரத்தில் பாடிப் பரவிய திருத்தலம். 

இக்காலத்தில் நாகேஸ்வரன் கோயில் என வழங்கப்படுகின்றது.

நூறாண்டுகளுக்கு முன் - இத்திருக்கோயில் திருப்பணிக்காக உண்டியல் கலசத்துடன் ஊர் ஊராகச் சென்று யாசகம் பெற்று - அந்தத் தொகையைக் கொண்டு 1923ல் திருப்பணி செய்வித்தவர் -
ஸ்ரீ பாடகச்சேரி மகான் ராமலிங்க ஸ்வாமிகள்..

கிழக்கு நோக்கிய திருக்கோயிலின் கீழ்க் கோபுரத்தில் - முதல் தளத்தில் கழுத்தில் ஒரு பித்தளைக் கலசத்துடன் ஸ்ரீ பாடகச்சேரி மகானின் சுதை சிற்பம் விளங்குகின்றது.

வைரவ உபாசகராகிய ஸ்ரீ பாடகச்சேரி மகான் - தஞ்சை கீழவாசல் வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயிலையும் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக் கோயிலையும் தனது கடும் உழைப்பினால் சீரமைத்தவர்.

அந்தத் திருக்கோயில்களிலும் இவருக்கு சுதை சிற்பம் அமைத்திருக்கின்றனர்.


சிவபெருமானின் ஜடாமகுடத்தை அலங்கரிக்கும் நாகராஜன் - அகம்பாவம் கொண்டான் - என்னே நான் பெற்ற பேறு!.. - என்று.

ஆணவம் தலைக்கேறிய நாகராஜன் - அந்த அளவில் பாதாளத்தில் விழ அவன் தலை நூறு பிளவுகளாகச் சிதறி விட்டது.
    
மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட போது மகாசிவராத்திரியின் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்யுமாறு பணிக்கப்பட்டான்.


அதன்படி இங்கே முதல்காலமும் திருநாகேஸ்வரத்தில் இரண்டாம் காலமும் திருப்பாம்புரத்தில் மூன்றாம் காலமும் நாகையில் நான்காம் காலமும் பூஜை செய்து நலம் பெற்றான் என்பது ஐதீகம்.

கிழக்கு ராஜகோபுரத்தின் தெற்கே - அக்னி மூலையில் ஸ்ரீ பாதாள காளியம்மன் கோயில். பூமியின் உள்ளே திகழ்கின்றாள் ஸ்ரீகாளி. ஆடி மாத திருவிழாவின் போது தரிசிக்கலாம்.

சந்நிதியில் உற்சவ காளியம்மனுக்கே ஆராதனை அர்ச்சனை - எல்லாம்!...

நாகேசர் திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் வடபுறம் அம்பாள் சந்நிதி.  அருகே நடராஜ சபை விளங்குகின்றது.

தென்புறம் பிரளய கால ருத்ரர் சந்நிதி. நெடிதுயர்ந்த திருமேனி. தண்டம் கொண்டு விளங்குகின்றார்.

இவரது சந்நிதிக்கு முன்பாக ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும் உக்ர காளியும்!..


சுதை சிற்பங்கள். அற்புத தோற்றம். வெள்ளிக் கிழமை ராகுகால வேளையில் கூட்டம் அலைமோதுகின்றது - இந்த சந்நிதியில்.

தெற்கு நோக்கி கருணை முகங்கொண்டு விளங்குகின்றாள் பிரஹந்நாயகி.

மிகவும் அலங்காரமாக தோரண வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றது சந்நிதி.
உள் திருச்சுற்றில் அம்பிகையை வலம் வந்து வணங்கலாம்.


நடராஜ சபை பெருந்தேர் போல யானைகளால் இழுக்கப்படுவதாக ஒப்பற்ற கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருமூலஸ்தானத்தில் நாகராஜனின் அகந்தை அழித்த ஐயன் ஸ்ரீநாகேஸ்வரர்.

சந்நிதியில் கங்கை விநாயகர் விளங்குகின்றார்.

திருச்சுற்றில் - வலஞ்சுழி விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யன், சண்டேசர், பிரம்மா, துர்க்கை, ஐயனார், சப்தகன்னியர் - என நிறைந்த சந்நிதிகள்..

சித்திரை மாதம் 11,12,13 ஆகிய தேதிகளில் நாகேஸ்வரர் மீது சூரிய கதிர்கள் படர்ந்து சூரிய பூஜை நிகழ்கின்றது.

மகாமகக் குளக்கரை - காசி விஸ்வநாதர் கோயில்
சிவாலயத்தில் அனைத்து வைபவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
மாசி மகத்தன்று மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி.

நாகேஸ்வரன் திருக்கோயிலின் நிருதி மூலையில் மதுரை வீரன் பிரதிஷ்டை. மேற்கு கோபுர வாசல் எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கின்றது.

பின்புறம் உச்சிப்பிள்ளையார் கோயில். இங்கிருந்து சற்று நடந்தால் - அருகில் ஸ்ரீ சோமசுந்தரி சமேத வியாழ சோமேசர் திருக்கோயில்.

அங்கிருந்து நோக்கினாலே கும்பேஸ்வரர் ஆலயத்தின் ராஜகோபுரம்.

எப்போதும் பரபரப்பான கடை வீதி.
சாலையின் தென்புறம் ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்.

ஸ்ரீகும்பேஸ்வரர் - மங்களாம்பிகை

ஒரு கி.மீ., சுற்றளவுக்குள் - உச்சிப் பிள்ளையார், கும்பேஸ்வரர், சார்ங்கபாணி, வியாழ சோமேசர், நாகேஸ்வரர், ராமஸ்வாமி - என திருக்கோயில்கள்.

திருக்குடந்தை - வைணவ திவ்ய தேசம் - ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயில். 
திருக்குடந்தைக் காரோணம் என்பது ஸ்ரீவியாழ சோமேசர் திருக்கோயில்.

திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் என்பது ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில்.
திருக்குடமூக்கு என்பது ஸ்ரீகும்பேஸ்வரர் திருக்கோயில். 

கும்பகோணம் சிறந்த வர்த்தக தலம். குடந்தையைச் சுற்றிலும் நிறைய சிற்றூர்கள். அங்கேயும் தொன்மையான ஆலயங்கள். 


அனைத்தும் தரிசிக்க வேண்டிய தலங்கள்.
போற்றிப் பாதுகாக்க வேண்டிய கலைப் பொக்கிஷங்கள்..

நீறலைத்த திருவுருவம் நெற்றிக் கண்ணும் 
நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை 
ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும் 
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும் 
ஏறலைத்த நிமிர்கொடியொன்று உடையார் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் ஈசர் போலுங்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே!..(6/75)
திருநாவுக்கரசர்.

திருச்சிற்றம்பலம் 
* * *

12 கருத்துகள்:

 1. நூறாண்டுகளுக்கு முன்ன எடுக்கப் பெற்ற படங்கள்
  நெஞ்சை கொள்ளை கொள்ளுகின்றன ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நான் பிறந்த மண்ணில் உள்ள கோயில்களை தங்களுடன் சென்று பார்த்தது மனதுக்கு நிறைவைத்தருகிறது. சார்ங்கபாணி கோயில் என்பதே சரி, சாரங்கபாணி அல்ல என்று நூல்களில் படித்துள்ளேன். தங்கள் கட்டுரையில் சார்ங்கபாணியும், சாரங்கபாணியும் மாறிமாறிவந்துள்ளது. கும்பகோணம் கோயில்கள் தொடர்பாக விக்கிபீடியாவில் பதிவுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். பழைய அரிய புகைப்படங்களைப் பதிவிட்டமை மிக நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   எழுத்துப் பிழை நேரிட்டது. திருத்தி விட்டேன்.
   தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. ஆலயங்களின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அழகிய படங்களுடன் அற்புதமான தகவல்களும்
  அருமையான பதிவும் ஐயா!
  நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன்!

  நானும் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்!

  வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. சிறந்த பக்திப் பதிவு
  தொடருங்கள்

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 6. நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள புகைப்படங்களை தேடித்தந்தமைக்கு நன்றி நண்பரே,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   இனிய வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..