நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 26, 2014

ஸ்ரீதில்லைக் காளி

பிரச்னை அங்கே தான் தோன்றியது. 

முஞ்சிகேச முனிவரும் கார்க்கோடகனும் அம்மையப்பனின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும் என காலகாலமாகச் செய்த தவம் அன்று ஆலங்காட்டினில் அற்புதமாக நிறைவேறிற்று. 

அதனால்,  ஆலங்காடு - திருஆலங்காடு என்றானது. நிருத்த சபையும் - ரத்ன சபை எனப்பட்டது. ஈசனும் ரத்னசபாபதி என புகழப்பட்டார். 

அம்மையப்பனின் திருக்கூத்தினைக் கண்டு களித்துக் கொண்டிருந்தவர் எவருமே - நினைக்கவில்லை - இப்படி ஆகும் என்று!..


ஐயனுடன் ஆடிக் கொண்டிருந்த அம்பிகை - தான் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்ந்தாள். அவளின் உள் மனதில் தோன்றிய அந்த எண்ணத்தை உணர்ந்த ஐயன் குறுநகை புரிந்தான். ஆயினும், முனிவர்களுக்காக - திருநடனம் நிகழ்த்திக் கொண்டிருந்தான். 

ஆட்ட நாயகனாக ஆடிக் கொண்டிருந்த ஐயனைக் கூர்ந்து நோக்கினாள். 

தன்னைக் கவனிக்காத பாவனையுடன் - ஈசன் நடமாடுவதாக உணர்ந்தாள். அம்பிகையின் முகம் கறுத்தது.

தன்னை இப்படி மாற்றியது ஆனந்தக் கூத்தனின் அலட்சியமே - எனக் கொண்ட அம்பிகை,  மெல்ல  உக்ரமானாள். கோரப்பல் காட்டிச் சிரித்தாள். 

கோபத்துடன் கோரத் தாண்டவம் நிகழ்த்தினாள்.

எம்பெருமானின் மாணிக்கக் கூத்து எதற்காக!?.. 

பத்ரகாளி  என்பவள் யார்?.. 


முன்பொரு சமயம்  - தட்ச யக்ஞத்தில் தேவி அவமானப்படுத்தப்பட்ட போது அவளுடைய திருமேனியில் இருந்து கௌசிகை என வெளிப்பட்டவள். கரிய நிறம் கொண்டிருந்ததால் -   பத்ரகாளி என்பதும் திருப்பெயர். வீரபத்ரருடன் கூடி தட்சனின் யாகத்தை அழித்தவள் இவளே!.. 

மகிஷாசுரனை வதைத்த போதும்  சண்ட முண்டர்களைத் தொலைத்த போதும் இரத்தச் சகதியில் விளையாடிக் களித்தவள் இவளே!.. 

சும்பநிசும்பன் எனும் அசுரர்களை மாய்க்கும் வேளையில் ரக்தபீஜன் என்பவன் உடலிலிருந்து சிதறிய இரத்தத் துளிகளில் இருந்து மேலும் அசுரர்கள் தோன்றுவதைக் கண்டு - அவனுடைய குருதியைக் குடித்து அவன் வாழ்வை முடித்து சாமுண்டி எனச் சிரித்தவள் இவளே!..  

அசுரனின் உடலைப் பிளந்து உதிரம் குடித்த காரணத்தால், விளைந்திருந்த மயக்கத்தினைத் தன்னுள் இருந்து நீக்குவதற்கே திருஆலங்காட்டில் மாணிக்கக் கூத்து என்பதை அம்பிகை அறிந்தாளில்லை. அவ்வேளையில்,

கருணைக் கடலாகிய எம்பெருமான் - தேவி!.. இத்துடன் நிறுத்திக் கொள்!.. -  என்றான். 

காளி ஆகி நின்ற கற்பகமோ - சீற்றத்துடன் முன் நின்று எதிர்வாதம் புரிந்தாள். 

தாண்டவத்திற்கு உரியவர் தாம் மட்டுமோ?. எனில், எதிர்த்து நின்று ஆடுக!.  - என்றாள். 


டலரசனின் கண்கள் சிவந்தன. கங்கை நீர் ததும்பும் வார்சடைக் கற்றைகள் ககனம் எங்கும் விரித்தெழுந்தன. 

தன்னில் ஒருபாகமாய் இருந்து சிவசக்தியாய் ஒளிர்ந்தவளின்  அறைகூவலை ஏற்றுக் கொண்டான். பேருவகையுடன்  நர்த்தனம் புரிந்தான். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுக்களும் சுழன்றன. அண்டங்கள் அதிர்ந்தன.

வேறொரு நாட்டியம் அங்கு ஆரம்பமானதைக் கண்ட முஞ்சிகேச முனிவரும் கார்க்கோடகனும் பரவசம் மாறி பரிதவித்து நின்றனர்.  

காலத்துக்கு கட்டுப்படாத - தாண்டவத்தைக் காண வந்து குழுமிய தேவாதி தேவர்களும்  -  வெற்றி பெறப் போவது, மகேஸ்வரனா!..  மகா காளியா!.. - என விடை தெரியாது திகைத்தனர். 

அந்த வேளையில் - அண்டப் பிரபஞ்சமெங்கும் எண்தோள் வீசி நின்றாடிய எம்பெருமானின் திருச்செவியில் இருந்து மகர குண்டலம் நழுவி விழுந்தது.

காளியும் அதைக்  கண்டாள். 

என்ன செய்வார் ஈசன்!?..  - விக்கித்து நின்றது கூடியிருந்த சபை.  

எட்டுத் திசைகளையும்  வீசி அளந்த ஈசனின் - திருப்பாதம் கீழே கிடந்த மகர குண்டலத்தை மெல்லப் பற்றியது. 

உக்ர காளியின் திருவிழிகள் விரிந்தன.


ஒரு பாதத்தினை ஊன்றி குண்டலத்தினைப் பற்றிய பாதத்தினை செங்குத்தாய் தூக்கி நின்றார். திருச்செவியில் மகர குண்டலத்தினை சூட்டிக் கொண்டார். 

காளி - புயல் என சிலிர்த்தாள். தானும் ஊர்த்துவ தாண்டவம் ஆடுதற்குத் திருப்பாதம் உதைத்து நின்றாள். 

அச்சமயம், மஹாவிஷ்ணுவும் - நாரதாதி முனிவர்களும் கூடி நின்று - 


தாயே.. தயாபரி!.. ஈசனுக்கு எதிராக - ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்த வேண்டாம். தானொரு பாதியல்லவோ - தயாபரனின் திருமேனியில்!.. தமது திருநடனத்தின் தரம் கூறவல்லார் யார்!.. வென்றவர் இவர் எனக் கூறுதற்கு எவர் உளர் இவ்விடத்தில்!..  வெற்றி எனும் பரிபூரணம் இருவருக்கும் உரியதன்றோ!.. சினத்தை விடுத்து ஈசனோடு  - சேர்ந்திருந்து பொலிக!..  - என பலவாறாகத் துதித்து நின்றனர்.

திகைத்து நின்றாள் - சக்தி. 

பெருமானின் ஊர்த்துவ தாண்டவத்தை எதிர்த்து ஆடவேண்டாம் என தடுக்கப் பட்டதால் அதிர்ந்தாள். தான்-வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்தாள். வெகுண்டாள்.  

அம்பிகையின் கோபம் எல்லை மீறி வெளிப்பட்டு - சௌந்தர்யம் மறைந்தது.

உமையன்னை உக்ரகாளி ஆனாள். ஊழித் தீயாய் - சூறைக் காற்றாய் ஆனாள்.

அம்பிகையின் அதிபயங்கரத்தோற்றத்தினைக் கண்டு அஞ்சிய தேவர்களுக்கு அடைக்கலம் அருளிய ஐயன் புன்னகைத்தார். 

அம்பிகை எம்முடன் மாறுபட்டு நிற்கின்றனளே அன்றி வேறுபட்டு நிற்கின்றாளில்லை. அவளால் அழிய வேண்டிய அதர்மங்கள் இன்னும் இந்த அவனியில் மிஞ்சிக் கிடக்கின்றன. அம்பிகையின் இலக்கு தாருகன் வதம். அது நிறைவேறும் வேளையில் - ஆனந்தத் தாண்டவம் நிகழும்!..  - என அருளினார்.

காளி என கிளர்ந்தெழுந்த அம்பிகை ஈரேழு புவனங்களையும் - கோப அக்னி கொந்தளிக்க சுற்றி வந்தாள்.


வார்கொண்ட வனமுலையாள் - வஞ்சக தாரகனின் உயிரை அவிர் என உண்டு வக்ரம் ஆனாள். உக்ரம் ஆனாள். அடாதன செய்த அரக்கர்கள்  எவரும் தப்பி விடாதபடி துரத்திப் பிடித்து வதம் செய்தாள்.  கொடுவாள் சூலமொடு கதை எனும் ஆயுதங்களை - குருதிப் புனலில் நீராட்டிக்  களித்தாள்.

கோபம்  தணியாத சூறைக் காற்றென -  எங்கும் சுற்றிச்சுழன்ற  மாகாளி, அந்தத் தில்லை வனத்தினில்  திருவடி வைத்த வேளையில் - ஐயன் அருளியபடி அனுக்ரஹ நேரமும் நெருங்கியது.

ஈசன் உரைத்தபடி - திக்கெட்டும் தீமைகளை வென்றவளாய் - திகம்பரியாய் - அடர்ந்த தில்லை வனத்தினுள் - அம்பிகை வந்தமர்ந்த போது, அவளுடைய திருமேனியில் இருந்து வெளிப்பட்ட அக்னி ஜூவாலைகளால் - அந்த வனம் தகித்தது.

தொலை தூரத்தில் சலங்கைச் சத்தம்!..

அசுரர்களின் தலைகளைக் கோர்த்து மாலையாகப் போட்டுக் கொண்டிருந்த பத்ரகாளியின்  திருச்செவிகளில் எதிரொலித்தது.

ஆடல் வல்லான் ஆடுகின்றான் போலும்!..

வானலையில் - வாணியின் கச்சபி  தவழ்ந்தது. கூடவே நாரதரின் மகதி யாழும் இழைந்தது.  நாரணனின் முழவும் கேட்டது. நான்முகனின் ஜதியும் கேட்டது. நாதாந்த நட்டத்தில் - நந்தியின் சுத்த மத்தளமும் கேட்டது.

இன்றாவது வென்று விட வேண்டும்!.. 

சிவசக்தியே அனைத்திற்கும் ஆதாரம் என்பதை மறந்து - தானே அனைத்தினும் முதன்மை என்று தன்னைத் தயாபரனிடமிருந்து பிரித்துக் கொண்டிருந்த தயாபரி - கோபம் கொண்டு எழுந்தாள்.

எழுந்த அந்தக் கணமே - அம்பிகையின் முன்னால் ஆனந்த சிரிப்புடன் ஐயன்.

ஐயனின் ஆனந்த தாண்டவத்தினைக் கண்ட  காளி அதிர்ந்தாள்.  ஒரு கணம் காளி உட்பட, தேவாதி தேவர்களும்.தேவியர்களும், பிரம்மனும், விஷ்ணுவும், பிறரும் தங்களை மறந்து ஈசனோடு ஈசனாய் கலந்தனர்.

மறுகணம் ஐயனின் திருமேனியில் இருந்து மீண்டும் வெளிப்பட்டனர்.

ஈசனின் திருவிழிகள் அம்பிகையை நோக்கின. 

காளி தன்னை உணர்ந்தாள்.  தான் - ஈசனின் இடப்பாகம் என்பதை அந்தக் கணத்தில் உணர்ந்தாள். வெல்வது யார்!.. என்ற நிலையைத் தாண்டி, யாதுமாகி நின்ற - சிவசக்தி ஸ்வரூபத்தினை உணர்ந்தாள்.

ஐயனின் விழிகளில் பொங்கித் ததும்பிய அருள் வெள்ளத்தினைக் கண்டு அம்பிகை  சாந்தம் அடைந்தாள்.

தில்லை வனத்தினில் - ஆனந்தக் கூத்தினை நிகழ்த்தும் ஐயன் அன்று திரு ஆலங்காட்டினில் நிகழ்த்தியது அருள் கூத்து என்பதை உணர்ந்தாள்.

ஊர்த்துவமாக அண்ட பிரம்மாண்டங்களை - அன்று அளாவியதில் தன் பங்கினையும் உணர்ந்தாள்.


பொற்பதிக் கூத்து எனும் ஆனந்த நடனத்தில்  - சிருஷ்டி, ஸ்திதி , சம்ஹாரம், திரௌபவம், அநுக்ரகம் - என, வாம பாகத்தின் திருவடியை அல்லவா ஐயன் சுட்டிக் காட்டுகின்றார்!...

சோம சுந்தரனின்  - வாம சுந்தரி ஆகிய அம்பிகையின் நெஞ்சில் அன்பு சுரந்தது.
சிவகாம சுந்தரி என  சிவபெருமானின் இடப் பாகத்துடன் ஒன்றினாள்.

தில்லையம்பலம் எனும் பொன்னம்பலம் ஏகினாள்.

தில்லையின் எல்லையில் நின்றிருந்த காளியின் முன் நின்று - திசைக்கு ஒன்றெனத் திருமுகங்கொண்ட நான்முகன் வேதமந்திரம் கொண்டு வழிபட  - அம்பிகையிடம் இருந்த கோபம் தனியே பிரிந்தது.

ஸ்ரீதில்லைக் காளி
தில்லையின் எல்லையில் அமர்ந்தது. அம்பிகையின் ஆங்காரம் - தில்லைக் காளி என விளங்கட்டும் என வாழ்த்தப்பட்டது.

நான்கு வேதங்களால் உக்ரம் குறைந்த அம்பிகை - நான்கு திருமுகங்களுடன் பிரம்ம சாமுண்டி எனத் திருப்பெயர் கொண்டாள்.


பிரம்மனின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த அம்பிகை - சினம் தணிந்து உலக உயிர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள். 
 
இன்றும் இத்திருக்கோயிலினுள்  மென்மையாய் ஒரு அனல் நம்மை சூழ்ந்து கொள்வதை உணரலாம்.

தில்லைக் காளிக்கு நல்லெண்ணெய்யினால் மட்டுமே அபிஷேகம். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவை பெருகி விடுமோ - என்று அஞ்சி - அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை.

அடைக்கலம் என்று  வருவோரை அரவணைத்து - ஆதரிக்கின்றாள். அவள் சந்நிதியில் நின்று வணங்க ஜன்ம ஜன்மங்களாய் தொடர்ந்து வரும் தீவினைகள் தொலைந்து போகின்றன.

தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் - இத்தலத்தில் காளியின் முன் திரு விளக்கேற்றி வைத்து வணங்க - தீவினைகள் தீய்ந்து போகின்றன.

இத்தகைய - சிறப்பு வாய்ந்த தில்லைக் காளியம்மன் திருக்கோயிலின் திருவிழா கடந்த வைகாசி ஐந்தாம் நாள் (மே/19) திங்கள் இரவு 10 மணிக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

உற்சவ நாட்களில் தினமும் அம்பாள்  இனிதே திருவீதி எழுந்தருள்கின்றாள்.

தேர் கொண்ட தில்லைக் காளி
நாளை செவ்வாய்க்கிழமை (மே/27) தேர்த் திருவிழா.
மே/28  சிவப்பிரியை தீர்த்தத்தில் தீர்த்தவாரி - இரவு காப்பு களைதல்.

வியாழன்று (மே/29) மஞ்சள்நீர் விளையாட்டு, முத்துப்பல்லக்கு.

வெள்ளியன்று (மே/30) தெப்ப உற்சவம். சனிக்கிழமை (மே/31)  திருஊஞ்சல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகின்றது.

காளியை வழிபட பலவித விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. இருப்பினும், காளியின் அருள் பெற அவளது திருப்பெயரைச் சொன்னாலே போதும்.

அபிஷேக அர்ச்சனைகளால் அவள் மகிழ்ச்சியடைகிறாள். உள்ளன்புடன்  வழிபட்டால், காளியின் அருள் பெற்று சகல பாக்கியங்களையும் பெறலாம்.

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே!.. (4/81) 


இனித்தமுடைய எடுத்தபொற் பாதம்!.. - என்றும், 
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே!..  - என்றும் திருநாவுக்கரசர் கசிந்து உருகிக் குறிப்பது - அம்பிகையின் திருவடிகளையே!...

தில்லைக்காளி எப்போதும் வெண்பட்டு அணிந்து 
குங்குமக் காப்பினில் திகழ்கின்றாள்.

அவள் குங்குமமே  காப்பு!.. 
அவள் திருவடிகளே பாதுகாப்பு!..
ஓம் சக்தி ஓம்!..
* * *

12 கருத்துகள்:

 1. தில்லை காளி அறிந்தேன் உணர்ந்தேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 2. பொற்பதிக் கூத்து எனும் ஆனந்த நடனத்தில் - சிருஷ்டி, ஸ்திதி , சம்ஹாரம், திரௌபவம், அநுக்ரகம் - என, வாம பாகத்தின் திருவடியை அல்லவா ஐயன் சுட்டிக் காட்டுகின்றார்!...

  இனித்தமுடன் ஆடிய ஆனந்த நடனத்தை அருமையாக படம்பிடித்துக்காட்டிய சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. தில்லை காலி பற்றிய கதை அறிந்து கொண்டேன். அந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் ஸ்தல புராணம் இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. ஒவ்வொரு வருடமும் சிதம்பரம் செல்லும்போதுதில்லைக் காளியையும் த்ரிசிப்பது வழக்கம் எனக்கு நீங்கள் இக்கதையைச் சொல்லும்பாங்கு மிகவும் பிடித்ததுஎழுத்தும் நடையும் உள்ளக் கிடக்கையிலிருந்து பீரிட்டு வருகிறது, பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகை தந்து கருத்துரை வழங்கி -
   பாராட்டியமைக்கு மகிழ்ச்சி..
   நன்றி.. ஐயா..

   நீக்கு
 5. தில்லைக்காளி - தில்லைக்குச் சில முறை சென்றிருந்தாலும் இக்கோவிலுக்குச் சென்றதில்லை.....

  சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. தில்லை காளி என் குல தெய்வம் ஆகும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கு நல்வரவு..

   தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..