நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 03, 2015

மார்கழிக் கோலம் 19

குறளமுதம்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது. (124)

அறவழியைக் கொண்ட ஒருவன் அந்நிலையில் இருந்து பிறழாமல் நிலைபெறுவானாகில் அவன் மலையினும் பெரியவனாகின்றான்.  
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 19  



குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்த்னை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
நாமக்கல்  


மூலவர் - ஸ்ரீநரசிம்மர்
உற்சவர் - ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவி உடனுறை நரசிம்மர்
தாயார் - நாமகிரித் தாயார்
தீர்த்தம் - கமல புஷ்கரணி  

தலப்பெருமை
ஆஞ்சநேயர் எடுத்து வந்த சாளக்ராம மலை.

நெறி தவறினான் தந்தை - என்பதை அறிந்திருந்தும் அவனுக்கு ஆதவராகப் போர்க்களத்தில் வீர சாகசம் புரிந்துகொண்டிருந்தான் இந்திரஜித். அவனது அஸ்திரம் தாக்கியதால் - மயக்கமாகி விழுந்தான் - இளையபெருமாள். வென்றோம் நாம்!.. - என எக்களிப்புடன் இலங்கை நோக்கி இந்திரஜித் செல்ல,

இளையபெருமாளைக் காப்பாற்றுவதற்காக சஞ்சீவி மூலிகை இருக்கும் இலக்கை நோக்கிப் பறந்தார் - ஆஞ்சநேயர்.

இமய மலைச்சாரலில் சஞ்சீவி பர்வதத்தில் - சஞ்சீவி மூலைகையைத் தேடிக் கொண்டிருக்க நேரமின்மையால் - அந்தமலையையே பெயர்த்துக் கொண்டு வருகின்றார்.

அப்படி வரும் போது சஞ்சீவி மலையின் பல்வேறு மூலிகைகளும் மலையின் பகுதிகளும் - தென்பாரதத்தின் பல இடங்களிலும் விழுந்தன என்பர் ஆன்றோர்.

சஞ்சீவி மலையின் மூலிகைக் காற்று பட்டதும் - மயக்கமாகிக் கிடந்த இளைய பெருமாளுடன் - மாண்டு கிடந்த பலரும் நலமுடன் எழுந்தனர்.

பெருமகிழ்ச்சியுற்ற ஸ்ரீராமன் - ஆஞ்சநேயரிடம் அன்பு பாராட்டியதுடன் - சஞ்சீவி மலையினை அதன் இருப்பிடத்திலேயே மீண்டு வைத்துவிட்டு வரும்படிப் பணித்தார்.

ஐயனின் கட்டளையை சிரமேற்கொண்டு - மீண்டும் வடதிசை நோக்கிச் சென்ற அனுமன் - வரும் வழியில் கண்டகி நதியில் அற்புதமான சாளக்ராமத்தினைக் கண்டு - அதன் அழகில் மயங்கி - ஸ்ரீராமனிடம் கொடுப்போம் என்று எடுத்துக் கொண்டார்.

ஆனால் விளைவு வேறாக இருந்தது.


தமிழ் கூறும் நல்லுலகின் மேலாக - வான் வழியே வந்து கொண்டிருந்த அனுமன் - கீழே ஜோதிமயமான புஷ்கரணி ஒன்றைக் கண்டார். ஆவலினால் தரை இறங்கிய போது அங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மியைத் தவநிலையில் கண்டார்.

அன்னையைப் பணிந்து வணங்குவதற்காக - கமல புஷ்கரணியில் தீர்த்தமாட விரும்பி - அன்னையின் அனுமதியுடன் சாளக்கிராமத்தைத் தூய்மையான இடத்தில் வைத்தார்.

அகமும் புறமும் குளிர நீராடினார். அன்னையை வலம் வந்து வணங்கினார்.

இலங்கைக்குப் புறப்பட வேண்டி சாளக்ராமத்தை கையில் எடுத்தார்.

முடியவில்லை. மலையைப் பெயர்த்து எடுத்து வந்த - மாருதிக்கு சிறு கல்லை எடுக்க முடியாதது மலைப்பாக இருந்தது. பெருமுயற்சி செய்தும் பலனில்லை.

மஹாலக்ஷ்மி புன்னகைத்தாள். ஆஞ்சநேயர் திகைத்தார்.

அவர் கண்முன்னே - சிறு சாளக்ராமம் பெரிய மலையாக வளர்ந்து நின்றது.


ஆஞ்சநேயனே!.. ஸ்ரீ நரசிம்மஸ்வாமி எழுந்தருள இருக்கும் இத்திருத்தலத்தில் - ஸ்ரீராமாவதாரத்திற்குப் பின் - நீயும் சிரஞ்சீவியாக விளங்குவாயாக!..
- என்று ஆஞ்சநேயரை மனதார வாழ்த்தினாள் மஹாலக்ஷ்மி.

அவ்வண்ணமாக இன்று சிறப்புடன் விளங்குவது நாமக்கல் மலை.

மலையினுள் குடைவரைக் கோயிலினுள் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி திருக்கோலம் கொண்டு விளங்கினாலும் - நாமக்கல் மலையே நரசிம்ம ஸ்வரூபம் என்பர்.

அந்த வகையில் - ஸ்ரீநரசிம்ம ஸ்வாமிக்கு மேலே விதானம் கிடையாது.

எனவே தான் - சிறிய திருவடியாகிய ஸ்ரீ ஆஞ்சநேயரும் மேல் விதானம் இன்றி விளங்குவதாக ஐதீகம்.

மிகவும் தொன்மையான குடைவரைக் கோயில்.

மூலமூர்த்தியாக ஸ்ரீநரஸிம்ஹப் பெருமாள். ஸ்வாமியின் வலப்புறம் சிவபெருமானும் இடப்புறம் நான் முகனும் திகழ்கின்றனர்.

தேவர்கள் சூழ்ந்திருக்க - சூரிய சந்திரர் ஸ்வாமிக்கு கவரி வீசுகின்றனர்.

அச்சம் விளைவிக்கும் கம்பீரமான திருமேனி. காண்பதற்கரிய திருக்கோலம்.

ஸ்வாமியின் திருக்கரங்களிலும் பாதங்களிலும் கூரிய நகங்கள் தெளிவாகத் தென்படுகின்றன. வலது திருக்கரத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும் கவசத்தை நீக்கி பட்டாச்சார்யார் தரிசனம் செய்விக்கின்றார்.

மிக அருகில் இருந்து - தெய்வ தரிசனம் கண்டேன்.
மெய்சிலிர்த்து அடங்கியது - அந்த நேரத்தில்.

விரல்களில் உள்ளங்கையில் இரத்தக்கறை தென்படுகின்றது.

நாமக்கல் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியை இருமுறை தரிசனம் செய்திருக்கின்றேன்.

சிறுவயதில் - ரோஜா ரமணி, S.V. ரங்காராவ் நடித்த பக்த பிரகலாதன் திரைப்படத்தினை தஞ்சை ஸ்ரீகிருஷ்ணா டாக்கீஸில் பார்த்ததில் இருந்து ஸ்ரீநரஸிம்ஹ ஸ்வாமி மீது பக்தி.

எனது பத்தாவது வயதில் -
என் தந்தை கடும் மாரடைப்பினால் செயலற்று வீழ்ந்த போது அவருக்கு சிசிச்சை அளித்து காப்பாற்றிய டாக்டரின் பெயர் - நரசிம்மன்!.

அதற்குப் பின் என் தந்தை முப்பதாண்டு காலம் நலமுடன் வாழ்ந்தார்.

அதற்குப் பின் எத்தனையோ ஆண்டுகள் கழித்து - ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியை அவ்வளவு அருகில் தரிசனம் செய்யக் கிடைத்தது பெரும் பாக்கியம் என்றே உணர்ந்தேன்.

இப்போதும் திவ்ய தேசமான தஞ்சையில் -
தஞ்சை யாளி எனப்படும் ஸ்ரீ வீரநரஸிம்ம ஸ்வாமியின் திருக்கோயிலுக்கு அருகில் - அவரது நிழலில் தான் குடியிருப்பதும்!.

சில ஆண்டுகளுக்கு முன் - நான் மிகவும் வாட்டமுற்றிருந்த காலம்!..

தஞ்சை கீழவாசலில் உள்ள ஸ்ரீயோகநரசிம்ம ஸ்வாமி திருக்கோயிலில் மாதாந்திர ஸ்வாதி நட்சத்திர வைபவம்.

எதிர்பாராத விதமாக திருக்கோயிலுக்குச் சென்ற நான் - ஸ்வாமியின் பல்லக்கை பக்தர் பலருடன் கூடி - ஓர் ஓரமாகத் தோளில் தாங்கி வந்ததற்கு மிகப் பெரிய நன்மை கிடைத்தது.

ஸ்ரீநரசிம்மஸ்வாமி விஷயத்தில் - நாளை என்பதே இல்லை!.. - என்பார்கள்.

வா!.. - என்று அழைத்து தரிசனம் கொடுத்தவர் ஸ்ரீநரசிம்மர்.

நலிந்தோர்க்கு கருணை புரியும் வள்ளல் - ஸ்ரீநரசிம்மர்.


நாமகிரித் தாயார் என திருமகள் விளங்குகின்றாள்.
பேரழகின் பிறப்பிடம் அவளது திருப்பாதங்களே!..

கணித மேதை ராமானுஜம் அவர்களின் இஷ்ட தெய்வம் நாமகிரித் தாயார்!..
கணித மேதையின் திறமைக்கு உறுதுணையாக இருந்தவள் என்பர்.

குடைவரைக் கோயிலில் புடைப்பு சிற்பம் ஆதலால் - திருமஞ்சனம் இல்லை.
உற்சவ மூர்த்தி - ஸ்ரீபூதேவி ஸ்ரீ தேவி சமேத லக்ஷ்மி நரசிம்மர்.

குடைவரைக் கோயினுள் திருவிக்ரமன், வராஹர் - என பல அற்புத தெய்வ வடிவங்கள் திகழ்கின்றன.

ஸ்ரீரங்க நாதர் திருக்கோயிலும் ஸ்ரீ வரதராஜர் திருக்கோயிலும் மலையில் பகுதிகளில் விளங்குகின்றன. அருகில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலும் உள்ளது.

ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியைப் பற்றி தேவாரத்திலும் திருப்புகழிலும் திருக் குறிப்புகள் காணப்படுகின்றன.

நாமக்கல் - மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இல்லை. எனினும், மங்கலங்கள் நிறைந்து விளங்கும் திருக்கோயில்.


பங்குனி மாதத்தில் பெருந்திருவிழா. ஹஸ்த நட்சத்திரத்தன்று ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீரங்க நாதர், ஸ்ரீ ஆஞ்சநேயர் - என மூவரும் தனித்தனி தேரில் பவனி வருகின்றனர்.

நரசிம்ம ஸ்வாமியின் திருக்கோயிலுக்கு எதிரே - ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர்.

பதினெட்டு அடி உயரம். கூப்பிய கரங்களில் ஜபமாலையுடன் - இடுப்பில் உடைவாள் தரித்து விளங்குகின்றார்.

வெட்ட வெளியில் தான் திகழ்கின்றார்.

மிக சமீபத்தில் முன்மண்டபம் எழுப்பியிருக்கின்றார்கள்.
ஆனாலும் - ஆஞ்சநேயருக்கு வெயிலும் மழையும் தான்!..

நாமக்கல் - மாவட்டத் தலைநகராகத் திகழ்கின்றது.
நகரின் மத்தியிலேயே மலையும் திருக்கோயிலும் விளங்குகின்றன.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்தோத்ரம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்ப வாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நம த ராக்ஷஸாந்தகம்

ஸ்ரீ நரஸிம்ஹ மந்த்ரம்

ஓம் உக்ர வீர்யம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நரஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

சிங்கமதாய் அவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை
செங்கலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே!.. (1598)
திருமங்கையாழ்வார் தேரழுந்தூரில் அருளிச் செய்த திருப்பாசுரம்.

* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 18  


அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!..  

* * *

திருக்கோயில்
திருஆனைக்கா  


இறைவன் - ஜம்புலிங்கேஸ்வரர்
அம்பிகை - அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - நாவல்

தலப்பெருமை
பஞ்ச பூத திருத்தலங்களுள் நீருக்கான திருத்தலம்.

அம்பிகை காவிரி நீரில் சிவலிங்க ஸ்தாபனம் செய்து நாவல் மரத்தின் கீழ் தவமிருந்து ஐயனிடம் வேதங்களுக்கான விளக்கங்களைக் கேட்டறிந்ததாக ஐதீகம்.

திருக்கயிலை மாமலையில் ஈசனைத் தொழுது நின்ற ஜம்பு முனிவருக்கு நாவல் பழம் பிரசாதமாகக் கிடைத்தது. 

முனிவர் - நாவல் பழத்தை விதையோடு உண்டு விட்டார். 

அது தலையைப் பிளந்து கொண்டு மரமாக முளைத்தது. திகைத்து நின்ற முனிவருக்கு பெரும் பாக்கியம் கிடைத்தது. 

பின்னாளில் அம்பிகை காவிரிக்கரையில் தவமியற்ற வரும் போது அவளுக்கு நிழல் கொடுப்பீராக!.. உமது நிழலில் நாமும் கோயில் கொள்வோம்!.. -  என மொழிந்தான் ஈசன்.

நாவல் மர நிழலில் விளங்குவதாலேயே ஜம்புலிங்கம் என்பது திருப்பெயர்.

தான் படைத்த திலோத்தமையின் அழகில் மயங்கினான் - நான்முகன்.

அதனால் பெரும்பாவம் விளைந்து சிருஷ்டி கைகூட வில்லை.

தன் பாவத்தினைப் பொறுத்தருள வேண்டி பிரம்மன் தவம் புரிந்த திருத்தலம்.

ஈசனின் அடி தொழுதக்கால் - 
முறையற்ற மோகம் அகலும் என்பது திருக்குறிப்பு!..


பஞ்சப் பிரகாரங்களுடன் விளங்கும் திருக்கோயில்.

ஜம்புகேஸ்வரர் மேற்கு நோக்கி விளங்குகின்றார்.
லிங்கத் திருமேனி கொண்டு - நீரினுள் திகழ்கின்றது.

ஈஸ்வர தரிசனம் ஒன்பது துளை கொண்ட சாளரத்தின் வழியே தான்!..

சந்நிதிக்குள் செல்வதென்றால் - தெற்குப் புறம் இருக்கும் சிறு வாசல் வழியே மிகவும் குனிந்து தான் செல்ல வேண்டும்.

சந்நிதியில் ஒவ்வொரு சமயம் முழங்காலளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது.


அம்பிகை அகிலாண்டேஸ்வரி - கிழக்கு நோக்கியவளாக தனிக்கோயில் கொண்டு விளங்குகின்றாள்.

ஒரு சமயம் மிகவும் உக்ரம் கொண்டு விளங்கிய அம்பிகையை - தாடங்கம் அணிவித்து சாந்தப்படுத்தினார் - ஸ்ரீ ஆதிசங்கரர்.

ஸ்ரீ ஆதிசங்கரார் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்த திருத்தலங்களுள் இதுவும் ஒன்று.

திருஅரங்கத்தின் மடைப்பள்ளியில் பரிசாரகனாக இருந்த வரதன் -
கவி காளமேகம் என்றானார்.

அந்தத் திருவிளையாடலை நிகழ்த்தியவள் அகிலாண்டேஸ்வரி!..

நல்வினையால் உந்தப்பட்ட யானையும் சிலந்தியும் சிவபூஜை செய்து நலம் எய்திய திருத்தலம்.

யானை முக்தி அடைந்தது. சிலந்தியோ - அந்த பிறவியின் நினைவுகளுடன் - உறையூரில் சோழ மரபில் கோச்செங்கணான் எனப் பிறந்தது.

முற்பிறவி நினைவுடன் பிறந்த கோச்செங்கட்சோழன் -  யானை ஏற முடியாத எழுபது மாடக்கோயில்களை எழுப்பியதாக அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் குறிப்பிடுகின்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் -

மார்கழியின் இளங்காலைப் பொழுதில் தான் முதன்முதலாக ஜம்புகேஸ்வரை தரிசித்தேன்.

நீரினுள் இலங்கிய சிவப்பரம்பொருளைத் தரிசித்து மகிழ்வில் என் கண்கள் ஆறாகப் பெருகிட நின்றேன்.

வாழ்வில் மறக்கவே இயலாத தருணங்களில் அதுவும் ஒன்று!..


திருஆனைக்கா!.. - நினைத்தாலே நெஞ்சம் தித்திக்கின்றது.

காவிரியின் வடகரையில் உள்ள திருத்தலம்.

ஆனைக்காவின் அண்ணலை திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் போற்றிப் பாடுகின்றார்.

அப்பர் ஸ்வாமிகளும் ஞான சம்பந்தப்பெருமானும் சுந்தரரும் அருணகிரி நாதரும் தரிசித்து மகிழ்ந்த திருத்தலம்.

திருஆனைக்கா - திருச்சி மாநகரின் ஒரு பகுதியாக விளங்குகின்றது.
திருக்கோயில் செல்வதற்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத் 
தேனைக்காவில் இன்மொழி தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும் ஏதம்இல்லையே!..(3/53)
ஞானசம்பந்தப் பெருமான்.

ஊனாகி உயிராகி அதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேது அறியாமே என்னுள் வந்து
நல்லனவும்ந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றியூராய் 
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாயுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே!.. (6/62)
அப்பர் ஸ்வாமிகள்.

தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்தும்
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்டஎம் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே! (7/75)
சுந்தரர். 

திருச்சிற்றம்பலம்
* * *

10 கருத்துகள்:

  1. அனுமனின் சிறப்பை அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... திருஆனைக்கா பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் ஐயா!

    நரசிம்ம மூர்த்தி என்றாலே மனதில் ஒரு பயம்..!
    சிறு வயதில் பெரியவர்களால் விதைக்கப்பட்ட பய உணர்வு இன்றுவரையும்..
    உங்கள் பதிவு பார்க்கையில் அட உருத்திர வடிவமாயினும் அருளும் அற்புத மூர்த்தி எனத் தேற்றிக்கொண்டேன்!

    அனுமான் சிறப்பும் மிகச் சிறப்பு! அனைத்தும் அருமை!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கதைகள் இல்லாத கோவில்களே இல்லையோ.?என் இளையமகன் மாடியிலிருந்து கீழே விழுந்தும் ஒரு சின்னக் காயம் கூட இல்லாமல் எழுந்து வந்தான், அவன் அப்போது அணிந்திருந்த ஆஞ்ச்நேய டாலரால் என்னும் நம்பிக்கையில் இன்றும் அவன் ஒரு ஆஞ்சநாய பக்தன். ஒரு தெய்வம் இஷ்ட தெய்வமாக இம்மாதிரி காரணங்கள் போலும். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      பல சமயங்களில் -
      நம்பிக்கையே கை கொடுக்கின்றது - எழுந்து கொள்வதற்கு!..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அப்பாவை காப்பாற்றிய டாக்டரின் பெயர் நரசிம்மன் மெய் சிலிர்க்கிறது.
    எனக்கும் ரோஜாரமணி நடித்த படம் மிகவும் பிடிக்கும்.
    யோக நரசிம்மர் பல்லக்கை தூக்கியதும், அவர் அருள் பெற்றதும் அருமை.

    கோவில் தரிசனமும் உங்கள் அனுபவங்களும் சேர்ந்து பதிவு நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    ஆஞ்சநேயர் பற்றிசிறப்பாக சொல்லியுள்ளீர்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை... அந்த நம்பிகைதான் இறைவன்... அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      பல சமயங்களில் -
      நம்பிக்கையே வாழ்க்கை ஆகின்றது.
      வாழ்ந்துதான் பார்ப்போமே!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..