நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 11, 2015

மார்கழிக் கோலம் 27

 குறளமுதம்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு. (231) 

வறியவர்களுக்கு தம் பொருளை ஈதல் வேண்டும்.
அற்றவர்க்குக் கொடுத்து புகழ் கொண்டு வாழவேண்டும்.
அப்புகழே உயிருக்கான ஊதியமாகும்.

அதுவன்றி வேறொன்றும் வழித்துணைக்கு வாராது.
* * * 

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 27


கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தனைப் 
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடைஉடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
திருக்கோஷ்டியூர்


மூலவர் - உரக மெல்லணையான்
உற்சவர் - சௌம்ய நாராயணன் 
தாயார் - திருமாமகள்
தீர்த்தம் - தேவ புஷ்கரணி 

ப்ரத்யட்சம்
பிரம்மன், இந்திரம் மற்றும் தேவர் குழாம்

மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம்.

நின்றும் இருந்தும் நடந்தும் கிடந்தும் சேவை சாதிக்கும் பெருமாள் கூத்தும் உகந்த திருத்தலம்.

ஹரிபரந்தாமனிடம் - ஹிரண்யனால் தாம் படும் கஷ்டங்களை எடுத்துக் கூறி அவனை வீழ்த்துவது எப்படி என்று தேவர் குழாம் கூடியிருந்து - கோஷ்டியாக இருந்து - பேசிய தலம்.

அதனாலேயே திருக்கோஷ்டியூர் என்பர்.

ஹிரண்யனுக்கு அஞ்சி - இத்தலத்தில் ஒளிந்திருந்த இந்திரன் - தான் வழிபட்டு வந்த சௌம்ய நாராயணப்பெருமாளின் திருவடிவத்தை கதம்ப மகரிஷியிடம் வழங்கினான்.

உற்சவராக விளங்குவது - அந்தத் திருமேனியே!..

தேவ சிற்பியான விஸ்வ கர்மா வடிவமைத்த அஷ்டாங்க விமானம் - மூன்று தளங்களாக விளங்குவது.


கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணன் - நர்த்தன திருக்கோலம்.
முதல் தளத்தில் சௌம்ய நாராயணன் - சயனத் திருக்கோலம்.
இரண்டாவது தளத்தில் உபேந்திரன் - நின்ற திருக்கோலம்.
மூன்றாவது தளத்தில் வைகுந்தப் பெருமாள் - இருந்த திருக்கோலம்.

திருக்கோயிலின் மண்டப முகப்பில் சிவலிங்க திருமேனியும் திகழ்கின்றது.


தாயார் திருமாமகள் தனி சந்நிதி கொண்டு விளங்குகின்றாள்.

ஸ்ரீ நரசிம்மர் - ஹிரண்யனை வதம் செய்யும் திருக்கோலம் கொண்டு திருச்சுற்றில் விளங்குகின்றார்.

திருஅரங்கத்திலிருந்து பதினேழு முறை நடந்த - உடையவராகிய ஸ்ரீஇராமானுஜருக்கு - பதினெட்டாவது முறைதான் திருக்கோஷ்டியூர் நம்பியிடமிருந்து திருமந்திர உபதேசம் கிடைத்தது.

ஆச்சார்யரின் சொல்லை மீறி -

தான் நரகம் சென்றாலும் சரி.. மக்கள் எல்லாம் பெருமாள் திருவடிகளைச் சிந்திக்க வேண்டும்!.. -  என விரும்பிய ஸ்ரீஇராமானுஜர் -

திருமந்திர ரகசியத்தை ஊரறிய கோபுரத்தின் மீது நின்று வெளியிட்ட தலம் இதுவே!..


சில ஆண்டுகளுக்கு முன் திருக்கோஷ்டியூர் சென்றிருக்கின்றேன்.

அந்தி வேளையில் சென்றதால்- திருக்கோயிலின் வனப்பினை முழுதுமாகக் காண இயலாமற்போனது.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் உண்மைச் சம்பவம்.

வழிப்பறிக் கள்வர்களின் கைவரிசை மிகுந்திருந்த அந்த காலத்தில் -

வழிப்பயணம் சென்ற சகோதரிகள் விதி வசமாக கள்வர்களின் கைகளில் சிக்கிக் கொள்கின்றனர். தப்பிக்க முயற்சித்தும் முடியவில்லை.

கள்வரிடமிருந்து மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டி தம்மையே மாய்த்துக் கொள்கின்றனர்.

நங்கையர் போனாலும் பரவாயில்லை - நகைகள் கிடைத்தால் போதும்!.. என்ற மனநிலையில் உயிரற்ற சடலங்களில் இருந்த நகைகளைக் களவாட முயற்சித்தனர்- கள்வர்கள். 

ஆவி ரூபமாகி விட்ட நங்கையர் - தங்களது சடலத்தையும் கள்வர்கள் தீண்ட விடாதபடி செய்ததுடன் அவர்களின் பார்வையைப் பறித்தனர்.   

அத்துடன் ஊர்மக்களை அழைத்து வந்து வழிப்பறி கள்வர்களைத் தண்டிக்கச் செய்து சாந்தியடைந்தனர்.

தன்னுயிர் துறந்து மன்னுயிர் காத்த அந்த உத்தமிகள் - வழிபடும் தெய்வங்கள் ஆகினர்.

இந்த தேவமங்கையர் அணிந்திருந்த சேலையும் மற்ற ஆபரணங்களும் - 

திருக்கோஷ்டியூர் திருக்கோயிலின் ஓர் அறையில் ஓலைப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்படுவதாகவும் -

ஆண்டுக்கு ஒருநாள் அந்தப்பெட்டிக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்வதாகவும் - சொல்லப்படுகின்றது. 

மங்களாசாசனம் 
பெரியாழ்வார்,  திருமங்கையாழ்வார், பேயாழ்வார், 
பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார்

எங்கள்எம் மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன்
ஏத்தடியவர் தம்மனத்துப் பிரியாது அருள்புரிபவன்
பொங்குதண் ணருவிபுதம்செய்யப் பொன்களேசிதறு மிலங்கொளி
செங்கமல மலரும் திருக்கோட்டியூரானே!.. (1838)
திருமங்கையாழ்வார் அருளிய திருப்பாசுரம்.

ஏறுமேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற்கிசைந்து உடம்பிலோர்
கூறுதான் கொடுத்தான் குலமாமகட்கு இனியான்
நாறுசண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு நன்னறுந்
தேறல் வாய்மடுக்கும் திருக்கோட்டியூரானே!.. (1841)
திருமங்கையாழ்வார் அருளிய திருப்பாசுரம்.

இன்றா அறிகின்றேன் அல்லேன் இருநிலத்தைச்
சென்றாங் களந்த திருவடியை அன்று
கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருக்கோட்டி எந்தை திறம்!.. (2268) 
பூதத்தாழ்வார் அருளிய திருப்பாசுரம்.
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருஅம்மானை



விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப் 
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்!.. (10)
* * * 

திருக்கோயில்
திருப்பத்தூர் 

கௌரி தாண்டவம்
இறைவன் - திருத்தளிநாதர் 
அம்பிகை - சிவகாமசுந்தரி
தீர்த்தம் - சிவகங்கை
தலவிருட்சம் - கொன்றை

தலப்பெருமை
பைரவர் யோக நிலையில் விளங்கும் திருத்தலம்.

ஹிரண்யாட்சனின் புத்திரர்கள் வதம் செய்யப்பட்டது இங்கே - என்பது தலவரலாறு.

வால்மீகி சிவதரிசனம் வேண்டி தவமிருந்ததும் இத்தலத்தில் தான்!..

அம்பிகையுடன் ஈசன் நிகழ்த்திய கௌரி தாண்டவத்தைக் காண விரும்பி -மஹாலக்ஷ்மி தவமிருந்தது இத்தலத்தில்!..

மஹாலக்ஷ்மியுடன் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியும் யோகநிலையில் இருந்ததாக தலவரலாறு கூறுகின்றது.

அதன்படி மஹாலக்ஷ்மி மகிழும் பொருட்டு ஐயனும் அம்பிகையும் கௌரி தாண்டவம் நிகழ்த்த - அதைக் கண்டு சகல உயிர்களும் இன்புற்றன.


திருக்கோயிலில் விளங்கும் யோக பைரவர் மிகுந்த வரப்பிரசாதி!..

தனியாக திருக்கோயில் கொண்டு விளங்குகின்றார்.

திருக்கரத்தில் சிவலிங்கத்துடன் அமர்ந்திருக்கும் திருக்கோலம்.

வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொண்டு எவரும் இவரது சந்நிதிக்குச் செல்வதில்லை. அப்படிச் சென்றால் மயக்கமுற்று விழுகின்றனர்.

யோக நிலையில் இருக்கும் பைரவர் - அர்த்த சாம பூஜையின் போது உக்ரம் கொள்வதால் - அர்த்த சாம பூஜையின் போது சிவாச்சார்யார் பரிசாரகர் அன்றி வேறெவருக்கும் யோக பைரவர் சந்நிதிக்குச் செல்ல அனுமதியில்லை.

அர்த்த சாம பூஜையின் போது பக்தர்கள் எவரும் சந்நிதிக்கு செல்லவும் துணிவதில்லை.

அஷ்டமி தினங்களில் பைரவ வழிபாட்டின் போது புனுகு ஜவ்வாது முதலான வாசனைத் திரவியங்களைப் பைரவருக்குச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.

சித்திரை மாத முதல் வெள்ளிக் கிழமையில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அன்றிரவு குதிரை வாகனத்தில் பைரவர் திருவீதி எழுந்தருள்கின்றார்.

நவக்கிரக நாயகர்கள் அமர்ந்த கோலம் கொண்டிருக்கின்றனர்.


தேவாரத் திருப்பதிகம் பெற்ற பாண்டிநாட்டுத் திருத்தலம்.

அப்பரும் ஞானசம்பந்தரும் திருப்பதிகம் பாடி வழிபட்டிருக்கின்றனர்.

திருப்புத்தூர் தெருக்களில் மயில்கள் கூடித் திரிந்ததை ஞானசம்பந்தர் - தமது திருப்பதிகத்தில் பதிவு செய்கின்றார்.

இன்றைக்கும் திருப்பத்தூரின் சாலை வழித்தடங்களில் மயில்கள் நிறைந்து உலவுவதைக் காணலாம்.

எம்பெருமான் - தமிழ்ச் சங்கத்தில் நக்கீரருடன் வாதம் செய்து தருமிக்குப் பொற்கிழி வாங்கித் தந்த திருவிளையாடல் நமக்கெல்லாம் தெரியும்.

அந்த நிகழ்வினை - அப்பர் பெருமான் தமது பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி தரிசனம் செய்திருக்கின்றார்.

திருப்புத்தூர் என்பதே தலத்தின் திருப்பெயர்.
இன்றைக்கு திருப்பத்தூர் என வழங்கப்படுகின்றது.

வீரமங்கை வேலு நாச்சியாரின் தளபதிகளாக இருந்த மருது சகோதரர்கள் வேலு நாச்சியாரை - மீண்டும் சிவகங்கைச்சீமையின் அரியணையில் அமர்த்திய ஆண்டு 1780.

அதன்பின் - வேலு நாச்சியாரின் மறைவுக்குப் பிறகு - வெள்ளையர் வசம் ஆயிற்று சிவகங்கைச்சீமை.

வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 28 மே 1801 அன்று மருது சகோதரர்கள் மீது - வந்தேறிகளான வெள்ளையர் தாக்குதலைத் தொடர்ந்தனர்.   



நாட்டுப் பற்று உடைய அனைவரும் வெள்ளையருக்கு எதிராகப் போரிட வேண்டும் என 12 ஜூன் 1801- அன்று மருது சகோதரர்களால் திருச்சிக் கோட்டையில் சுதந்திர பிரகடனம் ஒட்டப்பட்டது. 

நான்கு மாதங்களாகத் தாக்குதல் நடத்தியும் - பரங்கித் தலையர்களுக்குப் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

சிவகங்கைச் சீமையைச் சுற்றியிருந்த காடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

வஞ்சனை சூது இவைகளை முன்னெடுத்த வந்தேறிகள் - சூழ்ச்சி எனும் வலை விரித்தனர். 

மருது சகோதரர் சரணடையவில்லை எனில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் பீரங்கி வைத்துத் தகர்க்கப்படும் - என அறிவிக்கப்பட்டது. 

உயிரினும் மேலான திருக்கோயிலைக் காப்பதற்கு முடிவெடுத்தனர் - மருது சகோதரர்கள்.. 

மேலும், உடனிருந்த கயவன் - கருத்தான் என்பவன் காட்டிக் கொடுத்தான்.

கோழைகளாய்க் கூனி நின்ற வந்தேறிகள் - வஞ்சனையால் சிறைப் பிடித்த - வீர சிங்கங்களைத் தூக்கிலிட்டுத் தொடை நடுக்கம் தீர்த்துக் கொண்ட நாள் - 24 அக்டோபர் 1801.

அந்தக் கொடுமை நிறைவேற்றப்பட்ட இடம் - திருப்பத்தூர். 

4/11/2014 அன்று எடுக்கப்பட்ட படம்
மருது சகோதரர் தூக்கிலிடப்பட்ட இடத்திற்கு எதிரே தான் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

திருப்பத்தூரின் பிரதான சாலையிலேயே திருக்கோயில் உள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்குடி பேருந்துகள் எல்லாம் திருக்கோயிலின் வாசல் வழியாகவே செல்கின்றன.

திருப்பத்தூரினுள் புகழ் பெற்று விளங்குவது பூமாயி அம்மன் திருக்கோயில்.
மகத்துவம் மிக்க இத்திருக்கோயிலையும் தரிசனம் செய்துள்ளேன்.

இங்கிருந்து காரைக்குடி செல்லும் வழியில்தான் பிள்ளையார்பட்டியும்
குன்றக்குடியும் அமைந்துள்ளன.

மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமானவன் போலும்
பிரமன் மாலும் அறியான் பெரியோனே!.. (1/26) 
திருஞானசம்பந்தர்.

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட்கென்றும்
விருப்பவன் காண் பொருப்புவலி சிலைக்கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன் காண்
பொன்காட்டக் கடிக் கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண்அவன் என்சிந்தையானே!.. (6/76) 
திருநாவுக்கரசர்

திருச்சிற்றம்பலம். 
* * *  

14 கருத்துகள்:

  1. ஆலயங்களின் சிறப்பை அறிந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  2. அருமையான குறளமுதம். தலங்களின் சிறப்பையும் அறிந்துகொண்டோம்.இன்றைய பாடல்களுடன்! மிக்க நன்றி ஐயா! புத்தகமாக வெளியிடலாமே ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      புத்தக வெளியீடு என்பதையெல்லாம் நினைப்பதில்லை..
      அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  3. திருக்கோஷ்டியூர் போய் இருக்கிறேன் நிறைய முறை ஆனால் தேவமங்கையர் கதை கேள்விப்பட்டதில்லை. விபரத்திற்கு நன்றி.

    திருபத்தூர் போய் இருக்கிறேன் நிறையமுறை ஆனால் பூமாயி அம்மன் கோவில் போனதில்லை அடுத்தமுறை போக வேண்டும்.
    பாடல்கள், படங்கள், கதைகள், விபரங்கள் அனைத்தும் அடங்கிய அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கவியரசர் கண்ணதாசன் அவர்களும் இவர்களைப் பற்றி சொல்லி இருக்கின்றார்.

      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  4. இரு கோவில்களுக்குமே போனதில்லை. திருக் கோஷ்டியூர் இருக்குமிடம் தெரிவிக்கலாமே. கொடுப்பினை இருந்தால் அடுத்த ஆண்டு ஆலய தரிசனம் போகும் போது தரிசனம் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கவனக்குறைவு என்னுடையது.

      திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் 10 கி.மீ., தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர்.

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அனைத்துமே, அருமையான விடயங்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகை + கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருப்பத்தூர் தவிர பிற கோயில்களுக்குச் சென்றுள்ளேன். திருக்கோட்டியூர் சென்றபோது மேலே விமானத்தில் ராமானுஜர் நின்று நாராயணா என்று உச்சரித்தததாக சொல்லப்படும் இடத்தையும் பார்த்தோம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நான் சென்ற நேரம் மாலைப் பொழுது சீக்கிரம் இருட்டி விட்டது. எனவே முழுமையாக பார்க்க முடியவில்லை.
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  7. இனிய பாடல்களும் விளக்கங்களும் சமயகு ரவர்கள் பாடிப் பரவிய தளங்கள் பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.எல்லாப் படங்களும் ரொம்பவே அழகு எனக்கு இந்தப் படங்கள் எல்லாம் எடுக்கிறீர்களோ ம் ..ம்...ம்
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      இணையத்தில் நல்ல படங்களை ஏற்றி வைக்கும் அன்பர்களுக்குத் நன்றி கூறவேண்டும்...
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..