நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 22, 2014

பால்குட திருவிழா

அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததும், ஆங்காங்கே - அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் மங்கலகரமாகத் தொடங்கியுள்ளன.
 
மக்களின் மனங்களுடன் சங்கமித்திருப்பவை - மாரியம்மன் கோயில்களும் காளியம்மன் கோயில்களும்!..


அத்தகைய  திருக்கோயிலின் திருவிழாவினை இன்று தரிசிப்போம்.


கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்!..

- என்பது மாணிக்க வாசகப்பெருமானின் அருளுரை.

காளியோடு ஆடிய - நடனமே தில்லையில் நிகழ்த்தப்படுகின்றது- என்பது திருக்குறிப்பு.
 

சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் ஏற்பட்ட  போட்டியில், பெருமானின் ஊர்த்துவ தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் திகைத்து நின்றாள் - சக்தி.

தான் - வஞ்சிக்கப்பட்டதாக அதிர்ந்தாள். வெகுண்டாள்.  அம்பிகையின் கோபம் எல்லை மீறி - ஸ்ரீபத்ரகாளி என வெளிப்பட்டது.

இது நிகழ்ந்தது - திருஆலங்காடு எனும் திருத்தலத்தில்!.
ஈசன் - நடனமாடிய பஞ்ச சபைகளில் இது - ரத்னசபை.

ஒரு கட்டத்தில் - ஐயன் அம்பிகையை நெருங்கி சாந்தப்படுத்தினார். அந்த அளவில்  தில்லை வனமாகத் திகழ்ந்த தில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்தின் வடதிசையின் எல்லையில்  அமர்ந்தாள்.

அம்பிகையின் கோபம் காளி என உருக்கொண்டு நின்ற போது நான்முகன் அவளை துதி செய்து வணங்கினார். பிரம்மனின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த அம்பிகை - சினம் தணிந்து உலக உயிர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள்.

பிரம்ம சாமுண்டீஸ்வரி என  - அங்கே கோயில் கொண்டாள். அதன் பின்,


தீவினைகளைத் தீர்க்க - திருஉளங்கொண்டு, ஊர்கள் தோறும் - பத்ரகாளி என எழுந்தருளினள் - அம்பிகை.  

அப்படி ஒரு நாள் - மழை பெய்த ஒரு மாலைப் பொழுதில் எம்மை ஆண்டு கொண்டவள் - அவளே!..

அன்று முதல் - அவளுக்குப் பிள்ளைகளாக இருந்த எங்களுக்கு, அவள் தானே - மகவாக ஆயினாள்.

அவ்வண்ணம் குடிகொண்டவள் -  ஸ்ரீவீரமாகாளி!..  தலம் - நாககுடி.

உக்ர ஸ்வரூபிணியான பத்ரகாளி. ஆயினும், அவள் - பொங்கிப் பெருகும் கருணை வெள்ளம். வற்றாது சுரக்கும் அன்பின் ஊற்று.

வலது திருக்கரத்தினில் சூலம். இடது திருக்கரத்தினில் கபாலம். மேல் திருக் கரங்களில் உடுக்கையும் நாகபாசமும். ஜடாமகுடத்தில் அக்னி ஜ்வாலைகள்.

மூலஸ்தானத்தின் வலப்புறம் ஸ்ரீவீரனார் ஸ்வாமியும் - இடப்புறம்  ஸ்ரீ கருப்ப ஸ்வாமியும் பரிவார மூர்த்திகள். கோயிலின் கிழக்குப் புறம்  - ஸ்ரீ வலம்புரி விநாயகர். அருகினில் வேம்பு நிழலில் - நாக ப்ரதிஷ்டையும் புற்றும்.

வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். திருக்கோயிலின் பின்புறம் பழவாறு எனப்படும் சிற்றோடை.

மூன்று புறமும் மயானங்கள் சூழ்ந்திருக்க - திரிகோண மத்ய ஸ்தானம் என   திருக்கோயில் கொண்டு அகமகிழ்வுடன் அருளாட்சி புரிகின்றனள்.

வருடாந்திர பால்குட திருவிழா - அக்னி நட்சத்திரம் முடிந்த - மறு வெள்ளிக் கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நிகழும். இதன்படி - 

வெள்ளிக்கிழமை (மே/23  -  வைகாசி/9) முதலாம் திருநாள். 

சுவாமிமலையில் - காவிரி வடகரையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பெற்று அம்பிகைக்கு மங்கல நீராட்டு.

அம்பிகைக்கும் பரிவார மூர்த்திகளுக்கும்  கோயில் பிள்ளைகளுக்கும் காப்பு கட்டுதல் . 


முதலாம் திருநாள்
அன்று - முன்னிரவு நேரத்தில்,  கிராம தேவதா ப்ரீதியுடன் - பூத பலி.
அக்னி கொப்பரையும் கருப்ப ஸ்வாமியின் வேலும் உடன் வர -
சிம்ம வாகனத்தில் ஆரோகணித்தவளாய் - புஷ்ப ரதத்தில் - திருவீதியுலா.

விடியற்காலையில் உக்ரத்துடன் யதாஸ்தானம் திரும்பும் அன்னைக்கு, தயிர் பள்ளயம் நிவேதனம் செய்யப்படும்.

சனிக்கிழமை (மே/24  - வைகாசி/10) இரண்டாம் திருநாள்.  

இரண்டாம் திருநாள்

இரண்டாம் திருநாள் மகாதீபாராதனை
சனிக்கிழமை மாலையில் மகாஅபிஷேகமும் மகாதீபாராதனையும் நிகழும். அதன் பின் அன்னதானம்.

ஞாயிறு (மே/25-வைகாசி/11) மூன்றாம் திருநாள்.

காலையில், கிராம தேவதா ப்ரீதி. பிரத்யேக பூஜையுடன் அருள் வாக்கு பெற்று -  வெகு விமரிசையுடன் - பூங்கரகம் புறப்படும். 

நேர்ந்து கொண்டவர்கள் - மஞ்சளாடையுடன் பால் குடம் எடுப்பர்.

மூன்றாம் திருநாள்
அரிவாளின் மேல் ஸ்ரீகருப்பசாமியின் அருள்வாக்கு
இடது ஓரத்தில் என் மகன்

சக்தி கரகத்துடன் சகோதரர்
சீர்வரிசை தட்டுடன் என்மகள்


அன்பில் திகழும் அம்பிகைக்கு - இளங்கன்னியரும் பெண்களும் - சீர்வரிசை எடுத்து வீதிவலம் வந்து , பகல் உச்சிப் பொழுதில்  - 

ஸ்ரீ வீரமாகாளி அம்பிகையின் உளங்குளிர பாலாபிஷேகம் நிகழும். அதன்பின்
பட்டு வஸ்திரம் சாற்றி - மஹாதீபாராதனை. 

பக்தர்களுக்கு கற்பூர தரிசனம் ஆனதும் - கூழ் வார்த்தல், மாவிளக்கு, நீர்மோர், பானகம், துள்ளுமாவு வழங்குதல் என சிறப்பாக நிகழும். 

திருக்கோயில் திட்டத்துடன் உபயதாரர்களின் கைங்கர்யமும் உண்டு.

ஞாயிறு மாலை - அன்னைக்கு சந்தனக்காப்பு. பழவகைகளுடன் சித்ரான்ன நிவேத்யம். மகாதீபாராதனை. அதன்பின் அன்னதானம்.

பின்னிரவில் திருக்காப்பு கழற்றி,  செவ்வாய் அன்று பூங்கரகம் விசர்ஜனம். 

சுவாமிமலையிலிருந்து வடக்கே - 2 கி.மீ. தொலைவில் உள்ளது நாககுடி. ஊர் எல்லையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில்.

கும்பகோணம் - திருவைகாவூர்  நகரப்பேருந்துகள் இவ்வூர் வழி செல்கின்றன.


இங்கே - பதிவில் உள்ள படங்கள் - கடந்த வருடம் சித்திரையில்  நிகழ்ந்த பாற்குட திருவிழாவின் போது எடுக்கப்பட்டவை.

ஸ்ரீவீரமாகாளி அம்பிகை என்னையும் - தன் பணிக்கு என ஆட்கொண்டவள். நெஞ்சில் நினைத்ததும் எதிர்நிற்பவள். அவளுடைய ஆலயத் திருப்பணியில் என்னையும் இணைத்து மகிழ்ந்தவள்.

அவளுக்குத் தீர்த்தக் கைங்கர்யம் செய்யும் பேற்றினையும், அபிஷேக அலங்காரம் செய்யும் மகாபாக்யத்தையும் அடியேனுக்கு வழங்கியவள்.

அன்னைக்கு அபிஷேகம் செய்யும் போது - ஏழு வயதுடைய குழந்தையை நீராட்டுவது போல இருக்கும்!.. அந்த அனுபவம் - விவரிக்க இயலாதது.

திருவிழா காலத்தில் - நான் கடல் கடந்து இருந்தாலும்
என் உள்ளம் அவள் காலடியில் கிடக்கின்றது.

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்றாய 
கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!..

ஓம் சக்தி ஓம்!..
* * *

16 கருத்துகள்:

 1. அன்பில் திகழும் அம்பிகைக்கு
  அபிஷேகம் நிகழ்த்திப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. அருமையான செய்திகள்.... படங்களும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 3. சிறப்பான படங்களுடன் தகவல்களுக்கும் நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. பக்தர்களுக்கு பரிந்துரைத்தமைக்கு தங்களுக்கு இறையருள் கிடைக்கட்டும்.
  Killergee
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கட்டும்.
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 5. ஐந்து நாட்களாக ஊரில் இல்லை ஐயா
  அதனால் சில பதிகளைக் காண இயலாமல் போய்விட்டது
  இனி தொடர்வேன் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   அனைவரும் நலம் தானே..ஐயா..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 6. இவ்வளவு வெய்யிலிலும் அவர்கள் பால்குடம் சுமந்து வருவதைப் பார்க்கும் போது, அவர்கள் பக்தியை என்னென்று சொல்வது? படங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் சொல்வது உண்மைதான். வீட்டுக்கு வீடு மரியாதைகளை ஏற்றுக் கொண்டு வரும் போது - சரியான உச்சி வெயில் நேரம்.
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 7. அன்னைக்கு அபிஷேகம் செய்யும் போது - ஏழு வயதுடைய குழந்தையை நீராட்டுவது போல இருக்கும்!.. அந்த அனுபவம் - விவரிக்க இயலாதது. என்று தாங்கள் கூறியுள்ளதை நான் பல நிகழ்வுகளில் உணர்ந்துள்ளேன். சக நண்பர் உணரும் ஓர் உணர்வினை தாங்கள் எழுத்து மூலமாகப் பதிந்தது நிறைவைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   உண்மை தான் ஐயா.. தாங்கள் கூறுவது ..
   அன்னையின் பக்தியில் ஆழ்கின்ற அன்பர்களின் அனுபவங்கள் அனைத்தும் - ஒரே தன்மையினை உடையவை..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 8. அன்னையின் அபிஷேகத்தை அழகிய படங்களுடன் விபரித்து கூறியமைக்கு நன்றிகள் ! வாழ்த்துக்கள் சகோ ////!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு