நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 01, 2015

மார்கழிக் கோலம் 17

குறளமுதம்


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு. (215)  

நீர் நிறைந்த குளத்தின் நீர் எல்லார்க்கும் பொதுவானதைப் போல 
உலகம் நல்வழியில் வாழவேண்டும் என விரும்பும் 
பேரறிவாளனின் அறிவு எனும் செல்வமும் பொதுவானதே..
* * *

அனைவருக்கும் அன்பின் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 17


அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
பூலோக வைகுந்தம் - திருஅரங்கம்


மூலவர் - ஸ்ரீரங்கநாதன்
உற்சவர் - நம்பெருமாள்
தாயார் - ஸ்ரீரங்கநாயகி
தீர்த்தம் - சந்திர தீர்த்தம், காவிரி, கொள்ளிடம்.
தலவிருட்சம் - புன்னை

ஆயிரம் நாவுடைய ஆதிசேஷனாலும் 
அளவிடற்கரிய பெருமைகளை உடையது அரங்க மாநகர். 


மங்களாசாசனம்
பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், பொய்கையாழ்வார்,
பேயாழ்வார்,பூதத்தாழ்வார்,  நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்,
குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமழிசை ஆழ்வார்.

ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்திற்குப் பிறகு தோன்றிய திருக்கோயில்.

வைணவத்தில் கோயில் என்றால், அது - திருஅரங்கம் தான்!..

தானே உண்டானதாகக் கருதப்படும் ஸ்வயம்வியக்த க்ஷேத்ரம்.

பிரணவாக்ருதி விமானத்தின் கீழ் தெற்கே திருமுகங்காட்டி அனந்த சயனத் திருக்கோலம்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீகோதை நாச்சியார் - இத்திருத்தலத்தில் தான் - பெருமாளை அணைந்து ஒன்றி உடன் ஆனாள்.

ஆண்டாளின் அவதார நோக்கம் நிறைவேறியது இத்திருத்தலத்தில்!..

ஸ்ரீ ரங்கநாயகி
நூற்றெட்டு திவ்யதேசங்களுள் முதலாவதும் முதன்மையானதும் ஆகும்..

இருபத்தொரு ராஜகோபுரங்களையும் ஏழு திருச்சுற்றுகளையும் உடையது திருக்கோயில்.

மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார் பெருமக்களும் மங்களாசாசனம் செய்வித்த பெருமையை உடையது. 

திருக்குலத்தில் தொன்றிய திருப்பாணாழ்வார் மீது - இக்கோயிலின் அர்ச்சகர் ஒருவர் - விலகிப் போகுமாறு சொல்லி - கல்லை எறிய - அதனைத் தம் நெற்றியில் தாங்கிக் கொண்டு குருதி வழிய நின்றவர் ஸ்ரீரங்கநாதர்.

பின் - திருப்பாணாழ்வாரைத் தோளில் தூக்கிவரச்செய்து - திவ்ய தரிசனம் நல்கியவர் - ஸ்ரீரங்கநாதர்.

பெருமாளுக்காக - இங்கே நந்தவனம் வைத்து பராமரித்த தொண்டரடிப் பொடியாழ்வார் - திருஅரங்கத்தை மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருமங்கை ஆழ்வார் - திருமதில் எழுப்பி திருப்பணி செய்தது இங்கேதான்!..

உடைவராகிய ஸ்ரீராமானுஜர் திருநாடு எய்தியது ஸ்ரீரங்கத்தில் தான்.

கம்பர் இராம காதையை அரங்கேற்றியது இங்கேதான்.

மாதந்தோறும் விஷேசங்கள் நிகழ்ந்தாலும் ஆண்டில் மூன்று முறை பிரம்மோத்ஸவம் நிகழும் தலம்.
ஸ்ரீ நம்பெருமாள் - ஆனி மாத கேட்டையில் ஜேஷ்டாபிஷேகம் கொள்கின்றார்.

ஆடிப்பெருக்கின் போது அம்மாமண்டபத்திற்கு எழுந்தருளி காவிரிக்கு - பட்டுப் புடவை, வளையல், குங்குமம், தாம்பூலம் - என மங்கலப்பொருட்களை சீதனமாக வழங்குகின்றார்.  


இன்று வைகுந்த ஏகாதசி.

ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை நடக்கின்றது. 
22/12 அன்று தொடங்கிய பகல் பத்து திருவிழாவின் பத்தாம் நாளாகிய நேற்று மோகினி எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

மூலஸ்தானத்திலிருந்து - பாண்டியன் கொண்டையுடன் கிளி மாலை, ரத்ன அங்கி தரித்து - அதிகாலை ஐந்து மணிக்கு பக்தர்களுடன் பரம பத வாசலைக் கடக்கின்றார். 

காலை ஏழரை மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி - இரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார்.


தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச்செய்த 
திருமாலையில் இருந்து சில திருப்பாசுரங்கள்..

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிரயான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே!.. (873)  

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தெந்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள்எந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகுமாலோ எஞ்செய்கேன் உலகத்தீரே!.. (890)   

கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுப் பாட்டு
பொங்குநீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந்தன்னுள்
எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கைகண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் எழையேன் ஏழையேனே!.. (894)  

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகணம்மா அரங்க மாநகருளானே!.. (900)  

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல்இல்லை
சினத்திலோர் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே பொன்னிசூழ் திருவரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடையகோவே!.. (901)  

ஸ்ரீ ஸ்ரீரங்கநாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாத பரப்ரம்மணே நம:  
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 16  


முன்னைக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி


இறைவன் - செவ்வந்திநாதர், தாயுமானவர் 
அம்பிகை - மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை 
தீர்த்தம் -  பிரம்மதீர்த்தம்
தலவிருட்சம் -  வில்வம்

தலப்பெருமை  
தென் கயிலாயம் எனும் சிறப்பினை உடையது. 

தனித்து விளங்கும் குன்றின் உச்சியில் பிள்ளையார் குடி கொண்டுள்ளார்.

கீழே விளங்கும் ஒரு சிகரத்தில் சிவாலயம் விளங்குகின்றது. அடிவாரத்திலும் மலையில் நடுவிலும் திருச்சுற்றுகள் அமைந்துள்ளன.


குன்றின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் அருள்பாலிக்கின்றார்.

ஈசன் சகல உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆகி விளங்கும் போதிலும் - பேறு காலத்தில் தனித்திருந்த பெண்ணொருத்திக்கு தானே - தாயாகி நின்றனன் தயாபரன்.

மேலும் - மக்களின் குறை தீர்க்காத மன்னனைத் தண்டித்து - அறத்தை நிலைநாட்டியதாக வரலாறு.

மேற்கு நோக்கிய திருக்கோயில். கொடிமரம் சந்நிதிக்குப் பின்னே இருக்கிறது.

தட்சிணாமூர்த்தி தன்னருகில் - எட்டு முனிவர்களுடன் திகழ்கின்றார்.

அம்பிகையின் சந்நிதிக்கு எதிரே - சற்றே கீழாக (நிலவறையில்) பாதாள ஐயனார் விளங்குகின்றார். 

நவக்ரக மண்டலத்தில் சூரியன் - உஷா, பிரத்யுஷா எனும் தேவியருடன் நடுவில் இருக்க ஏனையோர் அவரை நோக்கியவாறு இருக்கின்றனர்.

பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை நடக்கின்றது.

திருச்சி மலைக்கோட்டை - 1880
சித்திரை பிரம்மோத்சவம், ஆடிப்பூரம் நவராத்திரி, பங்குனியில் தெப்பத் திருவிழா - என வைபவங்கள் சிறப்பாக நடக்கின்றன.

மலைக்குக் கீழ் அடிவாரத்தில் நந்திக்குத் தனிக்கோயில் இருக்கின்றது.

விஜயரகுநாத நாயக்க மன்னரிடம் அமைச்சராகப் பணிபுரிந்த தாயுமானவ ஸ்வாமிகள் - செவ்வந்தி நாதரிடமும் மட்டுவார்குழலி அம்பிகையிடமும் பேரன்பு கொண்டு விளங்க - ஈசனே ஞானகுருவாக உபதேசித்தார் என்பர்.


காவிரியின் தென்கரைத் திருத்தலம்.

அப்பர் ஸ்வாமிகளும் ஞான சம்பந்தப்பெருமானும் பாடிப்பரவிய திருத்தலம்.

மாணிக்கவாசகப் பெருமான் - சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!.. - என 
போற்றித் திருஅகவலில் போற்றுகின்றார்.

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!..(1/98/1)  

துறைமல்குசாரற்சுனைமல்கு நீலத் திடைவைகிச்
சிறைமல்கு வண்டுந் தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்கு சென்னி உடையவனெங்கள் பெருமானே!..(1/98/4)
ஞானசம்பந்தப் பெருமான்.

மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னருளே செயுஞ்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே!..(5/85/1)  
அப்பர் ஸ்வாமிகள்

திருச்சிற்றம்பலம்  
* * *

23 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 3. ஏறத்தாழ 25 ஆண்டுகாலம் வாழ்ந்திருந்த திருச்சிஉறை கோவில்கள் பற்றி அறியாத விஷயங்கள் தாங்கிய பதிவு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. அன்புடையீர்..
  தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 5. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.
   தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 6. வணக்கம்!

  பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் இனிய வருகையும்
   கவித்துவமான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
   மனம் நிறைந்த நன்றி.. வாழ்க நலமுடன்!..

   நீக்கு
 7. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும்.
  ஸ்ரீரங்கம், அரங்கன், தாயுமானவர் தரிசனம் கிடைத்தது சிறப்பு.
  பழைய மலைக்கோட்டை படம் அருமை.
  பாடல்களும், படங்களும் அருமை.
  வாழ்த்துக்கள்.
  வாழக வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   இன்பம் நிறைந்து இல்லம் பொலிய இனிதே வாழ்க!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி.. வாழ்க நலமுடன்!..

   நீக்கு
 8. வணக்கம்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ரூபன்..
   தாங்களும் தங்கள் குடும்பத்தினரும்
   வாழ்க பல்லாண்டு.. வளமுடன் வாழ்க!..
   தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி!..

   நீக்கு
 9. தங்களுக்கும் கங்களது குடும்பத்தினருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
   அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
  புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரர் -
   மூத்தோராகிய தங்களுக்கு வணக்கம்.
   தாங்களும் தங்கள் குடும்பத்தினரும்
   எல்லா நலனும் பெற்று இனிதே வாழ நல்வாழ்த்துக்கள்!

   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி.. வாழ்க நலமுடன்!..

   நீக்கு
 11. ஆன்மீக வசந்தத்தில் நீந்த வைத்த புத்தாண்டு...
  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் எல்லா நலனும் பெற்று இனிதே வாழ நல்வாழ்த்துக்கள்!
   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி.. வாழ்க நலமுடன்!..

   நீக்கு
 12. அருமையான படங்களும் தகவல்களும்.....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களுக்கும் தங்கள் அன்புக் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..