நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 06, 2015

மார்கழிக் கோலம் 22

குறளமுதம்

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (546) 

மன்னவன் தன் செயல்களில் மகத்தான வெற்றியைக் காண்பது 
அவன் தாங்கியிருக்கும் ஆயுதங்களினால் அல்ல!..

அவன் ஏந்தியிருக்கும் கோணாத 
செங்கோல் ஒன்றினால் தான்!..
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 22



அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற்போல்
அங்கண்ணி ரண்டுங்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
திருஅனந்தபுரம்



மூலவர் - ஸ்ரீஅனந்தபத்மநாபன் 
தாயார் - ஸ்ரீஹரிலக்ஷ்மி
தீர்த்தம் - பத்ம தீர்த்தம், வராஹ தீர்த்தம்

ப்ரத்யட்சம்
திவாகர முனிவர், இந்திரன், சந்திரன் மற்றும் தேவர்கள்.

ஹேமகூட விமானத்தின் கீழ்
புஜங்க சயனத்தில் கிடந்த திருக்கோலம்.
கிழக்கே திருமுக மண்டலம்.

மங்களாசாசனம்
நம்மாழ்வார்

பரசுராம தேசத்தின் திருக்கோயில்களுள் சிறந்து விளங்கும் திருக்கோயில். 

திவாகர முனிவரின் முன் குழந்தையாகத் தோன்றிய பெருமான் அவரது பொறுமையை சகிப்புத் தன்மையை சோதிப்பதற்காக வழிபாட்டில் இருந்த சாளக்ராமத்தை எடுத்துக் கொண்டு இலுப்பை வனத்திற்குள் ஓடி மறைந்தார். 

துரத்தி வந்த முனிவர் மனம் தடுமாறி நின்ற போது அனந்த சயனத்தில் திருக்காட்சி நல்கியதாக ஐதீகம்.

பின்னொரு சமயம், பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்த வில்வமங்கலம் நம்பூதிரி ஒருவர் - 

தன் வசம் ஏதுமில்லாத சந்தர்ப்பத்தில் மா வடுவினைத் தேங்காய் ஓட்டில் வைத்து சமர்ப்பித்து வழிபட இன்னும் அதுவே தொடர்கின்றது. 

அன்றைக்கு - தேங்காய் சிரட்டையில் சமர்ப்பிக்கப்பட்ட மாவடு,
இன்றைக்கு தங்க சிரட்டையில் நிவேத்யம் செய்யப்படுகின்றது!..


அனந்த பத்மநாபன் பதினெட்டு அடி நீளம் கொண்டு திகழ்கின்றார்.

திருச்சுற்றில்- ஸ்ரீலக்ஷ்மி வராஹர்,  ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீநிவாசன், 
ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீஹனுமான் சந்நிதிகள் விளங்குகின்றன. 

ஆதி மூலவர் - இலுப்பை மரத்தால் செய்யப்பட்ட திருமேனி 1686 ஆம் ஆண்டு- தீயில் விசர்ஜனம் ஆகி விட்டது.

அதன் பின் பன்னிரண்டாயிரம் சாளக்ராம கற்களைக் கொண்டு - இப்போது மூலஸ்தானத்தில் உள்ள திருமேனி வடிக்கப்பட்டது.

உற்சவராக வைகுந்த வாசன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் விளங்குகின்றார்.  

அனந்த சயனத்திலிருக்கும் பெருமாள் வலது திருக்கரத்தில் மலர் கொண்டு சிவ பூஜை செய்யும் திருக்கோலத்தில் திகழ்கின்றார்.


மிகவும் பெரிய கோயிலாகத் திகழ்கின்றது.
பங்குனியிலும் ஐப்பசியிலும் பிரம்மோத்சவம் நிகழ்கின்றது.

திருஅனந்தபுரத்தில் தான் - புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியும் குடி கொண்டு இருக்கின்றாள்.




இங்கே மாசி மாதத்தில் பத்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

பூர நட்சத்திரத்தன்று நிகழும் பொங்கலிடும் வைபவத்தில் கடந்த ஆண்டு 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்ததாக செய்திகள் கூறுகின்றன.

திரு அனந்தபுரம் பத்மநாபஸ்வாமி திருக்கோயிலுக்கு அருகில் (2 கி.மீ) உள்ளது ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில்.

தமிழ்நாட்டின் திருக்கோயிலைப் போலவே நிறைந்த சுதை சிற்பங்களுடன் விளங்குகின்றது.

இரண்டாண்டுகளுக்கு முன் சபரிமலைக்குச் செல்லும் போது தரிசித்த தலங்கள் இவை.

கெடும் வினையெல்லாம் கேசவா என்னும் நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே!..
நம்மாழ்வார் அருளிய திருப்பாசுரம் (3678) 

* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருப்பொன்னூசல்




சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக 
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்
கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட் தாளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ!..(1) 
* * *

திருக்கோயில்
திருக்காளத்தி


இறைவன் - ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்
அம்பிகை - ஞானப்பூங்கொதை
தீர்த்தம் - பொன்முகலி
தலவிருட்சம் - வில்வம், மகிழம்

தலப்பெருமை
கயிலை மாமலைக்கு நிகரானது.
வேடுவராகிய திண்ணப்பனின் அன்பினில் விளங்கும் பெருமான்.

பஞ்சபூத தலங்களுள் - வாயு தலம்.

கிழக்கு நோக்கிய திருக்கோயில் திருக்கோயிலினுள் நுழையும் முன் - பொன் முகலி எனப்படும் ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் முப்பத்தைந்துஅடி ஆழத்தில் பாதாள கணபதி விளங்குகின்றார்.

இவரது பீடம் காளத்தி மலையின் அடிவாரத்தில் ஓடும் பொன்முகலியின் நீர் மட்டத்திற்கு சரியாக அமைந்துள்ளது என்கின்றனர்.

சிலந்தி, யானை, பாம்பு - ஆகியன வணங்கி உய்வடைந்ததால் - சீகாளஹஸ்தி.


மூலவர் சுயம்பு லிங்கம்.

நெடிதுயர்ந்த சிவலிங்க பாணத்திற்கு பச்சைக் கற்பூரம் கரைக்கப்பட்ட தீர்த்த அபிஷேகம் மட்டுமே!..

மேலே அணைவிக்கப்பட்டிருக்கும் தங்கக் கவசத்தை நீக்கினால் - சிவலிங்கத்தின் அடிப்புறம் சிலந்தி, யானைத் தந்தங்களும் மேற்புறத்தில் ஐந்தலை அரவின் படமும் கொண்டு திகழ்கின்றது.

லிங்கபாணத்தின் வலப்புறம் கண்ணப்பர் தமது வலக்கண்ணை அப்பிய தடம் விளங்குன்றது.

மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே!..

மூலஸ்தான தீபச்சுடர்கள் எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கின்றன.

இதுவே வாயு தலம் என்பதற்கான நிதர்சனம் என்கின்றார்கள்.

கோயிலில் எவ்வளவு கூட்டம் அடித்துக் கொண்டு மோதினாலும் - நிம்மதியாக சிவதரிசனம் செய்ய இயலும்.

நாக தோஷ பரிகார பூஜைகள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

ராகு - கேது கிரகங்கள் பணிந்து வணங்கிய தலமாதலால் ராகுகாலத்தில் தரிசனம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகின்றது.


ஞானப்பூங்கோதை - என அப்பர் சுவாமிகளால் புகழப்பட்ட அம்பிகையின் திரு ஒட்டியாணத்தில் - நாக வடிவம் தெரிகின்றது.

அம்பிகையின் திருவடிகளின் கீழ் ஸ்ரீ ஆதிசங்கரர் அர்த்த மேருவினைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.


வேடுவராகிய திண்ணப்பர் - சிவகோசரியார் செய்யும் சிவ பூஜையைக் கண்டு தானும் அது போல தன்னுடைய இயல்பிற்கு ஏற்றதாய் இறைச்சியை சமர்ப்பணம் செய்து வழிபட்டார்.

அதுவும், ருசியாக இருக்கின்றதா!.. - என்று தின்று பார்த்த பின்னரே ஈசனுக்கு படைத்து மகிழ்ந்திருக்கின்றார்.

காட்டு மலர்களைப் பறித்துத் தன் தலையில் வைத்துக் கொண்டும்,
பொன் முகலி ஆற்றின் நீரை தன் வாயில் நிறைத்துக் கொண்டும்
திண்ணப்பர் செய்த பூஜையில் இறைவன் அகம் மகிழ்ந்தருக்கின்றான்.

நாளும் சிவலிங்கத்தைச் சுற்றிலும் இறைச்சித் துண்டுகள் கிடக்கக் கண்டு
மனம் சகிக்காத சிவகோசரியார் - ஈசனிடம் முறையிட்டுக் கலங்கினார்.

அவர் மனம் தெளிவடையும் பொருட்டே - ஈசனின் கண்ணில் ரத்தம் கசிந்தது.


அதைக் கண்டு திடுக்கிட்ட கண்ணப்பர் - பச்சிலை மருத்துவம் செய்து பார்க்கிறார். அது கூடிவராத நிலையில் தன்னுடைய வலக்கண்ணைப் பெயர்த்து ஈசனின் கண்ணில் அப்புகின்றார். ரத்தம் கசிவது நின்றது. ஆனால்,

மீண்டும் ரத்தம் இடக் கண்ணில் வழிந்தது. இந்த முறையும் மனம் தடுமாறாமல் - அடையாளத்திற்காக - ஒரு காலை சிவலிங்கத்தின் இடப் பாகத்தில் வைத்துக் கொண்டு தனது இடக் கண்ணைப் பெயர்க்கும் போது ஈசன் நில்லு கண்ணப்ப!.. என்று தடுத்தாட்கொண்டனர்.

குருமுகமாக எந்த உபதேசமும் இன்றி திண்ணப்பன் பக்தி கொண்டு - ஈசனுக்கு இறைச்சி படைத்து வழிபட்டு நின்றது ஆறு நாட்களே!..

அதனால் தான் -   ஸ்ரீ கண்ணப்ப நாயனாருடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் 
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி 
வண்ணப் பணித்தென்னை வா என்ற வான் கருணை 
சுண்ணப்பொன் நீற்றர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பி!.. 

- என்று மாணிக்க வாசகப்பெருமான் கசிந்து உருகுகின்றார்.

ஸ்ரீ கண்ணப்ப நாயனார் ஈசனிடம் கொண்ட பக்தியை எண்ணி -

நாளாறில் கண் இடந்து அப்பவல்லேன் அல்லன்!.. - என்று பட்டினத்தடிகள் வியந்து பாராட்டுகின்றார்.

குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப்பெரும் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதிசோர ஒருகணையிடந் தங்கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே!.. (4/65)

- என அப்பர் பெருமான் தமது திருப்பதிகத்தில் கண்ணப்பரின் அருஞ்செயலைப் புகழ்கின்றார்.

நவக்ரகங்களுள் சாயாக்கிரகங்களான ராகுவும் கேதுவும் வணங்கி நின்றனர் என்பர். அவற்றின் இயக்கம் இடமிருந்து வலம் என்பதால் - காளத்தி திருக் கோயிலை - இடமிருந்து வலமாக சுற்றி வருவதே முறையாகின்றது.

இத்திருத்தலத்தில் நவக்கிரக மண்டலம் இல்லை.
ஆயினும் சனைச்சரன் மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
.
தஞ்சை பெரிய கோயிலில் கண்ணப்பர் திருக்காட்சி
மதுரையில் - வந்திருப்பவர் இறைவன் என்று அறிந்த பின்னும் - ஈசனை எதிர்த்து வாதாடியாதால் - நக்கீரருக்கு தோல் நோய் ஏற்பட்டது.

அந்நோய் தீர இங்கு வந்து, கயிலை பாதி காளத்தி பாதி - எனப் பாடிப் பரவி வழிபட்டதாகச் சொல்வர்.

திருஞானசம்பந்தப் பெருமான் - இங்கிருந்தே வடநாட்டின் சிவ தலங்களைத் தரிசித்து இன்புற்று திருப்பதிகங்கங்கள் அருளினார்.

திருநாவுக்கரசர் - காளாத்தியிலிருந்தே தனது வடநாட்டுத் திருத்தல யாத்திரையைத் தொடர்ந்தார்.

எளியேன் ஒருமுறை திருக்காளத்தி தரிசனம் செய்துள்ளேன்.

பற்பல சிறப்புகளுக்கு உரியது திருக்காளத்தி!.. 
விரித்து உரைப்பதற்கு வாழ்நாள் போதாது!..

செண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே
வண்டாருங் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும் கணநாதன்எங் காளத்தியாய்
அண்டா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே!.. (7/26)
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

வேயனைய தோளுமையார் பாகமது வாகவிடை யேறிசடைமேற்
தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மலராகு நயனங்
காய்கணையி னாலிடந்து ஈசனடிகூடுகா ளத்திமலையே!.. (3/69)
திருஞானசம்பந்தர்.

நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன் காண்
ஞானப்பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன்தான் காண்
புரிசடைமேல் புனலேற்ற புனிதன்தான் காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க்கெல்லாங்
காரணன்காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன் காண் அவன்என் கண்ணுளானே!.. (6/8)
திருநாவுக்கரசர்.

திருச்சிற்றம்பலம்  
* * *   

12 கருத்துகள்:

  1. தங்சையிலேயே இருந்தும்
    பெரியகோயிலில் உள்ள
    கண்ணப்பர் திருக்காட்சியை இதுநாள் வரை
    கண்டதில்லை ஐயா
    அவசியம் சென்று பார்க்கின்றேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கண்ணப்பர் கதைத் தொகுப்பு - இரண்டாவது கோபுரத்தின் வடக்குப் பக்கமாக உள்ளது. அவசியம் பாருங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அனைத்தும் சிறப்பு ஐயா... பல தகவல்களை அறிந்து கொண்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      வாழ்க பல்லாண்டு!..
      இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருப்பாவைக்கு ஒன்று திருவெம்பாவைக்கு ஒன்று என்று கலக்குகிறீர்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இன்னும் நிறைய சொல்ல வேண்டும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சிவன் கோயிலுக்கும், வைணவக்கோயிலுக்கும் தாங்கள் அழைத்துச்செல்லும் பாங்கு அருமையாக உள்ளது. தாங்கள் கூறியுள்ள கோயில்களை நான் பார்த்துள்ளேன். இருந்தாலும் தங்களுடன் வரும்போது இன்னும் மகிழ்வாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களைப் போன்றோர் வருகை தந்து கருத்துரை வழங்கும் போது மனம் நிறைவாகின்றது. தங்களின் மகிழ்ச்சி கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தஞ்சைக்கு நான் இதுவரை வந்ததில்லை இந்த முறையாவது வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      வாருங்கள் வரவேற்கின்றோம்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அறியாத திருத்தலங்களை எல்லாம் அறியத் தருகிறீர்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி..
      இனிய வருகைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..