சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் ஏற்பட்ட போட்டியில், பெருமானின் ஊர்த்துவ தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் திகைத்து நின்றாள் - சக்தி.
தான் - வஞ்சிக்கப்பட்டதாக அதிர்ந்தாள். வெகுண்டாள். அம்பிகையின் கோபம் எல்லை மீறி - ஸ்ரீபத்ரகாளி என வெளிப்பட்டது.
இது நிகழ்ந்தது -
திருஆலங்காடு எனும் திருத்தலத்தில்!.
ஈசன் - நடனமாடிய பஞ்ச சபைகளில் இது -
ரத்னசபை.
ஒரு கட்டத்தில் - ஐயன் அம்பிகையை நெருங்கி சாந்தப்படுத்தினார். அந்த அளவில் தில்லை வனமாகத் திகழ்ந்த தில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்தின் வடதிசையின் எல்லையில் அமர்ந்தாள்.
அம்பிகையின் கோபம் காளி என உருக்கொண்டு நின்ற போது நான்முகன் அவளை துதி செய்து வணங்கினார். பிரம்மனின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த அம்பிகை - சினம்
தணிந்து உலக உயிர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள்.
பிரம்ம
சாமுண்டீஸ்வரி என - அங்கே கோயில் கொண்டாள். அதன் பின்,
தீவினைகளைத் தீர்க்க - திருஉளங்கொண்டு, ஊர்கள் தோறும் - பத்ரகாளி என எழுந்தருளினள் - அம்பிகை.
அப்படி ஒரு நாள் - மழை பெய்த ஒரு மாலைப் பொழுதில் எம்மை ஆண்டு கொண்டவள் - அவளே!..
அன்று முதல் - அவளுக்குப் பிள்ளைகளாக இருந்த எங்களுக்கு, அவள் தானே - மகவாக ஆயினாள்.
அவ்வண்ணம் குடிகொண்டவள் - ஸ்ரீவீரமாகாளி!.. தலம் - நாககுடி.
உக்ர ஸ்வரூபிணியான பத்ரகாளி. ஆயினும், அவள் - பொங்கிப் பெருகும் கருணை வெள்ளம். வற்றாது சுரக்கும் அன்பின் ஊற்று.
வலது திருக்கரத்தினில் சூலம். இடது திருக்கரத்தினில் கபாலம். மேல் திருக் கரங்களில் உடுக்கையும் நாகபாசமும். ஜடாமகுடத்தில் அக்னி ஜ்வாலைகள்.
மூலஸ்தானத்தின் வலப்புறம் ஸ்ரீவீரனார் ஸ்வாமியும் - இடப்புறம் ஸ்ரீ கருப்ப ஸ்வாமியும் பரிவார மூர்த்திகள். கோயிலின் கிழக்குப் புறம் - ஸ்ரீ வலம்புரி விநாயகர். அருகினில் வேம்பு நிழலில் - நாக ப்ரதிஷ்டையும் புற்றும்.
வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். திருக்கோயிலின் பின்புறம் பழவாறு எனப்படும் சிற்றோடை.
மூன்று புறமும் மயானங்கள் சூழ்ந்திருக்க - திரிகோண மத்ய ஸ்தானம் என திருக்கோயில் கொண்டு அகமகிழ்வுடன் அருளாட்சி புரிகின்றனள்.
வருடாந்திர பால்குட திருவிழா - அக்னி நட்சத்திரம் முடிந்த - மறு வெள்ளிக் கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நிகழும். இதன்படி -
வெள்ளிக்கிழமை (மே/23 - வைகாசி/9) முதலாம் திருநாள்.
சுவாமிமலையில் - காவிரி வடகரையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பெற்று அம்பிகைக்கு மங்கல
நீராட்டு.
அம்பிகைக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கோயில் பிள்ளைகளுக்கும்
காப்பு கட்டுதல் .
 |
| முதலாம் திருநாள் |
அன்று - முன்னிரவு நேரத்தில், கிராம தேவதா ப்ரீதியுடன் - பூத பலி.
அக்னி கொப்பரையும் கருப்ப ஸ்வாமியின் வேலும் உடன் வர -
சிம்ம வாகனத்தில் ஆரோகணித்தவளாய் - புஷ்ப ரதத்தில் - திருவீதியுலா.
விடியற்காலையில் உக்ரத்துடன் யதாஸ்தானம் திரும்பும் அன்னைக்கு, தயிர் பள்ளயம் நிவேதனம் செய்யப்படும்.
சனிக்கிழமை (மே/24 - வைகாசி/10) இரண்டாம் திருநாள்.
 |
| இரண்டாம் திருநாள் |
 |
| இரண்டாம் திருநாள் மகாதீபாராதனை |
சனிக்கிழமை மாலையில் மகாஅபிஷேகமும் மகாதீபாராதனையும் நிகழும். அதன் பின் அன்னதானம்.
ஞாயிறு (மே/25-வைகாசி/11) மூன்றாம் திருநாள்.
காலையில், கிராம தேவதா ப்ரீதி. பிரத்யேக பூஜையுடன் அருள் வாக்கு பெற்று - வெகு விமரிசையுடன் - பூங்கரகம் புறப்படும்.
நேர்ந்து கொண்டவர்கள் - மஞ்சளாடையுடன் பால் குடம் எடுப்பர்.
 |
| மூன்றாம் திருநாள் |
 |
| அரிவாளின் மேல் ஸ்ரீகருப்பசாமியின் அருள்வாக்கு |
 |
| இடது ஓரத்தில் என் மகன் |
 |
| சக்தி கரகத்துடன் சகோதரர் |
 |
| சீர்வரிசை தட்டுடன் என்மகள் |
அன்பில் திகழும் அம்பிகைக்கு - இளங்கன்னியரும் பெண்களும் - சீர்வரிசை எடுத்து வீதிவலம் வந்து , பகல் உச்சிப் பொழுதில் -
ஸ்ரீ வீரமாகாளி அம்பிகையின் உளங்குளிர பாலாபிஷேகம் நிகழும். அதன்பின்
பட்டு வஸ்திரம் சாற்றி - மஹாதீபாராதனை.
பக்தர்களுக்கு கற்பூர தரிசனம் ஆனதும் - கூழ் வார்த்தல், மாவிளக்கு,
நீர்மோர், பானகம், துள்ளுமாவு வழங்குதல் என சிறப்பாக நிகழும்.
திருக்கோயில் திட்டத்துடன் உபயதாரர்களின் கைங்கர்யமும் உண்டு.
ஞாயிறு மாலை - அன்னைக்கு சந்தனக்காப்பு. பழவகைகளுடன் சித்ரான்ன நிவேத்யம். மகாதீபாராதனை. அதன்பின் அன்னதானம்.
பின்னிரவில் திருக்காப்பு கழற்றி, செவ்வாய் அன்று பூங்கரகம் விசர்ஜனம்.
சுவாமிமலையிலிருந்து வடக்கே - 2 கி.மீ. தொலைவில் உள்ளது நாககுடி. ஊர் எல்லையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில்.
கும்பகோணம் - திருவைகாவூர் நகரப்பேருந்துகள் இவ்வூர் வழி செல்கின்றன.
இங்கே - பதிவில் உள்ள படங்கள் - கடந்த வருடம் சித்திரையில் நிகழ்ந்த பாற்குட திருவிழாவின் போது எடுக்கப்பட்டவை.
ஸ்ரீவீரமாகாளி அம்பிகை என்னையும் - தன் பணிக்கு என ஆட்கொண்டவள். நெஞ்சில் நினைத்ததும் எதிர்நிற்பவள். அவளுடைய ஆலயத் திருப்பணியில் என்னையும் இணைத்து மகிழ்ந்தவள்.
அவளுக்குத் தீர்த்தக் கைங்கர்யம் செய்யும் பேற்றினையும், அபிஷேக அலங்காரம் செய்யும் மகாபாக்யத்தையும் அடியேனுக்கு வழங்கியவள்.
அன்னைக்கு அபிஷேகம் செய்யும் போது - ஏழு வயதுடைய குழந்தையை நீராட்டுவது போல இருக்கும்!.. அந்த அனுபவம் - விவரிக்க இயலாதது.
திருவிழா காலத்தில் - நான் கடல் கடந்து இருந்தாலும்
என் உள்ளம் அவள் காலடியில் கிடக்கின்றது.
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்றாய
கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!..
ஓம் சக்தி ஓம்!..
* * *