நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 28, 2015

தென் பழனி

இன்று தை - கார்த்திகை நாள்.

சர்வேஸ்வரனால் வாழ்த்துரைக்கப்பட்ட நட்சத்திரக் கூட்டம் - கார்த்திகை!..

தெய்வீக மணம் கமழும் தை மாதத்தின் சிறப்புகளில் மற்றொன்று!..

வெள்ளிக் கிழமையும் வளர்பிறை சஷ்டியும் கிருத்திகையும் முருகனருள் பெறச் சிறந்தவை!.. 

ஏன்!.. எப்படி?.. - என்று கேட்டால் -

வாரத்தின் ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை. 
திதிகளில் ஆறாவது சஷ்டி. 
ஆறு தேவ மங்கையரின் அம்சம் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம். 

ஈஸ்வரன் ஆறு திருமுகங்கள் கொண்டே, திருமுருகனைத் தோற்றுவித்தார்.


அருவமும் உருவம் ஆகிஅநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
கந்தபுராணம்.

உலகம் உய்வதற்காக - திருமுருகன் உதிக்க வேண்டும்!..

அதற்காகவே - பரம்பொருளாகிய சிவபெருமான் - தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் எனும் ஐந்து முகங்களுடன் அதோ முகமும் கொண்டு திருவருள் புரிந்தார். 

ஐயனின் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. 

அவற்றை வாயுவும் அக்னியும் சேர்ந்து கங்கா நதியில் விட - கங்கை சரவணத்தினில் சேர்த்தனள். 

சரவணத்தின் கமலங்களிலிருந்து ஆறு குழந்தைகள் தோன்றின. 

அந்த ஆறு குழந்தைகளையும் 

நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்த்தயேந்தி, அம்பா, துலா - எனும்

தேவ மங்கையர் அறுவர் தம் திருக்கரங்களில் ஏந்தி சீராட்டி பாராட்டி பாலூட்டி வளர்த்தனர். 

அது கண்டு மகிழ்ந்த ஐயனும் அம்பிகையும் ரிஷப வாகனராக  அறுவருடன் விளையாடும் தன் அன்புச் செல்வங்களைக் காண வந்தருளினர். 

அம்பிகையை நோக்கி ஐயன் - நின் மகன்தனைக் கொண்டு வருக!.. என்றார்.

சரவணந்தனில் தனதுசேய் ஆறு உருத் தனையும் 
இருகரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமுகங்கள் ஓராறு பன்னிருபுயம் சேர்ந்த 
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகம் ஈன்றுடையாள். 

அந்த வேளையில் - கந்தன் என்று பேர் பெற்றனன் கௌரி தன் குமரன்.

கந்தனை வாரி அணைத்து  கொங்கையில் பொழிந்த அமுதினை - அன்பு மிக ஊறியவளாக - தன் மகற்கு அன்பினால் அருத்தினாள் கௌரி.

சிவபெருமானின் திருமுன் திருக்குமரனை இறைஞ்சு வித்திட - ஐயனும் மகனை அன்புடன் அணைத்து மகிழ்ந்து  தன்னருகில் இருத்திக் கொண்டான்.


ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் 
பாலனாகிய குமரவேள் நடுஉறும் பான்மை 
ஞாலமே லுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் 
மாலையா னதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்.

அற்புதக் காட்சியினைக் கண்டு அகமகிழ்ந்த தேவ மங்கையர் அறுவரும் ஐயனையும் அம்பிகையையும் பேரன்புடன் பணிந்து வணங்கினர்.  

தாள் பணிந்த மங்கையர் அறுவருக்கும் பெருமான் தண்ணளி புரிந்தான்.

கந்தன்தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள் 
மைந்தன் எனும் பெயர் ஆகுக மகிழ்வால் எவரேனும் 
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர் 
தந்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்!.. 
 கந்தபுராணம்  - சரவணப்படலம்.

''..கந்தனாகிய இவனுக்கு நீங்கள் அறுவரும் அன்புடன் பாலூட்டி வளர்த்த காரணத்தால் - இது முதல் இவன் உங்கள் மைந்தன் எனும்படி கார்த்திகேயன் என அழைக்கப்படுவான். நீங்களும் சிறப்புற வானில் விண்மீண்கள் எனத் திகழ்வீர்களாக!.. உங்களுக்குரிய கார்த்திகை நாளில் விரதம் இருப்பவர் எவராயினும் அவர்தம் குறைகளை நீக்கி நல்வாழ்வினை அளித்து முக்தியும் அளிப்போம்!..''  - என சிவபெருமான் கருணையுடன் மொழிந்தார்..

- என்பது கந்தபுராணம் காட்டும் திருக்காட்சி!..


இத்தகைய கார்த்திகை விரதம் மாதந்தோறும் அனுசரிக்கப்பட்டாலும் - 

ஆடிக் கிருத்திகையும் தை கிருத்திகையும் வெகு சிறப்பு வாய்ந்தவை.

காரணம் - தேவர்களுக்கு விடியற் பொழுதின் முதல் மாதம் தை.
அந்திப் பொழுதின் முதல் மாதம் ஆடி.

சிறப்பு வாய்ந்த - தை மாத கார்த்திகை தினமாகிய இன்று - 

தென்பழனிக் குன்றில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபாலதண்டாயுதபாணியின் தை பூசப் பெருந்திருவிழாவிற்காக கொடியேற்றப்பட்டுள்ளது.


அறுபடை வீடுகளுள் பழனி மூன்றாவது படை வீடாக திகழ்கின்றது.

உண்மையில் மூன்றாவது படை வீடு - திருஆவினன் குடி எனப்படுவது பழனி மலையில் அடிவாரத்திலுள்ள திருக்கோயிலே!..

சிவபெருமானுக்குரிய பூசத் திருவிழா - செல்வச் சிறுவன் அறுமுகனுக்கு என ஆகி விளங்குகின்றது.

பழனியில் தைப்பூசத் திருவிழா என்று சொன்னாலும் அடிவாரக்கோயிலான - ஸ்ரீபெரியநாயகி உடனுறை ஸ்ரீகயிலாயநாதர் திருக்கோயிலில் தான் திருக் கொடியேற்றம் நிகழ்கின்றது.

தமிழகத்தில் நிகழும் பெருந்திருவிழாக்களுள் ஒன்று பழனி தைப் பூசம்!..

தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாத யாத்திரையாக பழனியை நோக்கி வருகின்றனர்.

பால் காவடி, பன்னீர் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக் காவடி - என பல்வேறு வகையான காவடிகள் நேர்த்திக் கடனாக பக்தர்களால் செலுத்தப்படுகின்றன.

பத்து நாட்கள் நிகழும் இந்தத் திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்தும் முருகனடியார்கள் திரண்டு வருகின்றனர் என்றால் - 

அங்கே நின்று விளங்குவது முருகப்பெருமானின் நல்லருள் என்பதே!..


இந்த வருடத்திற்கான தைப்பூசத் திருவிழா - தை கார்த்திகை நாளாகிய இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக - ஸ்ரீமுத்துக்குமர ஸ்வாமி சந்நிதியில் ஆறு கலசங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு - அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

வள்ளி தெய்வயானையுடன் ஸ்ரீமுத்துக்குமர ஸ்வாமி வெளிப் பிரகாரத்தில் வலம் வந்தருளி கொடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

வேலும் மயிலும் சேவலும் வரையப்பட்டிருந்த கொடிப் பட்டத்திற்கு பூஜையும் கலசத்திலிருந்த புனிதநீரால் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது.

தொடர்ந்து வாத்ய மேள தாளங்களுடன் வேதகோஷங்கள், திருமுறைகள், சரண கோஷங்கள் முழங்க - காலை 10.45 மணையளவில் கொடியேற்றம் நடந்தது.

வள்ளி தெய்வயானையுடன் வீற்றிருந்த ஸ்ரீமுத்துக்குமர ஸ்வாமிக்கு மகா தீப ஆராதனை நிகழ்ந்தது.

தொடர்ந்து வரும் நாட்களில் - 
ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமிவள்ளி, தேவசேனா சமேதரராக -


சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை,
தந்தப் பல்லக்கு, தங்கக் குதிரை, தங்க மயில் என பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா எழுந்தருள்கிறார்.
பிப்/02 - திருவிழாவின் ஆறாம் நாள் திருக்கல்யாணம். வெள்ளி ரத புறப்பாடு.

பிப்/03 - திருவிழாவின் ஏழாம் நாள் - தைப்பூசம். திருத்தேரோட்டம்.

பிப்/04 - திருவிழாவின் எட்டாம் நாள் - தங்கக்குதிரை வாகனம்.

பிப்/05 - திருவிழாவின் ஒன்பதாம் நாள் - பெரிய தங்க மயில் வாகனம். 

பிப்/06 - திருவிழாவின் பத்தாம் நாள் - தெப்பம். துவஜ அவரோகணம்.

திருவிழா நாட்களில் அடிவாரத்திலுள்ள கலையரங்கில் இசை நிகழ்ச்சிகள், திருப்புகழ் விரிவுரைகள், பட்டிமன்றம், பரதநாட்டியம் - என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


மலைக்கோயிலில் விளங்கும் திருமேனி நவபாஷாணங்களால் ஆனது. சித்தபுருஷரான போகர் வடித்தெடுத்த திருமேனி அது.

பாலதண்டாயுதபாணி மேற்கு முகமாகத் திருக்கோலம் கொண்டுள்ளான்.

முருகப்பெருமானின் சந்நிதிக்கு வெளியே போகரின் ஜீவசமாதி இருக்கின்றது

அருணகிரிநாதர் 90 திருப்புகழ்ப் பாடல்களால் பழனிமலை பாலகுமாரனைப் பணிந்து வணங்குகின்றார்.

வசனமிக வேற்றி மறவாதே
மனதுதுய ராற்றி லுழலாதே

இசைபயில் சடாக்ஷ ரமதாலே
இகபரசௌபாக்யம் அருள்வாயே!..

பசுபதி சிவாக்ய முணர்வோனே
பழநிமலை வீற்ற ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர்சிறை மீட்ட பெருமாளே!..
அருணகிரிநாதர்.


வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை!..
குகனுண்டு குறைவில்லை மனமே..
குகனுண்டு குறைவில்லை மனமே!..

திருச்சிற்றம்பலம்!..   
* * * 

20 கருத்துகள்:

 1. பல வருடங்கள் ஆகிவிட்டது பழனிக்குச் சென்று. உங்கள் பதிவு மூலம் பழனி சென்று வந்த உணர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 2. கார்த்திகை நாள் கந்தன் தரிசனம்...தந்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_29.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   வலைச்சரத்தில் தஞ்சையம்பதியை அடையாளம் காட்டிச் சிறப்பித்து பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

   தளத்திற்கு வந்து தகவல் அளித்தமைக்கு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. விடிந்ததும் திருமுருக தரிசனம் உங்கள் தயவால் கிடைத்தது! வாழ்க நீவிர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 5. உங்களுடனான பயணம் மென்மேலும் மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்களும் உடன் வருகின்றீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 6. மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 7. நவ பாஷாணங்களால் ஆன மூர்த்தியின் இடைவிதாத அபிஷேகங்களால் வீரியம் குறைகிறது என்றும் . மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடை பெறுவதில்லை என்று எப்போதோ எங்கோ படித்த நினைவு. விளக்க முடியுமா ஐயா. ஆன்மீகப் பதிவுகளை வாசித்து நாட்கள் பலவாகிவிட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   பழனியைப் பற்றி - இனி வரும் பதிவில் சில செய்திகளை அளிக்கின்றேன்..
   தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 8. அழகான தொகுப்பு. அருமையான புகைப்படங்கள். ஆனால் எனக்கு தான் பக்தி இலக்கியம் ரொம்ப தூரம். க்ஷருகூ இப்போ மாணவர்களுக்காக படிக்கிறேன். பல முறை சாமி பார்க்க சென்றாலும் தங்கள் கட்டுரை ஒரு பக்தியை தருகிறது.பழனி மலை புகைப்படம் மிக அருமை.மனதைக் கொள்ளை போகுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. பழனியைப்பற்றிய விபரங்கள் நிறைய தெரிந்து கொண்டேன் நண்பரே...
  மலையின் இரவுக்காட்சி புகைப்படம் அருமை

  நண்பரே இன்று கூட முயற்சித்தேன் தங்களது தளத்தில் இணைய முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   நானும் முயற்சிக்கின்றேன் . எனக்கொன்றும் விளங்கவில்லை.. மேலும் தோண்டினால் - கூகுள் எச்சரிக்கின்றது - எல்லாம் போய்விடும் என்று!.. கொஞ்சம் பொறுங்கள்!..

   தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 10. பழனி முருகனுக்கு அரோகரா! எங்கள் நாயகன் முருகன் என்னப்பன். கிருபாநந்ந்த வாரியார் நினைவுக்கு வந்தார் தங்களின் உருவில். முருகனைப் பற்றிப் படித்த போது! பழனியில் நவபாஷான சிலை - போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட - இப்போது இல்லை என்பதுதான் நாங்கள் அறிந்த செய்தி......அருமையான பதிவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   வாரியார் ஸ்வாமிகளைப் போல் இனி யாருளர்.. தமிழ்க் கடல் அல்லவா!..

   பழனி முருகனைப் பற்றி அரிய தகவல்களை - தொடரும் பதிவுகளில் காண அழைக்கின்றேன்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு