நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 23, 2015

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா கடந்த புதன்கிழமை (ஜனவரி/21) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் எடுப்பு, கந்த சஷ்டி, திருக் கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் - என சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களுள் -
தை மாதம் பத்து நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழாவும் ஒன்று. 

இந்த ஆண்டு தைத் திருவிழாவிற்காக புதன்கிழமை கொடியேற்றப்பட்டது.
கொடியேற்றத்தினை முன்னிட்டு புதன்கிழமை காலையில் - 

ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி மற்றும் தெய்வானை -  உற்சவ திருமேனிகளுக்கு பால், பன்னீர், இளநீர் - என பதினாறு வகையான மங்கல திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பெற்றன. 
தொடர்ந்து - சிறப்பு அலங்காரம் கொண்டு மேளதாளங்கள் முழங்க சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.


ஸ்வாமியின் முன்னிலையில் - 
தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக் கம்பத்தில் புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

பட்டு வஸ்திரத்துடன் பூமாலைகள் மாவிலை, தர்ப்பை சாற்றப்பட்டு சந்தனம், குங்குமத்துடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் காலை 10.30 மணி அளவில் மீன லக்னத்தில் கொடியேற்றப் பெற்றது.


தொடரும் விழாவில் - தினமும் காலையில் - சுவாமி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருள்வார்.

மாலையில் அன்னம், சேஷம், தங்கமயில், பச்சைக் குதிரை என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.
ஜனவரி 29 அன்று தைக் கார்த்திகை நாளில் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வருவார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜனவரி 30 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 

ஸ்ரீசுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். 

இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி எழுந்தருள்கின்றார்.


ஆறுபடை வீடுகளுள் முதலாவது - திருப்பரங்குன்றம்.

சூரபத்மனை வென்ற திருமுருகனுக்கும் இந்திரனின் வளர்ப்பு மகளான தெய்வானைக்கும் இத்திருத்தலத்தில் - திருமணம் நிகழ்ந்ததாக ஐதீகம்.


ஆறுபடை வீடுகளுள் திருமுருகன் அமர்ந்திருக்கும் திருத்தலம் இது!..

மேலும் குடைவறைக் கோயிலாகத் திகழ்வதும் இதுவே!..

ஸ்வாமி குடைவறையினுள் திகழ்வதால் மூலஸ்தானம் கிடையாது. கருவறையும் விமானமும் திருச்சுற்றும் கிடையாது 

திருப்பரங்குன்றம் மலையே திருக்கோயிலாகும்.

உண்மையில் திருப்பரங்குன்றம் தேவாரத் திருப்பதிகம் பெற்ற சிவ ஸ்தலம்.

வளர்பூங் கோங்கம் மாதவியோடு மல்லிகைக் 
குளிர்பூஞ் சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றந்
தளிர்போல் மேனித் தையல் நல்லாளோடு ஒருபாகம்
நளிர்பூங் கொன்றை சூடினன்மேய நகர்தானே!.. (1/100)

- என்று திருஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடிப் பரவுகின்றார்.,

கோத்திட்டையும் கோவலும் கோயில் கொண்டீர் உமைக்
கொண்டு உழல்கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
சிலபூதமும் நீரும் திசை திசையன.. (7/2)

- எனும் திருப்பதிகத்தால் சுந்தரர் - பரங்குன்ற நாதரைப் பாடி வணங்குகின்றார். 

ஸ்வாமியின் திருப்பெயர் - பரங்குன்றநாதர். அம்பிகை ஆவுடைநாயகி. 

முருகனின் மணவறையாகத் திகழும் குடைவறையில் கிழக்கு முகமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். 

ஈசனுக்கு நேரெதிரே - பவளக்கனிவாய் பெருமாள் மஹாலக்ஷ்மியுடன் திகழ்கின்றார்.

சித்திரையில் - மதுரையம்பதியில் மீனாட்சியை சுந்தரேசருக்கு கன்யாதானம் செய்து கொடுப்பவர் - பவளக்கனிவாய் பெருமாள்!..


மணக்கோலம் பூண்டிருக்கும் முருகனின் இடப்புறம் தெய்வானை. 

அருகில் நாரதர், இந்திரன் , பிரம்மா, சரஸ்வதி சாவித்ரி ஆகியோருடன் - வானில் தவழ்ந்த பாவனையில் கந்தர்வர்களும் விளங்குகின்றனர்.

மேலும் இடப்புறம் ஸ்ரீதுர்க்கையும் கணபதியும் கிழக்கு நோக்கிய சந்நிதியில் பரங்குன்ற நாதரும் விளங்குகின்றனர்.

திருமுருகன் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழ் - தெய்வநாயகியை வளர்த்த ஐராவதமும் முருகனின் வாகனங்களுள் ஒன்றான ஆடும் திகழ்கின்றன. 


சந்நிதிக்கு எதிரே - கொடிமரத்தருகில் நந்தி, மூஷிகம், மயில் என வாகனங்கள். 

திருமுருகன் குடைவறையினுள் திகழ்வதால் - அபிஷேகங்கள் கிடையாது. திருமேனிக்கு புனுகு பூச்சு மட்டுமே!..

முருகனுக்குரிய அபிஷேகங்கள் அனைத்தும் ஐயனின் திருக்கை வேலுக்கே!.. 

புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலைமேலுள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு வேல் புறப்பாடாகின்றது.

முதன்முதலில் (1970) என்னை திருப்பரங்குன்றிற்கு அழைத்துச் சென்றவர் எனது ஆச்சி!..

அப்போதெல்லாம் சரவணப் பொய்கை தீர்த்தத்தில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் மீன்களுக்குப் பொரி போடுவதே ஆனந்தம்.

திருமணம் ஆனதும் நானும் என் மனைவியும் முதலில் சென்றது மதுரையில் தாய் மாமன் வீட்டிற்கு!.. அங்கிருந்த நாட்களில் - 

மதுரை, வண்டியூர், திருப்பரங்குன்றம்,அழகர் கோயில், சோலைமலை - என தினமும் திருக்கோயில் தரிசனம் தான்!.. 

அப்போது - எங்களை திருப்பரங்குன்றத்தைச் சுற்றி கிரிவலம் அழைத்துச் சென்றவன் - உடன்பிறவா சகோதரன் சுப்ரமணி!.. 

பிறர்க்கு உதவுவதில் அத்தனை இன்பம் அவனுக்கு!..
ஆயினும் - அவனுக்கோ பழுதான இதயம்.  

இருபது வயதுக்குள்ளாகவே இறைவனுடன் கலந்து விட்டான்.

திருப்பரங்குன்றத்தை நினைக்கும் போதெல்லாம் சுப்ரமணியனின் நினைவும் கூட வரும்.

சாத்தூரிலிருந்து வரும்போது (26/10/14) எடுக்கப்பட்ட படம்
திருப்பரங்குன்றத்தின் பின் புற தோற்றம் (26/10/14).
வந்திருப்பது இறை என்று அறிந்த பின்னரும் எதிர்வாதம் செய்ததனால் - நக்கீரருக்கு பெரும்பாவம் வந்துற்றது. 

அது தீர வேண்டும்!என சரவணப் பொய்கை அருகில் தவம் இருக்கின்றார்.

ஒருநாள் கரையிலிருந்த மரத்திலிருந்து உலர்ந்த இலை ஒன்று நீரில் விழ - இலையின் ஒரு பகுதி மீனாகவும் மறு பகுதி பறவையாகவும் மாறுகின்றது. 

அதைக் கண்டு திகைத்த நக்கீரரின் தவம் கலையவே - கர்முகி எனும் பூதம் அவரைச் சிறையில் அடைக்கின்றது. 

கர்முகியின் நோக்கம் - தன் கைவசம் இருக்கும் 999 ஆட்களுடன் மேலும் ஒரு ஆள் சேர்ந்ததும் - அத்தனை பேரையும் தின்று தீர்த்து விடுவது.

இந்த பயங்கரத்திலிருந்து தம்மையும் மற்றவர்களையும் காத்தருள வேண்டும் என - திருமுருகனை நினைத்துத் துதிக்க - முருகன் முன்னின்று கர்முகியை வீழ்த்தி நக்கீரரையும் மற்றவர்களையும் காத்தருளினன் என்பது ஐதீகம்.

மாமதுரையின் ஒரு பகுதியாகத் திகழ்கின்றது திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றத்தை தென்பரங்குன்றம் என்றும் அருணகிரிநாதர் புகழ்கின்றார். 

சந்ததம் பந்தத் தொடராலே 
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுறு னைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ!..

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே!..

முருகன் திருவருள் முன்னின்று காக்க!..

சிவாய திருச்சிற்றம்பலம்.
* * * 

20 கருத்துகள்:

 1. திருப்பரங்குன்றம் அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. சிறப்பை அறிந்தேன் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 3. தகவல்களும் படங்களும் மிக அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மகிழ்ச்சி.

   நீக்கு
 4. திருப்பரங்குன்றத்தை கண்முன் நிறுத்திவிட்டீர்கள் ஐயா...நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 5. முருகனைப் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு

 6. சிறந்த பக்திப் பதிவு
  தொடருங்கள்

  யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கு நல்வரவு..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

   நீக்கு
 7. திருப்பரங்கங்குன்றம் போயிருக்கிறேன் மீண்டும் போனது போல் உணர்வு தந்ததமைக்கு நன்றி நண்பரே,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களின் வருகைக்கு நன்றி..
   கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 8. திருப்பரங்குன்றம் மீண்டும் சென்று வந்த ஓர் உணர்வு
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கு நன்றி..
   கருத்துரை கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 9. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
  அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எம்மையும் உற்று நோக்கி - ஷண்முகப்ரியாவுடன் அறிமுகம் செய்து வைத்தமை கண்டு மகிழ்ச்சி!..

   அத்துடன் தளத்திற்கு வந்து தகவல் அளித்த அன்பினுக்கு நன்றி..

   நீக்கு
 10. திருபரங்குன்றம் வைகாசி விசாகம் பால்குட பெருவிழாவில் என் தங்கை கணவர் வீட்டு பால்குடம் தான் முதலில் நடக்கும் அப்போது அந்த வீழாக்களில் கலந்து கொள்ள அடிக்கடி போவோம்.
  அழகான படங்களும், ஆச்சி, சகோதரர் ஆகியவர்களின் மலரும் நினைவுகளும் சேர்ந்து பதிவு இன்பமும், துன்பமும் கலந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   வாய்க்காலில் நிறைந்தோடி வரும் தண்ணீர் வயல்களில் ஆர்வமாகப் பாய்வது போல - மதுரையை நினைக்கும் போதெல்லாம் - சுப்ரமணியனின் நினைவுகள் இரத்த நாளங்களில் பாய்ந்து விரைந்தோடும்.

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு